KOLARU PATHIKAM

17 views
Skip to first unread message

Venkatachalam Subramanian

unread,
Jun 25, 2014, 12:03:37 PM6/25/14
to Venkatachalam Dotthathri


 

கோளறு பதிகமும் பைந்தமிழ் விளச்க்கமும்

 

திருச்சிற்றம்பலம்



 

வேய் உறு தோளி பங்கன், விடம் உண்ட கண்டன்,

மிக நல்ல வீணை தடவி,

மாசு அறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து, என்

உளமே புகுந்தஅதனால்---

ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழம், வெள்ளி,

சனி, பாம்புஇரண்டும், உடனே

ஆசு அறும்; நல்லநல்ல; அவை நல்லநல்ல,

அடியார்அவர்க்கு மிகவே.


என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க,

எருது ஏறி, ஏழைஉடனே,

பொன் பொதி மத்தமாலை புனல் சூடி வந்து, என்

உளமே புகுந்தஅதனால்---

ஒன்பதொடு, ஒன்றொடு, ஏழு, பதினெட்டொடு, ஆறும்,

உடன்ஆய நாள்கள்அவைதாம்,

அன்பொடு நல்லநல்ல; அவை நல்லநல்ல,

அடியார்அவர்க்கு மிகவே.


உரு வளர் பவளமேனி ஒளி நீறு அணிந்து,

உமையோடும், வெள்ளைவிடைமேல்,

முருகு அலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து, என்

உளமே புகுந்தஅதனால்---

திருமகள், கலைஅதுஊர்தி, செயமாது, பூமி,

திசைதெய்வம்ஆனபலவும்,

அரு நெதி நல்லநல்ல; அவை நல்லநல்ல,

அடியார்அவர்க்கு மிகவே.


மதிநுதல் மங்கையோடு, வடபால் இருந்து

மறை ஓதும் எங்கள் பரமன்,

நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்து, என்

உளமே புகுந்தஅதனால்---

கொதிஉறு காலன், அங்கி, நமனோடு தூதர்,

கொடுநோய்கள்ஆனபலவும்,

அதிகுணம் நல்லநல்ல; அவை நல்லநல்ல,

அடியார்அவர்க்கு மிகவே.


நஞ்சு அணி கண்டன், எந்தை, மடவாள்தனோடும்

விடை ஏறும் நங்கள் பரமன்,

துஞ்சு இருள்---வன்னி, கொன்றை, முடிமேல் அணிந்து---என்

உளமே புகுந்தஅதனால்---

வெஞ்சின அவுணரோடும், உரும்-இடியும், மின்னும்,

மிகைஆன பூதம்அவையும்,

அஞ்சிடும்; நல்ல நல்ல; அவை நல்லநல்ல,

அடியார்அவர்க்கு மிகவே.


வாள்வரிஅதள்அது ஆடை வரி கோவணத்தர்

மடவாள்தனோடும் உடன்ஆய்,

நாள்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்து, என்

உளமே புகுந்தஅதனால்---

கோள் அரி, உழுவையோடு, கொலை யானை, கேழல்,

கொடு நாகமோடு, கரடி,

ஆள் அரி, நல்லநல்ல; அவை நல்லநல்ல,

அடியார்அவர்க்கு மிகவே.


செப்புஇளமுலை நல் மங்கை ஒருபாகம்ஆக

விடை ஏறு செல்வன், அடைவு ஆர்

ஒப்பு இளமதியும் அப்பும் முடிமேல் அணிந்து, என்

உளமே புகுந்தஅதனால்---

வெப்பொடு, குளிரும், வாதம், மிகைஆன பித்தும்,

வினைஆன, வந்து நலியா;

அப்படி நல்லநல்ல; அவை நல்லநல்ல,

அடியார்அவர்க்கு மிகவே.


வேள் பட விழிசெய்து, அன்று, விடைமேல் இருந்து,

மடவாள்தனோடும் உடன்ஆய்,

வாள்மதி வன்னி கொன்றைமலர் சூடி வந்து, என்

உளமே புகுந்தஅதனால்---

ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன்தனோடும்

இடர்ஆன வந்து நலியா;

ஆழ் கடல் நல்லநல்ல; அவை நல்லநல்ல,

அடியார்அவர்க்கு மிகவே.


பலபலவேடம் ஆகும் பரன், நாரிபாகன்,

பசு ஏறும் எங்கள் பரமன்,

சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்து, என்

உளமே புகுந்தஅதனால்---

மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர்

வரு காலம்ஆனபலவும்,

அலைகடல், மேரு, நல்ல; அவை நல்லநல்ல,

அடியார்அவர்க்கு மிகவே.


கொத்து அலர் குழலியோடு விசயற்கு நல்கு

குணம்ஆய வேட விகிர்தன்,

மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து, என்

உளமே புகுந்தஅதனால்---

புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல்

திருநீறு செம்மை திடமே;

அத்தகு நல்லநல்ல; அவை நல்லநல்ல,

அடியார்அவர்க்கு மிகவே.


தேன் அமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி,

வளர் செம்பொன் எங்கும் நிகழ,

நான்முகன் ஆதிஆய பிரமாபுரத்து

மறைஞான ஞானமுனிவன்,

தான் உறு கோளும் நாளும் அடியாரை வந்து

நலியாத வண்ணம் உரைசெய்

ஆன சொல்மாலை ஓதும் அடியார்கள், வானில்

அரசு ஆள்வர்; ஆணை நமதே.

 

திருச்சிற்றம்பலம்

 


கோளறு பதிகமும் பைந்தமிழ் விளக்கமும்.

      கயிலை மாமுனிவர்  ஸ்ரீ ஸ்ரீ காசிவாசி முத்துக்குமார சாமித் தம்பிரான் சுவாமிகள் மணி விழா மலரில் டாக்டர் திரு . அறிவொளி எம்.,., பி..எச்.டி., அவர்களின்கோளறு பதிகமும் சோதிடமும்என்னும் கட்டுரையிலிருந்து பெற்ற விளக்கம் இது.:

      முதற்பாட்டில் ஒன்பது கோள்களால் வரும் துன்பங்களும், இரண்டாம் பாட்டில் நட்சத்திரம், திதி முதலியவகளின் துன்பங்களும், மூன்றாம் பாட்டில் திருமகள், துர்க்கை, பூமாதேவி, அட்டதிக்குக் காவலர்களால் வரும் துன்பங்களும், நான்காம் பாட்டில் தீக்கடவுள், யமன்,யமதூதர், கொடிய நோய் ஆகியவற்றால் வரும் துன்பங்களும், ஐந்தாம் பாட்டில் அவுணர், இடி, மின்னல் பூதம் முதலியவற்றினால் வரும் துன்பங்களும், ஆறாம் பாட்டில் புலி யானை, பன்றி, கரடி, பாம்பு, சிங்கம் ஆகிய மிருகங்களால் வரும் துன்பங்களும், ஏழாம் பாட்டில் வெப்பம், குளிர், வாதம், மிகுபித்தம்,, வினைகள் ஆகியவற்றால் வருவனவும், எட்டாம் பாட்டில் இராவணன், இடர்கள் இவைகளல் வருவனவும், ஒன்பதாம் பாட்டில் பிரமன், திருமால், வேதத்தை அனுசரிக்காதது, தேவர் , கெட்ட காலம் ஆகியவையால் வருவனவும், பத்தாம் பாட்டில் புத்தர், அமணர் ஆகியோரால் வருவனவும் ஆகிய துன்பங்கள் யாவும் குறிக்கப்பெற்றன.

     தெய்வக்குறை, பௌதீகக் குறை, ஆத்மீகக் குறை ஆகிய மூவகைத் துன்பங்களையும் ஒரு பதிகம் முழுவதும் கூறிவிட்டார்.

 

      திருக்கடைக் காப்புச் செய்யுள் பதினோராம் பாட்டில்

      “தானுறுகோளும் நாளும் அடியாரை வந்து

      நலியாத வண்ணம் உரை செய்

      ஆனசொல் மாலை ஓதும் அடியார்கள் வானில்

     அரசாள்வார் ஆணை நமதே

 

என்று பாடுகிறார்.

      இதில் கோளும் நாளும் அவரவர் வினைப் பயன்படித்   தானாக வந்து சேரும் என்பதும், அடியாரை வந்து சேர்ந்த அவை துன்பம் செய்வது இயல்பு என்றும், அப்படிச் செய்வதைத் தடுக்கவே இப்பதிகத்தைப் பாடியதாகவும் கூறுகிறார்.

      இதனால் ஞானசம்பந்தப் பெருமான் உட்பட அடியார்கள் அனைவரும் கோள் செய்யும் நாள் செய்யும் துயர்களிலிருந்து விடுபடுவதாகிறது.

 

வெ.சுப்பிரமணியன் ஓம்

 

 

 

Reply all
Reply to author
Forward
0 new messages