தேவாரம் எளிய விளக்கம்
தேவாரம்: முதல் திருமுறை
அருளியவர்: திருஞானசம்பந்தர்
திருத்தலம்: திருப்பிரமபுரம் / சீகாழி
இறைவன்: பிரமபுரீஸ்வரர் – திருநிமைநாயகி
முன்னுரை
பார்வதி தேவி அளித்த ஞானப்பாலை அருந்திய திருஞானசம்பந்தர் பாடிய முதல் தேவாரப் பதிகம் இதுவாகும்.
திருஞானசம்பந்தர், தனது முதல் தேவார பதிகத்தில், தந்தையார் ,"உனக்கு பால் அளித்தது யார்" ? என்று கேட்ட கேள்விக்கு
பதிகம் முழுவதிலும் சிவபெருமானை நாயக நாயகி பாவத்தில் புகழ்ந்து சீர்காழியில் உள்ள சிவபெருமான் எனக்கு பாலூட்டினார் என பதில் கூறுவதாக அமைந்துள்ளது.
பதிகம் 1
பாடல் எண்: 1.1.1
தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்தபீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
தமிழ் பொருள்:
பார்வதியை இடப்பாகத்தில் கொண்டவன் , இடப வாகனத்தில் ஏறி, நிலவை அணிந்து, உடல் முழுவதும் திருநீறு பூசி வந்தவன், எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன்,
முன்பு வழிபட்ட பிரமனுக்கு அருள்புரிந்த பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானும் இவனே
பாடல் எண்: 1.1.2
முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவைபூண்டு
வற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால் தொழுதேத்தப்
பெற்றமூர்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
தமிழ் பொருள்:
முதிர்ந்த ஆமையோடு ,இளமையான நாகம், பன்றியின் பல் ஆகியவற்றை அணிந்து, திருவோடு ஏந்தி உண்ணப் பொருள் கேட்டு வந்தவன், என் உள்ளம் கவர்ந்த கள்வன்,
கல்வியில் சிறந்த பெரியோர்கள் வணங்க அவர்களுக்கு இடபம் மீது காட்சி வழங்கும் பிரமபுரத்தில் விளங்கும் பெருமானும் இவனே!
பாடல் எண்: 1.1. 3
நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண்மதிசூடி
ஏர்பரந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன்
ஊர்பரந்தவுல கின்முதலாகிய வோரூரிதுவென்னப்
பேர்பரந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
தமிழ் பொருள்:
கங்கை மற்றும் பிறைமதியைச் சூடி வந்து விரகம் ஊட்டிக் கைகளில் அணிந்த வளையல்கள் கழன்று விழுமாறு செய்தவன் எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன்,
பிரளய காலத்திலும் அழியாது நிலை பெற்ற ஒப்பற்ற ஊர் எனப் புகழப்படும் பிரமபுரம் மேவிய பெருமானும் இவனே!
பாடல் எண்: 1.1. 4
விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலையோட்டில்
உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர்கள்வன்
மண்மகிழ்ந்தவர வம்மலர்க்கொன்றை மலிந்தவரைமார்பில்
பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
தமிழ் பொருள்:
பறந்து திரிந்த மும்மதில்களையும் அழித்து, திருவோடு ஏந்தி உண்ணப் பொருள் கேட்டு வந்தவன் எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன்.
பாம்பு, கொன்றை மலர் நிறைந்த மார்பின் இடப்பாகத்தில் உமையம்மையை மகிழ்வுடன் கொண்டு பிரமபுரத்தில் உறையும் பெருமானும் இவனே
பாடல் எண்: 1.1. 5
ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்மிவனென்ன
அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததொர் காலம்மிதுவென்னப்
பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே
தமிழ் பொருள்:
உமையம்மைக்கு இடப்பாகத்தை அளித்தவன், சடை முடியை உடையவன் , ரிஷப வாகனத்தில் வருபவன் என அவனது அழகைத் தோழியர் கூற, அதன்படி வந்தவன் எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன்,
கடல் பொங்கி வந்து உலகைக்கொண்டபோதும் தோணிபுரமாய் மிதந்த பெருமை பெற்ற பிரமபுரத்தில் மேவிய பெருமானும் இவனே
பாடல் எண்: 1.1. 6
மறைகலந்தவொலி பாடலோடாடல ராகிமழுவேந்தி
இறைகலந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன்
கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர்சிந்தப்
பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
தமிழ் பொருள்:
வேதத்தைப் பாடி ஆடி மழுவாயுதத்தைக் கையில் ஏந்தி வந்து என் கையில் உள்ள வளையல்கள் கழன்று விழச் செய்தவன் என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன்,
உயர்ந்த சோலைகளில் நிலவின் ஒளி சிந்தும் பிரமபுரத்தில் மேவிய பெருமானும் இவனே
பாடல் எண்: 1.1. 7
சடைமுயங்குபுன லன்அனலன்னெரி வீசிச்சதிர்வெய்த
உடைமுயங்குமர வோடுழிதந்தென துள்ளங்கவர்கள்வன்
கடன்முயங்குகழி சூழ்குளிர்கானலம் பொன்னஞ்சிறகன்னம்
பெடைமுயங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
தமிழ் பொருள்:
சடையில் கங்கையையும்,கரத்தில் நெருப்பும் , ஆடையின் மேல் பாம்பினைக் கட்டி, ஆடி வந்தவன் என் உள்ளம் கவர்ந்த கள்வன்,
உப்பங்கழிகளால் சூழ்ந்த கடற்கரைச் சோலைகளில் அன்னங்கள் பெடைகளுடன் திரியும் பிரமபுரத்தில் மேவிய பெருமானும் இவனே
பாடல் எண்: 1.1. 8
வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளைவித்த
உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர்கள்வன்
துயரிலங்கும்முல கிற்பலவூழிகள் தோன்றும்பொழுதெல்லாம்
பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
தமிழ் பொருள்:
கயிலை மலையைப் பெயர்த்த இராவணனின் தோள் வலிமையை அழித்தவன் , எனது உள்ளம் கவர்ந்த கள்வன்.
துயர் விளங்கும் இவ்வுலகில் பல ஊழிகள் தோறும் அழியாது விளங்கும் பிரமபுரம் மேவிய பெருமானும் இவனே
பாடல் எண்: 1.1. 9
தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரையானும்
நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர்கள்வன்
வாணுதல்செய்மக ளீர்முதலாகிய வையத்தவரேத்தப்
பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
தமிழ் பொருள்:
திருமாலும், நான்முகனும், அடி முடியை காணும் பொருட்டுப் பன்றியாய் அன்னமாய் மாறித் தேடி, அண்ணா மலையாய் நிமிர்ந்தவன் எனது உள்ளம் கவர்ந்த கள்வன்.
ஒளி பொருந்திய நெற்றி, சிவந்த நிறம் உடைய மகளிர் முதலாக உலகோர் அனைவரும் துதி செய்யும் பிரமபுரம் மேவிய பெருமானும் இவனே
பாடல் எண்: 1.1. 10
புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறிநில்லா
ஒத்தசொல்லவுல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயம்மிதுவென்னப்
பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே
தமிழ் பொருள்:
புத்தர்களும் சமணர்களும் புறங்கூறிச் சைவ நெறியில் நில்லாது, தமக்கு ஏற்புடைய பிழைபட்ட கருத்துக்களைச் சொல்லித்திரிய, உலகனைத்தும் சென்று பலி தேர்ந்தவன் எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன்,
மதயானையின் தோலை உரித்துப் போர்த்தி ஒரு மாயச்செயல் செய்து, பித்தனாய் விளங்கும் பிரமபுரம் மேவிய பெருமானும் இவனே
பாடல் எண்: 1.1.11
அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர்மேய
பெருநெறியபிர மாபுரமேவிய பெம்மானிவன்றன்னை
ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்னுரைசெய்த
திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தல்எளிதாமே
தமிழ் பொருள்:
வேதங்களில் வல்ல பிரமனால் படைக்கப்பட்ட, தாமரைக்குளம் நிறைந்த பிரமபுரத்துள் மேவிய சிவபெருமானை, ஒருப்பட்ட மனத்துடன் திருஞானசம்பந்தன் உரைத்த இத்திருப்பதிகத்தை ஓதுபவர்களின் பழவினைகள் எளிதில் தீரும்.