நகர நானூறு வெண்பாக்கள் - ஹரிகிருஷ்ணன் - a sample

5 views
Skip to first unread message

Siva Siva

unread,
May 8, 2026, 12:29:02 PM (4 days ago) May 8
to santhavasantham


இன்டர்நெட்டில் உள்ள தளங்கள் & குழுக்கள் இவற்றின் நிலையாமையால் முன்பு ஒருவர் முன்பு இட்ட விஷயங்கள் இன்று கிட்டாமல் போகும் வாய்ப்பு உண்டு.  

Harikrishnan posted in Santhavasantham (yahoo group) on 2005-07-16


நகர நானூறு வெண்பாக்கள்

நானும் மத்தளராயனும் தொடங்கிய நகர வெண்பாக்களின் தொடர்ச்சி. சில சென்னையில் இருக்கும் போது எழுதியவை. சில பெங்களூர் நகரத்துக்கு வந்த பிறகு எழுதியவை. சில இன்று தொடர்ந்தவை.


எட்டிப்பார் நீள்கிளையில் ஏழெட்டு நாளாக

வட்டமாய்ச் சுள்ளி வனைத்தபடி - விட்டெறிந்த

சாக்குப்பை குப்பை சணல்குச்சி சேர்த்தெடுத்துக்

காக்கை தொடுக்கின்ற கூடு.


தலையை ஒருபக்கம் சாய்த்தபடி பார்த்து

நிலைமாடி நீர்த்தொட்டி நீச்சல் - கலையறிவார்

கண்ணன் நிறச்சிறகர் காக்கையார் செய்வதெல்லாம்

எண்ணம்போல் எச்சம் இடல்.


மெல்லத் தலைநீட்டும்; வீசுகின்ற வால்நிமிர்த்தும்;

இல்லை, வரலாமா என்பதுபோல் - கள்ளமிக

யோசிக்கும் கத்தும் ஓடோடிப் போயொளியும்

வாசற்படி யண்டை அணில்.


சென்னையிலே என்றேனும் சின்னதாய்த் தூற்றலென்றால்

அன்னிக்கு நெஞ்சம் அடித்தாடும் - மன்னிக்

கருக்கும்; அடிக்கின்ற காற்றில் கணத்தில்

வெறிக்கும்பார் நீலமாய் விண்.


எத்தனைநாள் விண்பார்த்தேன் எத்தனைநாள் ஏங்கிநின்றேன்

ஒத்தை மழைத்துளியில் உள்நனைந்தேன் - மொத்திநித்தம்

முங்கி எழுவதைப்போல் மொண்டுவந்து கொட்டுதையா

பெங்களூர் பூராவும் பெய்து.


அங்கே மழைபெய்தால் ஆனந்தம் ஐயாஓ

இங்கே மழைத்தால் எரிகின்றார் - பொங்கித்

தெருவெல்லாம் வெள்ளம் சீறிப் பரவ

உருமாறிப் போனதெங்கள் ஊர்.


நிக்காமல் பெய்தமழை நீண்ட நரகமென்று

டெக்கான் ஹெரல்டில் திமிலோகம் - சக்கைமழை

கொட்டி இடிக்கிறது; கோடிமின்னல் வானெல்லாம்

தட்டி வெடிக்கிறது சார்.


சின்னத் தெருநாய்கள் சீறிக் குதறியதால்

மென்மயிர்த்தோல் ரத்த விளாறாகி - தன்னிருகண்

வானை வெறித்தபடி வண்டியள்ளும் குப்பைக்குள்

பூனையுடல் செல்லும் புகுந்து.


சன்ன மழைத்தூறல்; சாத்திவைத்த சன்னல்கள்

முன்னோட்ட மேக முழக்கங்கள் - இன்னும்

சருகுதிரும் தாழ்கிளையில் தன்னுள்தான் ஆழ்ந்து

குரலுடைந்து கூவும் குயில்.


அன்புடன்,

ஹரி கிருஷ்ணன்.

Reply all
Reply to author
Forward
0 new messages