அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு - சிறுகதை

60 views
Skip to first unread message

Niranjan Bharathi

unread,
Jan 20, 2014, 12:46:28 PM1/20/14
to santhav...@googlegroups.com
எல்லோர்க்கும் வணக்கம்,

நேற்று முதன்முறையாக ஒரு கதை எழுதிப் பார்க்கலாம் என்று ஆசை வந்தது. எழுதினேன். 
ஆன்றோர்கள் கருத்துக் கூற வேண்டும்.


அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு

நள்ளிரவு இத்துணை அழகானதா?

அந்த இரவில் தோன்றும் அமைதி என்பது கூட  நம்முடன் இவ்வளவு வார்த்தைகளை பேச முடியுமா?

தன்னைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்த இரவை அகிம்சா திரும்பத் திரும்பச் சுற்றிச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இதற்கு முன்னால் கருப்பு அல்லது இருட்டு, இருள் என்றாலே பயம், பேய், பிசாசு ஆகியவற்றைத் தான் அவள் மனது உடனே தொடர்பு படுத்திக் கொள்ளும்.

ஆனால், அந்தத் தொடர்புகளை முற்றிலும் அறுத்தெறிந்து நான் இப்படித்தான்,,, நீங்க தான் என்ன பாத்து பயப்படறீங்க என்று சொல்வது போல் இருள் வானம் எங்கிலும் நிறைந்திருந்தது.

அகிம்சாவுக்கு அந்தக் கருமை மிகவும் பிடித்திருந்தது. இரவும் மிக மிகப் பிடித்திருந்தது.

அவள் கண்ணில் இருந்த கரு மையை விடவும் விண்ணில் இருந்த கருமை  சற்று குறைவு தான்.

அந்தக் கருமைக்குள் ஓர் அதீத கருப்புத்தனம் இருந்தது. அது அவள் கண்களுக்கு தனி பேரழகைக் கொடுத்திருந்தது.

அந்த மையிட்டுக் கொண்டதால் தான் அகிம்சா அழகாய் இருப்பாள் என்று சொல்வது அபத்தத்திலும் அபத்தம். ஒரு புலியிடம் வாளைக் கொடுத்தால்  தான் அது மானை அடித்துக் கொல்லும் என்று சொல்வதைப் போல் அது. அவளுக்கு எந்தவொரு ஒப்பனையும் தேவையேயில்லை. இருந்தாலும், தன்னை அழகுபடுத்திக் கொள்ள விரும்பாத பெண் இந்த அவனியில் கிடையாது.

அகிம்சாவும் அதற்கு விதி விலக்கல்ல.

கண் மட்டுமன்று. ஏனைய உறுப்புகளும் எப்படி எப்படி இருந்தால் அழகாக இருக்குமோ அப்படியே இருந்தன.  அவள் படைப்பில் அப்படியொரு  நேர்த்தியை வைத்திருந்தான் ஆண்டவன்.

அவள் உடல் மட்டுமன்று. அவள் அறிவும் மிக மிக அழகு. 

அறிவில்லாதவர்கள் அவள் அழகை மட்டுமே ரசிப்பார்கள். அறிவுள்ளவர்கள் அவள் அழகோடு சேர்த்து அறிவையும் ரசிப்பார்கள்.

அவள் படித்தது பொறியியல். பிடித்தது பரதநாட்டியம். ஆனால், மிகப்பெரிய அரங்கில், கலை ஆர்வலர்களின் முன்னிலையில் , மேடையில் அவள் கால்கள் நடனமாடவில்லை. மாறாக, ஒரு செழிப்பான கட்டடத்தின் ஒருபெரும் தளத்தில் , ஒரு கணிபொறிக்கு முன்னமர்ந்து,  முன்னொரு பக்கம் இரண்டு கால்களைக் கொண்ட, அதிலும் மடக்கும் கால்களைக் கொண்ட, வழவழப்பான ஒரு கருப்பு நிற கீ போர்டில் தான் அவள் கைகள் நடனமாடிக் கொண்டிருந்தன.

சிலிகான்களால் ஆன , சதுர வடிவில் உள்ள கணிபொறி பூக்கள் உள்ள, ஒரு தகவல் தொழில் நுட்பப் பூங்காவில் , அவள் வேலை செய்து கொண்டிருந்தாள். அவள் வேலை பார்க்கும் இடம் சோளிங்க நல்லூரில் இருந்தது .

அவள் முகத்தில் அப்படியொரு தெய்வப்பொலிவு குடிகொண்டிருந்தது. அது அவளுக்கே தெரியாது. 
அதாவது குடும்பப் பாங்கான....லட்சுமி கடாட்சமான... ஒருமுகம்

வள்ளுவர் சொன்னார் இல்லையா...

தற்காத்து தன்கொண்டான் பேணி தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்

(குறளின் விளக்கத்தை கதையின் முடிவில் காணவும்)

அந்த ஈரடிக் குறளுக்கு 5 அடி 8 அங்குலம் உயரத்தில் ஒரு விளக்கம் கொடுத்தால் எப்படியிருக்கும்... அப்படியிருந்தாள் அகிம்சா.

இவள் எப்படி இத்தகைய நிறுவனத்தில், கணம் தோறும் மன அழுத்தத்தை விதைக்ககூடிய த.தொ தொழிலில் இருக்கிறாள் என்று பல பேருக்கு ஆச்சரியம்....  குறிப்பாக ஆண்களுக்கு...

மணி முடி தரித்து.. செங்கோல் ஏந்திய கால கட்டத்திலும் சரி.... 
டை அணிந்து... கோட் சூட் தரிக்கும் இன்றைய கால கட்டத்திலும் சரி....

ஒரு பெண் , தன்னை முந்திக் கொண்டு செல்லும் போது எந்த ஆணின் "நான்" என்ற அந்த ஈகோவும் சற்று உரசப்பெற்று ஊசலாடத் தான் செய்கிறது. அவளின் வளர்ச்சி என்கிற காற்றோடு மோதி அடிபடத் தான் செய்கிறது. அத்தகைய ஆண்மக்கள் அகிம்சா பணிபுரிகின்ற அலுவலகத்திலும் இருக்கத்தான் செய்தார்கள்.

அதைப் பற்றியெல்லாம் அகிம்சா அலட்சியம் செய்யவேயில்லை. அகிம்சா என்ற பெயருக்கேற்றாற் போல் இருக்க வேண்டாமா ? 

அகிம்சா , அந்த நள்ளிரவு நேரத்தில், கட்டடத்துக்கு வெளியே வந்து, பேருந்து எப்போது வரும்.... என்று காக்கத் தொடங்கிய அந்த நேரம் வரை,கணிபொறி முன்னமர்ந்து, மிகத் தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்தாள்.ஏறத்தாழ 14 மணி நேரம். அவளது ஒரு நாள் முழுவதையும் அந்த சிலிகான் இயந்திரம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

அவள் அந்த நிறுவனத்தில் சேர்ந்து 7 மாதங்களே ஆகியிருந்தன. இப்போது தான் அவளை SOFTWARE TRAINEE என்ற பதவியிலிருந்து SOFTWARE ENGINEER என்று  நிலை உயர்த்தி இருந்தார்கள். பதவியை உயர்த்தி தொழிலாளியை மகிழ்வித்தாயிற்று... அது தொழிலாளிக்கு நிச்சயம் சந்தோஷமான விஷயம் தான். ஆனால், நிறுவனத்துக்கு?  

சில ஆயிரங்களாக ஊதியம் உயர்த்தப்படும் போது பல பாரங்களாக முதுகு சுமைப்பட வேண்டாமா? அதில்  நாம் சுகப்பட வேண்டாமா?  இந்த விதிக்கு எந்த  நிறுவனமும் விதி விலக்கன்று. அகிம்சா வேலை செய்யும் அந்தப் பூங்கா உட்பட. அதனால் இப்போதெல்லாம் அகிம்சாவின் வேலைப்பளு கூடிக்கொண்டேயிருந்தது.
 
காலை 10 மணிக்கு அலுவலக நேரம் தொடங்கும். குறைந்தது 8 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.

அன்று காலை 10.10 மணிக்கு அவசர அவசரமாக, அலுவலகம் வந்து, தன் அடையாள அட்டையைப் பதித்து , சிவப்பு நிறம் பச்சை நிறமாக மாற, மூச்சிரைக்க உள்ளே நுழைந்து, தன் இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டாள் அகிம்சா.

எந்த ஒரு அலுவலகமாக இருந்தாலும், சேர்ந்த புதிதில், எல்லோரும், சிரமேற்கொண்டு அலுவலக விதிகளை மதிப்பார்கள். 10 மணிக்கு பணி தொடங்குகிறது என்றால், 10.05க்குள் டாணென்று ஆஜராகி விடுவார்கள். முதல் 6 மாத காலம் இப்படித்தான் போகும். ஆனால், போகப் போக இந்த மனோ நிலை மாறி ஒரு மெத்தனம், தெனாவட்டு வந்துவிடும். 10 மணிக்கு வராமல் 10.20, 10.30, 10.15 என்று இஷ்டத்துக்கு வரத் தொடங்குவார்கள்.

அகிம்சா அந்த பழக்கத்துக்கு இன்னும் மாறவில்லை. ஆனால், கூடிய விரைவில் அதற்குப் பழக்கப்பட்டு விடுவாள் போலிருந்தது.

"ஹேய், பொருக்க்ஸ் ரொம்ப லேட் ஆகிடுச்சா" என்றாள் அகிம்சா. 

பொற்கொடி என்ற அழகான பெயரைத் தான் அகிம்சா அப்படி அழைத்தாள். இந்த ஐ.டி காரர்களுக்கு ஒரு பழக்கம்.(இது எல்லாவிடங்களிலும் இப்போது பரவி விட்டது) எந்த ஒரு அழகான பெயரையும் ,   நவீன மயமாக்குகிறோம் பேர்வழி என்று, அநியாயத்துக்கு சுருக்கு விடுவார்கள். அப்போது தானே அமெரிக்கா காரன் நம்மை அழைப்பதற்கு வசதியாயிருக்கும். பொற்கொடி பொருக்ஸ். சண்முகம் ஷாண். சாம்பவி சாம். அகிம்சா அகி.

"லேட்டெல்லாம் ஒண்ணுமில்ல அகி. இன்னும் நம்ம முதலாளியே வரலை. ரிலாக்ஸ்."

அகிம்சா தன் பையை மேசையில் உட்கார வைத்து, பக்கத்தில்  இருந்த பப்பிள் டாப்புக்குச் சென்று ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தாள். பிறகு, கழிவறைக்குச் சென்றாள்.

மெல்லிழைத் தாள்களை எடுத்து முகத்தில் துளிர்த்திருந்த வியர்வைத் துளிகளை வழித்தெறிந்தாள். கண்ணாடி பார்த்தாள். இடது கன்னத்தில் ஒரு பரு இருந்தது. அய்யய்யோ.. போன வாரம் வலது கன்னத்துக்கு வந்த.... இப்போ இடது பக்கமா.. இரு உனை கவனிச்சுகறேன்.. என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டாள். முகத்தைத் தண்ணீர் விட்டுக் கழுவினாள். தன் துப்பட்டாவை துண்டாக மாற்றி முகம் துடைத்தாள்.பிறகு, இரண்டு மார்பகங்களையும் , சரி சமமாக மறைக்கும் வண்ணம், "வி" வடிவத்தில் தன் துப்பட்டாவை கீழ் இழுத்துச் சரி செய்து கொண்டாள். 

இதெல்லாம் முடித்து, தன் இருக்கைக்குச் சென்று, கணிபொறியை ஆன் செய்ததும், மைக்ரோசாஃப்ட் அவுட்லுக்கை திறந்தாள். வரிசையாக , பளிச்சென்று, சில கரிய புதிய மின்னஞ்சல்கள் ஒன்றன் பின் ஒன்றாக இறங்கின. அவற்றைப் படித்த பிறகு கணிபொறியை விட்டு அகிம்சா எழவேயில்லை. தனக்கும் தன் அணியினருக்கும், அவள் பிராஜெக்ட மானேஜர் சில ஆக்கினைகளை அனுப்பியிருந்தான்.

அந்த ஆக்கினைகளை அவள் செய்ய ஆரம்பித்ததும் வேலைகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டே யிருந்தன. அவ்வப்போது சிறுநீர் கழிப்பதற்கும், தண்ணீர் குடிப்பதற்கும் மட்டுமே அவள் மேலெழுந்தாள்.

அம்மா கட்டிக்கொடுத்த சாப்பாட்டைக் கூட காண்டீனுக்குப் போகாமல் இருக்கையிலேயே அமர்ந்து சாப்பிட்டு முடித்துவிட்டாள்.

இப்படி இருந்த இடத்திலேயே இருந்து, அனைத்து வேலைகளையும் முடிக்க, இரவு 11.45 ஆகிவிட்டது. வீட்டிலிருந்து தொடர்ச்சியாக 10 ஃபோன் கால்கள் வந்துவிட்டன. இனிமேலும், கிளம்பாவிட்டால், அப்பாவும் அம்மாவும் வீட்டைப் போர்க்களமாக்கிவிடுவார்கள் என்பது அவளுக்குத் தெரியும்.

நீண்ட நேரம் கணிபொறி முன்னமர்ந்து வேலை செய்ததால் முகம் வாடிப்போயிருந்தது. கண்கள் சோர்ந்திருந்தன.  நடக்காமல் இருந்ததால் மரத்துப் போன தன் கால்களைக் கொஞ்சம் சிரமப்பட்டு 
நடக்கவைத்து பேருந்து நிற்கும் இடம் நோக்கி அகிம்சா சென்றாள்.

5 நிமிடங்களில் அகிம்சா செல்லும் பேருந்து வந்துவிட்டது. வந்ததும், ஜன்னலோர இருக்கையில்  அகிம்சா அமர்ந்து கொண்டாள் . சோளிங்க நல்லூரிலிருந்து அம்பத்தூர் போக வேண்டும். பொதுவாக குறைந்தது 1 மணி நேரமாகும். ஆனால், தற்போது போக்குவரத்து நெரிசல் இருக்காது. அதனால் விரைவில் வீட்டுக்குச் சென்று விடலாம் என்று எண்ணிக்கொண்டாள். தன் பையில் இருந்த, நுண்ணிசைக் கருவியை எடுத்து காதினில் மாட்டி பாட்டு கேட்கத் தொடங்கினாள். 

பேருந்து மெல்ல இருமிக்கொண்டு கிளம்பியது. தன் முகத்தில் ஒருபாதியை ஜன்னலுக்கு வெளியே நீட்டிக்கொண்டு உற்சாகமாக காற்று வாங்கிக் கொண்டு வந்தாள் அகிம்சா. அவளுடன் அந்த வண்டியில் 10 பேர் பிரயாணம் செய்தனர். 

இரவின் நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு பேருந்து வேகமாக சென்று கொண்டிருந்தது. சில இடங்களில் பேருந்து நின்று, சில பேர் இறங்கியதைக் கூட அகிம்சா கவனிக்கவில்லை. அவள் மெய்மறந்து பாட்டுக்கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் அருகில் இருந்த செல்ஃபோன் இரண்டு முறை சிணுங்கியது. அந்தச் சிணுங்கல் கூட அவள் காதில் விழவில்லை.

"ஹே ராசாத்தி ரோசாப்பூ வாவாவா... அடியே சீ....." திடீரென்று பாடல் நின்று போனது. ஏன் நின்றது?  நுண்கருவியில் மின்னூட்டம் இல்லையா. இல்லையே. இருக்கிறதே. பின் ஏன் நின்றது என்று யோசிக்கும் போது தான் தன் காதுகளில் மாட்டியிருந்த ஹெட்ஃபோன் கீழே விழுந்திருப்பதை அகிம்சா பார்த்தாள். நான் கீழே போட வாய்ப்பில்லையே.. பின் யார் கீழே போட்டது....  என்று யோசித்துத் திரும்பும் போது தான் தன்னைச் சுற்றி நான்கு ஆண்கள் நிற்பதை அவள் பார்த்தாள்.

நான்கு பேரில் ஒருவன் கெளதம். அவள் அணியில் இருக்கும் ஒருவன் தான். மீதி இரண்டு பேரை அவள் அலுவலகத்தில் பார்த்திருக்கிறாள். ஆனால், அவர்களே வேறு அணிகளில் இருப்பவர்கள்.

"ஹே, கெளதம் பாட்டுக் கேக்கணும்னா இப்படித்தான் ஹெட்ஃபோன் பிடிச்சு இழுப்பியா? கேட்ட நானே தந்துட்டுப் போறேன். இந்தா..."

அவள் கொடுத்த கருவியைக் கெளதம் வலக்கையால் தள்ள அது ஜன்னலுக்கு வெளியே சென்று கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்து விட்டது.

"எனக்கு கருவி வேணாம்டி. ஐ பெண் தான் வேணும்" என்று பளாரென்று அகிம்சாவின் கன்னத்தில் அறைந்து ஒரு நாய் போல தன் மூக்கை அகிம்சா அருகே நீட்டிக்கொண்டு வந்த கெளதமை அகிம்சா கையால் அறைந்து தள்ளிவிட்டாள். கெளதம் சீற்றம் அடைந்தான். அகிம்சாவின் தலைமுடியை இறுகப்பற்றி, துச்சாதனன் பாஞ்சாலியை இழுத்து வந்தது போல், தரதரவென்று வெளியே இழுத்தான். வேகமாக பிடித்து இழுத்ததில் இருக்கையின் முன் நீட்டிக்கொண்டிருந்த பிடி அகிம்சாவின் தொடையில் குத்தி  ரத்தம் வெளிப்பட்டது. ஆனால், ஒன்றும் செய்ய முடியவில்லை.  ஒரு பெண் தன் கற்பு, அபாயதுக்கு ஆளாகும் போது உணரும் வலியை விட தொடையில் ஒரு சின்ன காயம் தந்த வலி பெரிதா?

கெளதம் பலமாக அறைந்ததில் அவன் ஐந்து கை ரேகைகளும் அவள் கன்னத்தில் பதிந்திருந்தன. அகிம்சா எலிப்பொறியில் சிக்கிக்கொண்ட எலி போலவே உணர்ந்தாள். 

"கெளதம், என்ன பண்ற.... உன்ன ஒரு நல்ல மனுஷன் நினைச்சேனே... பாக்கறதுக்கு படிச்சவனா ஒழுங்கு பிள்ளையா இருந்தியே... நீ இப்படி பண்ணலாமா..... தப்பு கெளதம்.... என்ன விட்டுடு.. நான் உனக்கு என்ன பாவம் பண்ணேன்...."

"ஹேய்... வாய மூடு றீ..... உன்னை எப்ப பாத்தேனோ.. அப்பவே உன்ன அடையணும்ன்னு நினைச்சேன்... ஆறு மாசமா உன்ன பாத்துக்கிட்டு இருக்கேன்..... சரியான சந்தர்ப்பம் எதுவுமே அமையலை... இன்னிக்கு அமைஞ்சது....இன்னிக்கு உன்னைய முடிக்காம விடமாட்டேன். ரவிண்ணே.. வண்டியோட பெட்ரோல் தீர்ற வரைக்கும் ஓயாம ஓட்டிக்கிட்டே இருங்க...."

"சரிப்பா" என்று அசரீரி போல் ஒரு குரல் கேட்டது.

கெளதம் அகிம்சாவை நெருங்கினான்...

"கெளதம்... வேணாம் கெளதம்.. நல்லா இல்ல. கிட்ட வராத.. அவங்களையும் வர வேண்டாம் சொல்லு... அப்புறம் அசிங்கம் ஆகிடும்...."

"என்னடி அசிங்கம் ஆயிடும்" ? இப்போது கெளதமின் பக்கத்திலிருந்த அந்த ஆண் பேசினான். 

"அசிங்கம் ஆகப் போகறது நீ... அத நீயே உன் வாயால சொல்லிக்கிறியா" என்று சொல்ல அந்த 3 ஆண்களும் அரக்கர்கள் போல் ஹாஹாஹாவென்று சிரித்தார்கள்.

"சீச்சீ  நாய்களா... ஏண்டா இப்படி அலையறீங்க... ஒரு பொண்ண நிம்மதியா இருக்க விட மாட்டீங்களா. கிட்ட வந்தா செருப்பு பிஞ்சுடும்.."

"டேய்.. இவ ஓவரா பேசறா... இனிமே எதுக்கு வேடிக்கை பாத்துகிட்டு.... ஹரி... மனோ..அவ துப்பாட்டாவை உருவி அந்த கம்பத்துல கட்டி போடுங்கடா".   கெளதம் ஓர் அரசன் போல் ஆணையிட்டான். மற்ற இருவரும் அவனது தளபதிகளாய் அடிபணிந்து அகிம்சாவைக் கட்டிப்போட கிட்டே நெருங்கினார்கள்... அகிம்சா ஓடினாள். பேருந்து என்ன மைதானமா? ஓடிக்கொண்டே இருப்பதற்கு. ஓடினாள். ஓடினாள். பேருந்தின் எல்லைக்கே ஓடினாள். அவளுக்குப் பின்னால் பேருந்தின் ஜன்னல் தான் இருந்தது. சட்டென்று பக்கத்தில் இருந்த கதவைப் பார்த்து அப்படியே வெளியே குதித்து விட  அகிம்சா முயல, ஹரி,  நடுவில் புகுந்து சட்டென்று அகிம்சா தடுத்து நிறுத்தி கையால் தள்ளினான். தள்ளும் போது அவன் கை அகிம்சாவின் ஆடையைக் கொஞ்சம் கிழிக்க, அகிம்சாவின் பிரா லேசாக வெளியே தெரிந்தது. அகிம்சா சலனமற்று கீழே விழுந்து கிடந்தாள். ஆஹா, இதுவன்றி தனக்கொரு சந்தர்ப்பம் அமையுமோ... என்று அவள் மேல் பாய்ந்தான் ஹரி.

அகிம்சா விழுந்த இடம் வரிசையாக இருக்கும் இரு இருக்கைகளுக்கு நடுவே உள்ள வெற்றிடம் என்பதால் அவளை நெருங்குவதற்கு ஹரி சிரமப்பட்டான். ஆயினும், நெருங்கி விட்டான். அகிம்சாவும் பூப்பறிக்கவில்லை..ஹரி நெருங்கும் போதெல்லாம் கை கால்களை உதைத்து அவனை வெளியே தள்ளினாள். 

"ஓஹோ... வீரமா...." என்று சொல்லியபடியே அவள் இரண்டு பாதங்களையும் பற்றி கொன்ற  மானை சிறுத்தை இழுத்துச் செல்வது போல் தரதரவென்று வெளியே இழுத்தான். சரசரவென்ற அந்தப் பகுதியில் உராய்ந்ததால் அகிம்சாவின் தலை வலித்தது. அவளை அவன்  இழுக்கும் போது இருக்கையின் அடியில் தென்பட்ட ஒரு பேனாவை அகிம்சா கையில் எடுத்துக்கொண்டுவிட்டாள். அதை ஹரி கவனிக்கவில்லை.

"அங்கே போய் விழுந்தா... நாங்க விட்ருவோமா.... " என்று பேருந்தின் நடுப்பகுதிக்கு அவளை இழுத்து வந்து அவள் மேல் பாய முனைந்தான். அப்போது கூராக இருந்த பேனா முனையை எடுத்து ஹரியின் வலது கண்ணில் அகிம்சா குத்தினாள் . குத்தியவுடன் கண்களிலிருந்து ரத்தம் குபுக்கென்று கொட்டியது, ஹரி அலறி அடித்துக்கொண்டு அப்பால் சென்று விழுந்தான்.  

மனோவால் பொறுக்க முடியவில்லை.... "ஏய் என்னடி பண்ண.. என்று சீறிப்பாய்ந்து அந்து அகிம்சாவின் மேல் அமர்ந்து அவளது இரண்டு கன்னங்களிலும் சரமாரியாக அடித்தான். அவள் உதடு கிழந்து ரத்தம் வந்தது.  ஒருவித மயக்கம் வந்து அகிம்சாவின் கண்களை சூழ்ந்து கொண்டது.இருப்பினும், அவள் சுதாரிப்புடன் தான் இருந்தாள். அப்போது அவளை லேசாக தூக்கி நிறுத்தி "ஒழுங்க சொல்றபடி கேளு... இல்லன்....."மனோ சொல்லி முடிப்பதற்குள் அவனின் "அந்த" இடத்தில் ஓங்கி தன் முட்டியால் குத்தினாள் அகிம்சா. மனோ சுருண்டு விழுந்து இருக்கைக்குள் உருண்டு போனான்.

கெளதம் மிரண்டு போனான். இனிமேலும் , அவனால் பொறுக்க முடியவில்லை....அகிம்சாவின் கழுத்தைப் பிடித்து "பெண்களுக்கு இருக்க வேண்டிய குணங்கள் என்ன தெரியுமா... . ஆம்பளைங்கள பாத்தா அச்சப்படணும். அதான் அச்சம். ஓர் ஆம்பளை ஆசைப்பட்டா உடனே மடங்கணும்... அதான் மடம்.... ஆவேசமா ஒரு ஆம்பளை வந்தா... வெட்கப்படணும்... அதான் வெட்கம்... ஒரு ஆம்பளை தொட்டா.. வேணாம்னு சொல்லக்கூடாது.. அதான் பயிர்ப்பு.. ஒழுங்கா நான் சொல்றபடி கேளு...இல்லனா பிணமா தான் வெளிய போவே.."

தன் நண்பர்கள் அடிபட்டு துடித்துக் கொண்டிருந்த போதும் தன் நட்பை விட என் கற்பு பெரிதாகப் போய்விட்டதே இந்தப் பிசாசுக்கு...

"சரி நான் கத்தமாட்டேன். சீக்கிரம் முடிச்சிட்டு வீட்டுல போய்க்கொண்டு விட்டுரு" என்றாள் அகிம்சா.

"வாவ். வெரி குட். இப்படித்தான் இருக்கணும் என்று " அவளை மேலாடையைக் கிழித்தான் கெளதம். இப்போது அவள் உடம்பில் பிரா மட்டுமே இருந்தது. அதையும் கழற்றி எறிய கெளதம் கிட்டே வந்தான். அகிம்சாவும் அவன் உதடுகளை நெருங்கினாள்.

"ஓ... முத்தமா... கொடு.. கொடு... கொடு.... மூடு போகறதுக்குள்ள கொடு...." என்று "உ" வென்று உதட்டைக் குவித்துக்கொண்டான் கெளதம். அப்போது கிட்டே வந்த அகிம்சா கெளதம்மின் கண், மூக்கு, இரண்டையும் தன் 32 பல்லும் அழுந்த கடித்துக் குதறினாள். வலியால் கெளதம் துடிக்க, உயிரே போனாலும் பரவாயில்லை, இவனிடம் நம் கற்பு போகக்கூடாது என்று எண்ணி அகிம்சா பேருந்தின் கதவை நோக்கி ஓடினாள். கெளதமும் பின் தொடர்ந்து வந்தான்.  கடைசிப்படி வரை சென்று திடீரென்று நின்றாள் அகிம்சா. பின்னால் வந்த கெளதம் அதை எதிர்பார்க்கவில்லை. அவன் அதைப் புரிந்துகொண்டு சமாளிப்பதற்குள் அகிம்சா அவனை வெளியே தள்ளிவிட்டாள். 

நடந்ததையெல்லாம் அறிந்து கொண்டிருந்த  பேருந்து ஓட்டுநன் ரவி வண்டியை நிறுத்தினான். 

அகிம்சா, அப்போது நினைத்திருந்தால் தப்பித்து ஓடியிருக்க முடியும். ஆனால் அவள் ஓடவில்லை. கடந்த ஒரு மணி நேரமாக  நடந்த சம்பவங்கள் அவளுக்கு எங்கிருந்தோ ஒரு தைரியத்தை வரவழைத்துக் கொடுத்திருந்தன. 

ஓட்டுநன்  நெருங்கி வந்து கொண்டிருந்தான். அவள் கையில் எந்தவொரு ஆயுதம் இல்லை. ஆனாலும், அந்த மகாலட்சுமி காளியைப் போல் ஆவேசமாக   நின்றுகொண்டிருந்தாள். அப்போது ஒரு போலீஸ் வண்டியின் சைரன் ஒலி கிட்டகிட்ட வந்துகொண்டிருந்தது. அதைக் கேட்டவுடன் ஓட்டுநன் ரவி அலறி அடித்துக் கொண்டு வெளியே குதித்து ஓடினான்.

தான் முன்பு தாக்கிய ஹரி ,மனோ இருவரும் இன்னும் எழுந்திருக்கவில்லை.  அப்போது அகிம்சா ஒரு காரியம் செய்தாள். ஹரியின் சட்டையைக் கழற்றி அதை அணிந்துகொண்டு, ஒரு புலியை வேட்டையாடிய பிறகு, அதன் மேல் கால் வைத்துக் கொண்டு... கம்பீரமாக போஸ் கொடுப்பார்களே வேட்டைக்காரர்கள்.... அந்த மாதிரி ஹரியின் மேல் கால் வைத்துக் கொண்டு அகிம்சா சொன்னாள்...

"பெண்களுக்கு இருக்குற குணம் நாலு டா

அச்சம்.... ஒரு பெண்ணோட சம்மதம் இல்லாம எந்த ஆடவனும் அவள நெருங்க அச்சப்படணும்...
மடம் அப்படின்னா அறியாமைன்னு அர்த்தம்.  ஒரு பொண்ண அடையணும்ன்னு நினைக்கிற ஆண்கள் அறியாமைக் காரர்கள் தான். ஏன்னா, அந்த ஆசையாலயே அழிஞ்சு போய்விடுங்காங்கன்னு அவங்களுக்குத் தெரியாது
நாணம்... ஒரு பொண்ணு கிட்ட ஒருத்தன் தப்பா நடந்துகிட்டா... அந்தப்பெண் அவனை அசிங்கப்படுத்தி வெட்கப்பட வெச்சுருவா...
பயிர்ப்பு. அவ சம்மதம் இல்லாம தொட்டா... அப்படியே பஸ்பம் ஆக்கிருவா..."

ஒரு திரைப்பட பஞ்ச் வசனம் போல் இருந்தாலும் அவள் உளமறிந்து உண்மையாகத் தான் சொன்னாள். உண்மை சினிமா பஞ்ச் வசனம் போலிருந்தால் அவள் என்ன செய்வாள் பாவம்?

அப்போது அவள் செல்போன் ஒலித்தது. அம்மாவின் குரல் செவிப்பறையைக் கிழித்துக்கொண்டு வந்தது. "ஏண்டி 20 வாட்டி பண்ணா தான் ஃபோன் எடுப்பியா? என்ன பண்ணிட்டிருந்த?"

"ஒண்ணு இல்லமா. மூணு ரவுடிப் பசங்க கலாட்டா பண்ணாங்க. அவங்கள அடிச்சுபோட்டேன். அதான் கால் எடுக்க முடியல"

********************************************************************************************************


பி.கு : இந்தக் கதை டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இறந்து போன  நிர்ப்பயாவுக்குச் சமர்ப்பணம்

அருஞ்சொற்பொருள்

தற்காத்து தன்கொண்டான் பேணி தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்

விளக்கம் : 


கற்புநெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன் கணவனையும் காத்து, பெருமை மிக்க பெரியோர்களின் சொல் படி கேட்டு, சோர்வில்லாமல் குடும்பத்தைக் காப்பவளே  பெண்.

த.தொ : தகவல் தொழில்நுட்பம்
நுண்ணிசைக்கருவி :  IPODஐ இப்படி மொழி பெயர்த்தேன். சரியா என்று தெரியவில்லை.
மெல்லிழைத் தாள்கள் : TISSUE  PAPER
கணித்த பொறி, கணிக்கின்ற பொறி,கணிக்கும் பொறி என்ற 3 காலங்களையும் காட்டி வினைத்தொகையாக வருவதால் , இலக்கண விதிப்படி, கணிபொறி என்று எழுதுவதே சரி. ஆனால், கணிப்பொறி என்று தவறாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். அதுவே நிலைத்துவிட்டது.



அன்புடன்,
நிரஞ்சன்

 

Girija Varadharajan

unread,
Jan 20, 2014, 4:23:30 PM1/20/14
to santhavasantham
படித்தேன். நன்றாக உள்ளது.


வரதராஜன்.


2014/1/21 Niranjan Bharathi <niranjan...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
Thanks and Regards 

Girija Varadharajan
Executive Life Planner
Great Eastern Life Assurance Co Ltd
HP:  91852063
Email:  girijavar...@gmail.com

Hari Krishnan

unread,
Jan 20, 2014, 9:35:16 PM1/20/14
to santhavasantham

2014/1/20 Niranjan Bharathi <niranjan...@gmail.com>

நுண்ணிசைக்கருவி :  IPODஐ இப்படி மொழி பெயர்த்தேன். சரியா என்று தெரியவில்லை.

http://www.livescience.com/32657-what-does-the-i-in-ipod-iphone-and-ipad-stand-for.html


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Subbaier Ramasami

unread,
Jan 21, 2014, 9:13:53 AM1/21/14
to சந்தவசந்தம்
நிரஞ்சன்,  உனக்கு நன்றாகக் கதை எழுத வருகிறது. அந்தத் துறையிலும் வெற்றிபெற வாழ்த்துகள்.

இலந்தை


2014/1/20 Niranjan Bharathi <niranjan...@gmail.com>

--

Niranjan Bharathi

unread,
Jan 21, 2014, 10:02:34 AM1/21/14
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி இலந்தை ஐயா :) :)
Reply all
Reply to author
Forward
0 new messages