ஆத்திச்சூடி - வல்லொற்று மிகுதற் பிழை.
ஆத்திசூடி - ஔவையார் குழைந்தைகளுக்கு எழுதியது.
ஆப்பயன் - வல்லொற்று மிகுந்தால் ஆக்கள் (பசுக்கள்) தரும் பயன்
(சிலப்பதிகாரம்).
ஆபயன் - திருக்குறள், இங்கே வேளாண்மையினால் ஆகின்ற விளைச்சல் எனப்
பொருள்.
தீக்குறளை சென்றோதோம் - ஆண்டாள் திருப்பாவை.
பல அச்சுநூல்களில் தீக்குறளைச் சென்றோதோம் என்று
பதிப்பிக்கிறார்கள். ஒற்று மிகுகையில் திருக்குறள் ஆகிவிடும்.
நா. கணேசன்
(பதவுரை) ஆத்தி-திருவாத்திப் பூமாலையை, சூடி-தரிப்பவராகிய சிவபெருமான், அமர்ந்த-விரும்பிய, தேவனை-விநாயகக் கடவுளை, யாம்-நாம், ஏத்தி ஏத்தி - வாழ்த்தி வாழ்த்தி, தொழுவோம்-வணங்குவோம்.
(பொழிப்புரை) சிவபெருமான் விரும்பிய விநாயகக் கடவுளை நாம் பலகாலும் துதித்து வணங்குவோம். விநாயகக் கடவுள் சிவபெருமானுக்கு மூத்த பிள்ளையார் ஆதலின், சிவபெருமான் விரும்பிய தேவன் என்று கூறப்பட்டார். ஏ: ஈற்றசை.
வார்த்தை விளையாட்டு
பசுபதி
மெய்யில்லா ஆத்திசூடி
“ சார், இன்று தமிழ்த் தொலைக் காட்சி ஒன்றில் அறிஞர் ஒருவர் ஔவையாரின் ‘ஆத்திச்சூடி’யின் சிறப்பையும் , அதில் உள்ள சில நீதிகளைப் பற்றியும் மிக அழகாகப் பேசினார் ”
“ ஆம், உண்மையிலேயே அது ஒரு நல்ல நீதி நூல் தான். அதை மனத்தில் வைத்து, அதே முறையில் பாரதி, பாரதிதாசன் போன்றோரும் எழுதி உள்ளனர். ஆனால், அந்த நூலின் சரியான பெயர் ‘ஆத்திசூடி’ தான். ‘ஆத்திச்சூடி’ அன்று. அந்த நூலின் கடவுள் வாழ்த்து
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.
என்று இருப்பதால் அதற்கு அப்பெயர் வந்தது.
‘ஆத்திசூடி’ என்பது சிவனைக் குறிக்கும் சொல். ஆத்தி மாலை சிவனுக்குரிய மாலை. ‘ஆத்தியைச் சூடுபவன்’ என்று இரண்டாம் வேற்றுமையை விரித்துச் சொல்லும்போது, ‘ச்’ வரும். ஆனால், ‘ஆத்திசூடி’ என்பதில் அந்த இரண்டாம் வேற்றுமை உருபான ‘ஐ’ மறைந்து இருப்பதால் , ‘ச்’ வராது. ”
“ இப்படிச் சொற்களுக்கிடையே, ‘க்’, ‘ச்’, ‘த்’ ‘ப்’ எப்போது வரும் ? வரக் கூடாது? என்பதை அறிய நல்ல கட்டுரைகளைப் படித்துத்தான் கற்றுக் கொள்ள வேண்டும் போலிருக்கிறதே? ”
“ ஆம், இந்தக் கருத்தை வைத்தே நாம் ஒரு புதிய ‘ஆத்திசூடி’ விளையாட்டு விளையாடலாமே? இலக்கணம் போதிக்கும் புதிய ஆத்திசூடி என்று கூட இந்த விளையாட்டைக் கூப்பிடலாம்.”
“ ‘அ’ முதல் ‘ஔ’ வரை , 12 உயிர் எழுத்துகளில் தொடங்கும் சொற்றொடர்களைத் தயாரிக்க வேண்டும். எல்லாத் தொடர்களும் நாம் வழக்கமாகத் தின ஏடுகளிலும், வார, மாத இதழ்களிலும் படிப்பவையாக, கடிதங்களில் எழுதுபவையாக இருக்கவேண்டும். இந்தப் ‘புதிய ஆத்திசூடி’.யில் இலக்கணத்தைப் பொறுத்தவரை எல்லாம் சரியான சொற்றொடர்களாக அமைய வேண்டும். ஆனால், இந்தச் சொற்றொடர்களின் நடுவில் பலரும் மெய்யைச் சேர்த்துத் தவறாக எழுதும் வாய்ப்பு உண்டு. ‘ஆத்திசூடி’ என்ற சொற்றொடரைப் போல. அப்படிப்பட்ட 12 சொற்றொடர்களைத் தயாரிப்பது தான் இந்த ‘வார்த்தை விளையாட்டு’ . சரியான சொற்றொடரின் நடுவில் மெய்யெழுத்து வராதலால், இந்தப் பட்டியலை ‘மெய்யில்லா ஆத்திசூடி’ என்று கூட வேடிக்கையாக அழைக்கலாம்! ”
இதோ ஒரு மாதிரிப் பட்டியல்: சொற்றொடர்களைத் தொடர்ந்து அவை வரும்
மாதிரி வாக்கியங்களும் உள்ளன. விளையாட்டுக்கு விளையாட்டு, இலக்கணத்திற்கு இலக்கணம், எப்படி?”
‘அசைபோடு’ : மாடு அசைபோட்டது.
‘ஆசைகாட்டு’: குழந்தைக்குச் சும்மா ஆசை காட்டாதே !
‘இலைபோடு’ : திருமணத்தில் உடனே இலைபோட்டுவிட்டனர்.
‘ஈடுகட்டு’: அந்த இழப்பை ஈடுகட்ட முடியாது.
‘உச்சிகுளிர்’ : அவன் புகழ்ச்சியில் எனக்கு உடனே உச்சிகுளிர்ந்துவிட்டது.
‘ஊசிபோடு’; வைத்தியர் குழந்தைக்கு ஊசிபோட்டார்.
‘எடைபோடு’ : என்னைக் கண்ணால் அவள் எடைபோட்டாள்.
‘ஏறுதழுவுதல்; ஜல்லிக் கட்டுக்குப் பழைய பெயர் ‘ஏறுதழுவல்’.
‘ஐந்துகொடு’ : அந்தப் பழவகையில் ஐந்து கொடு.
‘ஒருகை பார்’ : மதிய உணவை ஒருகை பார்த்தேன்.
‘ஓய்வுபெறு’ : ஓய்வுபெற்றபின் எங்கே போகப் போகிறாய்?
‘ஔவை பாடல்’: ஔவை பாடல்களில் இதுவும் ஒன்று.
“ இப்போது நீங்களும் ஒரு ‘மெய்யில்லா ஆத்திசூடி’ தயாரிக்க முயலுங்களேன்.”
~*~o0O0o~*~
நீலப் படத்தை நிகர்க்கும் விதந்தன்னில்,ஆலம் எழுத்தில் அளியோம்யாம். - சீலமுடன்நாட்டோர் நலமொன்றே நாடும் வழிசென்று,நாட்டுக் குழைத்திடுவோம் நாம்.(6)