பணமே முதலாம் பயணக் குறியாய்க்
கணமுங் கருதும் கலிவிட்(டு) இறைநின்
குணம்ஓ திடுமோர் குறையாத் தனமென்
அணலே கொடுநீ அடியேற்(கு) இவணே! ..(21)[பணம் சேர்ப்பதையே (வாழ்க்கைப்) பயணத்தின் முதலான குறிக்கோளாகக் கருதும் இந்தக் கலியின் இயல்பிலிருந்து விலகி, இறையாகிய என் அண்ணலே, இவ்வுலகில் உன்னுடைய குணங்களைத் தோத்திரம் செய்வதாகிய ஒரு குறையாத செல்வத்தை அடியேனுக்குக் கொடுத்தருளுக!] ..(21)
வண்டார் விரைசூழ் மலர்சூட் டியுனைக்
கண்டார் உருகும் கவினார் கலைநீ!
தொண்(டு)ஆர் செயினும் தொடுமோ கவலை?
அண்டா அலவோ அவரைப் பிணியே! ..(22)[விரை = நறுமணம்; கவின் = அழகு
][வண்டுகள் மொய்க்கும் நறுமணம் மிக்க மலர்களைச் சூட்டி உன்னைக் காண்பவர் உருகும்படியான அழகு திகழும் கலை நீ! உனக்குத் தொண்டு செய்பவர் யாராகிலும் அவர்களைக் கவலை தீண்டுமோ? பிணிகள் எவையும் அவர்களை அண்ட மாட்டா அல்லவோ?] ..(23)
பிணைபட் டவரும் பெருவில் பிடிவேள்
கணைபட்(டு) அவலக் கடலாழ்ந் தவரும்
புணையற் றுமுணர் புலனற் றுமுனைத்
துணையென்(று) அணுகத் தொலையும் தொலையே! ..(23)[பிணை = கட்டு; வேள் = மன்மதன்; கணை = அம்பு; புணை = விபத்தில் கிட்டும் உதவி]
[(துயரில்) மாட்டிக் கொண்டவரும், பெரிய வில்லைப் பிடித்த மன்மதனின் மலர்க்கணை பட்டு (/காதல் வயப்பட்டு) துக்கக் கடலில் ஆழ்ந்தவரும், காப்பாற்ற உதவிக்கரம் கிட்டாதவரும், உணர்கின்ற புலன்களை இழந்தவர்களும் கூட, உன்னைத் துணையாக நாடினால் அவர்தம் தொல்லையெல்லாம் தொலைந்து போகும்!] ..(23)
தொலையாப் பழமைத் தொடர்நீள் வினைகள்
மலையா கிடினும் மறையும் கதிர்காண்
இலைமேற் பனிபோல்; இருள்போல்!களிறின்
தலைகொண் டவ!நின் தயவைப் பெறிலே! ..(24)[யானையின் தலையைக் கொண்டவனே! உன் தயவைப் பெற்றுவிட்டால், தீராது நீண்டு தொடரும் பழைய ஊழ்வினைப் பாவங்கள் மலைபோல் குவிந்திருந்தாலும், கதிரவனைக் கண்ட இலைமேல் படிந்த பனிபோலவும் இருளைப் போலவும் அவை மறைந்து போகும்!] ..(24)
பெறுவர் பெருகப் பிளையார் அடியை
இறுகப் பிடிகொண்(டு) இசைபா டிடுவோர்!
குறுகண் டமுளோய் கொடைசெய்(து) அயராய்!
அறுகண் டமுளோன் அணனா னவனே! ..(25)[பிள்ளையார் ஆகிய உன் திருவடியை இறுகப் பற்றிக் கொண்டு உன் புகழைப் பாடுபவர் பெருகும் நலங்கள் பெறுவார்கள். குறுகிய கழுத்தை உடையவனே! நீ கொடைசெய்து சலிக்காதவன்! ஆறு கண்டங்களைக் கொண்ட முருகனின் அண்ணன் ஆனவனே!] ..(25)
ஆனை முகனே அரனின் மகனே
வானைப் புவியை வளியைப் புனலைக்
கானை மலையைக் கடலைக் கனலை
ஊனை உயிரை உருசெய் தவனே! ..(26)[ஆனை முகம் கொண்டவனே! அரனின் மகனே! வானையும், பூமியையும், காற்றையும், நீரையும், காட்டையும், மலையையும், கடலையும், நெருப்பையும், உடலையும், உயிரையும் படைத்தவனே!] ..(26)
தவமும் சபமும் தலயாத் திரையும்
சிவனார் சிவையாள் திருமால் வழிபா(டு)
அவனங் களுனை அடியில் தொழுதே
இவணர் புரிவார் இடையூ றறவே! ..(27)[அடியில் = ஆரம்பத்தில்; அவனம் = வேள்வி; இவணர் = இவ்வுலகத்தினர்]
[இவ்வுலக மக்கள், தமது இடையூறுகள் நீங்குவதற்காக, தவமும், ஜபமும், புனிதத் தல யாத்திரைகளும், சிவன், சக்தி, திருமால் இவர்களின் வழிபாடுகளும், வேள்விகளும், உன்னை முதலில் தொழுத பின்னரே செய்வார்கள்.] ..(27)
அறம்ஈன் பொருளால் அடையும் சுகமோ(டு)
உறவும் உடைமை உரிமை பலவும்
கறவை வளமும் கனிவும் தருவாய்ப்
பிறருக் குதவப் பிறழா வகையே! ..(28)[ஈன் = உருவாக்குகிற; கறவை = பசு]
[அறத்தால் கிட்டும் பொருள்கொண்டு அடைகின்ற சுகமும், நல்ல உறவுகளும், உடைமையும், பலவற்றில் உரிமையும், பசுக்கள் முதலிய வளங்களும், பிறருக்கு உதவுவதிலிருந்து பிறழாத வகையில், கனிவான குணத்தையும் தருக!] ..(28)
கையாற் கதியாய்க் கழல்பற் றிடுவேன்!
ஐயே எளியேற்(கு) அருளாய் பிறரை
நையாண் டிசெயா நலிவிற் பிரியா
வையாப் பெரியோர் வழிவாழ்ந் திடவே! ..(29)[ஐயனே! உன் கழல்களே கதி என்று பற்றினேன்! எளிமையான எனக்கு, மற்றவரைக் கேலி செய்யாத, பிறர் துன்பப் படுகையில் அவர்களைப் பிரிந்து செல்லாத, மற்றவரை இகழாத பெரியவர்களின் வழி வாழும் வாழ்க்கையை அருள்க!] ..(29)
திடசித் தமுமெய் திரியா வசனம்
கடமை பிறழக் கருதாக் குணமும்
குடமா வயிறோய் கொடுநீ சிவனார்
இடமாய் அமர்வாள் இனிமைச் சுதனே! ..(30)[வசனம் = வாக்கு/பேச்சு]
[திடமான (அலையாத) சித்தமும், உண்மையைத் திரித்துப் பேசாத வாக்கும், கடமை தவற எண்ணாத நற்குணமும் நீ கொடு! குடம் போன்ற பெரிய வயிற்றை உடையவனே! சிவபெருமானின் இடப்புறத்தில் அமர்ந்தவளான சக்தியின் இனிய மகனே!] ..(30)
நல்வாழ்த்துகள்
கொபால்
[26/12/2025]