அன்றொரு நாளில் அழகிய காலை
பன்றி இருட்டுப் பயணம் ஒடுங்க
உதய கன்னிகை ஒப்பனை நேரம்
நிதமெனும் பெயரை நிகழ்த்திடும் நேரம்
உட்புறச் சூட்டை ஒருபுறம் மறைத்து
தட்பச் சல்லா தவழ்ந்திடும் நேரம்
நீல அலைகளின் நெளிவுகள் இடையே
காலம் கருமை கழுவிடும் நேரம்
வட்டத் திகிரி வானில் எழும்ப
ஒட்டடை நீக்கும் உயரிய நேரம்
அன்றையப் பொழுதின் ஆரம்ப நேரம்
குன்று சித்திரம் கூடிடும் நேரம்
ஆனைச் சாத்தன் அலறிடும் நேரம்
பானைத் தயிரைப் பக்குவ மாக
ஆய்ச்சியர் கடையும் அழகிய நேரம்
சாய்வாய்த் தலையில் தன்பனி முத்தை
சூல்கொணட்துபோல் சுமக்கும் புற்கள்
மால்கொண்டதுபோல் மயங்கும் நேரம்
அந்த நேரம் ஆயர் பாடியாய்
விந்தை காட்டும் வில்லிபுத் தூரில்
பாவைப் பெண்கள் பற்பலர் கூடி
தேவை நினைந்து சிந்தையில் ஒன்றி
நோன்பைச் சிறப்பாய் நோற்று நீராட
தூங்கும் தோழி துயில் நீக்கிடவே
பாங்காய் இறையைப் பாடி அழைப்பர்
மணங்கொள எண்ணும் மங்கையர் எல்லாம்
கணவன் அமையக் காலைப் போதில்
நோற்கும் அந்த நோன்பில், வேண்டிப்
போற்றுகின்ற புண்ணியன் யாரோ?
அவன் தான்,
"நந்தகோ பன்குமரன், நாரா யணன் மாயன்
செந்தாமரைக் கண்ணன், சீதரன் கோபாலன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
காரார்ந்த மேனிக் கதிர்மதியம் போல்முகத்தான்
வங்கக் கடல்கடைந்த மாதவன், கேசவன்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமால்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்றவன்
மனத்துக் கினியவன், வல்லானை கொன்றவன்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணான், பரந்தாமன், மாமாயன்
புள்ளின்வாய் கீண்டவன், பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தவன், வாமனன், வைகுந்தன்
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கு
தாயைக் குடல்விளக்கம் செய்ததா மோதரன்
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்து
மணிவண்ணன், மன்னு வடமதுரை மைந்தன்
அணிவான் நுதல்தேவி தேவகி மாமகன்
வாய்த்த காளிங்கனின் மேல்நடமாடிய
கூத்தன், குறையொன்றும் இல்லாத கோவிந்தன்
அன்றிவ் வுலகம் அளந்தவன், ஆயர்க்காய்க்
குன்று குடையாய் எடுத்தவன், கோமகன்
மாவாய் பிளந்தவன், மல்லரை மாட்டிய
தேவாதி தேவன், ஸ்ரீபத்மநாபன்,
குழலழகன், வாயழகன், கண்ணழகன், கொப்பூழ்
எழுகமலப் பூவழகன், எம்பெருமான், காரேறு
பச்சைப் பசுந்தேவன், பாலாலை துயில்வான்
அச்சுதன் ஆரா அமுதன்அனையான்
உலகினில் தோற்றமாய் நின்ற சுடர், முன்னை
இலங்கை தனைப்பூசல் ஆக்கிய சேவகன்
கஞ்சன் வயிற்றில் நெருப்பென நின்றவன்,
செற்றார்க்கு வெப்பம் கொடுத்துத் திருவடியில்
உற்றார்க் கபயம் உதவும் கடல்வண்ணன்
கோமள ஆயர் கொழுந்து, மதுசூதன்
நாமமோர் ஆயிரம் ஏத்தநின்ற நாயகன்
கண்ணனெனப் பேர்கொள் கருந்தெய்வம்", அப்பெண்கள்
எண்ணமெலாம் ஈர்த்ததனை எப்படிநான் சொல்லுவதே!
மார்கழி நோன்பு, மணவாளன் நேரமைய
ஆர்வமாய்ப் பெண்கள் அனுசரித்து வீதிவர
கண்ணன் மனம்சுமந்து கண்துயில்வார் ஓர்சிலபேர்
எண்ணம் அவனாய் எழுந்திருக்க மாட்டாமல்
தூங்குவது போல்படுக்கை சோர்ந்திருப்பார் ஓர்சிலபேர்
ஓங்குகிற தன்னுளத்து உந்துதலில் வீதிவர
வாங்களடி என்றங்கே வாயுரைப்பார் ஓர்சிலபேர்
ஆங்கேயோர் நாடகந்தான், அப்பப்பா!, வார்த்தைகளால்
சாடுவதும், பின்னர் தயவாகப் பேசுவதும்,
பாடுவதும், ஆகா அப் பக்குவத்தை என்சொல்ல!
யாவும் அவன் பரமாய் அர்ப்பணிக்கும் போதினிலே
மேவும் பழியென்றால் வேதனையே கொள்ளாமல்
இல்லாப் பழியதையும் ஏற்கமனம் கொள்ளுகிற
நல்லதொரு தத்துவத்தை, நாமிங்கே பார்க்கின்றோம்
சித்தமெல்லம் தேவன் திருவடியில் வைத்தவர்கள்
உத்தமர்கள், மாசை உதறியே விட்டவர்கள்
அத்தகையோர் தம்மை அவதூறு சொல்லாமல்
அத்தனையும் தன்மேலே ஆர்பவித்துக் கொள்ளுதலே
நேசன் பதமலர்க்கு நேரடியாய் சென்றருளின்
வாசம் புரிய வகுத்த நிழற்பாட்டை.
அந்தபெரும் தத்துவத்தை ஆண்டாள் திருப்பாவை
சந்தத் தமிழில் தருவதனைப் பாருங்கள்!
நாதம் ததும்புகிற நாவுடைய ஓர்நங்கை
போது புலர்கின்ற போதும் உறங்குகிறாள்
பக்கத்து வீட்டிலே பாங்கியர்கள் பாடலொலி
மிக்க ஒலிக்கையிலே விம்மிதமாய் நெஞ்சத்துள்
கண்ணன் நினைவு கசிகிறது, அந்நினைவில்
எண்ணம் விழிக்கும் இவளோ நடிக்கின்றாள்.
கூட்டமாய்க் கூடிவந்த கோபியர்கள் வீட்டின்முன்
பாட்டெடுத்துப் பாடிமிகப் பாங்காய் அழைக்கின்றார்
"எல்லே இளங்கிளியே , இன்னும் உறங்குதியோ?"
சொல்லுக்குச் சொல்லாட தோகை மனமெண்ணி
"சில்லென்றழையேன்மின்சேர்கின்றேன்" என்றுரைக்க
சொல்லாடும் சுந்தரியின் சூழ்ச்சி அறிந்தவர்கள்
"வல்லைநின் கட்டுரைகள், பண்டேநும் வாயறிதும்"
என்று அவளை 'வாயாடி' என்ன உரைக்கையிலே
முன்னிவரும் கோபம் முகிழ்க்க உடனேயே
"வல்லீர்கள், நீங்கள்":என மாற்றம் கொடுக்கின்றாள்.
சொல்பிறந்த பின்னர் சுமையை அறிகின்றாள்
வாசலுக்கு முன்நின்று வாவென்றழைப்பவர்கள்
நேசர்கள், கண்ணனிடம் நெஞ்சைக் கொடுத்தவர்கள்
எய்தும் பெரும்மேன்மை எல்லோர்க்கும் ஆக்கவெனச்
செய்யும் முயக்கில் தெருவாசல் நிற்பவர்கள்
மாய உறக்க மயக்கறுத்துக் கண்விழிக்க
நேயத்தைக் கூட்டும் நெறிசால் அடியவர்கள்.
கும்பகர் ணன்விழிக்கக் குண்டாந்தடியெடுத்து
கும்பியின் மேலடித்தார் கொல்லும் மனத்தவரா?
தூக்கக் கனத்தின் சுமையைக் குறைப்பதற்கு
வாக்கால் அடித்தார் மனத்தை அறியாமல்
வல்லீர்கள் என்றே மறுபட்டம் சூட்டுவதா?
வல்லைநீ என்றுரைத்த வார்த்தயினுக் குற்றவளாய்
'நானேதான் ஆயிடுக' நட்பில் பிழையில்லை
யானே பிழையேற்பேன், ஆராவமுதனவன்
முன்னின்று காப்பான், முறைமாறி என்னைப்போல்
இன்னும் உறங்கும் எவரும் இருப்பாரோ
"எல்லோரும் வந்தார்கள் எண்ணிக்கொள்" என்கின்றார்
சொல்லுறக்கம் கொள்ளட்டும் , தோழியர்பின் செல்லுகிறேன்
என்று விரையும் இளங்கிளியின் காட்சியிலே
மின்னுகிற தத்துவத்தின் மேன்மை உணர்கின்றோம்
தன்பிழையை மாற்றார்மேல் தள்ளூகிற இந்நாளில்
தன்மேல் பிழையேற்கும் தத்துவமே சத்தியமாம்.
இட்டுச் செல்லும் பாதையிலே
எல்லாம் சரியாய் இருக்குமென
திட்டம் போட்டால் நடக்காது
தெரியாப் பள்ளம் ஏதேனும்
கிட்டும் போது வழிகாட்டி
கெட்டிப் பிடியாய்ப் புறம்தள்ள
துட்டன் என்று சொல்வோமா?
தூறு பேச முனைவோமா?
ஊறு போலத் தோன்றிடினும்
உண்மை அடியார் பிழை செய்யார்
கூறும் பிழையும் நம்பிழையாய்க்
கொள்ளல் வேண்டும், அடியவர்பால்
மீறிப் பிழைகள் செய்பவரை
விரும்பான் இறைவன், மாறாக
சீறிச் சினப்பான், சான்றாக
தெரிந்த ஒன்றைச் சொல்லுகிறேன்
முத்து மாலை ஒன்றினையே
முறையே ஒளித்து, வைணவர்கள்
அத்தைத் திருடிப் போனதுவாய்
அரசர் குலசே கரரிடத்தே
மொத்தப் பழிகள் மந்திரிமார்
மொழியும் போது சொல்லுகிறார்
"பக்தர் அவர்கள் பிழைசெய்யார்.
பாருக் கிதனைக் காட்டுகிறேன்"
என்று சொல்லிப் பாம்பொன்றை
இட்ட குடத்தில் கைவிட்டே
"என்றன் அன்பர் வைணவர்கள்
இந்தச் செயலைச் செய்திருந்தால்
என்னைப் பாம்பு தீண்டிடுக"
என்றார் குலசே கர ஆழ்வார்
என்ன விந்தை, நல்லரவம்
இவரைத் தீண்டா தொதுங்கியது.
அடியார் பலரும் பிறர்குற்றம்
அனைத்தும் தம்மேல் உள்ளதுபோல்
முடியா முதலை எண்ணுக்¢ற
முறையை எண்ணிப் பார்த்திடுவோம்
நெடுமால் போற்றி நம்பிழைகள்
நெஞ்சில் கண்டு வணங்கிடுவோம்
தடையே இல்லை, தியாகமெனும்
தழலில் பொன்னாய் அதுபூக்கும்
நல்லதும் கெட்டதும் நாதன் விதியெனில்
நானே ஆகிடுக!- அந்த
நாதம் மேவிடுக-உயர்
நாச்சியார் வார்த்தைகள் மூச்சினிலே மன
நத்து முளைத்திடுக-அது
நன்மை விளைத்திடுக
சொல்லொடு நெஞ்சமும் தூய்மையில் மூழ்கிட
சூழ்ச்சி எடுக்காது- பொய்ச்
சூது புடைக்காது - வெறும்
தோத்திரம் சாத்திரம் மாத்திர மேமனத்
தோகை விரிக்காது-விண்
ஜோதி எரிக்காது
வல்லமை என்பது தன்னைக் குறுக்கிடும்
மாண்பில் இருக்கிறது- அதில்
வாழ்வு சிறக்கிறது - அந்த
மாட்சியிலேவரும் காட்சியிலே ஒளி
வந்து திளைக்கிறது-கடும்
வன்மை வளைக்கிறது
வில்லிபுத் தூர்வளர் செல்வித் திருமொழி
வேதம் கொழிக்கிறது- தமிழ்
விந்தை செழிக்கிறது - அதில்
வீழ்ந்திடும் நெஞ்சம் விளைந்திடும் என்கிற
வேகம் பிறக்கிறது - அட,
விண்ணும் திறக்கிறது!.
கவிமாமணி இலந்தை சு இராமசாமி