சந்த வசந்த அன்பர்களுக்குப் பணிவான வணக்கம். சுமார் 3 வாரங்களுக்கு முன், திருப்புல்லாணி திரு ரகுவீரதயாள் அவர்கள், உ வே ஸ்ரீ வேதாந்த தேசிகர் இயற்றிய 33 விருத்தங்களைக் கொண்ட பூஸ்துதி என்ற வட்மொழி நூலைத் தமிழ்க் கவிதை வடிவில் யாத்துத் தருமாறு பணித்தார். அது அடியேன் அறிந்திராத நூலாதலினால் புத்தகத்திலிருந்து தமிழ்ப் பொழிப்புரையோடு கூடிய் pdf நகல் ஒன்றையும் அனுப்பி வைத்தார். வடமொழி நூலின் தமிழாக்கமாக நான் இதுவரை முயன்றதில்லை. அவர் பணித்ததால், இறைவன் சித்தம் என்று ஏற்றுக் கொண்டேன். அது இன்று முழுமை அடைந்தது. தேவநாகரி வடிவில் பாடல்கள் தனித்தனியாக வலைத்தளத்தில் கிட்டின. அவற்றை அக்ஷரமுகா துணை கொண்டு தமிழ் எழுத்து வடிவத்துக்கு மாற்ற இயன்றது. பொழிப்புரைகள் புத்தக நகலாதலின் தனித்தனியே எடுக்க இயலவில்லை. ஆகவே பொழிப்புரை, பதவுரைகளோடு கூடிய நகலை இங்கே இணைப்பாகச் சேர்த்திருக்கிறேன். தமிழ் எழுத்தில் வடமொழி வடிவையும், அடியேன் முயன்ற தமிழாக்கத்தையும் அறிஞர்களின் பார்வைக்காக இங்குப் பத்துப் பத்தாக இட எண்ணி, இன்று தொடங்குகிறேன். பிழைகளைச் சுட்டி அருளுமாறு வேண்டுகிறேன்.
என் பாடல்கள் எண்சீர் விருத்தங்களால், பொதுவாக விள/விளாச் சீர்களாலும், சில (பெரும்பாலும் விளமாகத் தொனிக்கக் கூடிய) காய்ச் சீர்களாலும் ஆனவை. சொல்லுக்குச் சொல் தமிழாக்கம் இல்லாமல் தேசிகர் சொல்ல வந்த கருத்துகளாக எனக்குப் பட்டதை ஆதாரமக வைத்து என் உணர்ச்சிகளுக்கும் ஞானத்திற்கும் எட்டிய சொற்களால் தமிழாக்கம் செய்ய முயன்றிருக்கிறேன் என்பதையும் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.
தேசிகன் திருவடிகள் சரணம்!
பூஸ்துதி தமிழாக்க முயற்சி! [பாடல்கள் 01 - 10]
ஸ்ரீமான் வேங்கட நாதார்ய: கவிதார்கிக கேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||
வேதாந்த தேசிகனே சீமானே வேங்கட
நாதாவெம் ஆசானே ஆசுகவி நாவலனே
வாதத்தில் பேரரியே வாழ்ந்திருப்ப
தென்னெஞ்சில்
நீதானே என்றும் நிலைத்து! ..(0.1)
சமர்ப்பணம்
மாவருளி மாலருள மாகவியாய் ஆனநின
நாவருளும் பாவின் நகலாக்க - ஆவதிலை!
தேசிகனே நீயருளிச் சேர்த்துவிடு
பூமிக்கே
யாசித்தேன் யாப்பிதனை ஏற்று! (0.2)
[மா = திருமகள்; நகல் (இற்றைய
வழக்குச் சொல்) = பிரதி]
முன்மொழி
இருமறைத்
தத்துவத்(து) இணையிலான் தேசிகன்
……இமையடி
விழியென இறைவனைக் கொண்டவன்
கருவையும்
கருத்தையும் கவினையும் கொண்டதாய்க்
……கருணையால்
தந்ததோர் காவியம் பூத்துதி!
அருகதை
இன்றியோர் ஆசையால் அதனையீங்(கு)
……அமுதெனும்
தமிழினில் ஆக்கிட முயன்றுளேன்!
வருபிழை
என்கவி வறுமையால், நிறைவுநான்
……வணங்கிடும்
தேசிகன் வாக்கினில் வந்ததே! (0.3)
பூஸ்துதி:
வேதா³ந்ததே³ஶிகக்ருʼதா .
வேதாந்த தேசிகர் இயற்றிய பூத்துதி
ஸங்கல்பகல்பலதிகாமவதி⁴ம்ʼ க்ஷமாயா꞉
ஸ்வேச்சா²வராஹமஹிஷீம்ʼ ஸுலபா⁴னுகம்பாம் .
விஶ்வஸ்ய
மாதரமகிஞ்சனகாமதே⁴னும்ʼ
விஶ்வம்ப⁴ராமஶரண꞉ ஶரணம்ʼ ப்ரபத்³யே .. 1..
எண்ணிய
எண்ணுமுன் ஈந்திடும் கற்பகம்!
……எல்லையில்
லாப்பிழை இயல்பினால் பொறுப்பவள்!
அண்ணல்வ
ராகனின் அன்புடை மனையவள்!
……அருள்வதில்
எளியவள் அகிலமிஃ(து) ஈன்றவள்!
நண்ணிடும்
கதியிலார் நலம்பெற அளிப்பவள்!
……நங்கைதன்
சுதந்திரம் நனிஉணர்ந் தவளவள்!
மண்ணெனும்
தாயவள் மகனென புகலவள்
……மலரடி
அன்றியோர் மறுபுகல் இல்லையே! ..(1)
[மகன்
என = மகனாகிய என்னுடைய]
த்வாம்ʼ வ்யாஹ்ருʼதி꞉ ப்ரத²மத꞉ ப்ரணவ꞉ ப்ரியம்ʼ தே ஸம்ʼவேத³யத்யகி²லமந்த்ரக³ணஸ்தமேவ .
இத்த²ம்ʼ ப்ரதீதவிப⁴வாமிதரேஷ்விதா³னீம்ʼ
ஸ்தோதும்ʼ யதா²வத³வனே க இவார்ஹதி த்வாம் ..
2..
ஓமெனும்
பிரணவ ஒண்ணொலி மந்திரம்
……உயர்மறை யாவையும்
உன்னரும் காதலன்!
ஆமிதை அவைகளே அறுதியாய்
நிறுவிடும்!
……அற்புதத் திருவியா
கிருதியின் ஆதியாய்ப்
பூமிநீ நிற்பதைப்
போற்றியும் சாற்றிடும்!
……புகழிதன் மாட்சியைப்
புலமையின் ஆற்றலால்
தாமிதை உண்மையின் தரமறிந்
தோதிடத்
……தரணியில் யாருளார்? தனிப்பெருந் தேவியே! ..(2)
[வியாகிருதி = வ்யாஹ்ருதி
மந்த்ரம்: பூ: புவ: ஸுவ:| இதில் முதன்மையான பூ: பூமியைச் சுட்டும்.]
நித்யம்ʼ ஹிதாஹிதவிபர்யயப³த்³த⁴பா⁴வே
த்வத்³வீக்ஷணைகவிநிவர்த்யப³ஹுவ்யபாயே .
முக்³தா⁴க்ஷரைரகி²லதா⁴ரிணி மோத³மானா
மாத꞉ ஸ்தனந்த⁴யதி⁴யம்ʼ மயி வர்தயேதா²꞉ .. 3..
அன்னையே
பேருல கனைத்தையும் தாங்குவை
……ஆளுவை அரசியாய் அன்புடன்
பேணுவை!
நன்மையும் தீமையும்
நானறிந் தேனிலேன்!
……ஞானமற் றேயிவை நடுவிலே
குழம்புவேன்!
நின்விழித் தயையலால்
நீங்கொணாப் பாவமும்
……நிறைந்திடத் திணறுவேன்!
நிலையிலா துளறினும்
இன்முகத் தோடவை ஏற்றெனைச்
சேய்தனக்(கு)
……இன்னமு தூட்டுமன்(பு)
இயல்புடன் ஆட்கொளே! ..(3)
ஸங்கல்பகிங்கரசராசரசக்ரவாலம்ʼ
ஸர்வாதிஶாயினமனந்தஶயஸ்ய
பும்ʼஸ꞉ .
பூ⁴மானமாத்மவிப⁴வை꞉ புனருக்தயந்தீ
வாசாமபூ⁴மிரபி பூ⁴மிரஸி த்வமேகா .. 4..
படம்பயில்
பலதலை அனந்தனாம் பணிதனிற்
……படுத்தவன் ஆண்மையின்
பதியவன் இச்சையில்
அடங்கிடும் சராசரம்
அத்தனைக் கூட்டமும்!
……அற்புதன் உத்தமன்
அவன்றிரு உளத்தினில்
இடங்கொடு பெருமையை
இன்னமும் ஏற்றுமோர்
……இணையிலாத் துணைவிநீ!
எம்மொழி நின்புகழ்
திடம்பெறும் சொற்களால்
செப்பிட வல்லது?
……தெய்வமே பூமிநீ தியாகமே
அல்லையோ? ..(4)
வேத⁴ஸ்த்ருʼணாவதி⁴ விஹாரபரிச்ச²த³ம்ʼ தே
விஶ்வம்ʼ சராசரதயா வ்யதிபி⁴த்³யமானம் .
அம்ப³ த்வதா³ஶ்ரிததயா பரிபோஷயந்தீ
விஶ்வம்ப⁴ரஸ்ய த³யிதா(அ)ஸி ததே³கநாமா .. 5..
அசைவன
அசைவிலா தனவென ஆயிரம்
……அறுகெனச் சிறிதுமாய்ப்
பிரமமா அண்டமாய்
நசையுடன் ஆடநீ நண்ணிடும்
பொருள்களால்
……ஞாலமீ(து) ஆனது; நாரணன் கருணையாம்
பசையினால் காத்தது; பாங்கொடு புரவலன்
……பத்தினி நின்னருட்
பரிவினில் வளர்வது!
இசையுனக் குரியதும்
இனியநின் நாமமும்
……இருநிலம் தாங்கியின்
துணைவிநீ என்பதே! ..(5)
[அறுகு = புல்; நசை = ஆசை; ஆட = விளயையாட; பசை = பற்று; இசை = புகழ்; இருநிலம் = பெரிய உலகம்]
ஸர்வம்ʼஸஹேத்யவநிரித்யசலேதி மாத꞉
விஶ்வம்ப⁴ரேதி விபுலேதி வஸுந்த⁴ரேதி .
அன்யானி சான்யவிமுகா²ன்யபி⁴தா⁴னவ்ருʼத்த்யா
நாமான்யமூனி கத²யந்தி தவானுபா⁴வம் .. 6..
எவருனக்
கேற்றபேர் இடவலார் இகத்தினில்?
……இயல்பினில் தயைதனில்
இறைவனை விஞ்சுவோய்!
அவனியென் பாருனை அகிலமே
காப்பதால்!
……அசலையென் பாருன(து)
அலைவிலா உறுதியால்!
தவறெலாம் பொறுப்பவள், தாரணி தாங்குவாள்,
……தழைத்திடும் செல்வியென்
றுனதருந் தனயர்கள்
உவமையற் றாயுனை உனபுகழ்
போற்றியே
……உனக்கெனத் தேர்ந்தநற்
பெயர்சொலி உவப்பரே ..(6)
தாபான் க்ஷிபன் ப்ரஸவிதா
ஸுமனோக³ணானாம்ʼ
ப்ரச்சா²யஶீதலதல꞉ ப்ரதி³ஶன் ப²லானி .
த்வத்ஸங்க³மாத்³ப⁴வதி மாத⁴வி லப்³த⁴போஷ꞉
ஶாகா²ஶதைரதி⁴க³தோ ஹரிசந்த³னோ(அ)ஸௌ .. 7..
ஆதவன்
வெம்மையை அதுமறைத்(து) உயர்மரம்
……அடிநிழல் தண்மையோ(டு)
அலர்கனி சுகந்தரும்!
வேதமார் கிளைகளும்
விண்ணவர் வடிவிலார்
……விரைமலர் வகைகளும்
வெகுவெனப் பலன்களும்
மாதவன் மரமென வழங்குவான், கருணையாம்
……மருமிகு மலரடி நீழலும்
அருளுவான்!
காதலார் துணைவிநீ
காஞ்சிசூழ் மாதவிக்
……கடிமலர்க் கொடியென
அணைப்பதால் கமழ்வனே! ..(7)
[காஞ்சி = ஆற்றோரம் வளரும்
மரம்; மாதவி = ஒருவகைக் கொடி; மாதவன் மரமாதலும் மாதவி கொடியாதலும் காண்க!]
ஸ்மேரேண வர்தி⁴தரஸத்ய முகே²ந்து³னா தே
நிஷ்பந்த³தாம்ʼ விஜஹதோ நிஜயா ப்ரக்ருʼத்யா .
விஶ்ராந்திபூ⁴மிரஸி தத்த்வதரங்க³பங்க்தே꞉
வேலேவ விஷ்ணுஜலதே⁴ரப்ருʼத²க்³ப⁴வந்தீ .. 8..
அலைகடல், அம்புலி அங்குற ஓங்கினும்
……அடங்குமாம் அணைக்குளே!
ஆங்குநீள் உலகினில்
நிலையருள் நீலமா வண்ணனாம்
நெடுங்கடல்
……நின்முகச் சிரிப்பெழில்
நிலவினால் கருணைநீர்
எலையறப் பொங்கினும்
இயற்கையார் இயல்புகள்
……எவையுமுன் அணைப்பெனும்
எல்லையை மீறொணா!
தலைவனின் தத்துவ
தரங்கமார் வரிசையில்
……தகவுமிக் கிறுதியைத்
தாங்கிடும் தேவியே! ..(8)
[ஆங்கு = அதுபோல; தரங்கம் = அலை; தகவு .= மாட்சிமை]
ஸ்வாபா⁴விகே வஸுமதி ஶ்ருதிபி⁴ர்விபா⁴வ்யே
பத்யுர்மஹிம்னி ப⁴வதீம்ʼ ப்ரதிபன்னவாஸாம் .
ஶங்கே
விமானவஹனப்ரதிமாஸமானா꞉
ஸ்தம்பே³ரமப்ரப்⁴ருʼதயோ(அ)பி வஹந்தி ஸத்த்வா꞉ .. 9..
மறையலால்
அறியொணா மாண்பினில் மகிமையில்
……மாலினுக்(கு) உவமையார்? மாநிலச் செல்வியே!
இறைவனின் பெருமையில்
இறைகுறை(வு) அற்றநீ
……இயல்பினில் உறுதியால்
இணையிலாய் அல்லையோ!
நறைமதக் களிறுகள் நாலிரு
திக்கிலும்
……நனியுனைச் சுமப்பதாய்
நாவலர் கூறினும்
பொறையொடு. கோபுரப்
பொதிசுமை தாங்கிடும்
……பொம்மைகள் போன்(று)அவை
பொய்ம்மையே அல்லவோ! ..(9)
[மாநிலச் செல்வி = வளம்
நிறைந்த பூமிதேவி; இறை = சிறிதும்; நறை = நறுமணம்; களிறு = யானை; பொறை = பொறுமை]
ஸம்பா⁴வயன் மது⁴ரிபு꞉ ப்ரணயானுரோதா⁴த்
வக்ஷ꞉ஸ்த²லேன வருணாலயராஜகன்யாம் .
விஶ்வம்ப⁴ரே ப³ஹுமுக²ப்ரதிபன்னபோ⁴க³꞉
ஶேஷாத்மனா து ப⁴வதீம்ʼ ஶிரஸா த³தா⁴தி .. 10..
அம்புதி
அருளிய அமுதினும் இனியளுக்(கு)
……அச்சுதன் அன்பினால்
அகலமீந்(து) உவந்தனன்!
எம்பெரு மானிடம் இதயமே
நல்கிநல்
……இன்புகள் பலதரும்
இச்சகத்(து) அன்னையே!
கொம்பினைப் படையெனக்
கொண்டுனைக் காத்தவன்
……குடுமியில் தாங்கிடக்
குலமுதல் அரவெனத்
தெம்புடைச் சேடனாய்த்
தானவன் மாறியுன்
……சீரது செழித்திடச்
செய்தவன் ஆவனே! ..(10)
[அம்புதி = கடல்; அகலம் = மார்பு; படை = ஆயுதம்; குடுமி = உச்சித் தலை; குல முதல் அரவு =
பாம்புக் குலத்தின் முதல் பாம்பு; சேடன் = ஆதிசேடன்.]
நல்வாழ்த்துகள்
கோபால்.
[11/03/2026]