Karma theory

3 views
Skip to first unread message

Venkatachalam Subramanian

unread,
Sep 3, 2014, 3:00:51 PM9/3/14
to Venkatachalam Dotthathri

கர்ம விதி பற்றிய கேள்விகளுக்கு ஹிந்துமதம் தரும் பதில்கள்

  • by Gnana Boomi
  • June 11, 2012
  • 8 min read
  • original

Vedic Self Help
This article is contributed by Gnanaboomi Team.

Original post in English is available at http://agniveer.com/548/theory-of-karma-hinduism/

கேள்வி: கர்மவினை என்றால் என்ன?

பதில்: அது மிக சுலபம்.

  1. உங்கள் எண்ணங்களே நிஜங்களாகின்றன.
  1. உங்களுடைய தற்போதைய நிஜம் / நிலை என்பது இது வரை தங்கள் மனத்தில் எழுந்த எண்ணங்களின் மொத்த கலவையே இன்றி வேறில்லை. இது உணர்வுள்ள, உணர்வற்ற நிலை இரண்டிலும் எழும் எண்ணங்களையும் குறிக்கும்.
  1. இதன் நோக்கமே உங்களை துக்கத்திலிருந்து ஆனந்தத்திற்கு எழச்செய்வது தான். நீங்கள் உங்களுடைய எண்ணங்களை மாற்றியமைப்பதன் மூலம் உங்களுடைய நிலையை ஆனந்தமயமாக்கிக் கொள்ள முடியும். எனவே, வாழ்க்கை என்பது வெறும் திட்டமிடா ரசாயன மாற்றங்களால் ஆனதல்ல. நிஜத்தில் வாழ்வும் இவ்வுலகமும் உங்களை  ஆனந்தத்தின் வழி நடத்த நன்கு திட்டமிடப்பட்டதாகும்.
  2. எனவே, இம்முறையை நன்கு பயன்படுத்த ஒரே வழி உங்கள் எண்ணங்களை சரிவர செதுக்குவதேயாம்.

கேள்வி: அப்படி என்றால் ஆனந்தமாயிருப்பதே வாழ்க்கையின் குறிக்கோளா?

பதில்: ஆம் கண்டிப்பாக! நம் வாழ்வின் ஒரே குறிக்கோள் ஆனந்தமாயிருப்பது தான். அப்படி ஆனந்தமயமாயிருப்பதற்கு ஒரே வழி வாழ்க்கை முறை எப்படி வேலை செய்கிறது என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ப நம் எண்ணங்களை செலுத்துவதே.

கேள்வி: பின்னே பிறர் சுகத்திற்காக தமது சுகங்களைத் தியாகம் செய்கிறார்களே, அவர்கள்?

பதில்: அவர்கள் தங்களது ஆனந்தத்தை தியாகம் செய்வதில்லை. ஆனால் தற்காலிகமானதாயுள்ள வசதிகளையும் போகங்களையும் அவர்கள் உயர்ந்த நிலைகளிலுள்ள ஆனந்தத்தை அனுபவிப்பதற்காக விட்டு விடுகிறார்கள். தன்னலமில்லாத தன்மையில் கிடைக்கும் திருப்தியானது ஒப்பற்றது, ஈடு சொல்ல முடியாதது. நம் வாழ்க்கையிலிருந்தே பார்க்கலாமே, சிறு வயதில் மண்ணைத் தின்பதில் மிக்க மகிழ்வுடையவர்களாக இருந்தோம், ஆனால் வளர்ந்த பின் அதற்கேற்ப சுகத்தைத் தேடுகிறோம். இவ்வாழ்வு அமைக்கப்பட்டிருக்கும் முறையைப் பார்த்தாலே நாமனைவரும் தண்ணீரிலுள்ள பல மூலக்கூறுகளைப் போல ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்களாக இருப்பது தெரியும். நம்மால் இவ்வுலகத்தின் ஆனந்தத்தை அதிகரிக்காமல்  நம்முடைய தனிப்பட்ட மகிழ்ச்சியை விரிவடையச் செய்ய முடியாது. எனவே சாமர்த்தியமான சிலர் தங்களுடைய சிறிய அளவிலான மகிழ்வு, வசதிகள் இவற்றை உலக நன்மை போன்ற பெரிய அளவிலான ஆனந்தத்திற்கு விலையாகக் கொடுத்துவிடுகிறார்கள்.

கேள்வி: அனைத்துமே எண்ணங்கள் தான் என்றால் செயல்கள்?

பதில்: எண்ணங்களே அனைத்துமாகா. ஆனால் அவையே நம் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆரம்ப நிலை. செயல்கள் போன்ற மற்ற அனைத்தும் அவ்வெண்ணங்களால் தொடங்கும் அடுத்தடுத்த விளைவுகளே. நாம் செய்யும் செயலனைத்தும் ஒரு எண்ணத்தினால் தொடங்குபவையே. “செயலில்லாத ஒரு வெற்று எண்ணம்” என்பதும் ஒரு எண்ணமேயாகும், அது அதற்கேற்ப விளைவை ஏற்படுத்துகிறது –  இதையே கர்மவினை என்று சொல்கிறது. ஒரு செயலைச் செய்வோம் என்ற முடிவும் கூட நம்மால் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒரு எண்ணமேயாகும்.  எனவே, செயலாக மாறாத எந்தவொரு எண்ணமும் நம்மை ஆனந்தத்திலிருந்து வெளிநடத்திச் சென்று விடுகிறது. எனவே ஞானம் (அ) அறிவு, செயல் மற்றும் சிந்தனை – இவை மூன்றுமடக்கிய எண்ண முறையானது அவசியம்.

கேள்வி: எந்த எண்ணம் ஆனந்ததிற்கு இட்டுச் செல்லும் எது செல்லாது என்பதை நாம் எப்படி முடிவு செய்வது / தெரிந்து கொள்வது?

பதில்: பல வழிகள் உண்டு இதற்கு. ஆனால் அடிப்படையான ஒன்று என்னவென்றால், உண்மை = ஆனந்தம். நம் வாழ்வில் இயங்கி வரும் இரு ஆற்றல்களை எண்ணிப் பாருங்கள்: ஞானம் மற்றும் அஞ்ஞானம். ஞானம் என்பது நம்மை உண்மைக்கருகிலும் அஞ்ஞானம் அதனின்று வெளியேயும் அழைத்துச் செல்கிறது. இவையிரண்டுமே நம் அடிப்படை எண்ணமாகிய மனோபலம் அல்லது சங்கல்பம் (சமஸ்க்ருதம்) இவற்றினாலேயே கட்டுப்படுத்தப் படுகிறது. இம்மனோபலம் அல்லது சங்கல்பம் மேலும் பல எண்ணங்களுக்கு நம்மை செலுத்தி அதற்கேற்ற செயல்கள் நடந்து விளைவுகள் ஏற்படுகின்றன. நாம் நம் மனோபலத்தை / சங்கல்பத்தை உண்மையை நோக்கிச் செலுத்தினோமானால் ஆனந்தத்திற்கு அருகாமையிலும், இல்லவிடில் அதிலிருந்து தொலைவிற்கும் செல்வோம். மற்றைய அனைத்து முறைகளும் இவ்வடிப்படை தத்துவத்தின்  (உண்மை = ஆனந்தம்) விரிவாக்கமே.

கேள்வி: இது தான் உண்மையென்று எப்படி நாம் முடிவு செய்வது?

பதில்: இதற்கும் பல வழிகளுண்டு. அடிப்படையில் பரிணாம வளர்ச்சியை ஒட்டியது இது. உணமை இது தான் என்ற முடிவு கண்மூடித்தனமான அனைத்து நம்பிக்கைகளையும் ஒதுக்கி, புதிய உண்மைகள், தகவல்களுக்கு ஏற்ப நம் நிலையை, முடிவை மாற்றியமைப்பதே. இதிலும் அடிப்படை உண்மையை (மட்டும்) ஏற்கும் சங்கல்பம் அல்லது மனோபலம் தான்.

இதன் வழிகளாவன:

அ) மறுதலிக்கும் முறை (களை நீக்குதல் என்றும் கொள்ளலாம்). எப்படி ஜிமேட் / கேட் (CAT or GMAT) தேர்வில் தவறான பதில்களை தகவல் மற்றும் சிந்தனை / அறிவிற்கு ஒப்ப மாணாக்கர்கள் உடனடியாக ஒதுக்கி விடுவரோ அப்படி. ஒரு உதாரணத்திற்கு பூமியானது உருண்டை என்பது தெரிந்த பின் அது தட்டை எனக்கூறும் எந்த ஒரு விளக்கமும், அது புகழ்பெற்ற மதக் கோட்பாடுகளைக் கொண்ட புத்தகமாக இருந்தாலும் சரி, அதை உடனே ஒதுக்கி விடுவது.

ஆ) முரண்பாடான கருத்துக்களைக் கண்டறிவது. உதாரணத்திற்கு, கடவுள்  பாகுபாடற்ற நீதியளிப்பவர் என்று கூறிப் பின் அவர் பெண்களை நரகத்தில் அடைப்பார் என்று கூறினால், முதற்சொன்னதற்கும் இதற்கும் முரண்பாடிருக்கிறது அல்லவா. இத்தகையவை ஒதுக்கக் கூடியவை.

இ) உள்ளார்ந்த ஆய்வு மற்றும் சீர்தூக்கிப் பார்த்தல்.

ஈ) தகவலின் உண்மை, நம்பகத்தன்மையை ஆராய்தல் / சரிபார்த்தல். இதுவே ஒரு பெரிய அறிவியல் எனினும் உண்மையை கண்டறியும் மனோபலம் இதற்கு அடிப்படையாம்.

கேள்வி: கர்மா என்பது எப்படி செயலாற்றுகிறது?

பதில்: உடனடியாக! ஒவ்வொரு எண்ணமும் ஒரு வகையான நரம்புச் செல்களைத் தூண்டுகிறது. இதன் அடிப்படையில் பல உளவியல் ரீதியான மாற்றங்கள் தொடங்குகிறது, சுரப்பிகளில் மாற்றம், இதயத்துடிப்பில் வேறுபாடு இப்படி. மேலும், எண்ணங்களுக்கேற்ப இந்த நரம்புச் செல்கள் தங்களை மாற்றியமைத்துக் கொள்கின்றன. எனவே, ஒன்றைப் பற்றி மறுபடி மறுபடி எண்ணுவதன் மூலம் இந்நரம்புச் செல்கள் (நியூரான்ஸ்) ஒரு வலுவான அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு, பின் இத்தகைய எண்ணங்கள் எழுவதற்கு ஏதுவாகவும் எளிதாகவும் ஆகிவிடுகிறது. சிலர் நற்பழக்கங்களையும் தீய பழக்கங்களையும் தொடர்வதற்கு இதுவே காரணம். எண்ணங்களே ஒருவருடைய சிந்தனை முறையை வகுப்பதன் மூலம், ஆரோக்கியத்தை, செயல்களை வரையறுக்கிறது. எனவே ஒவ்வொரு எண்ணமும் நாம் யார் என்பதை பாதிக்கிறது. எனவே, எண்ணங்களை மாற்றியமைப்பதன் மூலம் நாம் எப்படிப் பட்டவர் என்பதையும் மாற்றியமைக்க முடியும். மேலும் இம்முறை அனைத்து மனிதர்களிடத்தும் ஒரே மாதிரி நடைபெற்று, சமூகப் பழக்கங்கள் என்பதாக உருப்பெற்று இவையும் நாம் யார் என்பதை தீர்மானிக்கிறது. இவை மனிதரிடத்தில் மட்டுமல்ல, இதன் பாதிப்பு இயற்கையிலும் ஏற்படுகிறது, ஏனெனில் நாம் இயற்கையுடன் ஒன்றியவர்களாகவும் இயற்கையுடன் ஆற்றலை பகிர்பவர்களாயும் இருக்கிறோம். சான்றாக, வெறும் மனோபலத்தினாலேயே மருத்துவ உலகில் சில சமயங்களில் அற்புதங்கள் நடப்பதைப் பார்க்கிறோம். இவ்வாறாக எண்ணங்களே நமது வினைப்பயனைத் தீர்மானிப்பதாய் இருக்கிறது.

ஆன்மாவாகிய நாம் நமது மனம் மற்றும் உடலிலிருந்து வேறுபட்டவர்கள். நாம் இறக்கையில் மனதும் (மூளை) உடலும் இவ்வாற்றல் பரிமாற்றம் நிற்பதால் நின்று விடுகிறது. ஆனால் இவற்றைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் ஆத்மாவானது இதனால் பாதிக்கப்படுவதில்லை.

ஆத்மா மற்றொரு உடல்-மனதிற்குள் சென்று தன் பயணத்தைத் தொடர்கிறது. நினைவலைகள் என்பது மூளையுடன் சம்பந்தப் பட்டிருப்பதால் ஆத்மாவின் இந்த உடல்-மனமாற்றத்தில் அழிந்து விடுகின்றன. இருப்பினும் ஆத்மா சம்ஸ்காரங்களைத் தன்னுடன் கொண்டு செல்கிறது. ஆத்மாவின் இந்த தடையற்ற பிரயாணத்திற்கு, அதன் முன்னேற்றத்திற்கு ஏற்றாற்போல இறைவன் அதற்கு இத்தகைய மாற்றத்தை (புதிய உடல், மனம்) ஏற்படுத்துகிறான். இவ்வாத்மா, தான் கொண்டுள்ள சம்ஸ்காரங்களுக்கேற்ப இவ்வுடலில் மீண்டும் தன் மனோபாவத்தை ஏற்படுத்திக் கொண்டு, வெளி உலகில் தான் எவ்வாறு முற்பிறவியில் செய்து கொண்டிருந்ததோ அதே போல தன் பயணத்தை, முன்னேற்றத்தைத் தொடர்கிறது.

இறைவன் தன் ஒப்பற்ற கருணையால் நமக்கேற்படும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை ஆனந்தத்தின் பால் கொண்டு செல்வதற்கு ஏற்றார்போலவே உருவாக்குகிறான். இது ஒரு தொடர்ச்சியான நல்வழிப்படுத்துதலேயாகும்.  நாம் முட்டாள்தனமான செயல்களில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்தோமேயானால் முட்டாள்தனமான விளைவுகள் நமக்கு ஏற்பட்டு நாம் துக்கத்தில் ஆழத்தொடங்கி விடுவோம். மாறாக உண்மையைத் தேடுவதில் நாம் நமது எண்ணங்களைச் செலுத்துவோமேயானால் ஆனந்தத்தை நோக்கி உயர்வோம். இந்த வழிமுறையானது இறப்பினாலும் தடைபடுவதில்லை!

கேள்வி: மிருகங்கள் மற்ற உயிரினங்கள் எவ்வாறு தங்கள் மனோபலத்தை செயலாற்ற முடியும்?

பதில்: பொதுவாக சொல்வதானால், மனிதர்களால் மட்டுமே தங்கள் மனோபலத்தை செயலாற்ற முடியும். மற்ற உயிரினங்கள் தங்களுக்கு நிகழ்பவற்றை ஏற்றுக் கொள்ளத்தான் முடியுமே அன்றி மனோபலத்தை செயலாற்ற இயலாது. ஒரு ஆத்மாவானது மிகக் கீழே இறங்கினால், அதாவது தன் மனோபலத்தை நல்வழிப் படுத்தாமலிருந்தால் மிருகங்களாகவும் பல உயிரினங்களாகவும் பிறப்பெடுப்பர். இதுவும் முன்னேற்றத்திற்கானது தான். எப்படி என்றால் சேமித்து வைத்துள்ள சம்ஸ்காரங்களைக் கழித்து விடுவதற்காகவே. இது மனநிலை பிறழ்ந்தவராயும் ஊனமுற்றவராயும் இருப்பவருக்கும் பொருந்தும். பல பரிணாமங்களாயுள்ள இவ்வுலகில் எண்ணங்களுக்கேற்ப விளையும் விளைவுகளின் சாத்தியங்கள் எண்ணிலடங்கா.  இம்முறை தொடர்ச்சியான ஒன்றேயன்றி உதிரியான ஒன்றல்ல, எனவே தான் ஒரு ஆத்மாவின் பிறப்பானது ஒவ்வொரு வகைப்படுகிறது.

கேள்வி – நம் எண்ணங்களின் கட்டுப்பாட்டில் இல்லாத விபத்துகள் மற்றும் சில நிகழ்வுகளைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

பதில்: கவனமாக ஆய்ந்தோமேயானால், பெரும்பாலான இந்நிகழ்வுகளில் ஒருமித்த அறிவாற்றலின் மூலம் நமக்கு கட்டுப்பாடு உள்ளதென்றே சொல்ல வேண்டும். தீவிரவாதத்திற்கும் சுற்றுச்சூழல் நாசமடைவதற்கும் நாம் அனைவருமே கூட்டாகப் பொறுப்பாளிகளாவோம். நாம் தனிப்பட்ட முறையில் கூட இதற்கான மாற்றத்தை உருவாக்க முடியும். கர்மாவின் விதிப்படி தனிப்பட்ட மனிதன் என்பதாலேயே நாம் எந்தவொரு பொறுப்பிலிருந்தும் விடுபட முடியாது. நாம் எடுத்திருக்கும் இப்பிறவியானது நம் (ஆனந்தத்தைத் தேடும்) வளர்ச்சிக்காக மிகப் பொருத்தமானவொன்றாகவே ஏற்பட்டிருக்கிறது. இது நம் சமூக வாழ்க்கையில் நாம் கொண்டிருக்கும் பங்கினையும் சாரும். எனவே நாம் இன்று சந்திக்கும் நிகழ்வுகளும் நம்முடைய செயல்களின் விளைவுகளேயாகும்.  சில நிகழ்வுகள் நம்முடைய கட்டுப்பாட்டில் முற்றிலும் இல்லாமலேயே நிகழ்வதுண்டு. இவை நம்முடைய முற்செயல்களால் விளைந்தவை. ஆனால் இவை எதுவுமே நாம் நம்முடைய முன்னேற்றத்தை, ஆனந்தமாயிருப்பதை தடை செய்ய முடியாது. ஒரு வேளை தாமதமிருக்கலாம், அதுவும் கர்மவினைப் படி. ஆனால் அதுவும் நம் முன்னேற்றத்திற்காக, நாம் விட்டுவிட்ட ஏதோவொன்றைப் பெறுவதற்கானதாக இருக்குமே தவிர வேறில்லை. ஏற்கனவே சொன்னோமில்லையா, இது ஒரு பல பரிமாணமுள்ள உலகம் என்று?

கேள்வி: நம்மால் நம்முடைய முற்பிறவிகளை ஏன் நினைவுகூற முடிவதில்லை?

பதில்: ஏனெனில் பொதுவாக, இது நம்முடைய குறிக்கோளுக்குத் தேவையற்றது. ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். இந்த முறையானது முன்னேற்றத்திற்கானது. நம் முற்பிறவிகளைப் பார்த்துக் கொண்டிருந்தோமேயானால் முன்னேற முடியாது. மேலும் இப்பிறவியில் நடந்தவற்றயே நம்மால் நினைவில் கொள்ள முடியவில்லை, முற்பிறவியாவது! இது இயற்கையின் நியதி – தேவையானவை மட்டுமே நினைவில் கொள்ளப்படும். யாரேனும் இவ்விதியை மாற்ற நினைத்து பிற்காலத்தில் வாழ முற்பட்டால் மனரீதியான பாதிப்புகள் பலவற்றிற்கு ஆளாவார். ஏனெனில் இது இயற்கைக்கு முரணானது. நிகழ்காலத்தில் வாழ்வது எதிர்கால முன்னேற்றத்திற்காக மெனக்கெடுவது, இவை மூலமாகவே நம்மால் மகிழ்வுடனிருக்க முடியும். இதனால் தானோ என்னவோ சமஸ்க்ருதத்தில் பேய் மற்றும் இறந்தகாலம் இவற்றைக் குறிப்பதற்கு “பூத்” என்று வழங்கப் படுகிறது. (ஓ, அதேபோல, கர்மாவின் விதிப்படி பேய் என்பதெல்லாம் இல்லவே இல்லை!)

கேள்வி: நம்மால் நினைவில் கொள்ள முடியாத பிறவிகளில் செய்த செயல்களுக்காக எதற்காக தண்டனை அனுபவிக்க வேண்டும்?

பதில்: கர்ம விதிப்படி தண்டனை, பரிசு என்பதெல்லாம் ஒன்றுமில்லை. இவை அனைத்தும் ஒரு சுய முன்னேற்றத்திற்காக, ஓயாமல் நிகழும் நிகழ்வுகளே.  திடீரென்று ஒரு விபத்து என்று ஒன்றும் நிகழ்வதில்லை. கர்ம விதிப்படி தொடர்ச்சியற்ற எந்த ஒரு நிகழ்வும் நிகழ்வதில்லை. ஒரு உதாரணத்திற்கு சர்க்கரை நோயை எடுத்துக் கொள்வோம். ஒரு இரவில் திடீரென்று அது உருவாவதில்லை. தவறான வாழ்க்கை முறையிலும் பழக்கங்களினாலும் அது மெதுவாக முற்றுகிறது. ஆரோக்கியமில்லாத செயல் ஒன்றை செய்த முதல் முறையே சர்க்கரை நோயிடம் செல்கிறோம். அதேபோல ஆரோக்கியமான பழக்கங்களைப் பின்பற்றுவதால் அதனின்றும் தொலைவு கொள்கிறோம்.  இதைப் போல தொடர்ச்சியான நிகழ்வுகளின் மூலம் ஆரோக்கியமற்ற செயல் முற்றுப் பெறும் போது ஒருவர் சர்க்கரை நோயாளி எனப்படுகிறார். இதில் முன் செய்த இச்செயல்களின் ஒரு பகுதியைக் கூட இந்நோயாளி நினைவில் கொண்டிருக்க மாட்டார். அதே போல நமக்கு முற்பிறவியின் நினைவு இல்லாமலிருந்தாலும் நாம் இப்போதிருக்கும் நிலை, இப்பிறவி என்பது நம்முடைய ஒவ்வொரு செயல்களாலும், அது முற்பிறவியில் இருந்தும் தொடரும் தொடர் விளைவுகளேயாகும். நாம் கூறும் “தண்டனைகள்” என்பது அவ்வகை செயல்களின் தொடர்ச்சியே, கொஞ்சம் கொஞ்சமாக உருவாகி வந்திருக்கும் விளைவே அது. இவற்றிலிருந்து விடுபடுவது என்பதும் சுலபம் – நம் எண்ணங்களை செம்மைப் படுத்த வேண்டும். அவற்றை சீராக்குவதன் மூலம், மனோபலத்தை பயன்படுத்துவதன் மூலம் நாம் தீய விளைவுகளை ஏற்படுத்தும் செயல்களிலிருந்து விடுபடுவோம். “தண்டனை” களும் குறைந்துவிடும்.

கேள்வி: நல்ல நினைவுகளும் செயல்களும் நிறைந்திருக்கும் நல்லவர்கள் கூட ஏன் இப்படிக் கஷ்டப் படவேண்டும்?

பதில்:

அ. சந்தோஷம் என்பது ஒரு மனநிலை. நாம் துன்பம் எனக் குறிப்பிடுவது பெரும்பாலும் பெரிய அளவிலான சந்தோஷத்திற்காக தற்காலிக அசெளகர்யங்களைப் பொருட்படுத்தாமலிருப்பதே. உதாரணத்திற்கு விளையாடுகையில் நாம் களைத்து, காயப்பட்டு எல்லாம் செய்கிறோம், ஆனால் தொடர்ந்து விளையாடுகிறோம். ஏனெனில் விளையாடுவதில் கிடைக்கும் சுகமானது இத்தகைய சிறிய துன்பங்களைக் காட்டிலும் உயர்ந்தது, இன்னும் சொல்லப் போனால் இத்துன்பங்களை நாம் சுகமாக அனுபவிக்கிறோம்!

ஆ. பெரும்பாலான துன்பங்கள் முற்காலத்தில் சேமிக்கப் பெற்று இப்போது தன் முகத்தைக் காட்டும் விளைவுகளின் அறிகுறியேயாகும்.

இ. இன்னும் சில நாம் பல நாட்களுக்குப் பின் உடற்பயிற்சி செய்தால் ஏற்படும் விளைவு போன்றது. ஆரோக்கியமான பழக்கத்திற்கு உடல் தன்னை இன்னும் ஈடுபடுத்திக் கொள்ளவில்லை என்பதால் சில நாட்களுக்கு வலியெடுக்கும், சில நாட்களுக்குப் பின் வலி மறைந்து உடற்பயிற்சியின் பயன்கள் தெரிய ஆரம்பிக்கும்.

ஈ. இன்னும் சில நம்மால் விலக்கவே முடியாத ஒரு தொந்தரவுகளாகும். இதிலும் நாம் மனோபலத்தைக் கொண்டு இவற்றினால் பாதிக்கப்படாமலிருப்பது எப்படி என்று கண்டுகொள்ள வேண்டும்.

உ. சில துன்பங்களுக்குக் காரணம் நல்லவர்களாக இருப்பினும் எல்லா விதத்திலும் வல்லவர்களாக இல்லாமல் இருப்பது. ஒருவர் நேர்மையானவராக இருக்கலாம். ஆனால் உடல் வலிமை அற்றவராயிருந்தால், தன்னைப் பாதுகாத்துக் கொள்ளத் தெரியாதவராய் இருந்தால், மூடர்களால் கொல்லப்படவும் செய்யலாம். அது தற்காப்பைப் பற்றிய உண்மையை தன் மனோபலம் கொண்டு அறியாமலிருப்பதால் கூட இருக்கலாம். இதிலும் கூட திடீரென்று யாரோ ஒருவர் இவ்வாறு துன்பம் அனுபவிப்பதில்லை. இதிலும் கூட எண்ணம்-செயல்-விளைவு என்னும் சக்கரம் சுழன்று கொண்டேதானிருக்கிறது.

கேள்வி: இந்த முக்கியமான கேள்விக்குப் பதில் சொல்லுங்கள். தீயவர்கள் மிகுந்த சக்தியுடையவர்களாக இருக்கிறார்களே? எப்படி?

பதில்: இதன் தலைகீழ் நிலைமை தான் உண்மை, பெரும்பாலான சமயங்களில்.

அ. தீயவர்கள் மன அமைதியுடன் இருப்பதில்லை. இயற்கை நம்மை ஊழல் செய்பவர்களாகவும், தீயவர்களாகவும், சூது செய்பவர்களாகவும் படைப்பதில்லை. இவற்றைக் கண்டுகொள்ளாமல் இருக்க நாம் பழகிக் கொண்டாலும் இவை தன் தீய விளைவுகளைக் காட்டாமல் இருப்பதில்லை. என்னதான் பொருட்செல்வம் மிகுந்திருந்தாலும் இவர்களைப் போல அமைதியற்று, மகிழ்ச்சியற்று இருப்பவர்களை நாம் காணவே முடியாது – எப்பொழுதும் பாதுகாப்பற்ற நினைவில், மிகுந்த மன உளைச்சலுடன், யாரையும் நம்ப முடியாமல் அவதிப் படுபவர்கள் இவர்கள். தீய பழக்கம் என்பது கெட்டுப் போன / ஆரோக்கியமில்லாத உணவைப் போன்றது.

ஆ. மீண்டும், இவ்வுலகம் பல பரிமாணங்களுடையது. நல்லது, தீயது என்பன ஒருவரைக் குறிப்பனவல்ல. ஒருவர் தன் வாழ்வில் பெரும்பாலான சமயங்களில் தீயவராகவே இருந்திருக்கலாம், அதே சமயம், தன்னம்பிக்கை, பயமின்மை மற்றும் திறமையிருத்தல் போன்ற நல்ல குணங்களைக் கொண்டிருக்கலாம். அதை வைத்து வாழ்வின் ஒரு சில படிகளில் அவர் வேகமாக ஏறி விடலாம். ஆனால் வாழ்வின் சில பரிமாணங்களில் அவர் வெகுதோல்வி அடைந்தவராகவும் இருக்கலாம்.

கேள்வி: கர்ம விதியின் குறிக்கோள் தான் என்ன?

பதில்: தகுதியின் அடிப்படையில், பாகுபாடன்றி அளவிட முடியாத ஆனந்தத்தை நாம் அனைவரும் கைக் கொள்ள வேண்டும் என்பதே. நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம். இவையனைத்தும் நம் எண்ணங்களின் நோக்கமும் அதன் செறிவுமேயாகும். நம் வாழ்வை நன்கு ஆராய்ந்தோமானால் இக்கர்ம விதி எப்படி செயல்பட்டிருக்கிறது என்பது நன்கு புலனாகும். அவ்விதியையே பயன்படுத்தி நாம் நம் வாழ்வில் ஆனந்தத்தைக் கைக் கொள்ளலாம்.

கேள்வி: கடவுள் எதற்காக நம்மை சோதிக்கிறார்?

பதில்: கடவுள் நம்மை சோதிப்பதெல்லாம் இல்லை. அது ஒரு தவறான நம்பிக்கை. அவர் நமக்காக நம் கர்ம விதியை சரிவர நடத்தி வைக்கிறார். அவர் மேலும் நமக்கு நம் தலைவிதியை மாற்றியெழுத முழுச் சுதந்திரமும் கொடுத்திருக்கிறார். நாம் கடவுளின் சோதனை என்று சொல்வது நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்டிருக்கும் விளைவுகளேயன்றி வேறல்ல.

கேள்வி: வாழ்க்கையின் குறிக்கோள் தான் என்ன?

பதில்: கர்ம விதி என்பதை பயன்படுத்தி அளவிட முடியாத ஆனந்தத்தை அனுபவிப்பதே!

கேள்வி: புலனின்பங்கள், மது போன்றவையும் மிகுந்த ஆனந்தத்தை அளிக்கின்றதே? கர்ம விதியின் படி இவை சரியானதா?

பதில்: அவை நமக்கு ஆனந்தத்தை அளிப்பதில்லை. மாறாக ஆனந்தமாயிருப்பதாக மனதிற்கும் புலன்களுக்கும் ஒரு மயக்கத்தை ஏற்படுத்துகிறது. எந்தவொரு செயல் நம்மை சிந்தனை செய்ய விடாமல் செய்கிறதோ அது கண்டிப்பாக துன்பத்திற்கான நுழைவு சீட்டேயாகும்.  நம்முடைய சந்தோஷம் என்பது எவ்வளவுக்கெவ்வளவு புறக் காரணங்களால் சாராமல் இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு ஆனந்தமயமாயிருக்கும். இது ஞானத்தை பெருக்கிக் கொள்வதன் மூலமும் மனதின் பால் முழுக் கட்டுப்பாடு கொள்வதால் மட்டுமே சாத்தியம். இதையே இன்னொரு விதத்தில் “இச்செயலில் நோக்கம் என்ன?” எனக் கேட்பது. இதன் பதில் வெறும் பொழுது போக்காகவோ, வெறும் சாக்காகவோ இருந்தால் கர்ம விதிப்படி அது ஏற்புடையதல்ல. வாழ்வின் குறிக்கோள் நாம் இத்தகைய மாயைகளிடமிருந்து விடுபடுவதே. நம்மை முடக்கிப் போடும் எந்தவொரு செயலும் நம்மை ஆனந்தத்திற்கு எதிர்திசையில் செலுத்துவதாகவே இருக்கும்.

கேள்வி: நாம் கடவுளிடம் மன்னிப்புக் கேட்டால் அவர் நம்முடைய கடந்த பாவச் செயல்களை மன்னிக்க மாட்டாரா?

பதில்: அவ்வாறு நிஜ வாழ்க்கையில் நடக்கிறதா? ஒரு விபத்திற்குப் பின் “மன்னித்து விடுங்கள்” என்று கூறினால் மட்டும் காயம் உடனே ஆறி விடுகிறதா? அவ்வாறு சாத்தியமானால் துன்பம் நேர்கையில் மக்கள் சோம்பேறிகளாகவும், மன்னிப்புக் கேட்பவர்களாகவும் மட்டுமே இருப்பார்கள். இயற்கையும் அதன் விதிகளும் கடவுளின் அம்சங்களேயன்றி வேறெதுவுமில்லை. இங்கு வரைமுறையாக்கப் பட்ட விதி எங்கும் செல்லும். அதையே வேதங்களில் “யத் பிண்டே – தத் பிரம்மாண்டே” – அணு அளவில் என்ன நடக்கிறதோ அதே தான் பிரமாண்டத்திலும் என்பது. மன்னிப்பு என்ற பதத்திற்கு கர்ம விதிப் படி ஒரு பொருளும் கிடையாது. முன்னேற்றத்திற்கான வாய்ப்பு – அது மட்டுமே. இது பல வருட சோம்பேறித்தனத்திற்குப் பின் உடற்பயிற்சி செய்வதற்கு ஒப்பானது. முதலில் கடும் வலி இருக்கத் தான் செய்யும், சில காலம் எடுக்கும் அதனுடன் ஒன்றுவதற்கு. மனோபலம் இருப்பின் சீக்கிரம் வழி காணலாம்.

கேள்வி – இம்மனோபலம் அல்லது சங்கல்பத்தை செயல்படுத்த ஆரம்பிப்பதற்கு ஏதேனும் வழிவகை உள்ளதா?

பதில்: வேதங்களில் கூறப்பட்டிருக்கும் யோகா என்பதே இதற்கு விடை. கையைக் காலை வளைத்தும் நெளித்தும் செய்யும் உடற்பயிற்சி மட்டும் அல்ல இது, மாறாக, தன்னையும், வாழும் கலையையும் உணர்ந்து, கட்டுக்குள் கொணர்ந்து கர்மாவின் விதிப்படி வாழ முற்படுவது. அதீத உள்ளுணர்வு மிக்க இதன் வழிமுறைகள் யாராலும் எவராலும் பின்பற்றக் கூடியவை. இந்த முறையே சிறந்த முறை. ஆனால் இது ஒரு செயல் முறை, எனவே எப்படி தற்காப்புக் கலை போன்றவற்றைப் புரிந்து கொண்டு ஆளுமை கொள்ள சில காலம் ஆகுமோ அதே போல இதற்கும் அதற்குண்டான நேரம் தேவை, மனோபலம் என்பதைக் கொண்டு தீவிர முயற்சி செய்யின் அதியற்புதமான விளைவுகளைக் காணலாம்.

கேள்வி: இதை எங்கே கற்றுக் கொள்வது நான்?

பதில்: உண்மை மற்றும் ஆனந்தத்தின் பாதையில் இருப்பேன் என்ற உறுதியுள்ளவரானால் நீங்கள் ஏற்கனவே இதை கற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்றர்த்தம். இது தானாகவே இயங்கும் ஓர் அகவியல் முறை. நம் அறிஞர்கள் தங்களுக்குத் தேவையான அறிவை வழங்குவார்கள், அவற்றை நீங்கள் கடைபிடித்து விரைவான பலனைக் காணலாம். ஆனால் ஒன்றில் கவனம் கொள்ளுங்கள். எந்த ஒரு கலையையும் போல இதுவும் தங்களுக்குள்ளேயிருந்து துளிர்ப்பது தான். எந்த ஒரு ஆசிரியரும் அவ்வறிவை உங்களுக்கு அப்படியே புகட்ட முடியாது. பாதை வேண்டுமானால் காட்டலாம், ஆனால் முடிவு செய்து பயணம் மேற்கொள்வது தங்களையே சாரும். இது உங்களுடைய பொறுப்பு மட்டுமே. மேலும் தகவல்கள் தேவைப் பட்டால் இந்த முகவரியில் தொடர்பு கொள்ளவும் – agni...@agniveer.com

The 4 Vedas Complete (English)

The 4 Vedas Complete (English)

Thanks to Panditji

V.Subramanian Aum

Parthasarathy R

unread,
Sep 4, 2014, 1:52:09 AM9/4/14
to sanmarkk...@googlegroups.com, v.dott...@gmail.com
Pl do not send this my offfice email and send it to rpsara...@gmail.com

--------------------------
Sent using BlackBerry
--
--
இக்குழுவில் உங்கள் பதிவை வெளியிட sanmarkk...@googlegroups.com
மெலும் தகவலறிய பார்வையிடுங்கள்
http://groups.google.co.in/group/sanmarkkam-groups?hl=en-GB

---
You received this message because you are subscribed to the Google Groups "Sanmarkkam Groups" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to sanmarkkam-gro...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Please do not print this email unless it is absolutely necessary.

This email contains privileged and/or confidential information and is meant for the named individual or entity only. Please take a note that if you enter into email correspondence with Cairn India Limited, and/or any of its other subsidiaries (collectively referred to as the Cairn India Group), this piece of communication may be subject to monitoring and storage in company archives. If you are not a named recipient or you have received the e-mail by mistake or whatsoever, please notify the sender immediately by email or by calling the phone no. +91 124 459 3030 and delete the email from your computer or system. The views, opinions, and judgments expressed in this email are solely those of the author and same has not been reviewed or approved by any company of the Cairn India Group. Cairn India Group accepts no liability for the content of this email, or for the consequences of any actions taken on the basis of the information provided. This email and any attachments are not guaranteed to be free from computer viruses and it is recommended that you check for such viruses before downloading it to your computer or system.
Reply all
Reply to author
Forward
0 new messages