மஸ்கட் கவிஞர்,நண்பர்.சுரேஜமீ அவர்கள் நூறு பாடல்கள் கொண்ட “மதுரை மீனாட்சி அம்மை பதிகம்” எழுத விழைந்து, முதல் பத்துப் பாடல்களை இயற்றினார்.
கவிஞர.அய்யப்பன்(கோவில்பட்டி) அவர்கள் 11 முதல் 20 ஆம் பாடல் வரை எழுதினார்.
21-30 பாடல்களை அடியேன் எழுதினேன்.
அப்பாடல்களைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.
31-100 பாடல்களைப் பலவேறு கவிஞர்கள் இனித் தொடர்ந்து எழுதி நிறைஙு செய்வர்.
இந்த அரிய பணிக்கு வடிவம் கொடுத்த கவிஞர் சுரேஜமீ அவர்களை வாழ்த்துகிறேன்
நன்றி
இதோ அடியேன் எழுதிய 21-30 பாடல்கள்;
மதுரை மீனாட்சி அம்மை பதிகம்!
(பதினான்கு சீர் ஆசிரிய விருத்தம்)
(விளம், விளம்,விளம், விளம், விளம்,மா,தேமா- அரையடிக்கு)
உறக்கமும் உண்டியும் ஓய்வதும், சாய்வதும்
உண்மையில் வாழ்க்கை யாமோ?
ஊக்கமும் உரமெனும் உள்வலித் திறமையும்
ஒழிவதை ஏற்க லாமோ?
வறக்குமோ உன்னருள் வான்முகில் கண்களின்
வண்மையும் அற்றுப் போமோ?
வளர்பயிர் மண்ணுயிர் வாடினால் தாயுளம்
மற்றதைப் பொறுக்கு மோசொல்!
திறக்குமோ கதவுகள்? தெய்வமுன் காட்சியில்
திளைக்கநான் வேண்டும் அம்மா!
செந்தமிழ்ச் செழுஞ்சுவை சிந்துநற் கவிதைகள்
சிறியனும் செய்ய வேண்டும்.
புறக்கணிக் காமலிப் புவியினில் என்துயர்
போக்கிநீ அருள வேண்டும்.
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும்
பூங்கயற் கண்ணி தாயே!
உறுபொருள் செல்வமும் உற்றறி கல்வியும்
உயர்ந்தநல் பதவி எல்லாம்
ஒருநொடிப் பொழுதினில் இலவென ஆதலை
உலகினில் கண்ட பின்னும்
கறுவிய உளத்தொடு களம்புகு கரியெனக்
கனிவினைத் துறப்போர் உண்டு
கடையெழு வள்ளலின் கதைபல கேட்டபின்
கடிதினில் மறப்போர் உண்டு
பொறிசெலும் வழியினில், புலன்நுகர் சுகங்களைப்
புவிதனில் விழைவோர் எல்லாம்
புலியென, அரியென, பொருபல விலங்கெனப்
பொலிவற அழியக் கண்டேன்.
புறங்கடை நல்லிசை நாட்டுமோர் பண்பினைப்
புலவனுக் கருள வேண்டும்
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும்
பூங்கயற் கண்ணி தாயே!
எத்தனை பிறவிகள், இத்தரை மீதினில்?
ஏனெனக் கீந்தாய் அம்மா?
இதுவரை செய்பிழை யாவையும் போக்குதற்
கெழில்மிகு கடைக்கண் காட்டு
பித்தனின் இடப்புறப் பெற்றியைப் பெற்றனை,
பிள்ளையை மறந்தாய் போலும்
பெற்றவள் உன்னையே முற்றுமாய்ப் பற்றினேன்
பேரருள் புரிவாய் சற்று.
கொத்தலர் மாலையும் முத்தொளிர் மகுடமும்
கொழுமணித் தொடியும் மின்னும்
கோடியாம் பரிதியின் கேழொளி முகத்தினில்
குளிர்ந்தபுன் னகையே மன்னும்
பொத்திய அல்வழி போகவே எண்ணுமென்
புன்மையைத் தடுத்துக் காப்பாய்
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும்
பூங்கயற் கண்ணி தாயே!
உறியினில் வெண்ணெயைக் கோகுல மனைகளில்
உண்டவக் கண்ணன் தங்காய்
ஒருகுறை பெருங்குறை ஆயினும் உன்பெயர்
ஓதினால் தீரும் இங்கே.
குறியென வாழ்வினில் கொண்டனன் உன்னையே
கோதிலா மதுரை வாழ்வே
கோலமார் கோபுரம் குலவிடும் கோவிலின்
கொற்றவை உமையே தாயே
சிறியவன் எனக்குமோர் செயல்திறன் தருவது
தேவியுன் ஆற்றல் அன்றோ?
தேற்றமும் தெளிவுமாய்த் திகழுமுன் திருமுகம்
சீர்மதித் தோற்றம் அன்றோ?
பொறுமையும் திறமையும் புலமையும் அருள்வது
பொற்றொடி, கடமை அன்றோ?
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும்
பூங்கயற் கண்ணி தாயே!
ஏங்கிய ஏழையர் இருள்மனை விளக்கென
இலங்குவாய் தாயே என்றும்
ஈசனின் இடப்புறம் இருக்குமென் அன்னையே
இஃதுனக் கெளிதே அன்றோ?
ஆங்கொரு கல்லினைச் சிலையெனச் சமைத்தநீ
அடுத்ததைப் படியாய்ச் செய்தாய்
அன்னைசெய் விந்தையின் அழகையும் பெருமையும்
அளக்கவும் சொற்கள் உண்டோ?
ஓங்கிய கோபுரம் உலவுவிண் முகில்தொடும்
ஓமென இடிமு ழங்கும்
ஒண்மழைச் சாரலில் மண்மணம் சேரவும்
உன்னருள் மணம்வி ளங்கும்
பூங்குழல் வல்லிநீ, பொன்மனச் செல்விநீ,
புதுப்புனல் பொய்கை அல்லி!
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும்
பூங்கயற் கண்ணி தாயே!
அகமுறு சுடரொளி அன்பதன் குளிர்வளி
அறப்பயிர் காக்கும் வேலி
ஆடலின் அரசனை அணைபவள் அகிலம்வாழ்
ஆருயிர் புரக்கும் சூலி
இகபர நலத்தையும் இன்பமாம் சுகத்தையும்
ஈவதில் சிறக்கும் நீலி
என்துயர் மிகையினை, எதிர்வரும் பகையினை,
எதிர்க்குமுன் அருளின் வாளி.
மகனெனக் குனையலால் மாநில வாழ்க்கையில்
வழித்துணை யாரே அம்மா?
மரகத வல்லியே மாயனின் தங்கையே
மகிழ்வுடன் அருள்வாய் நீயே
புகலெனப் பாண்டியன் பொற்கொடி நங்கையுன்
புதுமலர்ப் பாதம் கொண்டேன்
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும்
பூங்கயற் கண்ணி தாயே!
கற்பனை யாவையும் கடப்பதுன் அற்புதம்
காவியம் போற்றும் உன்னை
காலமும் கணக்கிலாக் கோள்களும் உன்திருக்
கைகளில் சுழலும் பொம்மை
சொற்பதம் உன்புகழ் விளக்கவும் மயங்கியே
சுவையினால் சொக்கி நிற்கும்
தோகையும் உன்குழல் மேகமாய் எண்ணியே
சுற்றியே நடனம் கற்கும்.
வெற்பெனும் இமமலை அரசனின் ஒருமகள்
வெற்றியைத் தருவாய் அம்மா
வீரமும் ஆற்றலும் வினைசெயும் திறனையும்
விழைவுடன் அளிப்பாய் அம்மா
பொற்பதம் பற்றினால் பூமியில் பிறந்ததன்
புண்ணியம் அனைத்தும் கிட்டும்
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும்
பூங்கயற் கண்ணி தாயே!
ஏழிசைப் பயனெனப் பயன்தரு நயமென
இருப்பவள் நீயே அம்மா
ஏற்றமாம் நான்மறை இன்றமிழ்த் திருமுறை
ஈசனொ டுள்ளாய் நீயும்
ஆழிகொள் முத்துடன் அணிமணி யாவுமுன்
அழகினால் தாம்சி றக்கும்
ஆதியே அமுதமே ஆலவாய் அரசியே
அன்னையே மதுரை வாழ்வே
வாழியுன் கொற்றமும் வாழியுன் வெண்குடை
வாழியுன் செங்கோல் ஆட்சி
வண்டமிழ்ப் பாண்டியர் வளர்த்தமுச் சங்கமும்
வாழியே வாழி வாழி
பூழிவெங் கானகம் போனவோர் வள்ளலின்
பொன்மயில் அன்ன தங்காய்
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும்
பூங்கயற் கண்ணி தாயே!
பிறவியின் பயன்களை என்றுநான் பெறுவதோ,?
எப்படிப் பெறுவேன் அம்மா?
பெருமையைப் பேசியே பொழுதினைப் போக்குதல்
பேதைமை அன்றோ அம்மா
மறலியும் வருமுனே மறதியும் புகுமுனே
வளர்நரை திரையும் மூப்பும்
மலிபிணி எனுமிவை யானைமுன் மணியென
வருவதை உரைக்கும் அன்றோ
அறிவதும், அறிந்தவை அவைசொலும் அறநெறி
அடியவன் நடத்தல் வேண்டும்
அளிமுரல் மலர்நிறை அணிபொழில் மதுரையின்
அரசியுன் ஆசி வேண்டும்
புறம்புகல் உலகினில் அரவெது கயிறெது
புரியவே இல்லை அம்மா
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும்
பூங்கயற் கண்ணி தாயே!
தீதுடன் நன்மையும் வினைகளின் விளைவெனச்
செப்பினர் புலவர் அன்று
தெரிந்தனன் தெளிந்தனன் ஆயினும் வாழ்வினில்
திருந்தினேன் அல்லேன் தாயே
வாதுகள் வம்புகள் வழக்குகள் உழல்வதில்
வருத்தமும் அடைந்தேன் அல்லேன்
வளைத்தெனைப் பிடித்துநீ திருத்திய தன்மையால்
வந்தது வாழ்வில் மாற்றம்
யாதுமுன் அருட்செயல் யாவுமுன் பொருட்கொடை
இன்றுநான் அறிந்தேன் தாயே
இன்றமிழ், பாவலர் மன்றினில் வளர்த்தநல்
எழில்நகர் போற்று கின்றேன்
போதலர் சோலைகள் கலைபயில் சாலைகள்
பொலிநகர் போற்று கின்றேன்
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும்
பூங்கயற் கண்ணி தாயே!
– தில்லைவேந்தன்
..,
கைகளில் சுழலும் பொம்மை”
- மிக அருமை!
…
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABgdW7adV0ke%2BwiVuM2EB3gvJ-xyV8Er39uyYqyuJnpziwZ4NA%40mail.gmail.com.
பதினான்கு சீர் இரட்டை ஆசிரிய விருத்தம் - மதுரை மீனாஷி அம்மை பதிகம்!
காப்பு
துணையாய் வருவான் துணிவைத் தருவான்
இணையேது மில்லா இறைவன்! - வணங்குதினம்
மன்னுபுகழ் மாமதுரை மாடங்கொள் முக்குறுணி
தன்னுடைத்தான் தாளே தலை!
விருத்தம்
சங்கரி சௌந்தரி சத்தியம் காப்பவள் சகலமும் எனக்கு நீயே
சடுதியில் என்முனே சாகசம் புரிந்திடக் கவிதையாய் மலர்கின் றாயே
மங்கல வாழ்த்தொலி மாநிலம் முழுவதும் மகிழ்ச்சியைப் பெருக்க உன்றன்
மடியினில் தவழ்ந்திடும் மகனெனக் கொருவரம் தருவதுன் கடனு மன்றோ
தங்கிடும் உயிர்களைத் தரணியில் காப்பவள் தாயன்றி வேறு முண்டோ
தவித்திடும் மனத்தினில் தளிர்விடும் சிந்தையாய் எழுந்திடும் சக்தி யம்மே
பொங்கிடும் கங்கையே புண்ணிய பூமியாம் புவியினில் பார தத்தில்
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும் பூங்கயற் கண்ணி தாயே! (1)
கண்டிட வாயிரம் கண்களும் போதுமோ கண்டவர் சொல்லு வாரோ?
களிப்புறு மனமதில் கவின்மிகு நடையதைக் கண்டதும் விளம்பு வாரோ?
தண்டுடைத் தாமரை தண்ணீரில் நீள்வதைப் போலொரு காட்சி யாமோ?
தரணியில் மாந்தரும் தானுயர் நிலையினைத் தருமவள் பார்வை தானோ!
வண்டுவந் டமர்ந்திட வாடாது தனைத்தரும் வண்ணங்கொள் மலர தைப்போல்
வந்தவர் மகிழ்ந்திட வாழ்வினைத் தருமவள் வணங்குதல் வரமு மன்றோ
பொண்டிலா நாளுமே புவியினை ஆளவே போற்றுவம் அவளை நாமே
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும் பூங்கயற் கண்ணி தாயே! (2)
பச்சையில் பட்டுடன் பவளவா யழகிதான் பளிச்சென மின்னு கின்றாள்
பக்தியால் உந்தியே பக்குவம் பெற்றவர் படிமனம் போல நன்றே
இச்சையை விட்டிட எழுமொரு சிந்தையால் ஏற்றமும் சார்வ தைப்போல்
இங்கவள் மேனியில் இரத்தினக் கற்களும் இசைந்தொளி பரிம ளிக்க
நச்சறு மனத்துடன் நல்வழி ஏகிட நாயகி வேண்டி நிற்பார்
நவயுகம் காணவே நாற்றிசை விளங்கவே நற்றுணை வருக வென்றே
பொச்சமில் அன்புடன் புவனமும் ஒன்றெனப் புரிந்திட மாந்த ருக்கே
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும் பூங்கயற் கண்ணி தாயே! (3)
முன்னைநான் செய்தனை முடிவிலாத் தொடர்ந்தெனை மோதவும் கண்டு நீயும்
முக்கணன் ஆடலில் மோகமும் கொள்வதோ முறையதோ சொல்லு வாயா?
பின்னைநான் என்செய்வேன் பித்தனாய் ஆனபின் பெற்றவள் துணையு மின்றி
பிள்ளையைப் பேணுதல் பெரிதென எண்ணாது பேதையை வாட்ட லாமோ?
என்னையும் பொறுத்துநீ இன்முகம் காட்டியே என்னுடன் இருக்க வேண்டும்
இணையிலாச் சுகமிதை விடுத்துநான் ஏகிடும் இன்னலும் நீங்க வேண்டும்
பொன்னையும் மண்ணையும் புண்ணுடல் பெண்ணையும் போகமாய்க் கொள்ள லாமோ?
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும் பூங்கயற் கண்ணி தாயே! (4)
சொல்லாகிப் பொருளாகிச் சொல்வெலும் பதமாகச் சொல்லினுள் ஒலியு மாகி
சொல்லெலாம் ஒன்றுணர்ச் சுவையென உலகுக்குச் சொல்பவள் அன்னை யன்றோ
கல்லெனச் சொல்லியே கடவுளை மறுப்பவர் கதறியே கத்தி னாலும்
கல்லிடைப் புல்லையும் கானிடைப் பொன்னையும் கணக்கிலா வைத்த தாயே
தொல்லைகள் வந்ததும் தோல்வியை ஒதுக்கியுன் தோரண வாயில் வந்து
தொண்டுகள் பலசெயும் தொண்டர்கள் தாமவர் துரத்திடா அருளி யந்தப்
புல்லரும் வாழ்ந்திடப் புவியினில் இடந்தரும் புண்ணிய வதியும் நீயே!
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும் பூங்கயற் கண்ணி தாயே! (5)
அலைகடல் அரவமாய் ஆசைகள் அணைத்திட அலைகிறேன் தினமும் நானே
அன்னையுன் அருகினில் அமர்ந்திடும் கிள்ளையாய் ஆகுநாள் எந்த நாளோ
மலையெனக் குவிந்திடும் மனத்தினில் குப்பையும் மடிந்திடக் காணு வேனோ
மறைகளும் ஓதியே மதிவளர்ச் சடையனின் மந்திரம் சொல்லு வேனோ
தலையென உன்னையே தரணியில் கொண்டநான் தடுமாறும் நிலையும் ஏனோ?
தவறெலாம் சரியென சரியெலாம் தவறெனச் சந்ததம் பாடு கின்ற
புலையுறு மனத்தினைப் புறந்தளிப் புகழினை விதைத்திட வருவ தெப்போ?
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும் பூங்கயற் கண்ணி தாயே! (6)
நல்லவர் சேர்க்கையும் நானில மேன்மையும் நாளுமே பாட வேண்டும்
நாட்டினில் அனைவரும் நன்றதை நாடியே நலமுடன் வாழ வேண்டும்
அல்லவை அழிந்திட அறமது பெருகிட அன்னையுன் தயவும் வேண்டும்
அயலக மோகத்தில் ஆடிடும் வன்மங்கள் அடியுட னகல வேண்டும்
வல்லமை பெருகியே வாழ்விதன் பொருளுணர் வகையினர் வழிந டத்த
வாய்ப்புகள் மக்களின் வாய்மையை உயர்த்திடும் வளமதை அருள வேண்டும்
புல்லரே யாயினும் புன்மைகள் நீங்கியே புவியினில் உயர வேண்டும்
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும் பூங்கயற் கண்ணி தாயே! (7)
கற்றவர் கல்வியின் கருப்பொருள் உணர்ந்துமுக் காலமும் போற்ற வேண்டும்
கன்னியர் மனங்கவர் காளையர் நேர்மையைக் காலமும் காக்க வேண்டும்
பெற்றவர் பெரியவர் பேணுமோர் குணத்தினைப் பெரிதெனப் போற்ற வேண்டும்
பெண்டிரை மதித்திடல் பிழைகளைப் பொறுத்திடல் பிசகாது நடக்க வேண்டும்
உற்றவர் உறவினர் உணர்வுடை அனைவரின் ஒற்றுமை பெருக வேண்டும்
உலகமும் அமைதியாய் உயர்குணக் குன்றென உயர்நிலை அடைய வேண்டும்
பொற்றாது வற்றாது பூமகள் வான்மகள் பூத்திடச் செய்தல் வேண்டும்!
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும் பூங்கயற் கண்ணி தாயே! (8)
செவியினில் கேட்பதைச் சிந்தையில் தைத்ததன் சிறப்பினை அறிய வேண்டும்
சிலரது வாழ்விற்காய் சிந்தையை மாய்த்திடும் செயலதும் ஒழிய வேண்டும்
கவியினில் மொழியினில் கருத்தினில் எழுத்தினில் கற்றது மலர வேண்டும்
கண்ணனின் வாசகம் கடமையை நடத்திடும் களமதைக் காண வேண்டும்
சவியிலார் போற்றுதல் சடுதியில் மறைந்திட சக்தியுன் கருணை வேண்டும்
சரித்திரம் போற்றிநல் சாத்திரம் பழக்கிடும் சபையதும் பெருக வேண்டும்
புவியிதன் பெருமையைப் புதுமையாய்ப் பாடிட புலவர்கள் முனைய வேண்டும்
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும் பூங்கயற் கண்ணி தாயே! (9)
வன்மமும் துன்பமும் வறுமையும் பகைமையும் மறைந்திடும் நாளும் வேண்டும்
மட்டிலா மகிழ்ச்சியில் மாநிலம் செழித்திடும் வளமையும் மண்ணில் வேண்டும்
தன்மையாம் பாரதம் தரணியில் பரப்பிடும் தலைமையும் வளர வேண்டும்
தகவிலர் சொற்களை தவிர்த்துநற் தகுதியை உயர்த்திடும் பண்பு வேண்டும்
பன்மையில் ஒருமையைப் பசுமையாய்க் கண்டிடும் பாசமும் மிகுதல் வேண்டும்
பந்தமும் சொந்தமும் படர்ந்துநற் பக்குவம் வார்த்திடும் சூழல் வேண்டும்
புன்மையும் ஒழியவே புண்ணியம் சேரவே பொழுதுமே உழைக்க வேண்டும்
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும் பூங்கயற் கண்ணி தாயே! (10)
வேறு
நன்றிதை நாளுமே சொல்வார்க்கே
என்றுமே புண்ணியம் சேர்ந்திடுமே
கன்றினைப் பசுவது காப்பதுபோல்
என்றுமே காத்திடு அன்னைநீயே!
~ சுரேஜமீ
04.11.2023 இரவு 10:45
11-20
அடியேன் தொடங்கிய முதல் பத்துப் பாடல்களின் தொடர்ச்சியாகப் பல புதுவித சிந்தனைகளோடு, நவ கோள்களை, நவ இரத்தினங்களைப் பாடலில் வைத்து,
அடுத்த பத்துப் பாடல்களை (11-20 வரை) கவிஞர் அய்யப்பன் அவர்கள் எழுதி இருக்கிறார்கள்!
உங்களது பார்வைக்கும், அன்னையின் அருளுக்கும் இவை பாத்திரமாக!
அடுத்தடுத்து பத்துப் பத்துப் பாடல்களாக 100 வரை தொடரும்!
இது உங்களின் தகவலுக்காக!
இனி, கவிஞர் அய்யப்பனின் கவிதை வரிகள்👇
- தொடர்கிறேன் சு.அய்யப்பன்
அன்பினில் பூத்திடும் அன்னையே உன்னையே அடியவன் பாட வந்தேன்
ஆழியை உழக்கினால் அளந்திடக் கூடுமோ
அருளினை விளம்பு வாயே
இன்னலைத் தீர்த்தருள் இன்பமே பெருக்கிட
என்றும்நீ முந்து வாயே
இசையென விருப்பவள் இயற்றிடும் கவிதையில்
எழுந்தருள் புரிகு வாயே
உன்னருட் பார்வையால் உலகினை இயக்குவாய்
உருத்தரும் அன்னை நீயே
உருத்தர உருத்தர உள்ளொளி கூட்டுவாய்
உமைவிழி இமைப்ப துண்டோ?
புன்னகை சிந்தியே புதல்வனென் முன்வரும்
பூமகள் வாஞ்சை என்னே
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும்
பூங்கயற் கண்ணி தாயே - 11
மதுவினில் விழுந்திவர் மடிந்திட லாகுமோ?
மக்களைக் காக்க வேண்டும்
மங்கைகற் பழிப்பவர் வன்முறை செய்பவர்
மார்பினைப் பிளக்க வேண்டும்
ஒதுக்கிடும் பதுக்கிடும் உழைப்பினை உறிஞ்சிடும்
உலுத்தர்கள் அழிய வேண்டும்
உழைப்பவர் அனைவரும் உரிமைகள் பெற்றிடும்
உன்னதம் நிகழ வேண்டும்
சதுரிடும் காளியாய் சக்தியே எழுந்திடு
சத்தியம் நிலைக்க வேண்டும்
சரணமென் றிணையடி சந்ததம் போற்றினேன்
சாம்பவி எழுக
விங்கே
புதுமையிற் புதுமையாய் புலவனும் மீட்டினேன்
பூந்தமிழ்க் கண்ணி தாயே
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும்
பூங்கயற் கண்ணி தாயே - 12
அரியயன் போற்றிட அரனவர் ஏற்றிட
அரணென நிற்கின் றாயே
அடிமலர் தொழுதிடா வம்பரும் வாழ்ந்திட
அரவணைத் தாளும் தாயே
நரிபரி யாக்கியே நாடகம் ஆடிடும்
நாயகன் பாகம் நின்றாய்
நாடகம் யாவிலும் நாடகம் ஆடுவாய்
நல்லவை யூக்கு வாயே
நரிபரி யாகினால் நாடுதான் தாங்குமா?
நல்லவர் வாழ வேண்டும்
நஞ்சமு தாக்கிய மங்கலை எங்கணும்
நன்மையே மிளிரச் செய்வாய்
புரிந்திடும் பொருளுடன் புனைகவி இசையுடன்
பொருந்திடப் பாட வேண்டும்
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும்
பூங்கயற் கண்ணி தாயே - 13
ஆடலும் பாடலும் அருள்விளை யாடலாய்
அறுபத்து நான்கும் இங்கே
அருள்மிகும் சுந்தரர் ஆடிய ஆட்டமுன்
அற்புத சக்தி யன்றோ?
நாடவும் பாடவும் நான்மறை கூடுமே
நான்மாடக் கூடல் வந்தே
நற்றமிழ் கேட்கவும் நயந்தனை நோக்கவும்
நாயகிக் காவ லுண்டே
கூடலில் பாடிய குருபரர் இசையினில்
குழந்தையாய் வந்த தாயே
குழந்தையின் மடியிலே குழந்தையாய் அமர்ந்ததும்
கோமகள் ஆட லன்றோ
பூடக நாடகம் போட்டிடும் செல்வியே
பூரண ஞானம் தாயேன்
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும் பூங்கயற் கண்ணி தாயே - 14
அரசியல் பிழைப்பவர்க்(கு) அரசியல் நடத்திடும்
அறத்தினை உணர்த்த வேண்டும்
அனைவரும் சமமென வகிலமும் மகிழ்ந்திட
அனைத்தையும் மாற்ற வேண்டும்
தரணியை ஆள்பவள் தன்னிகர் இலாதவள் தடாதகை யருள வேண்டும்
தன்னிலை மறந்தவர் தகுதியை உணர்ந்திட
தண்ணருட் புரிய வேண்டும்
முரண்படு பகைமையை முடித்திடப் படைதொடும்
முண்டகக் கண்ணி தாயே
முத்தமிழ் நற்றமிழ் மொழிந்திடக் கேட்டதும்
முன்வரும் பிள்ளை நீயே
புரந்தரி நிரந்தரி புனிதரும் முனிவரும்
புகழு(ம்)முக் கண்ணி தாயே
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும் பூங்கயற் கண்ணி தாயே - 15
பகல்தரும் கதிரவன் பராம்பிகை திலகமாம்
பனிதரும் திங்கள் சூடி
பைங்கிளி ஏந்திநம் பைந்தமிழ் பேசியே
பழக்கிடும் செவ்வாய் கண்டேன்
நகைதரும் அற்புதம் நடசிவ ரஞ்சனி
நற்குரு வாக நின்றே
நாநயம் தரும்கவி நல்கினை போற்றியான்
நாளுமே பாட வந்தேன்
மகன்தரும் வார்த்தைகள் மழலையில் மொழிந்திடும்
மருதைநம் மதுரை என்றே
மங்கலம் தருபவள் மனமுவந் தேற்றனை
மதுரையை மதுர மென்றே
புகல்தரும் இணையடி பொறைதரும் மீன்விழி
புண்ணியம் தரும்உன் நாமம்
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும்
பூங்கயற் கண்ணி தாயே -16
மரகத வல்லிநீ வைடூர்யம் சூட்டினை
வயிரவி கண்கள் நீலம்
மாணிக்க மூக்குத்தி கோமேத கத்தொளி
மலரும்வாய் பவளம் முத்து
வரங்களை வழங்கு(ம்)கள் ளழகரின் தங்கையே
வண்ணமும் பச்சை யாகும்
வறுமையை நீக்குவாய் வறியவர் வீட்டிலும்
வளங்களைக் கூட்டு வாயே
சரந்தனில் நிற்பவள் சராச்சரம் நிறைபவள்
சரவணன் அன்னை நீயே
சந்நிதி வந்தவர் சங்கடம் தீர்த்திட சங்கரி முந்து வாயே
புரந்தருள் சுரந்திட புவனமும் இயங்கிடும்
பூங்கழல் போற்றுகின்றேன்
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும்
பூங்கயற்கண்ணி தாயே
- 17
அக்கரப் பொருளென வதுதரும் சுவையென
அமுதென விளைந்த தாயே
அனைவரும் இன்புற வமுதெனும் மொழியினை அம்மைநீ வூட்டு வாயே
மக்களுக் காகவே மக்களைக் காக்கவே
மகளென வந்த தாயே
மலையனின் மரபிலே மணிமுடி தரித்துநீ
மதுரையை யாளு கின்றாய்
சிக்கலில் வேலினைச் செந்திலுக் களித்தவள்
சேவடி போற்று கின்றேன்
சிரித்திடும் சிரிப்பினில் சிவசிவ சிவவென
சிவந்திடும் கன்னம் கண்டேன்
புக்ககம் எனதுளம் புண்ணியர் அவரொடும்
புகுந்துநீ அமர்ந்தி ருப்பாய்
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும்
பூங்கயற்கண்ணி தாயே
உயர்த்திய பதத்தினை ஊன்றினார் அப்பதம்
உன்திருப் பாதம் அன்றோ
ஊன்றிய பதத்தினால் ஊன்றிய தாட்சியும்
உயர்த்தும்மீ னாட்சி யன்றோ
உயர்த்திய கொடியினால் உலகெலாம் காப்பதும்
உமையவள் ஆட்சியன்றோ
உயர்த்திய கொடியிலே உயர்ந்துவான் பறந்திடும்
உலவு(ம்)மீன் ஆட்சி அன்றோ
இயற்கையை இயற்கையாய் இயக்குவள் இயங்குவள்
எளியவன் என்ன சொல்ல
இனிமையின் இனிமையை இயம்பிடும் உவமையில்
எப்படி எடுத்துச் சொல்ல
புயபலம் கொண்டெழும் பொருபடை நடத்திடும்
புண்ணிய வதியும் நீயே
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும்
பூங்கயற் கண்ணி தாயே - 19
பத்தெழில் முத்திரை பாவனை காட்டினை
பத்துமா வித்தை நல்கும்
பற்றிலான் பற்றினைப் பற்றிட வைத்திடும்
பக்தரைக் கடைக்க ணிப்பாய்
பத்தொடும் பத்திசைப் பாடல்கள் பாடிடப்
பணித்ததும் சுந்த ரம்தான்
பக்தியும் சித்தியும் பக்தியால் முக்தியும்
பவானியுன் சித்த மன்றோ
பக்தனை ஆண்டனை பரிபுரை வந்தனை
பரிவுடன் அருகில் வந்து
பைந்தமிழ் பழக்கினை பைங்கிளி போலநான்
பாடல்கள் பாடு கின்றேன்
புத்தியாய் நின்றனை புதுமைகள் செய்குவை
புனைகடம் பணியும் தாயே
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும்
பூங்கயற் கண்ணி தாயே - 20
மஸ்கட் கவிஞர்,நண்பர்.சுரேஜமீ அவர்கள் நூறு பாடல்கள் கொண்ட “மதுரை மீனாட்சி அம்மை பதிகம்” எழுத விழைந்து, முதல் பத்துப் பாடல்களை இயற்றினார்.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBD5fdnmhBYh3T3BbbO_G-4S6AR42_r_Y8G1a7chhM-sTQ%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABgdW7adV0ke%2BwiVuM2EB3gvJ-xyV8Er39uyYqyuJnpziwZ4NA%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAG%2BHesu%2Bm37U-E__0d4Y%2B44kVQ-CNYqWQfdH_eDkHg69e6jMpg%40mail.gmail.com.
On Nov 8, 2023, at 11:57 AM, KKSR <aur...@gmail.com> wrote:
அன்புக்குரியவர்களே,
மதுரை மீனாஷி அம்மன் பதிகத்தின் ஆறாம் பத்து எழுதியது அடியனே!
உங்களின் பார்வைக்கும் அம்மையின் அருளுக்கும் பாத்திரமாக👇
************
மீனாஷி அம்மை பதிகம் (6)
நின்னடி பொன்னடி நினைவெலாம் நின்றெனை நாளுமே வழி நடத்த
நெஞ்சமும் நிறைந்ததால் நீர்வரக் கண்களில் நின்னையே தரிசிக் கின்றேன்
முன்னையும் பின்னையும் முக்கணம் எக்கணம் முடிவிலா என்னைக் காக்கும்
முக்கணன் தேவியே மும்மலம் அகற்றுவள் மூச்சிலே நிற்கின் றாயே
என்னருஞ் சிந்தையின் இருப்பெலாம் நின்னதே இதிலொரு ஐய மில்லை
இன்னருள் புரிந்திடும் எழிலுடை நாயகி என்னிரு கண்கள் போற்றப்
பொன்னொளி மின்னொளி புவனமும் பொலிவுற புன்னகை காட்டும் தாயே
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும் பூங்கயற் கண்ணி தாயே! (1)
செஞ்சுடர் ஆழியைச் சேர்ந்திடச் சீருறும் மாமழை யன்ன பக்தர்
சித்தமுன் கண்பட செழிப்புறும் செய்கையும் வாழ்வினில் மண்ணி லன்றோ
வஞ்சமும் பகையும் வன்செயல் யாவையும் ஒழிந்திட வேண்டும் அம்மா
மன்றமும் ஓங்கியே மாநிலம் முழுவதும் வண்டமிழ் ஒலிக்க வேண்டும்
தஞ்சமுன் தாளெனச் சந்ததம் வந்திடும் அடியவர் குறை களைந்துத்
தரணியில் உயர்ந்திடத் தகையுடன் சிறந்திடத் தகுதியை அருள வேண்டும்
புஞ்சையும் நஞ்சையும் பூத்திடச் செய்கவே புவனமும் ஆளும் நீயே
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும் பூங்கயற் கண்ணி தாயே! (2)
கங்கையும் பொன்னியும் கவினுறக் கலந்திடும் நாளுமெந் நாளோ அம்மா
கற்றவர் புத்தியில் கசடுகள் கரைந்திடும் நாளுமந் நாளு மாமோ?
எங்கனும் சத்தியம் இச்சையில் நேர்மையும் இருப்பதில் சுகமும் காணும்
இயல்புடை மாந்தர்கள் ஈந்துவத்து இன்பமே துய்த்திடும் அந்த நாளோ?
சிங்கமும் தன்னையே சிறுநரி யென்றுணர்ச் சிறுமையும் மாறும் நாளோ?
சிந்தனைச் செழுமையும் செறிவுடை ஞானமும் திகழ்ந்திடும் நாளுந் தாமோ?
பொங்கிடும் அன்பிலே புவனமும் ஒன்றெனப் புரிந்திடும் நாளும் அஃதே?
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும் பூங்கயற் கண்ணி தாயே! (3)
எண்ணிய எய்திட எண்ணமும் நன்மையை எண்ணிடல் தர்ம மன்றோ
எழுத்தினில் பேச்சினில் இயல்பினில் நடையினில் இயைபதும் வேண்டு மன்றோ
மண்ணிதன் பெருமையை மாண்பினை மறுப்பவர் வாழ்வதும் செழிப்ப தாமோ?
மறைகளை ஒழிப்பவர் மக்களை வெறுப்பவர் மாநிலம் ஆள லாமோ?
அண்ணனைத் தம்பியை அகதியாய்த் தெருவினில் ஆக்கியோர் அறிவில் லாதோர்
அன்னையே அவர்களின் கருணையில் ஆலயம் நிற்பதும் கண்ணுற் றாயோ?
புண்ணியம் செய்தவர் புகலிடம் இன்றியே புவியினில் வாழ்வ தாமோ?
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும் பூங்கயற் கண்ணி தாயே! (4)
பெரிதெலாம் பெரிதல சிறிதெலாம் சிறிதல பேருண்மை அறிந்தி லாரே
பெருமையாய்த் தன்னையே பேசிடும் மாந்தரைப் பெரிதென எண்ண லாமோ?
அரிதென ஆனதே அறிவுடைச் சிந்தனை அறமதும் தேய்ந்து போக
ஆற்றலை ஒதுக்கியே ஆகமம் பிறழ்ந்திட ஆவன செய்கி றாரே!
தெரிந்தவர் செப்பிலர் தெளிந்தவர் பேச்சிலர் தேவையே எண்ணு கின்றார்
தெய்வமுன் கண்களைச் சிலையென எண்ணியே சிந்தையில் திறனைக் கொண்டார்
புரிந்தவர் மௌனமாய் போக்கிலா வாழ்விதில் புண்ணியம் தேடுகின்றார்
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும் பூங்கயற் கண்ணி தாயே! (5)
நல்லதைக் கூறிட நல்வழி காட்டிட நானிலத் தாரும் உண்டோ?
நாடது நமதென நாற்றிசை போற்றிட நற்செயல் புரிவ ரையும்
அல்லது சொல்லியே அகற்றிட முனைவதும் அறிவுடைச் செயலு மாமோ?
அரசியல் பிழைத்தவர்க்கு அறமது கூற்றெனும் அந்தணர் உரையும் பொய்யோ?
சில்லறை இவர்களால் சிதைந்திடும் தேசத்தைக் காப்பதுன் கடனு மன்றோ
சிலையென இருந்திடல் சிவமதின் செயலதாம் சக்தியுன் ஆற்ற லெங்கே?
புல்லரைப் புசித்திடப் புறப்படு புவியினில் பொறுமையும் போதும் அம்மா
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும் பூங்கயற் கண்ணி தாயே! (6)
பாவினிற் சீராகி பழுதிலாத் தொடையாகி பயனுறக் கவியைச் செய்த
பார்வதி பைரவி பாகமும் கொண்டனை பரமனின் தேவி யம்மே
நாவினில் வந்தமர் நாமக ளானயென் நற்றுணை யான தாயே
நல்லவர் நட்புடன் நாளுமென் பொழுதினை நயமுறச் செய்கி றாயே
காவினில் ஊறுநெய் கண்டவர் உளத்துறும் களிப்பினைப் போல நின்று
கருத்தினில் விளங்கிநற் கவிதையாய் மலர்வது கண்டுநான் வியக்கின் றேனே
பூவினில் வண்டுபோல் பொழுதுமே மயங்கியுன் பொன்னடி போற்று கின்றேன்
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும் பூங்கயற் கண்ணி தாயே! (7)
நித்தமும் உன்புகழை நெஞ்சினிற் கொள்ளுமோர் நிலையினை அருள்க தாயே
நேர்மையில் சிந்தையை நெருங்கிடா வண்ணஞ்செய் நீலிதி ரிசூலி நீயே
உத்தம னாக்கியென் உணர்வினில் கலந்திடும் உயிரெனும் சக்தி தாயே
ஒன்றினேன் உனையலால் ஒருவரை வணங்கிலேன் ஒருவரம் தருக நீயே
அத்தமும் ஆகியென் ஆவியுள் புகுந்தெனை ஆட்சிசெய் நாளும் தாயே
அண்டமும் புகழவுன் அருமையைப் பாடிட அருந்தமிழ் ஊட்டு நீயே
புத்தகம் புகுவதைப் போலவுன் பொலிவுறு நடையினில் புக்க வேண்டும்
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும் பூங்கயற் கண்ணி தாயே! (8)
ஏட்டினைப் படிப்பவர் எண்ணமும் உயரவே எழுதுகோல் இருக்க வேண்டும்
எடுத்ததைச் சொல்வதற் கேற்றதோர் உயரமும் எழுதுவோர்க்கு அமைய வேண்டும்
வாட்டிடும் நெஞ்சையே வருடிடும் வண்ணமே வார்த்தைகள் மின்ன வேண்டும்
வந்ததைச் சொல்லுமோர் வர்ணனை விடுத்துநல் வளமதைப் பெருக்க வேண்டும்
காட்டிடும் அன்பினில் கள்ளமே இல்லாத காதலும் மலர வேண்டும்
காளையர் கன்னியர் காவியக் காதலில் காலமும் திளைக்க வேண்டும்
போட்டியும் பொறாமையும் புகழ்ச்சியும் வஞ்சமும் பூமியில் தொலைய வேண்டும்
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும் பூங்கயற் கண்ணி தாயே! (9)
சொன்னதைச் செய்திடும் சொல்லினில் பூத்திடும் சுந்தரி சொக்கன் உள்ளம்
சொக்கிடும் அழகியே சோர்வினை விரட்டியென் சூழலைக் காக்க தாயே
தென்னவன் போற்றிய திருமகள் தென்பொதி கைவளர்த் தமிழு மான
தீஞ்சுவை நல்கிடும் தெள்ளுரை மன்றத்தில் தேடிடும் பாவு மானாய்
மன்னரும் மக்களும் மாண்புடன் வாழ்ந்தநல் மதுரையில் வீற்றி ருக்கும்
மறைகளும் போற்றிடும் மகிமைகள் நிறைந்தவள் மகிஷனை வதைத்த தாயே
புன்னகை பூத்திட பொதிகையும் வாழ்த்திட பூவிதழ் முகமலர்ந்து
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும் பூங்கயற் கண்ணி தாயே! (10)
~ சுரேஜமீ
11.11.2023 இரவு 8:27
சேவடியின் சீரும் சிறப்புறசெங் கோலோச்சி
மாவடிவில் தாய்விளங்கும் மாண்பினையும் - தாவறுவெண்
முத்துநிகர் சொல்லால் மொழிந்தீர் முழுநலஞ்சேர்
பத்திரண்டு பாடல் படைத்து.
அன்புக்குரியவர்களே,
மதுரை மீனாஷி அம்மன் பதிகம் ஏழாம் பத்துப் பாடல்களை எழுதியவர் கவிப்பெருஞ்சுடர் புலவர் இரா. இராமமூர்த்தி அவர்கள்! அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை; அவரை அறியாதவர் தமிழ் கூறும் நல்லுலகில் இருக்க வாய்ப்பில்லை!
இதோ பாடல்கள் உங்கள் வாசிப்பிற்கும், அன்னையின் அருளுக்கும் பாத்திரமாக👇
மதுரை மீனாட்சியம்மை பதின் பதிக மாலை
============================================
திருச்சி புலவர் இராமமூர்த்தி
—------------------------------------------------
பதினான்கு சீர் இரட்டை ஆசிரிய விருத்தம்
**********************************************************
ஆலவாய் அன்னையே! அங்கயற் கண்ணியே!
அகிலத்தை ஆளுந் தாயே!
ஆசைகொள் பக்தனேன் ஆவலைப் போலவே
அழகோ டமர்ந்த அம்மே!
நீலமார் கண்டனின் நேரான பாதியாய்
நிலமெங்கும் நிற்கும் அம்மே!
நெடியமால் தங்கையே! துடியிடைச் செல்வியே!
நிறப்பச்சைச் சுகரூ பியே!
சோலையின் குயிலெனச் சுருதியைச் சொல்லியே
சொக்கனின் சொர்க்கமா வாய்!
சுந்தர மீனவன் அந்தரங் கத்துறை
சொர்ணத்துப் பீட மாவாய்!
பூவையைப் பொற்கரத் தேந்திடும் பூவையே
புதுமைகள் விளைபூ மியே!
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும்
பூங்கயற் கண்ணி தாயே ! (1)
மாடமா துரையின் பொற்றா மரைக்குள
மையச்சங் கப்பலகை யில்
வந்தேறு புலவனென் வாய்ச்சொற்கள் நூல்களாய்
வளர்த்திட வரங்க ளீவாய்!
மயிலாடு குன்றத்துப் பாறைச்சு னைதனில்
வண்டாடு குவளையா வாய்!
கயிலாயர் பாதியாய் கந்தனுக் கமுதூட்டிக்
கடைவாயில் வேத மீவாய்!
புவியாளப் பாண்டியன் புதல்வியாய்ச் சிவனோடு
போராடி அவனைவென் றாய்,
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும்
பூங்கயற் கண்ணி தாயே ! (2)
செந்தூரின் மூகன்சொல் கந்தர்கலி வெண்பாவைச்
செவியாரக் கேட்டுகந் தாய்!
தென்னாட்டில் மதுரைமீ னாட்சிபிள் ளைத்தமிழ்
செப்பிடும் புலவன் சொல் லால்
சொந்தமாய் மன்னவன் மடியேறி அவன்மார்பின்
சுடர்முத்து மாலை வாங்கி
அந்தமிழ்ப் புலவனுக் கீந்தபின் சபையிலே
அந்தர்த்தி யான மான
செந்தமிழ்ச் செல்வியே! திருவருள் அருவியே!
திகழ்ராஜ மாதங் கியே!
தேன்வண்டு பாடக்கேட் டார்வங்கொள் தென்றலின்
சீர்கொண்ட தேவி நீயே!
பொன்வீசும் பாண்டியன் புகழ்பாடும் புலவரின்
பொக்கிஷப் புதையல் நீயே!
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும்
பூங்கயற் கண்ணி தாயே ! (3)
மகராணி காஞ்சன மாலையின் புதல்வியாய்
மதுரையாள் மாதங் கியே!
வளர்தடா தகையென்னும் பெயரோடு மும்முலை
மாட்சியால் மலைநா தன்முன்
அகம்வாடி மதவேளின் ஆணையால் நாணமுற்
றவன்மார்பில் மாலை சூட்டி,
அன்பின் மதங்கமுனி வளர்ப்பாகிப் பொதிகையாம்
அசைந்தாடுங் கொடியை யேந்தி,
மகவாகும் ஆனைமுகன் ஆறுமுகன் தமைப்பெற்ற
மாதரசி மீனாட் சியே!
மலைவாழும் ஐயப்பன் மாதாவே! அடியாரின்
மனம்போற்று மாதங் கியே!
புகல்கேட்டு நின்னருள் போற்றிடும் எங்கள்முன்
பொற்பீட மேலமர்ந் தாய்!
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும்
பூங்கயற் கண்ணி தாயே ! (4)
சின்னக்கு ழந்தையாய்ச் செருப்பின்றி மாளிகைத்
தெருவோரம் நிற்றல் கண்டே
தெருளாத ஆட்சியர் திகைப்போடு பின்வரத்
திருக்கோயி லுள்நுழைந் தாய்!
அன்னவன் மாளிகை மின்தாக்கி வீழ்ந்திட
அதுகண்ட பீட்டர் ரோஸாம்
ஆங்கில நாட்டினன் பாதுகை செய்தளித்
தன்னையின் பாதம் போற்றிப்
பொன்னடிக் காணிக்கை யாக்கினான் அம்பிகை
புகழ்பாடும் ஆடிப் பூர
நன்மைசேர் திருவிழா எட்டாநாள் தன்னிலே
நாயகித் திருப்பா தத்தில்
புதுமையாய்ப் பாதுகை பூத்திடத் திருவீதிப்
புறத்திலோர் பல்லக் கிலே
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும்
பூங்கயற் கண்ணி தாயே ! (5)
வயிநாக ரந்தொடர் நாகப்ப வள்ளல்தம்
மனத்திலே யார்வ மூட்டி,
வடதிருக் கோபுரம் வளர்ந்தோங்க வைத்தனை!
வாழ்கின்ற சித்தர் பல்லோர்
உயிரா வணம்இருந் துறைந்திடும் சந்நிதி
ஓங்கிடும் மண்ட பத்தில்
ஒப்பற்ற சிற்பங்கள் நிற்பதைக் காண்பவர்
உள்ளத்தில் பக்தி யென்னும்
பயிரோங்க வைத்திடும் பாண்டியர் தெய்வமே!
பாதிநின் பாதம் ஊன்றிப்
பரமனைக் கால்மாற்றி ஆடிடப் பார்த்தெம்முள்
பரவசந் திகழ வைத்தாய்!
புயல்மேகக் கூந்தலின் மல்லிகைப் பூச்சூடி
பூலோக மெங்கும் போற்றப்
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும்
பூங்கயற் கண்ணி தாயே! (6)
மேற்கிலே திருப்பரங் குன்றத்தில் முருகற்கு
விண்மாது தெய்வா னையை
மேலவர் போற்றிடத் திருமணம் புரிவித்து,
விளங்கிடும் கீழ்த்திக் கிலே
வெற்புறை அழகரை விரைந்தெதிர் சேவையால்
வெப்பந் தணித்து வென்றாய்!
வீழ்கின்ற பக்தரின் சித்தத்தில் முத்தியே
மேவிடும் வித்தை செய்தாய்!
ஆவிக்குள் நலம்புணர் அந்தமிழ்ச் சான்றோரை
ஆளும்முச் சங்கம் வைத்தே
ஆயிரம் புலவர்கள் வாயார வாழ்த்திடும்
அணிநூல்க ளுருவாக் கினாய்!
பூவிற்குள் சீரடிப் பொலியும் கலைமகள்
பொற்புடன் போற்றி செய்யப்
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும்
பூங்கயற் கண்ணி தாயே! (7)
மாசிலா தப்பாலும் சென்றுறை மகிழ்விலே
வளர்ந்திடும் அமெரிக் காவின்
ஊசுடன் நகரிலே உவகையோ டெழுந்தருள்
ஓண்மைமீ னாட்சி நின்பால்
நேசமாய் யான்செயும் தூதுநூல் அரங்கேற
நீளருள் செய்த அம்மே!
நின்னருள் பெற்றிடுங் கவிவேழம் வெளியிட்ட
நிகழ்விலே உயர்ந்து நின்றாய்!
நாசாவின் விஞ்ஞானி நண்பர் கணேசனின்
நயமான உதவி யாலே
நல்லதோர் புலவனென் றூரார் புகழ்ந்திடும்
நல்வாய்ப் பெனக்க ளித்தாய்!
பூசகர் மடிமீதில் ஏறியே வந்தவண்
பொலிவான கோயில் கொண்டாய் !
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும்
பூங்கயற் கண்ணி தாயே! (8)
புயல்மேக மலையின்மேல் கயலைப் பொறித்திடும்
போர்த்தென்னன் வழுதி வாழ்த்தும்
புலவர்கள் வரிசையில் பொருந்திடா வென்னையும்
பொறுமையோ டாண்டு கொண்டாய்!
அயல்வாழ்நர் போற்றவோர் அருந்தமிழ்க் கவிஞனாய்
ஆக்கும் கயற்கண் ணினாய்!
அழகான கிளியுன்ற னழகெலாம் போற்றிட
அங்கையில் ஏந்தி வந்தாய்!
சயமாதும் மலர்மாதும் தளிர்ப்பாதம் தைவரத்
தளர்கின்ற சொக்க நாதன்
தானுன்றன் பின்வரத் தனிவாசல் கொண்டநின்
தரமந்த மதுரை காட்டும்!
புயவீர ராட்டிடும் பொன்னூஞ்ச லேறியே
பொன்னாடர் போற்றி யேத்தப்
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும்
பூங்கயற் கண்ணி தாயே! (9)
பொலிவாரும் மஸ்கட்டின் புலவன் சுரேஜமீ
பொன்னேர்முன் பூட்டி யோட்டப்
புலவரொன் பதின்மரும் பின்னேர் செலுத்திடப்
பூங்கவிக் கதிர்வி ளைத்தாய்!
நலமான ஆண்டதன் ஆடியோ டாவணி
நல்கிடும் மாசி வீதி
நண்ணிடும் திருவிழாக் கோலத்தி லாலவாய்
நகரமே நடன மாட
நிலமெலாம் அதிரவே வைகையில் அழகரும்
நெடும்பரி மீதே றியே
நேயர்க் கருள்புரி நின்னடி நெஞ்சிலே
நின்றாடக் கொண்டா டுவார்!
புலமெங்கும் பூக்களே போர்த்திட வைகையில்
புதுமைகள் பூத்து வாழப்
புகழ்தரும் மதுரையில் பொலிவுடன் வலம்வரும்
பூங்கயற் கண்ணி தாயே! (10)
நன்றி! அனைத்தும் அவளருளே! - திருச்சி புலவர் இராமமூர்த்தி
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCN4Qu6A57---BoBrNAT54d5Cg60_a6Ad%3DY_gG9aBb75SA%40mail.gmail.com.
....