தீயினி, முற்றினி, காயினி, நாசினி போன்ற புதுச்சொற்களைக் கையாண்டிருக்கிறேன். கூடுமான வரைக்கும் மூலப்பொருள் மாறாமல் மெட்டும் சிதையாமல் எல்லோர்க்கும் புரியும் எளிய நடையில் பாடலை இயற்றியுள்ளேன்.
குழுமச் சான்றோர் பாடலைக் கேட்டு கருத்துகளைக் கூறுமாறு அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
************************************************************************************************************************************************************************************************************************
அயிகிரி நந்தினி ஸ்லோகம் - தமிழ் வரிகள்
1.
அயிகிரி நந்தினி வைய மகிழ்வினி ஆடிடும் சேயினி நந்தி புகழ்
விந்திய மாமலை மேவிடும் மாதினி திருமிகு மாலினி அமரன் புகழ்
இறைவினி நீல மிடற்றன் குடும்பினி தரணி குடும்பினி நிறைமகளே
வாழியவே மகிஷாசுரமர்த்தினி பூங்குழலி மலைமாமகளே
2.
வரமழை முகிலினி துருதர முடிவினி துர்முக முற்றினி மகிழினியே
மூவுலகாளினி சங்கரன் பாங்கினி தீவினை நாசினி கோஷினியே
தானவர் சீறினி திதிசுத தீயினி துர்மத காயினி ஆழினியே
வாழியவே மகிஷாசுரமர்த்தினி பூங்குழலி மலைமாமகளே
3.வைய முதல்வினி எந்தன் முதல்வி கடம்ப வனத்தில் சிரிப்பவளே
இமய முகட்டினில் மைய சிரோமணியாக விளங்கிடும் மேலவளே
தேனவளே மது கைடபர் ஆணவம் தன்னை அழித்து பின் ஆர்ப்பவளே
வாழியவே மகிஷாசுரமர்த்தினி பூங்குழலி மலைமாமகளே
4.
பகைவரின் யானை அழித்து உடம்பினை கூறுபடுத்தி ஒழிப்பவளே
பகைவரின் சேனைக்களிற்றின் முகத்தைக் கிழிக்கும் மடங்கலை உடையவளே
பகைவர்கள் சண்டனின் முண்டனின் சிரங்களைக் கொய்து படைகளை வெல்பவளே
வாழியவே மகிஷாசுரமர்த்தினி பூங்குழலி மலைமாமகளே
5.செருவெறி கொண்ட அரக்கர் அனைவரைக் கொல்லும் பெருந்திறல் கொண்டவளே
அறிவில் சிறந்த கணங்களின் தேவனைத் தூதுவனாகப் பணித்தவளே
கெடுவினையால் மதியின்றி மயங்கிய தானவர் தூதை மறுத்தவளே
வாழியவே மகிஷாசுரமர்த்தினி பூங்குழலி மலைமாமகளே
6.
பகைவர் மனைவியர் வந்து சரண்புக பகைவரைக் கூட புரந்தவளே
சூலம் பழித்திடும் மூவுலகங்களின் தலைவர் தலைகளைக் கொய்பவளே
நதியென இன்பம் அளித்திடும் துந்துபி துமிதுமி ஓசையில் அமிழ்பவளே
வாழியவே மகிஷாசுரமர்த்தினி பூங்குழலி மலைமாமகளே
7.தும்ரவிலோசனை ஹும் என்னும் வார்த்தையில் நூறு துகள் பட எரித்தவளே
அசுரனின் ரத்தம் விளைந்தவர் கொன்றவன் ரத்தம் குடித்து முடித்தவளே
வேள்வியில் சும்ப நிசும்பரைக் கொன்று பிசாசுகள் அவியென அளித்தவளே
வாழியவே மகிஷாசுரமர்த்தினி பூங்குழலி மலைமாமகளே
8.
செருவினில் வரிசிலை ஆட வளைக்கரம் ஆட களத்தினில் நுழைபவளே
பொன்னிற அம்புகள் செந்நிறம் ஆகிட அரற்றும் அரக்கரை அழிப்பவளே
அலறிடும் நாற்படை தானவர் கூட்டத்தை நாடகமாடி நசிப்பவளே
வாழியவே மகிஷாசுரமர்த்தினி பூங்குழலி மலைமாமகளே
9.
களத்தில் அரம்பையர் தத்தை ததையென ஆடிடும் போது ரசிப்பவளே
குகுத குகுத கடதா எனும் தாளத்தில் கானம் ஒலித்திட சிலிர்ப்பவளே
துது குட துக்குட திமிதிமி என்றொரு தண்ணுமை நாதத்தை விழைபவளே
வாழியவே மகிஷாசுரமர்த்தினி பூங்குழலி மலைமாமகளே
10.
ஜெய ஜெய கோஷங்கள் செவியில் விழுந்திட அகிலம் அனைத்தையும் காப்பவளே
ஜன ஜன ஜிஞ்ஜிமி என்று சதங்கையில் பூதர்கள் நாதனை ஈர்ப்பவளே
சிவனது தேகம் பகிர்ந்து நடங்கள் புரிந்து பிரபஞ்சம் அசைப்பவளே
வாழியவே மகிஷாசுரமர்த்தினி பூங்குழலி மலைமாமகளே
11.
அகம் புறமோர் அரிய அரிய அரிய பெரும்பேரழகார்ந்தவளே
வெண்ணிலவின் பெரிய பெரிய பெரிய பெரும் பேரொளி கொண்டவளே
வண்டை விடக் கரிய கரிய கரிய கருங்கண்மலர் பூத்தவளே
வாழியவே மகிஷாசுரமர்த்தினி பூங்குழலி மலைமாமகளே
12.
மல்லிப்படைகொண்டு மல்லர் படைகளைக் கொல்லும் தனித்திறன் பெற்றவளே
மல்லிகையின் கொடி வண்டு நிகர் குரல் 'பில்' இன பெண் துணை உற்றவளே
புலரியின் வண்ணம் மலர்களின் வண்ணம் ஒளிர்ந்திடும் வண்ணம் சிரிப்பவளே
வாழியவே மகிஷாசுரமர்த்தினி பூங்குழலி மலைமாமகளே
13.
கலையழகாற்றலை மதம் படு நீரென பொழிந்திடும் மதகரி போன்றவளே
மூவுலகணியென கலையழகாற்றலை நல்கும் இறைமகள் ஆனவளே
காதல் வரத்தினை மங்கையர் நெஞ்சில் நகைப்பட நல்கும் மதன் மகளே
வாழியவே மகிஷாசுரமர்த்தினி பூங்குழலி மலைமாமகளே
14.
மாசறு தாமரைப் பூவின் மடலென சீரிய நெற்றி படைத்தவளே
அன்னம் நடந்தது போல நடந்து கலைகள் அனைத்தையும் ஈன்றவளே
தும்பி விரும்பிடும் மகிழமும் ஆம்பலும் புரிகுழல் மீது புனைந்தவளே
வாழியவே மகிஷாசுரமர்த்தினி பூங்குழலி மலைமாமகளே
15.
குழலிசை தேய்ந்திட குயிலிசை சாய்ந்திட இனிய நறுங்குரல் உடையவளே
இதயம் கிறங்க புலிந்த மடந்தையரோடு பொழில்களில் இசைப்பவளே
ஒள்ளியரான பழங்குடி மாதருடன் விளையாடி மகிழ்பவளே
வாழியவே மகிஷாசுரமர்த்தினி பூங்குழலி மலைமாமகளே
16.
நிலவினை வென்றிடும் வண்ணப் பட்டாடை மெல்லிய நுடங்கிடை உடுத்தவளே
தேவர் அரக்கர் வணங்கிடும் மணிநகப் பாதமலர்களை உடையவளே
குடமுலை பொங்கிடும் பேரருளால் பெரும் பொன்னிற மலையினை தகர்ப்பவளே
வாழியவே மகிஷாசுரமர்த்தினி பூங்குழலி மலைமாமகளே
17.
ஆயிரம் கரங்களில் ஆயிரம் பகைவரைக் கொன்று பல்லாயிரர் துதிப்பவளே
தாரகன் அழிந்திட தாரக மைந்தனை தேவரைக் காத்திடத் தந்தவளே
சுரதரின் பக்தி சமாதியின் பக்தி இரண்டையும் ஒன்றென ஏற்றவளே
வாழியவே மகிஷாசுரமர்த்தினி பூங்குழலி மலைமாமகளே
18.
கமல பதம் எனும் கருணை அகத்தினை வணங்கும் வரத்தைக் கொடுப்பவளே
கமலப் பதங்களை வழிபடுவோர் தமை கமலபதம் எனச் செய்பவளே
கமலப் பதம் அது பரம பதம் என தன்னை வணங்கிட வைப்பவளே
வாழியவே மகிஷாசுரமர்த்தினி பூங்குழலி மலைமாமகளே
19.
உன் குணம் தோன்றும் தலத்தினில் பொன்னிற நதியினில் ஆடி நிறைபவளே
கும்ப முலைகளில் பொங்கும் அருட்கடல் ஆடிடும் அன்பரை அணைப்பவளே
மங்கலமே உனைச் சரண்புகுந்தேன் எனைக் காத்தருள்வாய் கலைமாமகளே
வாழியவே மகிஷாசுரமர்த்தினி பூங்குழலி மலைமாமகளே
20.
களங்கமில்லா முழு வெண்மதியே எங்கள் களங்கம் அனைத்தையும் களைபவளே
அரம்பையரே விழி தென்படும் போதிலும் ஆசை பிறப்பதை அழிப்பவளே
ஐந்தெழுத்தை உளமென்னும் அளக்கரில் கண்டு கரங்களில் கொடுப்பவளே
வாழியவே மகிஷாசுரமர்த்தினி பூங்குழலி மலைமாமகளே
21.
துயருறும் உயிர்களின் துன்பத்தை நீக்கிடும் உமையவளே எனைக் காப்பவளே
அம்பு பொழிந்தது போல மனத்தினில் அன்பு பொழிந்திடும் தாயவளே
பிறவிப் பெருந்துயர் யாவும் களைந்திட ஆவன செய்திடும் மாயவளே
வாழியவே மகிஷாசுரமர்த்தினி பூங்குழலி மலைமாமகளே