மனச்சிறகு
(எண்சீர் ஆசிரிய விருத்தம் - காய் காய் மா தேமா - அரையடிக்கு)
(தமிழ் மக்கள் மன்றம் என்னும் அமைப்பு நேற்று மாலை பாஸ்டன் அருகே நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசு பெற்ற கவிதை)
மண்ணுக்கு வரம்புண்டு வானுக் குண்டா?
… வாரிதிக்குக் கரையுண்டுன் எழுச்சிக் குண்டா?
தண்மதிக்குத் தேய்வுண்டுன் உணர்ச்சிக் குண்டா?
… தழலுக்கும் தணிவுண்டுன் விழிப்புக் குண்டா?
விண்ணிடிந்து தலைமீது விழுந்த போதும்
… மிரளாத உரமிருந்தால் மெலிவும் உண்டோ?
எண்ணமெலாம் தமிழிருந்தால் தாழ்வும் உண்டோ?
… எரிகதிர்போல் சிறகைவிரித் தெழுவாய் நெஞ்சே! (1)
தொட்டிட்ட திசையெல்லாம் சுடர்பொ ழிந்து,
… சூழ்ந்துள்ள கருமேகத் திரள்பி ளந்து,
மட்டற்ற களிப்போடு பறந்து பாடி
… வாழ்கின்ற வான்பாடிப் பறவை போலே,
கட்டற்றுக் கடமையெனும் சுமையும் அற்றுக்
… காலத்தின் கணக்கற்றுக் கவலை விட்டுச்
சுட்டிட்ட துயரையெலாம் தோற்க டித்துச்
… சோர்வற்றுன் சிறகைவிரித் தெழுவாய் நெஞ்சே! (2)
பூங்குருவி காக்கையெலாம் உன்றன் சாதி,
… பொங்குகடல் மலைகளெலாம் உறவே என்ன
ஓங்குகின்ற அன்புணர்வில் நித்தம் ஊன்றி
… ஊர்க்குதவி வாழ்ந்திட்டால் உலகம் மாறும்;
ஈங்கிந்த உண்மைதனை உனக்குள் ஆழ்த்தி,
… எதிர்நின்ற தீமையெலாம் நிலத்தில் வீழ்த்தி,
வீங்குபெருந் திறலாலே விண்ணில் பாய்ந்து,
… வீறுடனே சிறகைவிரித் தெழுவாய் நெஞ்சே. (3)
எழும்போது நிகரில்லா ஆற்றல் காட்டி,
… இருள்காயும் கதிரொளிபோல் தோற்றம் காட்டி,
விழுந்தாலும் தளராத உரத்தைக் காட்டி,
… மிகுந்திட்ட துணிவையுனுள் ஏற்றி, வாழ்வில்
சுழன்றுவரும் துயர்வளியைக் கிழித்துச் சென்று
… தோள்வலியால் தடையனைத்தும் எதிர்த்து வென்று,
பழம்பார்வை துறந்துணர்வில் புதுமை பொங்கப்
… பறந்திடவே சிறகைவிரித் தெழுவாய் நெஞ்சே! (4)
நானென்றும் நீயென்றும் பிரித்துப் பார்க்கும்
… நலிவுமிகு தனிமையெனும் கூண்டை விட்(டு)ஓர்
ஊனமிலா விடுதலையில் உயர்ந்து நின்றே
… உன்னுலகைப் பெரிதாக்கி, உறவைப் பேணி,
ஞானத்தை விரிவாக்கி, எதற்கும் என்றும்
… நகராத மலைபோல நிமிர்ந்து நின்று,
கானத்தில் நனிசிறந்த கவிதை பாடிக்
… களிப்புடனே சிறகைவிரித் தெழுவாய் நெஞ்சே! (5)
- இமயவரம்பன்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/FFAF277A-0477-47CE-BB2A-FFEAAC1C43BF%40gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqtjp%3DT_kTeF6sDNe6LCNBgmZEYfqgtnExoaSMK2ToP6Wsw%40mail.gmail.com.
--
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAB2a4BV8xJ-bNhBiOCSJJp4BiMNoMq0mnEwmB7DiNvoY%3D0%2Byuw%40mail.gmail.com.
--
ஊனமிலா விடுதலையில் உயர்ந்து நின்றே
மனச்சிறகு
(எண்சீர் ஆசிரிய விருத்தம் - காய் காய் மா தேமா - அரையடிக்கு)
(தமிழ் மக்கள் மன்றம் என்னும் அமைப்பு நேற்று மாலை பாஸ்டன் அருகே நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசு பெற்ற கவிதை)
On Apr 12, 2026, at 9:45 AM, இமயவரம்பன் <AnandBl...@gmail.com> wrote:
மனச்சிறகு