கவியரங்கம் 62 - வெண்பா வித்தகம் - வி. சுப்பிரமணியன்

18 views
Skip to first unread message

Siva Siva

unread,
Jun 30, 2026, 8:15:18 AM (3 days ago) Jun 30
to santhavasantham

முற்குறிப்புகள்:

* இலந்தையார் கொடுத்த ஈற்றடிகளில் பலவற்றுக்குப் பாடல் எழுதினேன்.

* 11 + 3 பாடல்கள்


2026-06-22 to 24

பொது - ஈற்றடிக்கு வெண்பா

---------------


1) -- கண்ணெல்லாம் ஆகுமோ கண் --

தின்றும் உறங்கியும் செல்வாழ்வில் தா(ம்)மயங்கி

என்றுமிடுக் கண்பட் டிவணுழல்வார் - அன்றந்தக்

கண்ணப்பன் கண்பெற்ற அண்ணல்கோ யில்காணாக்

கண்ணெல்லாம் ஆகுமோ கண்.


2) -- நேசமாய் வந்த நெருப்பு --

வஞ்சச் சமணர்கள் மந்திரத்தீப் பற்றாமை

அஞ்சிவைத்த தீயில் அழியாத - செஞ்சொற்சேய்

ஈசனார் இன்னருளால் ஏவியதே பாண்டியன்பால்

நேசமாய் வந்த நெருப்பு.


3) -- நெருப்பை அணையாத நீர் --

மயலில் பகீரதன் வார்கழலை வாழ்த்தப்

புயலார் மிடற்றன் புரந்தான் - கயிலைப்

பொருப்பன் சடையணைந்த போதுமவ் வேணி

நெருப்பை அணையாத நீர்.


4) -- புன்னகை யார்க்கும் பொது --

பிணங்களெரி காடேபல் பேரி முழக்கும்

கணங்கட்கும் ஆடு கழலை - வணங்குசுரர்

இன்னலற மேருவில் ஏந்திமதில் மூன்றெரி

புன்னகை யார்க்கும் பொது.


5) -- வானம் இறங்கி வரும் --

ஐந்தறிவார் ஆனிரைமேய் ஆனாயர் ஆவினில்

ஐந்துகந்தான் தாள்போற்றி அன்பொடிசை - ஐந்தெழுத்துக்

கானம் மகிழ்நெற்றிக் கண்ணன் அருள்செய்ய

வானம் இறங்கி வரும்.


6) -- நீயென்றேன் நீயென்றாய் நீ --

மாலைவான் வண்ணாநான் வாழ்த்திநினை வேன்முன்னம்

சூலைதந்து நீயாட்கொள் தொண்டர்சொல் - வேலைநஞ்சுண்

நீயென்கோன் நீயெந்தை நீங்கா அருந்துணை

நீயென்றேன் நீயென்றாய் நீ.


7) -- கட்டினுள் மாட்டாத கட்டு --

ஒட்டார்தம் முப்புரங்கள் ஒள்ளழலார் ஓர்கணையால்

சுட்டானைப் பற்றித் தொழுதுதினம் - மட்டார்பூக்

கட்டலும் இன்சொற்கள் கட்டலும் என்றுமிக்

கட்டினுள் மாட்டாத கட்டு.


8)

அருமலைபேர்த் தானை அடர்த்தழ வைத்த

மருமலர்ப் பாதத்தை வாழ்த்தி - அருளது

கிட்டித் துயர்வினை கெட்டார்காண் பார்பவ

நட்டத்தில் உச்ச நடம்.


9) -- கண்ணைமூ டிக்கொண்டு காண் --

பாம்பணை மீது படுத்திருப்பான் வேதனிவர்

தாம்பன்றி அன்னமாய்ச் சாரவொண்ணார் - ஓம்பியடி

எண்ணுமடி யார்க்கெளியான் எம்பெருமான் பேரோதிக்

கண்ணைமூ டிக்கொண்டு காண்.


10) -- பார்ப்பாரே பார்ப்பாரே பார் --

இல்லையென்று கத்துகின்ற எத்தர்கட் கில்லாதான்

முல்லைநகைப் பார்ப்பதிகோன் முக்கண்ணன் - எல்லையிலான்

ஆர்ப்பார் நதிச்சடை அண்ணலருள் கண்ணாகப்

பார்ப்பாரே பார்ப்பாரே பார்.


11) -- பொந்தினுள் இன்னொரு பொந்து --

அந்தமிலான் ஆதியிலான் ஆரணங்கோர் பாதியினான்

சந்திரனைத் தாங்கிய தாழ்சடையன் - கந்தமென

வெந்தபொடி பூசு விகிர்தனிடம் அன்பருள்ளப்

பொந்தினுள் இன்னொரு பொந்து.


***


12) -- காதுக்கு வேண்டாம் கதவு --

எண்டிசையும் பார்க்கும் இருகண் களுக்கிமை

கண்டதையும் உண்டு கடுநோயும் - விண்டசொலால்

மாதுக்க மும்தரு வாய்க்குதடு நற்கதவு

காதுக்கு வேண்டாம் கதவு.


13) -- மறதியும் கூட வரம் --

மருந்தை அருந்துங்கால் வானரத்தை எண்ணில்

மருந்துபலன் இல்லையெனும் வார்த்தை - இருந்தும்

இறையு(ம்)மறக் கொண்ணோம் இறைவன் படைப்பில்

மறதியும் கூட வரம்.


14) -- குறுக்குத் தெருவில் குடி --

தா(ம்)மகிழ எண்ணித் தருமம்கை விட்டார்க்கோ

மாமழை சேர்மாட மாளிகை - தீமை

வெறுக்கும் அறவோர்க்கோ மேதினியில் என்றும்

குறுக்குத் தெருவில் குடி.


V. Subramanian

Arasi Palaniappan

unread,
Jun 30, 2026, 8:32:35 AM (3 days ago) Jun 30
to சந்தவசந்தம்
நீற்றணி வானை நினைந்து புனை வெண்பாக்கள் 
ஈற்றடி யாவும் இனிப்பு!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCN9YWB7fDjqHFd4tgoH7fHEOsmRsAc3uPjfV4bAxUdRrA%40mail.gmail.com.

Sai Ganesan H

unread,
Jun 30, 2026, 8:50:08 AM (3 days ago) Jun 30
to santhav...@googlegroups.com
அத்தனையும் அருமை! 
நீயென்றேன்…, கட்டுக்குள் … பாடல்கள் அற்புதமான கற்பனை! 
— சத்ய வேழன் H சாயி கணேசன் 
--

Siva Siva

unread,
Jun 30, 2026, 9:14:35 AM (3 days ago) Jun 30
to santhavasantham

With some notes now.


முற்குறிப்புகள்:

* இலந்தையார் கொடுத்த ஈற்றடிகளில் பலவற்றுக்குப் பாடல் எழுதினேன்.

* 11 + 3 பாடல்கள்


2026-06-22 to 24

பொது - ஈற்றடிக்கு வெண்பா

---------------

(11 பாடல்கள்) (வெண்பா)


1) -- கண்ணெல்லாம் ஆகுமோ கண் --

தின்றும் உறங்கியும் செல்வாழ்வில் தா(ம்)மயங்கி

என்றுமிடுக் கண்பட் டிவணுழல்வார் - அன்றந்தக்

கண்ணப்பன் கண்பெற்ற அண்ணல்கோ யில்காணாக்

கண்ணெல்லாம் ஆகுமோ கண்.


தின்றும் உறங்கியும் செல்-வாழ்வில் தா(ம்) மயங்கி, என்றும் இடுக்கண்பட்டு இவண் உழல்வார் - (இடுக்கண் - துன்பம்); (இவண் - இவ்விடம்);

அன்று அந்தக் கண்ணப்பன் கண் பெற்ற அண்ணல் கோயில் காணாக் கண்ணெல்லாம் ஆகுமோ கண் -


2) -- நேசமாய் வந்த நெருப்பு --

வஞ்சச் சமணர்கள் மந்திரத்தீப் பற்றாமை

அஞ்சிவைத்த தீயில் அழியாத - செஞ்சொற்சேய்

ஈசனார் இன்னருளால் ஏவியதே பாண்டியன்பால்

நேசமாய் வந்த நெருப்பு.


வஞ்சச் சமணர்கள் மந்திரத்தீப் பற்றாமை அஞ்சி வைத்த தீயில் அழியாத செஞ்சொற்சேய் - (சேய் - மகன்);

ஈசனார் இன்னருளால் ஏவியதே, பாண்டியன்பால் நேசமாய் வந்த நெருப்பு - (நேசம் - அன்பு); (சம்பந்தர் தேவாரம் - 3.51.1 - "பொய்யர்-ஆம் அமணர் கொளுவும் சுடர் பையவே சென்று பாண்டியற்கு ஆகவே");


3) -- நெருப்பை அணையாத நீர் --

மயலில் பகீரதன் வார்கழலை வாழ்த்தப்

புயலார் மிடற்றன் புரந்தான் - கயிலைப்

பொருப்பன் சடையணைந்த போதுமவ் வேணி

நெருப்பை அணையாத நீர்.


மயல்-ல் பகீரதன் வார்கழலை வாழ்த்தப், புயல் ஆர் மிடற்றன் புரந்தான் - (மயல் - மயக்கம்); (புயல் - மேகம்); (ஆர்தல் - ஒத்தல்); (புரத்தல் - அருள்தல்);

கயிலைப் பொருப்பன் சடை அணைந்த போதும் அவ்-வேணி நெருப்பை அணையாத நீர் - (அணைதல் - சார்தல்; பொருந்துதல்); (அணைத்தல் - அவித்தல் - extinguish); (வேணி - சடை; நதி);


4) -- புன்னகை யார்க்கும் பொது --

பிணங்களெரி காடேபல் பேரி முழக்கும்

கணங்கட்கும் ஆடு கழலை - வணங்குசுரர்

இன்னலற மேருவில் ஏந்திமதில் மூன்றெரி

புன்னகை யார்க்கும் பொது.


பிணங்கள் எரி காடே -

பல்பேரி முழக்கும் கணங்கட்கும் - (பேரி - முரசு);

ஆடு கழலை வணங்கு சுரர் இன்னல் அற மேருவில் ஏந்தி -

மதில் மூன்று எரி புன்னகையார்க்கும் பொது - (பொது - மன்று; அம்பலம்);


5) -- வானம் இறங்கி வரும் --

ஐந்தறிவார் ஆனிரைமேய் ஆனாயர் ஆவினில்

ஐந்துகந்தான் தாள்போற்றி அன்பொடிசை - ஐந்தெழுத்துக்

கானம் மகிழ்நெற்றிக் கண்ணன் அருள்செய்ய

வானம் இறங்கி வரும்.

ஐந்தறிவு ஆர் ஆனிரை மேய் ஆனாயர் -

ஆவினில்-ஐந்து உகந்தான் தாள் போற்றி - (ஆவினில் ஐந்து - பஞ்சகவ்வியம்);

அன்பொடு இசை ஐந்தெழுத்துக் கானம் மகிழ் நெற்றிக்கண்ணன் அருள்செய்ய வானம் இறங்கி வரும் - (வரும் - வருவான்; வந்தான் என்ற பொருளில்; காலமயக்கம்);


6) -- நீயென்றேன் நீயென்றாய் நீ --

மாலைவான் வண்ணாநான் வாழ்த்திநினை வேன்முன்னம்

சூலைதந்து நீயாட்கொள் தொண்டர்சொல் - வேலைநஞ்சுண்

நீயென்கோன் நீயெந்தை நீங்கா அருந்துணை

நீயென்றேன் நீயென்றாய் நீ.


மாலை-வான் வண்ணா, நான் வாழ்த்தி நினைவேன், முன்னம் சூலை தந்து நீட்கொள் தொண்டர்-சொல் -

வேலைநஞ்சு உண் நீ என் கோன் - (வேலை - கடல்);

நீ எந்தை -

நீங்கா அருந்துணை நீ -

என் தேன் நீ -

என் தாய் நீ -

(இவையெல்லாம் அப்பர் வாக்கு);


7) -- கட்டினுள் மாட்டாத கட்டு --

ஒட்டார்தம் முப்புரங்கள் ஒள்ளழலார் ஓர்கணையால்

சுட்டானைப் பற்றித் தொழுதுதினம் - மட்டார்பூக்

கட்டலும் இன்சொற்கள் கட்டலும் என்றுமிக்

கட்டினுள் மாட்டாத கட்டு.


ஒட்டார்தம் முப்புரங்கள் ஒள்-ல் ஆர் ஓர் கணையால் சுட்டானைப் பற்றித் தொழுது தினம் - (ஒட்டார் - பகைவர்);

(தினம்) மட்டு ஆர் பூக் கட்டலும் இன்சொற்கள் கட்டலும் - (மட்டு - தேன்; வாசனை); (கட்டுதல் - பிணித்தல்; செய்யுளியற்றுதல்);

என்றும் இக்கட்டினுள் மாட்டாத கட்டு - (இக்கட்டு - இடுக்கண்; கஷ்டம்); (கட்டு - பந்தம்);


8)

அருமலைபேர்த் தானை அடர்த்தழ வைத்த

மருமலர்ப் பாதத்தை வாழ்த்தி - அருளது

கிட்டித் துயர்வினை கெட்டார்காண் பார்பவ

நட்டத்தில் உச்ச நடம்.


அருமலை பேர்த்தானை அடர்த்து அழவைத்த மருமலர்ப்பாதத்தை வாழ்த்தி - (அடர்த்தல் - நசுக்குதல்); (மரு - வாசனை);

அருளது கிட்டித், துயர்வினை கெட்டார் -

காண்பார் பவநட்டத்தில் உச்ச-நடம் - (பவம் - பிறவி); (நட்டம் - நஷ்டம் - அழிவு);


9) -- கண்ணைமூ டிக்கொண்டு காண் --

பாம்பணை மீது படுத்திருப்பான் வேதனிவர்

தாம்பன்றி அன்னமாய்ச் சாரவொண்ணார் - ஓம்பியடி

எண்ணுமடி யார்க்கெளியான் எம்பெருமான் பேரோதிக்

கண்ணைமூ டிக்கொண்டு காண்.


பாம்பணை மீது படுத்திருப்பான் வேதன் இவர் தாம் பன்றி அன்னமாய்ச் சார ஒண்ணார் - (சார்தல் - கிட்டுதல்);

ஓம்பி அடி எண்ணும் அடியார்க்கு எளியான் எம்பெருமான் -

பேர் ஓதிக், கண்ணை மூடிக்கொண்டு காண் - (காண்டல் - பார்த்தல்; அனுபத்தில் அறிதல்);


10) -- பார்ப்பாரே பார்ப்பாரே பார் --

இல்லையென்று கத்துகின்ற எத்தர்கட் கில்லாதான்

முல்லைநகைப் பார்ப்பதிகோன் முக்கண்ணன் - எல்லையிலான்

ஆர்ப்பார் நதிச்சடை அண்ணலருள் கண்ணாகப்

பார்ப்பாரே பார்ப்பாரே பார்.


"இல்லை" ன்று கத்துகின்ற எத்தர்கட்கு இல்லாதான் - (எத்தன் - வஞ்சகன்);

முல்லைநகைப் பார்ப்பதிகோன் - (பார்ப்பதி - பார்வதி);

முக்கண்ணன் -

எல்லையிலான் -

ஆர்ப்பு ஆர் நதிச்சடை அண்ணல் அருள் கண்ணாகப் பார்ப்பாரே பார்ப்பாரே பார் - (ஆர்ப்பு - ஒலி; பேரொலி); (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்); (அருள் - அருளே; ஏகாரம் தொக்கது); (பார்த்தல் - கண்ணால் நோக்குதல்; அறிதல்);


11) -- பொந்தினுள் இன்னொரு பொந்து --

அந்தமிலான் ஆதியிலான் ஆரணங்கோர் பாதியினான்

சந்திரனைத் தாங்கிய தாழ்சடையன் - கந்தமென

வெந்தபொடி பூசு விகிர்தனிடம் அன்பருள்ளப்

பொந்தினுள் இன்னொரு பொந்து.


அந்தமிலான் ஆதியிலான் -

ஆரணங்கு ஓர் பாதியினான் -

சந்திரனைத் தாங்கிய தாழ்சடையன் -

கந்தமென வெந்தபொடி பூசு விகிர்தன் இடம் - (விகிர்தன் - சிவன் திருநாமம் - மாறுபட்ட செயலினன்);

அன்பர் உள்ளப்பொந்தினுள் இன்னொரு பொந்து -


***


2026-06-22 to 24

ஈற்றடிக்கு வெண்பா (மேலுள்ள பதிகத்தில் பயன்படுத்தாத மற்ற ஈற்றடிப் பாடல்கள்)

---------------


12) -- காதுக்கு வேண்டாம் கதவு --

எண்டிசையும் பார்க்கும் இருகண் களுக்கிமை

கண்டதையும் உண்டு கடுநோயும் - விண்டசொலால்

மாதுக்க மும்தரு வாய்க்குதடு நற்கதவு

காதுக்கு வேண்டாம் கதவு.


எண்திசையும் பார்க்கும் இருகண்களுக்கு இமை -

கண்டதையும் உண்டு கடுநோயும், விண்ட சொலால் மாதுக்கமும் தரு வாய்க்கு உதடு நற்கதவு - (விள்தல் - சொல்தல்); (சொலால் - சொல்லால்);

காதுக்கு வேண்டாம் கதவு -


13) -- மறதியும் கூட வரம் --

மருந்தை அருந்துங்கால் வானரத்தை எண்ணில்

மருந்துபலன் இல்லையெனும் வார்த்தை - இருந்தும்

இறையு(ம்)மறக் கொண்ணோம் இறைவன் படைப்பில்

மறதியும் கூட வரம்.


"மருந்தை அருந்துங்கால் வானரத்தை எண்ணில் மருந்து பலன் இல்லை" எனும் வார்த்தை இருந்தும் இறையு(ம்) மறக்கொண்ணோம் - (இறை - கொஞ்சம்); (மறக்கொண்ணோம் - மறக்க ஒண்ணோம்; தொகுத்தல் விகாரம்);

இறைவன் படைப்பில் மறதியும் கூட வரம் -


14) -- குறுக்குத் தெருவில் குடி --

தா(ம்)மகிழ எண்ணித் தருமம்கை விட்டார்க்கோ

மாமழை சேர்மாட மாளிகை - தீமை

வெறுக்கும் அறவோர்க்கோ மேதினியில் என்றும்

குறுக்குத் தெருவில் குடி.


தா(ம்) மகிழ எண்ணித் தருமம் கைவிட்டார்க்கோ மா-மழை சேர் மாடமாளிகை -

தீமை வெறுக்கும் அறவோர்க்கோ மேதினியில் என்றும் குறுக்குத் தெருவில் குடி - (அறவோன் - தர்மிஷ்டன்); (மேதினி - பூமி);

======================


V. Subramanian

Subbaier Ramasami

unread,
Jun 30, 2026, 9:32:23 AM (3 days ago) Jun 30
to santhav...@googlegroups.com
சிவசிவா வெண்பாக்கள் சிந்தனைகள் யாவும்
சிவனை உளங்கொண்டு  சேர-  அவையினிலே
தந்தவை யாவும் தரமாய் அமைந்தனவே
வந்தவிதம் நல்ல வரம்

கண்ணப்பன் , கங்கை, கதிகாட்டும் சம்பந்தர்
பண்ணமை ஆனாயர், பார்த்திடவே- எண்ணியும் 
காணாத மாலயனார், உச்சநடம்   அத்வைதம்
காணாத போதும் களம்

அன்பருளப் பொந்துக்குள் இன்னுமொரு பொந்தாக
தன்னை நிறுத்தும் தரவுகளும்-  தன்னினைவில்
நீங்காத வானரத்தால் நிற்கும் நினைவுகளும்
பூங்காற்று வீசு புலம்.

இலந்தை




On Tue, Jun 30, 2026 at 8:15 AM Siva Siva <naya...@gmail.com> wrote:
--

Siva Siva

unread,
Jun 30, 2026, 9:44:01 AM (3 days ago) Jun 30
to santhav...@googlegroups.com
Thanks Arasi Palaniappan.

V. Subramanian

Siva Siva

unread,
Jun 30, 2026, 9:44:24 AM (3 days ago) Jun 30
to santhav...@googlegroups.com
Thanks Sai Ganesan.

Siva Siva

unread,
Jun 30, 2026, 9:47:37 AM (3 days ago) Jun 30
to santhav...@googlegroups.com
Thanks.

முதலில் சில ஈற்றடிகளுக்கு எழுதினேன். பின்னர் இன்னும் சிலவற்றுக்கு எழுதினேன்.
பின்னர் இன்னும் சிலவற்றுக்கு எழுதிப், பாடல்களில் சிலவற்றை வரிசையில் இடத்தை மாற்றினேன். ஒரு பதிகம் ஆகியது!

வி. சுப்பிரமணியன்

Govindaraju Arunachalam

unread,
Jun 30, 2026, 10:10:47 AM (3 days ago) Jun 30
to santhav...@googlegroups.com

சிவசிவா அவர்களின் பதிவுக்குப் பின்னூட்டம்

 

விழிகள் பிதுங்கும் வண்ணத்தில்

   விளங்கும் சிக்கல் ஈற்றடிக்கு

வழிகள் பலவாய் உண்டென்று

   வடித்தார் நல்ல வெண்பாக்கள்

வழியும் பத்திச் சுவையோடு

   வரைந்தார் கவிகள் வாகாக

கழியும் சுற்றிப் போட்டால்தான்

   கவிமேல் பட்ட கண்ணேறு!

 

-கருவூர் இனியன்.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jun 30, 2026, 10:35:14 AM (3 days ago) Jun 30
to சந்தவசந்தம்
குருவே வணக்கம் 
சிவமயம் ஆன வெண்பாமாலை 

On 

3) -- நெருப்பை அணையாத நீர் --

மயலில் பகீரதன் வார்கழலை வாழ்த்தப்

புயலார் மிடற்றன் புரந்தான் - கயிலைப்

பொருப்பன் சடையணைந்த போதுமவ் வேணி

நெருப்பை அணையாத நீர்.


சிவபெருமான் சடை நெருப்பா?

 

Siva Siva

unread,
Jun 30, 2026, 10:37:08 AM (3 days ago) Jun 30
to santhav...@googlegroups.com
Thanks.

V. Subramanian

Siva Siva

unread,
Jun 30, 2026, 10:39:18 AM (3 days ago) Jun 30
to santhav...@googlegroups.com
பாதமலர் என்பது போலச் சடைநெருப்பு.

சம்பந்தர் தேவாரம் - 2.18.9
எரியார் சடையும் அடியும் இருவர்
தெரியா ததொர்தீத் திரளா யவனே
மரியார் பிரியா மருகற் பெருமான்
அரியாள் இவளை அயர்வாக் கினையே.

எரி ஆர் சடை - நெருப்பைப்போலும் சிவந்த சடை

வி. சுப்பிரமணியன்

Ram Ramakrishnan

unread,
Jun 30, 2026, 3:17:50 PM (3 days ago) Jun 30
to santhav...@googlegroups.com
சிவமயமான சிவகவியின் பாடல்கள் சுந்தரம்.

அற்புதமான எண்ணவோட்டம், திரு.சிவசிவா

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages