பொங்கலோ பொங்கல்
என்று வரும் பொங்கல் - என்றே
எண்ணியெண்ணிப் பார்த்தே
தின்று சுவைத்திடுமுன் - கரும்பைத்
தின்னாமல் தின்றதுவும்
தட்டு நிறையுமட்டும்- நான்
சக்கரைப் பொங்கலினை
இட்டமுடன் தின்பேன் - என
எண்ணி இருந்ததுவும்
செம்மண் சுமந்துவந்து - மாடன்
சேர்த்துக் கொடுக்கையிலே
அம்மண்ணுக் கீடாக - அரிசி
அதிகம் நல்கியதும்
வாழைப் பழத்தாரைச்-சுமந்து
வந்த குடும்பனுக்கு
வாழப் பணங்கொடுத்தே- மிக
மகிழ்ச்சி கண்டதுவும்
காலையில் நாதஸ்வரம் - தன்னில்
கானம் இசைத்தவர்க்கு
மாலை மரியாதை - செய்து
வாரிக் கொடுத்ததுவும்
கண்ணுப்பூ ளைச்செடியை- வெளியே
கட்டியே தொங்கவிட்டுச்
சுண்ணாம் படித்தசுவர் -தனையே
தொட்டுத் தடவியதும்
ஈர மழைக்கூந்தல்- சரிய
ஏராளமாய்க் கோலம்
சாரியாய்ப் பெண்களெலாம்- போட்டுத்
தரை விளக்கியதும்
இன்னும் கொஞ்சம் தின்னு- என்றே
எடுத்துப் பொங்கல்தர
தின்னமுடியாமல்- திகட்டத்
தின்று விழுங்கியதும்
யார்முதலில் தின்பார் - என்றே
அங்கொரு போட்டிவைத்தே
சேர்த்துக் கரும்பினையே- கடித்துத்
தின்று ஜெயித்ததுவும்
செங்கரும்புத் தோலும்- நாக்கைச்
சிறிதே கீறிவிட
அங்கே இனிப்புடனே- உப்பும்
ஆரச் சுவைத்ததுவும்
கட்டுக் கதிர்சுமந்து- பக்கக்
களத்து மேட்டினிலே
வட்டுக் குலையாத- பெண்கள்
வந்து சுழன்றதுவும்
வைக்கோல் வனத்திடையே- புகுந்து
மாறிமாறி ஓட
அக்குள் வரையினிலும் - அன்று
அரிப்பெடுத்ததுவும்
புத்தம் புது உடைகள்- போட்டே
பொங்கலோ பொங்கலென
கத்திக் குதித்துவந்தே- கும்மிக்
கரங்கள் கொட்டியதும்
கொம்பை அலங்கரித்து- மலர்க்
கொத்தொடு காசுகட்டி
தும்பை அவிழ்த்துவிட்டு- மாட்டைத்
துரத்தி விட்டதுவும்
நலமுடன் மாடுகளும் - தொழுவம்
நாடித் திரும்புகையில்
உலக்கையைத் தாண்டியபின் - அவற்றை
உள்ளே அனுப்பியதும்
எண்ணியெண்ணிப் பார்த்தால்- அடடா
இன்பம் கொடுக்கிறது
எண்ணம்மட்டும் இளசாய்- என்னுள்
இன்னும் இருக்கிறது.