இன்று ஆண்டாளைப் போற்றி அடியேன் இயற்றிய பாடலை உங்கள் அனுபவத்திற்காக இடுகிறேன்.
பல்லவி
ஆடிப் பூரம் அவதரித்த ஆண்டாள் நாச்சியார் திருப்பாதம்
நாடும் நன்மை தந்திடுமே நற்பதம் வரைக்கும் அருளிடுமே
அனுபல்லவி
எளிய தமிழில் எடுத்துரைத்தாள் எட்டா வேதக் கருத்தினையே
தெளிவாய்க் கொண்டு நாம்வாழ தென்னரங்கனைத் தருவாளே
சரணம் 1
நாராயணனே நமக்கென்றாள் நல்லோர் வழியே அதுவென்றாள்
பாராயணமே செய்யென்றாள் பேறாய் அடிமை கொள்ளென்றாள்
பாரோர் புகழும் பாட்டதிலே பதியாய் அவனே விழையென்றாள்
நேராய்ப் பதமே வருமென்றாள் நெஞ்சம் நிறைத்து நில்லென்றாள்
சரணம் 2
விருந்தாவனத்துக் கண்ணனையே விருந்தாய் கொள்வாய் தினமென்றாள்
பெரும்புள் விரைவான் காத்திடுவான் பக்கம் நிற்பான் துதியென்றாள்
பொருந்தி நமையே காத்திடுநம் புண்ணியத்தாயின் வழி செல்வோம்
அருந்தி நாளும் வாழ்ந்திடவே அவள்தமிழ்ப் பாவைக் கொண்டிடுவோம்
இதன் இசைவடிவம் இதோ
தாஸன் புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசார்தி, பெங்களூர்