சிற்றிலக்கிய இலக்குகள்: ஊசல்

144 views
Skip to first unread message

Saidevo ramaNi

unread,
Nov 17, 2021, 12:25:02 AM11/17/21
to சந்தவசந்தம்
#சிற்றி_ஊசல்
சிற்றிலக்கிய இலக்கணம்
சிற்.006. ஊசல்
ஓங்கி உயர்ந்த ஒரு மரத்தின் கிளையில் பிணித்த கயிற்றிரு புறம் அமைத்தாடும் ஊஞ்சலில் அமர்ந்து முன்னும் பின்னுமாக உந்தி உந்தி ஆடிக் களிக்கும் விளையாட்டு ஊசல் (இந்நாளில் ஊஞ்சல்) என்பதாகும்.
.
இவ்வாறு ஊசல் ஆடி மகிழும் பாட்டுடைத் தலைவன் புகழ்பாடி "ஆடீர் ஊசல் (அல்லது) ஆடோமோ ஊசல் என்று" விளித்துப் பாடுவது ஊசல் என்னும் சிற்றிலக்கியப் பனுவலாகும்.
.
நூற்பாக்கள்
வெண்பாப் பாட்டியல் 23
ஆங்கவிருத் தத்தால் அறைந்தகலித் தாழிசையால்
ஓங்கியசுற் றத்தளவாய் ஊசலாம்.
.
நவநீதப் பாட்டியல்
தொடர்மன் விருத்தம் கலித்தாழிசை சுற்றத்தோடு
பொலிந்திடுக என்று ஆடீர் ஆடாமோ
ஊசல் பொலன் ஊசலே.
.
சிதம்பரப் பாட்டியல் 32
சொற்கலித் தாழிசையகவல் விருத்தம் ஆதல்
சுற்றமுடன் தாழிசையாய்ச் சொல்லுவது ஊசல்.
.
இலக்கண விளக்கம் 845
அகவல் விருத்தம் கலித்தாழிசையால்
பொலிதரு கிளையொடும் புகலுவது ஊசல்.
.
பிரபந்த மரபியல் 18
ஆசிரிய விருத்தம் கலித்தாழிசையில்
ஒன்றா ஒன்பான் தாழிசை போக்கிற்
சுற்றத் தளவில் சொல்வது ஊசல்.
.
தொன்னூல் விளக்கம் 276
ஊசல் என்ப ஊசலாய்க் கிளையளவு
ஆசிரிய விருத்த மாகப் பாடலும்
தன்னொலி வரும்கலித் தாழிசைப் பாடலும்
வண்ணகம் முதற்கண் வரினும் இயல்பே.
.
பிரபந்த தீபம் 19
ஊசல் என்பது ஒத்த மக்களைச்
சுற்றம் பொலியச் சுகமொடுவாழ்க என்று
ஆசிரிய விருத்தம் கலித்தாழிசையில்
ஆடீர் ஊசல் ஆடோமோ ஊசல் என்று
ஐயிரு செய்யுள் அறைதல் முறையே.
.
முத்து வீரியம் 161
அகவல் விருத்தத் தானா குதல்கலித்
தாழி சையா னாகுதல் சுற்றத்
தோடும் பொலிக ஆடீர் ஊசல்
ஆடாமோ ஊசல் ஊச லாகும்.
.
★★★
ஊசல் வகையில்
• காப்பு, கடைக்காப்பு தவிர்த்தே
• பத்துப் பாடல்களாக
• ஆசிரிய விருத்தம் அல்லது
• கலித்தாழிசை யாப்பில்
• மரக்கிளை ஊஞ்சலில் ஆடுவதாகக் கருதி
• பாட்டுடை தலைவன்/தலைவியின்
• புகழ்பாடி சுற்றத்தோடு பொலிக
• என்று வாழ்த்திப் பாடும் பாக்கள் அமையும்.
• பாடல்கள் தனிக்கவிகளாக அமையும்.
• ஒவ்வொரு செய்யுளும்
• ஈற்றிலும் பிறவடிகளிலும்
• ஆடீர் ஊசல் என்றோ
• ஆடாமோ ஊசல் என்றோ முடிவதாக அமையும்.
.
★★★★★

Saidevo ramaNi

unread,
Nov 17, 2021, 1:15:22 AM11/17/21
to சந்தவசந்தம்
ஊசல் சான்று நூல்கள்
ஊசல் வரி: சேரனைப் புகழ்தல்: சிலப்பதிகாரம்
https://ta.wikisource.org/wiki/பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும்_திறனாய்வுமும்.pdf/195

திருப்பொன்னூசல்: மாணிக்க வாசகர்
https://ta.wikisource.org/wiki/திருவாசகம்/திருப்பொன்னூசல்
ஸ்ரீ ரங்க நாயகர் ஊஞ்சல்: பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
https://thiruvonum.wordpress.com/2016/03/03/ஸ்ரீ-பிள்ளை-பெருமாள்-ஐயங-28/

தத்துவராயர் பாடுதுறை தொகுப்பு: பொன்னூசல்
https://ta.wikipedia.org/wiki/பாடுதுறை

★★★★★
 

Saidevo ramaNi

unread,
Nov 17, 2021, 11:14:08 PM11/17/21
to சந்தவசந்தம்
#ரமணிசிற்_ஊசல்
சிற்றிலக்கிய இலக்குகள்
சிற்.006. ஊசல்
ஊசல்01. குமரனுக்குப் பொன்னூஞ்சல்!
(ஊசற்பாட்டு: கலித்தாழிசை)
(குருநாதன் ரமணி: 18/11/2021)
.
குமரனுக்குக் கற்பக மரக்கிளையில் பொன்னூஞ்சல் கட்டிச் சீராட்டி, அவன் எதிர்காலம் சொல்லி வாழ்த்தி, அன்னை உமையாள் பாடுவதாக அமைந்த பாடல்.
.
காப்பு
(நேரிசை வெண்பா)
கற்பகம ரக்கிளையில் கந்தனுக்குப் பொன்னூஞ்சல்
பொற்பதத் தன்னையுமை போட்டவன் — அற்புதங்கள்
ஊசலிற் பாடி உளம்நெகிழச் செய்சொற்கள்
பேசவரம் தாமும்ம தா!
.
நூல்
(ஊசற்பாட்டு: கலித்தாழிசை)
.
உற்பவமே பொய்கையெனக் கொண்டாய் சரவணனே
கற்பகத் தருவினிலே கட்டியபொன் னூசலிலே
அற்புதக் கிளையில் அமர்ந்துன் மயில்நோக்கப்
பொற்பதம்காண் உள்ளம் பொலிவுறவே ஆடுக
. புதல்வனே பக்தருளம் புக்கூசல் ஆடுகவே! ... 1
.
தந்தையார் ஓர்தினம் தந்தகனி யுன்தமையன்
முந்தியே கொள்வான் முனிந்தே பழனிமலை
வந்துநீ ஆண்டி வடிவில் நிலைகொள்வாய்
விந்தைமகன் உன்னை வியக்கின்றேன் ஆடுக
. வேலனொரு கோல்கொள்வாய் ஊசலுந்தி ஆடுகவே! ... 2
.
தந்தைக்கே மந்திரம் சாற்றிப் பொருளுரைத்து
தந்தியுன் ஊர்தி தகப்பன் சாமியாய்
வந்துநீ ஸ்வாமி மலைவீடு கொள்வாயே
கந்தா சலக்கோவே கைநீட்டி ஆடுக
. கடைக்கண் பார்த்தருள்வாய் ஊசலுந்தி ஆடுகவே! ... 3
.
கிழவிக்குச் சுட்டபழம் கிட்டியதா என்றுநீ
பழமுதிர்ச் சோலையில் பார்த்தவளைக் கேட்பாய்
கழன்றுனைப் போற்றிக் கதைகதையாய்ப் பாடுவாள்
நிழல்போலப் பற்றுவோர் நீமங் கொள-ஆடு
. நெடுமாலின் பெண்கொள்வாய் ஊசலமர்ந் தாடுகவே! ... 4
.
சத்திவே லுடன்சூர சம்ஹாரம் செந்தூரில்
கத்தும் கடல்நடுவே செய்தவனைக் காத்தருள்வாய்
இத்தலத்தில் பஞ்சலிங்க ஈசரைப் பூசிப்பாய்
வித்தகனே வேலவனே வீடாறு கொள்வாயே
. விண்பார்த்தே மண்பார்த்தே செல்லூசல் ஆடுகவே! ... 5
.
திருப்பரங் குன்றினிலே தேவானை கேளாவாய்
பரம்பொருளே குன்றாம் படைவீ டமர்ந்தாள்வாய்
பிரவணச் சொல்லுருவாய்ப் பின்நாள் மலர்வாய்
ஒருகைவேல் பற்றிக்கால் உந்தியே ஆடுக
. உலகமெலாம் ஓங்குமுன்சீர் ஊசலமர்ந் தாடுகவே! ... 6
.
வேலன் விருத்தனாக வள்ளிமணம் செய்துநீ
கோலமிரு தேவியரைக் கொண்டே திருத்தணி
ஆலயத்தில் நின்றருள்வாய் ஆறுமுகன் பேரகழாய்
சீலம் தழைத்தெழச் செய்பவனாய் ஆடுக
. சேந்தனே செவ்வேளே ஊசலுந்தி ஆடுகவே! ... 7
.
அத்தனுக்கு ஆலமரம் அன்னைக்கு வேப்பமரம்
அத்தித் தமையன் அரசமரம் கீழமர்வான்
கத்தும் சேவற் கொடியோன் கடம்பமரம்
மத்தம் மதிகொண்டார் மைந்தனே ஆடுக
. மயிலோனே வேலவனே ஊசலாட ஆடுகவே! ... 8
.
அருணகிரி திருப்புகழின் கருணைமொழி ஆவாயே
குருபரனாம் குமரனனென முருகனருள் சேர்ப்பாயே
சரவணத்தில் அவதரித்த சண்முகனே பாவகியே
உருவழகில் உனைவிஞ்சும் தெய்வமிலை ஆடுக
. உனதுகரம் பனிரெண்டாம் ஊசலாட ஆடுகவே! ... 9
.
காவடிகள் ஆறாறாம் கந்தனருள் நேராறாம்
சேவடியைப் போற்றவருள் செய்துதிகள் ஏராளம்
சாவடிகள் சத்திரங்கள் சண்முகவுன் ஊர்தனிலே
காவடியாய் உன்னடியைக் காண்பாரே ஆடுக
. காலடியார் சண்மதனே ஊசலாட ஆடுகவே! ... 10
.
★★★★★

Reply all
Reply to author
Forward
0 new messages