ஐவர்மலை
ஐயூர் என்னும் ஊரில் வாழ்ந்த புலவர் ஐயூர் முடவனார். முடம் பட்டிருந்த இந்தப் புலவர் உறையூர் வேந்தன்கிள்ளி வளவனைக் காணச் செல்லும் வழியில் தாமான் தோன்றிக்கோனைக் கண்டார்.
வளவனிடம் செல்கையில் தன் வண்டியை இழுக்க எருது ஒன்று வேண்டும் என்று கேட்டார். அவன் புலவர் ஏறிச்செல்லத் தேர்வண்டியும் அதனை இழுத்துச்செல்ல புலவர் விருப்பப்படி எருது வழங்கியதோடு, ஆனிரை கூட்டத்தையே பரிசிலாக வழங்கினான். (புறநானூறு) ஐவர்மலையிலிருந்து தான்தோன்றிக்கோன் ஆண்ட தான்தோன்றி மலை வழியாக உறையூர் செல்லப் புலவர் திட்டமிட்ட வரிசையை எண்ணும்போது ஐயூர் மலையே ஐவர்மலை என மருவிற்று எனக் கொள்ளுதல் அமையும்.
இந்தக் குன்று, பழநி மலை போல் தோற்றமளிப்பது சிறப்பு. இதன் உண்மையான பெயர் அயிர மலை.
இங்குள்ள மலை உச்சியில் மேற்கு, வடக்கு மூலையில் கோடையிலும் வற்றாத இயற்கையான நீரூற்றுகள் இரண்டு உள்ளன. இக்குளங்களில் எப்போதும் அயிரை மீன்கள் காணப்படுவதால், மக்களால் இம்மலை "அயிரை மலை' என்று அழைக்கப்பட்டது. இப்போதும் குளங்களில் அயிரை மீன்கள் துள்ளி நீந்துவதன் அழகைக் கண்டு இரசிக்கலாம். பாண்டிய மன்னரான வரகுண பாண்டியன் கால சமணர் மலை என்பதற்குச் சான்றாக இங்கு 13 பிராமிக் கல்வெட்டுகள் உள்ளன. தவிர, அழகிய 16 தீர்த்தங்கரர் சிற்பங்களும் உள்ளன. அச்சிலைகளுக்குக் கீழே சிலையைச் செய்வித்தோரின் பெயர்கள் கல்வெட்டில் உள்ளன.
சமணர் படுகைகள் வரிசைக்கு நான்கு, ஐந்து என்றிருக்கும். அதை வைத்துத்தான் இங்கு பஞ்சபாண்டவர்கள் ஐவரும் வந்து தங்கினர் என மக்கள் கருதி, ஐவர் மலை என்ற பெயரை உருவாக்கினர்.
முதல் குகையின் முகப்பில் காணப்படும் 16 தீர்த்தங்கரர் சிற்பங்களைத் தாண்டி, வடக்கு மூலையில் அழகிய படிகளை உருவாக்கி உள்ளனர். சமணர் வாழ்ந்த மலையைத் தாண்டி மேலே சென்றால் "வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி' என்ற பெயரில் உள்ள தியான மண்டபத்தில் அணையா விளக்கு ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.
இம் மண்டபத்தையொட்டி, வடக்கே மலையில் ஏறினால் பழநிக் கோயில் போன்ற முருகன் கோயில் உள்ளது. இதன் வளாகத்தின் பின்புறத்தில் உள்ள நவக்கிரகங்களை வேறு எங்கும் காணமுடியாது. வட்டமான தூண் வடிவில், ஒவ்வொரு கிரகத்திற்கும் உண்டான கடவுள் சிலையையும், அதன் கீழே ஒன்பது ராசிக்குரிய அடையாளங்களையும் வடிவமைத்துள்ளனர்.

இங்கு அருள்பாலிக்கும் தண்டாயுதபாணியின் பாத தரிசனம் பார்த்து மகிழ வேண்டிய ஒன்று. அவர் பாதங்கள் மலைப்படி இருக்கும் திசை நோக்கிச் சற்று சாய்ந்து காணப் பெறுகிறது. பக்தனை நோக்கி அவர் பாதங்கள் எடுத்து வைத்திருப்பது, கலியுகத்தில் நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் 9 அடிகள் தெய்வம் நம்மை நோக்கி எடுத்து வைக்கும் என்ற பெரியவர்கள் கூற்றை மெய்ப்பிக்கும் வண்ணம் இருக்கிறது.
சுவாமியின் பின் மயில் தோகை விரித்துக் காணப் பெறுகிறது. ஏறத்தாழ மேலே காணப் பெறும் படத்தை ஒத்திருக்கும். அவர் முன் உள்ள மயில் வாகனம் பறக்கத் தயார் நிலையில் தோகையைத் தயாராய் விரிக்கும் வண்ணம் அமைக்கப் பெற்றிருக்கிறது.
அபிடேகம் செய்யும் போது பார்த்தால் இந்த முருகனுக்கு வியர்த்துக் கொண்டே இருக்கும். முத்து முத்தாய் திரளும் வியர்வையை இங்கு பூசை செய்பவர் துடைத்த வண்ணம் இருப்பார்.
இங்குள்ள வற்றாத நீரூற்றை, திருமஞ்சன நீராக கோவிலுக்குப் பயன்படுத்துகின்றனர். மலையின் நடுவே உச்சியில் பிள்ளையார் கோயில் உள்ளது.இம்மலை அடிவாரத்தில் ஆலமரங்கள் வரிசையாக உள்ளன. அருகே பாண்டியர் காலத்தில் செய்விக்கப்பட்ட பெயர் தெரியாத குறுநில மன்னர் ஒருவரின் சிலையும் உள்ளது. பிரபலமாகாத இம்மலை மிகச் சிறந்ததொரு சுற்றுலா தலம் தான்.

அருள்மிகு திரவுபதி அம்மன் கோயில். ஐவர் மலை மூலவர் - திரவுபதி
பிறபெயர் - பாஞ்சாலி.
தலவிநாயகர் - உச்சிப்பிள்ளையார்
தலவிருட்சம் - வன்னி வேம்பு
பிரார்த்தனை யோக தியானம் தவம் மற்றும் மன அமைதி பெற விரும்புவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபட்டுச் செல்லலாம்.
தீர்த்தம் - சூரிய புஷ்கரிணி சந்திரபுஷ்கரிணி முருகனுக்குத் தனியாகப் பால்சுனை
வாழ்ந்த சித்தர் - துவாபரயுகத்தில் போகர்
திருவிழா - மகா சிவராத்திரி, ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை.
தலப்பெருமைகள் - பழனி மலை முருகனை போகர் இந்த மலையிலிருந்து தான் உருவாக்கி பிரதிஷ்டை செய்துள்ளார்.எனவே இந்த ஐவர்மலையைப் பழனிக்குத் தாய் வீடு என்கிறார்கள்.
ஐவர் மலையில் தாமரை மலர்களுடன் சூரியபுஷ்கரிணியும் அல்லி மலர்களுடன் சந்திர புஷ்கரிணியும் அமைந்துள்ளன.இதில் சூரியனின் கதிர்கள் தாமரை மலர்கள் மீதும் சந்திரனின் கதிர்கள் அல்லி மலர்கள் மீதும் விழும்படி இந்தத் தீர்த்தங்கள் அமைந்துள்ளன.
ஆடி அமாவாசை தினத்தில் சூரிய, சந்திர கதிர்கள் ஒரே நேர் கோட்டில் அமைகிறது.அந்தச் சமயத்தில் சூரிய சந்திரனின் கதிர்கள் இந்த ஐவர் மலையில் விழுவதாகக் கூறுகிறார்கள். எனவே ஆடி அமாவாசை தினங்களில் இந்த ஐவர் மலைக்கு ஏராளமான பக்தர்கள் வந்து கூடுகின்றனர்.
உச்சிப்பிள்ளையார் சன்னதியில் விளங்கும் பஞ்சபூத அமைப்பு
நீர் - சூரியசந்திர புஷ்கரிணி தீர்த்தம்,
நிலம் - மலை (மலையே நிலத்தில் தான் அமைந்துள்ளது).
நெருப்பு -ஆடி அமாவாசை தினத்தில் ஏற்றப்படும் தீபம்
காற்று - இங்கு எப்படிப்பட்ட காற்றுக்கும் தீபம் ஆடாது அணையாது.
ஆகாயம் - மலைக்கு மேல் பரந்து விரிந்த ஆகாயம்.
பஞ்ச பூதங்களும் ஒன்று கூடும் ஆடி அமாவாசை வழிபாடு பஞ்சபூத தலங்களுக்கு போய் வந்த பலன் தரவல்லது.
பொதுத் தகவல்கள்
எப்படிச் செல்வது?
பழனியிலிருந்து மேற்கு நோக்கி 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த ஐவர்மலை. நெய்க்காரப்பட்டி - கொழுமம் செல்லும் வழி
கோயில் சம்பந்தமாக தொடர்பு கொள்ளத் தொலைபேசி எண் 04545 260417.
தல வரலாறு
- போகர் பழனி மலைக்கோவிலில் உள்ள முருகனை இந்த மலையில் தங்கியிருந்து உருவாக்கியதாகவும் நம்பப்பெறுகிறது. ஆனால் இதற்குத தகுந்த ஆதாரமில்லை. ஐவர்மலை பழனிக்கு தாய் வீடு என்கிறார்கள்.
- நாராயண பரதேசி என்ற பரதேசி சுமார் 150 வருடங்களுக்கு முன் ஐவர்மலைக்கு வந்தார். கொற்றவை விக்ரகத்துடன் கோயில் ஒன்றைக் கட்டுகிறார். நாராயணபரதேசி இங்கே முக்தியடைந்துள்ளார். அவர் சீடர் பத்மநாபா களஞ்சிக்காட்டில் முக்தியடைந்துள்ளார்.
- பெரியசாமி என்பவர் இம்மலையில் பலருக்குத் தியானம், யோகா, போன்றவற்றைக் கற்பித்துப் பின் இங்கேயே முக்தியடைந்துள்ளார். இங்கு பெரியசாமிக்கு சிலையும் அவரது சமாதி மேல் கோயிலும் அமைந்துள்ளது. பெரியசாமியின் ஒரே சீடர் பெருமாள்சாமி குடும்பத்துடன் ஐவர் மலையில் வசிக்கிறார்.
- இப்போது இம்மலையில் யோகா, தியானம் ஆகியவற்றை யாரும் சொல்லித் தரவில்லை. தற்போது இங்கு சாந்தலிங்கம் என்ற இளந்துறவியும் பயனர் யோகிசிவம் ஆக இருவர் மட்டும் உள்ளனர்.
- இம்மலையின் மேற்குப் பகுதியில் உள்ள சம தளத்தில் குழந்தைவேலப்பர் கோவிலில் மற்றுமொரு சிறப்பு நவக்கிரகங்கள் நீள் வட்ட பாதையில் தான் சுற்றுகின்றன என்பதற்கேற்ப வட்டவடிவில் ஒன்றை ஒன்று பார்க்காதவாறு அமைக்கப்பெற்றுள்ளது.
- கூன் பாண்டியன் காலத்தில் துரத்தியடியடிக்கப்பட்ட சமண முனிவர்கள் தப்பித்து இங்கு வந்து தங்கி வாழ்ந்துள்ளார்கள். இதனை இங்குள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.
- இடும்பன் சன்னதி பழனியைப்போலவே இங்கும் சிறப்பு.
- ஐவர்மலைக்கு வந்து வழிபட்டால் பஞ்ச பூதத் தலங்களை வழிபட்ட பலன் கிடைக்கிறது என்கிறார்கள்.
- யோக நிலையில் துரியம் என்பது மனம் புலன்களுடன் பொருந்தும் நிலையைக் குறிப்பதாகும். இதனை யோக சாதகம் செய்பவர்கள் உணரும் வண்ணம் இந்த மலையின் உச்சியில் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது.
- போகர் புராண காலத்தில் நந்தியாக இருந்தவர்.இதற்கான ஆதாரம் போகர் ஏழாயிரம் போகர் எழுநுணறு.ஆகிய நுணல்களில் உள்ளதாக இங்குள்ள தாண்டேஸ்வரன் என்பவர் தெரிவித்தார்.
அதே போல் இம்மலையிலுள்ளகுழந்தை வேலப்பர் கோயிலுக்கும் தனி வரலாறு உண்டு. இதனால் இவருக்கிருந்த குஷ்ட நோய் போய்விட்டது.அமாவாசை கார்த்திகை பவுர்ணமி நாட்களில் இந்தக் குழந்தை வேலப்பரை வழிபட்டால் நோய் விலகும் என்பது நம்பிக்கை.
அடுத்த முறை பழநி செல்லும் போது அவசியம் சென்று கண்டு மகிழுங்கள்.
கொங்கு மண்டல மலைகள் :
1 . அவிநாசி - ஒதியமலை, குருந்தமலை
2 . கோவை - சிரவணம் பட்டிமலை, மருதமலை, ரத்தினகிரி,
பாலமலை, பெருமாள் மலை
3 . பொள்ளாச்சி - ஆனைமலை, பொன்மலை
4 . உடுமலைப்பேட்டை - திருமூர்த்தி மலை
5 . பல்லடம் - தென்சேரிமலை, அழகுமலை, குமார மலை
6 . தாராபுரம் - ஊதியூர்மலை, சிவன் மலை
7 . ஈரோடு - சென்னிமலை, பெருமாள் மலை
8 . கோபி - தவளகிரி, குன்றத்தூர்
9 . பவானி - பாலமலை, ஊராட்சிக் கோட்டை மலை
10. கொள்ளேகால் - மாதேசுவரன் மலை
11 . திருச்செங்கோடு - சங்ககிரி, மோரூர் மலை, திருச்செங்கோடு
12 . இராசிபுரம் - கொங்கணமலை, கொல்லிமலை
13 . சேலம் - - சேர்வராயன் மலை, ஏற்காடு, கந்தகிரி
14 . நாமக்கல் - - கொல்லிமலை, கபிலர் மலை, நைனாமலை
15 . கரூர் - - தான்தோன்றி மலை, வெண்ணெய் மலை, புகழிமலை
16 . பழனி - - ஐவர் மலை, பழனி மலை ,கொண்டல் தங்கி மலை.

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரதமணித் திருநாடு!
v a n a k k a m S u b b u 
.