பழம்பாடல்- அரியும் அரனும் அவன்

5 views
Skip to first unread message

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 10, 2026, 10:29:54 PM (19 hours ago) Apr 10
to சந்தவசந்தம்

 

<> அரியும் அரனும் அவன் <>

 

 

Harihara 3-11-2021.jpg

 

அரியான் அவனை அறியான் பவத்தை


அரியான் அரியான் அறியான் – அறைவேன்


அரியான் அலன்றன் அடியார்க்(கு) அவரைப்


பிரியான் பெரியான் அவன்.


 

பொருள் விளக்கம்

 

சிவன்:

எளிதில் எட்டிட இயலாதவன்*; அவனை அறியாதவனது  பவம்  (பிறப்பு-இறப்பு) என்னும் நோயை அழிக்கமாட்டான்** (அறிந்தோரின் பவத்தை அழிப்பான் என்பது வெளிப்படை..)  திருமாலும் அறியாதவன் (இது சோதிப் பிழம்பாய் நின்ற சிவனின் அடியைத் திருமால் காண இயலாததைச் சுட்டும்.) எனினும், அவன் தன் அடியவர்களுக்கு அரியவன் அல்லன், எளியனாவன்; என்றைக்கும் அவர் தமைப் பிரியாது காக்கும் பெரியோன் என்றும் நான் கூறுவேன்.


* அரியானை அந்தணர்தம் சிந்தையானை.. – அப்பர் தேவாரம்

** அரிதல்= அறுத்தல்; அழித்தல்.

 

திருமால்:

அரி என்ற பெயரைத் தாங்கியவன்.  அவனை அறியாதவனது  பவம்  (பிறப்பு-இறப்பு) என்னும் நோயை அழிக்கமாட்டான் (அறிந்தோரின் பவத்தை அழிப்பான் என்பது வெளிப்படை..)   அவன் (நர)சிங்க உருக்கொண்டவன் அல்லது வானோரிடைச் சிங்கம் போன்றவன்**.  அவனுடைய பெருமையைக் கேட்டு அறிந்த நான்*, அவன் தன் அடியவர்களுக்கு அரியவன் ஆகாத எளியன் என்றும், அவர் தமைப் பிரியாது காக்கும் பெரியோன் என்றும் கூறுவேன்.

* அரி = சிங்கம்; அறி யான் = அறிந்த நான் (வினைத்தொகை)

(இது மடக்கணி அமைந்த சிலேடை வெண்பா.)


... அனந்த் 10-4-2026

Reply all
Reply to author
Forward
0 new messages