தாயின் மணிக்கொடி
---------------
இந்தியாவுக்கு ஒரு கொடி வேண்டும் என்ற முயற்சி 1883-ல் லாகூரில்
தொடங்கியது. அப்போது வடிவமைந்த கொடியைப் பற்றித் தமிழில் யாரும்
எழுதியதாகத் தெரியவில்லை. இந்திய அரசு வெளியிட்டுள்ள பாரத மாதா
நாணயத்தில் உள்ள கொடியின் விளிம்பை ஒத்த விளிம்பு (border) கொண்ட கொடி
இலாகூர்க் கொடி ஆகும். அதன் நடுவிலே சூரியன் ஒளிவீசிக் கொண்டுள்ளது.
https://x.com/naa_ganesan/status/1976857906889822551
பாரத தேவியின் திருத்தசாங்கம், சகோதரி நிவேதிதாவின் வஜ்ஜிரக் கொடிப்
பாட்டைக் கொண்டது. வெளிவந்த தேதி: இந்தியா, 10.10.1908. தொ.மு. சி.
ரகுநாதன் எழுதிய ஆழமான கட்டுரையில் இச்செய்தி குறிப்பிடப்படவில்லை.
கொடி
( ராகம்: கேதாரம்)
கொடிப்பவள வாய்க்கிள்ளாய்! குத்திரமும் தீங்கும்
மடிப்பவளின் வெல்கொடிதான் மற்றென்? - அடிப்பணிவார்
நன்றாரத் தீயார் நலிவுறவே வீசுமொளி
குன்றா வயிரக் கொடி.
(வயிரக் கொடி = Vajra Flag, designed in 1906 by Sister Nivedita who was
the Guru of Bharati)
இதற்கு அப்புறமாகப் பாடியது "தாயின் மணிக்கொடி பாரீர்". இது 1908 (அ)
1909 என நினைக்கிறேன். இப்பாட்டின் தேதி என்ன? அறிந்தோர் கூறவும். நன்றி.
இப்பாடலில் பாரதியார் கொடியில் செய்யும் மாற்றம் பற்றியும் ஆராயலாம்.
2009-ல் திரு. ந. பாலு எனக்குச் சந்தவசந்தத்தில் அளித்த பாரதியார் செய்த
பாரதமாதா திருவுருவம்.
https://nganesan.blogspot.com/2009/10/popular-prints-bhaaratamata.html
பாரதியார் பாடலில் உள்ள கொடி வடிவிற்கு ஏற்ப அமைக்கலாம். ~NG
மாதாவின் துவஜம்
பாரத நாட்டுக் கொடியினைப் புகழ்தல்
(தாயுமானவர் ஆனந்தக்களிப்பு வர்ணமெட்டு)
பல்லவி
தாயின் மணிக்கொடி பாரீர் -- அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்
சரணங்கள்
1 ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் - அதன்
உச்சியின் மேல் 'வந்தே மாதரம்' என்றே
பாங்கின் எழுதித் திகழும் - செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்! (தாயின்)
2 பட்டுத் துகிலென லாமோ? - அதில்
பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று
மட்டு மிகுந்தடித் தாலும் - அதை
மதியாதவ் வுறுதிகொள் மாணிக்கப் படலம்.
3 இந்திரன் வச்சிரம் ஓர்பால் - அதில்
எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால் (தாய்)
மந்திரம் நடுவுறத் தோன்றும் - அதன்
மாண்பை வகுத்திட வல்லவன் யானோ?
4 கம்பத்தின் கீழ்நிற்றல் காணீர் - எங்கும்
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற் குரியர்அவ் வீரர் - தங்கள்
நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பர்.
5 அணியணி யாயவர் நிற்கும் - இந்த
ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ?
பணிகள் பொருந்திய மார்பும் - விறல்
பைந்திரு வோங்கும் வடிவமும் காணீர்!
6 செந்தமிழ் நாட்டுப் பொருநர் - கொடுந்
தீக்கண் மறவர்கள், சேரன்றன் வீரர்
சிந்தை துணிந்த தெலுங்கர் - தாயின்
சேவடிக் கேபணி செய்திடு துளுவர்,
7 கன்னடர் ஒட்டிய ரோடு - போரில்
காலனும் அஞ்சக் கலக்கும் மராட்டர்.
பொன்னகர்த் தேவர்க ளொப்ப - நிற்கும்
பொற்புடை யார்இந்து ஸ்தானத்து மல்லர்,
8 பூதலம் முற்றிடும் வரையும் - அறப்
போர்விறல் யாவும் மறப்புறும் வரையும்
மாதர்கள் கற்புள்ள வரையும் - பாரில்
மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர்,
9 பஞ்ச நதத்துப் பிறந்தோர் - முன்னைப்
பார்த்தன் முதற்பலர் வாழ்ந்தநன் னாட்டார்,
துஞ்சும் பொழுதினும தாயின் - பதத்
தொண்டு நினைந்திடும் வங்கத்தி னோரும்,,
10 சேர்ந்ததைக் காப்பது காணீர் - அவர்
சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க!
தேர்ந்தவர் போற்றும் பரத - நிலத்
தேவி துவஜம் சிறப்புற வாழ்க! (தாயின்)