கழலடியின் நிழல்தருவாய் - கணபதி துதி
[பல்லவி]
கணபதியே துணைவருவாய்
கழலடியின் நிழல்தருவாய்
[அனு பல்லவி]
கனிவுமிகும் அருள்முகிலாய்க்
கருணையெனும் மழைபொழிவாய்
[சரணம்]
துதிப்பவர் துயரொழியச் சுடர்விழி விழித்திடுவாய்
கொதித்திடும் பிணியொழியக் குழைச்செவி அசைத்திடுவாய் (கணபதியே) (1)
படர்ந்திடும் வினையொழியப் பயத்தினை அகற்றிடுவாய்
தொடர்ந்திடும் பிறப்பொழியத் துதிக்கரம் உயர்த்திடுவாய் (கணபதியே) (2)
குறிப்புகள்:
1. கனிவு, அருள், கருணை மூன்றும் ஒரே விதமான பொருளில் இருந்தாலும், பாடலைக் கேட்பவர் மனத்தில் கணேசனின் கருணை பதிவதன் பொருட்டு எழுதினேன்.
2. கொதித்திடும் பிணியொழியக் குழைச்செவி அசைத்திடுவாய் - இங்கே கணேசனின் திருச்செவிகளின் அசைவினால் வினைகளின் வெப்பம் தணியும் என்று படித்திருக்கிறேன். இங்கே வினைகளுக்குப் பதிலாகப் பிணிகள் என்று மாற்றியுள்ளேன். குழைச்செவி = குழை அணிந்த செவி
3. துதிக்கரம் உயர்த்திடுவாய் = துதிக்கை உயர்த்தி அருள் புரிவாய்
- இமயவரம்பன்