தென்நைமிசன்
திருவங்க மாலை
அடியார்க்கடியான்
(புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்)
(அங்கமாலை என்பது தமிழிலுள்ள 96 சிற்றிலக்கிய வகையில் ஒன்று. திருப்பாணாழ்வார் பாதாதி கேசம் ஆசிரியத்துறையில் பாடியுள்ளார். மங்கை மன்னன் எம்பெருமானிடத்தில் ஈடுபடாத அவயவங்கள் பயனற்றன என்று (11-7) கூறினார். சைவத்தில் திருநாவுக்கரசர் அங்கமாலை பாடியுள்ளார். அவர் பாடியுள்ளது யாப்பு இலக்கணத்தில் இல்லாது இசை இலக்கணத்தில் அடங்கியாதாக இருக்கிறது. அவ்வழியில் இப்பாக்கள் இயற்றப்பட்டுள்ளன.)
தலையே நீவணங்காய் - தலை
நாலு டைத்தேவனைத்
துலையே துமில்லா வுந்தியில் தோற்றியனை
தலையே நீ வணங்காய் 1
கண்காள் காண்மின்களோ – கரந்
தெங்கும் இருப்பானைத்
தென்நை மிசக்கோயில் சிங்கனாய் வந்தானைக்
கண்காள் காண்மின்களோ 2
செவிகாள் கேண்மின்களோ – உகிர்
நுனியால் கிழித்தானைப்
புகழிடும் வடதென் மறைகள் இரண்டினைச்
செவிகாள் கேண்மின்களோ 3
மூக்கே நீமுரல்வாய் - கடி
சேரும் திருத்துழாய்
தாரதைச் சூடிடும் பார்க்கவன் பரிமளமே
மூக்கே நீமுரல்வாய். 4
வாயே வாழ்த்திடுவாய் – அறம்
வாடும் பொழுதினில்
தாமம் தனைவிட்டுத் தரணி வருவோனை
வாயே வாழ்த்திடுவாய். 5
நெஞ்சே நீநினையாய் - நிதம்
மிஞ்சும் மறைதனில்
தஞ்சம் தன்தாள்தரும் சிங்கன் தனியருளை
நெஞ்சே நீநினையாய். 6
கைகாள் கூப்பித்தொழீர் - குளிர்ப்
பைநா கமதிலே
வாகாய் வந்தமர்ந்த வேத விழுப்பொருளைக்
கைகாள் கூப்பித்தொழீர். 7
ஆக்கை யாற்பயனென் - அருள்
ஊற்றாம் சிங்கனுரு
தேக்கி மனத்திட்டுத் தொழுது நலம் கொள்ளா
ஆக்கை யாற்பயனென். 8
கால்க ளாற்பயனென் - குறை
யாதனக் கொடுப்பவன்
கோலச் சிங்கனின் கோயிலை வலம்செய்யாக்
கால்க ளாற்பயனென். 9
உற்றா ராருளரோ - உயிர்
பற்றுப் போகையில்
கற்பீர் சிங்கனே நவவித உறவாம்மற்
றுற்றார் ஆருளரோ. 10
பிறவிக் கொள்வர்கொலோ - பதம்
அறமாய்ப் பற்றியபின்
திறமாய்க் குருவே பணித்ததைப் பாற்றியபின்
பிறவிக் கொள்வர்கொலோ. 11
நாடிக் கண்டுகொண்மின் - அடி
யார்க்கடி யான்சொலில்
வாட விடாத்தென் நைமிசனை நவிற்றியே
நாடிக் கண்டுகொண்மின். 12