தர்மத்தின் எடை என்ன? - மீ. விசுவநாதன்

7 views
Skip to first unread message

M. Viswanathan

unread,
May 15, 2026, 9:03:23 PM (8 days ago) May 15
to Santhavasantham, M. Viswanathan
"தர்மத்தின் எடை என்ன?"
              (மீ. விசுவநாதன்)

ஒருஊரில் ஏழை உழவன் இருந்தான்
இருகை கலப்பை பிடித்து உழுவான்
நெல்லும் கடலைப் பயிரும் இடுவான்
அல்லும் பகலும் அரும்பாடு பட்டே
கொஞ்சம் பணத்தினைச் சேர்த்து மகிழ்ந்தான்.
பஞ்சுப் பொதியாய்க் குவிந்த பணத்தை 
செலவுகள் செய்ய நினைக்கவும் மாட்டான்
இலையெனக் கேட்டால் இருகை விரிப்பான்
ஒருநாள் கனவில் இறைவன் இவனிடம்,
"தருமம்நீ செய்தால் வரும்பிறப்பில் நீராஜா"
என்று மறைந்தது! இவனும் விழித்தான்
அன்று விளைந்த கடலையில் கொஞ்சம்
தானமாய்த் தந்தான்; தவறாமல் செய்தான்!
ஆனதோர் நாளில் அவனும் இறந்தான்
அரச குடும்ப இளவர சென்ற
பிறப்பும் பெருமையும் பேறும் பெற்றான்;
அறத்தைச் செய்து அரசனென் றானேன்
அதனால் தினமும் வருவோர்க் கெல்லாம் 
முதலில் கொடுத்த கடலையே தானமாய்த் 
தந்தான்; விரைவிலே சக்ரவர்த்தி யாவேனென
சிந்தையில் ஆணவச் சீக்கினைக் கொண்டான்!
சீக்கினால் மாண்டவன் மீண்டும் உழவனாய்
தூக்கி நடந்த பொழுதில் இறைவனை
நினைத்தான்; தர்மம் தருவது பாபமா
என்றான்,"ஏழையாய் அன்று இருந்தநீ
உன்னால் முடிந்த உதவியைச் செய்தாய்;
உயர்ந்த அரச பதவியும் பெற்றாய்!
உயர்ந்த பதவி அடைந்த போதும்
தாழ்ந்தவுன் கஞ்சத் தனத்தால் கடலை
பருப்பே கொடுத்துப் பதவி விரும்பினாய்;
திரும்பப் பழைய நிலைக்கே வந்தாய்! 
கொடுக்கிற பொருளிலே தர்மக் கணக்கை
எடுப்பதில்லை; நெஞ்சின் இரக்கக் கணக்கே"
என்றான் இறைவன்! இதையோர் ஞானி
நன்றாய்க் கதையெனச் சொன்னார்! நானதைக்
கேட்டதில் கொஞ்சம் கொடுத்தேன்!
கேட்ப்போர் விடுப்போர் இருவரென் நட்பே.
                       (16.05.2026)
Reply all
Reply to author
Forward
0 new messages