சிவவாக்கியரின் “எங்கள் தேவர் உங்கள் தேவர் என்றிரண்டு தேவரோ” என்னும் பாட்டைத் தழுவி இப்பாடலை எழுதிப் பார்த்தேன்.
எங்கள் தேசம் உங்கள் தேசம்
(எழுசீர்ச் சந்த விருத்தம்)
எங்கள் தேசம் உங்கள் தேசம் என்றி ரண்டு தேசமோ
இங்கெ லாம்ச கத்தின் அங்கம் என்னில் ஏன்று வேசமோ
பொங்கும் அன்பி னாலி ணைந்து போரொ ழிந்து வாழ்ந்திடில்
மங்க லம்சி றக்க வான்சு வர்க்கம் மண்ணில் மேவுமே.
பதம் பிரித்து:
எங்கள் தேசம் உங்கள் தேசம் என்றிரண்டு தேசமோ
இங்கு எலாம் சகத்தின் அங்கம் என்னில் ஏன் துவேசமோ
பொங்கும் அன்பினால் இணைந்து போரொழிந்து வாழ்ந்திடில்
மங்கலம் சிறக்க வான்சுவர்க்கம் மண்ணில் மேவுமே.
(இங்கு எலாம் சகத்தின் அங்கம் என்னில் ஏன் துவேசமோ = இவ்வுலகில் உள்ள நாடுகள் எல்லாம் இதே உலகின் பகுதிகளே அன்றி வேறில்லையே! அவ்வாறு இருக்கும்போது எதற்கு இந்தப் பகைமையெல்லாம்?)
- இமயவரம்பன்