ஆரால் உலகெலாம் அன்றெழுந்து நின்றதோ
ஆரால் கரந்தளித்(து) ஆடுமோ - ஆராலே
நேராய்ப் பதமீதல் நீடுமோ நன்கறியந்
நாரா யணனே நமக்கு 21
ஆயிரமாய்ப் பேருடையன் ஆழ்த்தும் குணமுடையன்
நோயிலா வாழ்வளிக்கும் நாயகன் - ஓயாது
நீராடு நித்தம் நலனிருத்தும் நாமத்தில்
நாரா யணனே நமக்கு 22
போரிலே சங்கெடுத்த புண்ணியன் பாதமிட்டுப்
பாரையே தாண்டியன் பல்வகையில் - போராடும்
ஓரைவர் பக்கத்தன் ஒற்றையன் ஓங்கியவந்
நாரா யணனே நமக்கு 23
சேரா திருளினியே சேர்ந்திடும் நல்லொளியே
பாரோர் புகழ்ந்திடுவர் பற்றிடுவர் - கூராழி
தேரோட் டிசொல்கீதை தேர்ந்தடைவோம் என்னாளும்
நாரா யணனே நமக்கு 24
வாரி வழங்குநல் வைப்புநிதி வாய்மையன்
நாரி துகிலீந்த நல்லறன் - பாரளந்தான்
காரி சுதன்சொல் மடுத்து கழல்சேர்வோம்
நாரா யணனே நமக்கு 25
கயலாமை பன்றிசிங்கம் கையிரந்தான் மூன்று
வயங்கொள் இராமன் மலையெடுத்தான் - மாயனென
சீரார் உலகுண்டுத் தானே உமிழ்ந்தவனாம்
நாரா யணனே நமக்கு 26
வாராத துன்பம் வருகின்ற போதிலும்
போராட்டம் பொங்காது போக்கிடவும் - பேரோதல்
தோரா யமென்றாலும் தேக்கிட்டுத் தண்மைகொள்
நாரா யணனே நமக்கு 27
யாரா யிருந்தாலும் யாண்டும் அடிசேர்க்கும்
ஆரா தனைக்கெளியன் ஆதியன் - நேரிலான்
சீராய் நமையிட்டுச் சேர்ப்பான் தனதிடமே
நாரா யணனே நமக்கு 28
அருட்பார்வை என்றும் அடிசேர்க்க நாளும்
கருத்தோடு காத்திடும் காதற் - கருமையன்
பாரா தவர்க்கும் பலனீயும் பண்புடையன்
நாரா யணனே நமக்கு 29
சீரார் திருமகளார் செல்வன் திகிரியன்
ஏருடை வண்ணன் இனிமையன்- நாரிடும்
பாரே ழிரண்டிலும் பற்றற்றார் பற்றுமந்
நாரா யணனே நமக்கு 30
( ஏர் –பொலிவு; நாரிடும் – பந்தப்படுத்தும்)
தாஸன் புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/b7e4aebe-311b-4f7d-9ef0-0907949a599en%40googlegroups.com.
On Aug 1, 2026, at 01:31, Sai Ganesan H <saisree...@gmail.com> wrote:
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAOJiLF1Zo8yJ%2BwXitiaYbWuUnNP_1dGfLoWa1FhjViUmbtY%3DZw%40mail.gmail.com.