ஏடுகள் சொல்வதுண்டோ?
ஏடுகள் சொல்வதுண்டோ -மனத்து
எண்ணங்கள் யாவையும் தாளின் எழுத்துகள்
என்றுமே வெல்வதுண்டோ?
தேடுதல் ஓய்வதுண்டோ - அந்தத்
தேடும் தேடல்களில் சிக்கிடும் யாவையும்
சிந்தனை வேய்வதுண்டோ?
ஈரக் கனல் பந்தெகிறிக் குதிப்பதை
எல்லோரும் பார்ப்பதில்லை -எழில்
ஏடுகள் சேர்ப்பதில்லை
சாரச் சாரச் சாரச் சாரும் நினைவுகள்
தாளிலே ஆர்ப்பதில்லை - வியர்வை
தாகங்கள் தீர்ப்பதில்லை
நீட்டும் ஒளிக்கரம் காட்டின் இருட்குழல்
நீவி இழைபிரிக்கும்- அங்கோர்
நித்திலப் பூசிரிக்கும்
காட்டு மலரெழில் கங்குல் கசிவுகள்
கண்விழித்தே முடிக்கும் - நாட்டில்
காகிதப்பூ நடிக்கும்
சின்னஞ் சிறுபிள்ளை கன்னக் குழிவினில்
தேன்மலர் பூத்திருக்கும் - அதில்
தெய்வமே காத்திருக்கும்
மின்னலைச் சொல்லில் அடக்க முயல்கையில்
வேடிக்கை பார்த்திருக்கும் - சொல்
மெல்லவே நீர்த்திருக்கும்
வார்த்தை மறைகிற நேர்த்தி அவள்விழி
வாகனம் தான்சுமக்கும் - நெருக்கம்
வானை வரவழைக்கும்
பார்த்துப் பார்த்துப் பார்த்துப் பார்த்தவை யாவுமே
பாவில் வரத்துடிக்கும் - ஆனால்
பாதி வழிகுடிக்கும்
நாட்டில் கொடுமைகள் ஒன்றிரண்டா அந்தோ
நாற்றம் அடிக்கிறதே - மனம்
நைந்து துடிக்கிறதே
ஏட்டுக்குள் பூச்சுகள் எத்தனை எத்தனை
எல்லாம் குறைகிறதே - உண்மை
ஏங்கி மறைகிறதே ஏடுகள் சொல்வதுண்டோ
ஏடுகள் ஓர்பாதி ஊமைகளாம் – அவை
எல்லாம் கொடுப்பதில்லை- முற்றும்
ஏற்று நடப்பதில்லை
ஏடு கொடுத்திடும் பாதியிலும் மனம்
எல்லாம் எடுப்பதில்லை – எடுத்த
எல்லாம் பிடிப்பதில்லை
கிட்டிய கொஞ்சமும் நெஞ்சம் அசைக்குமேல்
கேடு கிடையாது - அதன்
கீர்த்தி முடிவேது?
தொட்ட சுகங்கூடத் தோளை உயர்த்துமே
தோயதல் அதன் எல்லை -என்றும்
தோல்வி அதில் இல்லை ஏடுகள் சொல்வதுண்டோ?
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBDfwFvNOqwW1Vo1s7NZMFKjPLHPWeTdgxF60uNvoSBA3A%40mail.gmail.com.
தாளிலே ஆர்ப்பதில்லை - வியர்வை
தாகங்கள் தீர்ப்பதில்லை"
மிக,மிக, மிக அருமை!
Reminds one of Shakespeare's
'Tomorrow, Tomorrow and Tomorrow'
சங்கரன்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBDfwFvNOqwW1Vo1s7NZMFKjPLHPWeTdgxF60uNvoSBA3A%40mail.gmail.com.
"சாரச் சாரச் சாரச் சாரும் நினைவுகள்
ஏடுகள் சொல்லாதவற்றை விவரித்த விதம் மிக அருமை, தலைவரே.