புலவர் கோவில்!
- by Vayal
- July 2, 2014
- 1 min read
- original
ஜூலை 2 – மாணிக்கவாசகர் குருபூஜை
‘திருவாசகத்துக்கு உருகாதார், ஒரு வாசகத்துக்கும் உருகார்…’ என்பார் ராமலிங்க அடிகளார். தேனினும் இனிய திருவாசகத்தை அருளிய மாணிக்கவாசகர் குருபூஜை, ஆனி மகம் நட்சத்திரத்தன்று நடைபெற உள்ளது. இந்நாளில், தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள மாணிக்கவாசகர் கோவிலுக்குச் சென்று வரலாம். தெய்வப்புலவர் ஒருவரை பெருமைப்படுத்தும் விதத்தில் அமைந்த கோவில் இது.
மதுரை அருகிலுள்ள திருவாதவூரில் அவதரித்தவர் மாணிக்கவாசகர். அவரை, மதுரையை ஆண்ட அரிமர்த்தன பாண்டியன் தன் அமைச்சராக்கி, ‘தென்னவன் பிரம்மராயன்’ என்று, பட்டம் சூட்டினான். அவரிடம் பொன்னும், பொருளும் கொடுத்து, தன் படைக்கு, குதிரைகள் வாங்கி வரும்படி அனுப்பினான். அவர், திருப்பெருந்துறையை (ஆவுடையார் கோவில்) அடைந்த போது, குருந்த மரத்தின் அடியில், சிவபெரு மான், குருவாக இருந்து, சீடர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். அவரைக் கண்ட மாணிக்கவாசகர், தன்னையறியாமல் அவருடன் ஒன்றி, அவரது திருவடியில் விழுந்து, தன்னையும் ஆட்கொண்டு அருளும்படி வேண்டினார்.
சிவனும் அவருக்கு திருவடி தீட்சை வழங்கினார். குதிரை வாங்க வைத்திருந்த பணத்தை, கோவில் திருப்பணிக்கு செலவிட்டார். பின், மன்னன் உத்தரவுபடி நாடு திரும்பினார். அவருக்காக, சிவன் நரிகளை, குதிரைகளாக மாற்றி, திருவிளையாடல் செய்து, அவற்றை, மன்னனிடம் ஒப்படைத்தார். மீண்டும், அவை நரிகளாக மாறவே, மாணிக்கவாசகரை தண்டித்தான் மன்னன். அவரை விடுவிக்க திருவிளையாடல் செய்து, தன் பக்தரின் பெருமையை ஊரறியச் செய்தார் சிவன்.
சிதம்பரம் சென்ற மாணிக்கவாசகர், சிவனை புகழ்ந்து பாடினார். அந்த பதிகங்களின் சொற்கள் ஒவ்வொன்றும், மாணிக்கம் போல இருந்ததால், அவருக்கு, மாணிக்கவாசகர் என, பெயர் வந்தது. ஏனெனில், இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் வாதவூரான். தன்னுடைய பாடல்களால் மாணிக்கவாசகர் என, பெயர் பெற்ற இவருக்கு, சின்னமனூரில் கோவில் எழுப்பப்பட்டது.
ஆனி மகம் மட்டுமன்றி, ஒவ்வொரு தமிழ் மாத மகம் நட்சத்திரத்தன்றும் மாணிக்கவாசகருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இங்குள்ள சண்டிகேஸ்வரர் சிலை, நின்ற நிலையில் வடிக்கப்பட்டுள்ளது. சிவன் சன்னிதி முன், சித்ரகுப்தர் வலது கையில் எழுத்தாணி, இடது கையில் ஏடுடன் அருளுகிறார். இங்கு ஆயுள்விருத்தி, சஷ்டியப்தபூர்த்தி ஹோமங்கள் செய்கின்றனர். மாணிக்கவாசகர் தெற்கு நோக்கி, குரு அம்சத்துடன் இருக்கிறார்.
குழந்தைகளின் கல்வி அபிவிருத்திக்காக, மாணிக்கவாசகருக்கு அர்ச்சனை செய்கின்றனர். தமிழால், சிவனருள் பெற்றவர் என்பதால், இவருக்கு தமிழிலேயே அர்ச்சனை செய்யப்படுகிறது. விழாக்களின் போது, இவர் மந்திரி அலங்காரத்தில் பவனி வருகிறார். ஆனி, மார்கழி மாத உத்திர நட்சத்திர நாட்களில், மாணிக்கவாசகரும், நடராஜரும் ஒரே சப்பரத்தில் வீதியுலா செல்கின்றனர். ஆனி மகம் குருபூஜையன்று, தனித்து உலா வருவார். திக்குவாய் உள்ளோர், பேச்சுத்திறமை வேண்டுவோர் திருவாசகத்தில் உள்ள, ‘திருச்சாழல்’ பதிகத்தை பாடி, வேண்டுகின்றனர்.
குருபூஜையன்று மதிய பூஜையில், மாகேஸ்வர பூஜை நடக்கும். அன்று, சிவனடியார்களை, சிவனாகக் கருதி திருநீறு, சந்தனம் பூசி, மலர் தூவி தீபாராதனை செய்து, விருந்து கொடுக்கின்றனர். தேனியிலிருந்து, 24 கி.மீ., தூரத்தில் சின்னமனூர் உள்ளது. மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரிலும், அவருக்கு தனிக்கோவில் உள்ளது. திருப்பெருந்துறை ஆவுடையார் கோவிலில் விழாக்காலங்களில், மாணிக்கவாசகர் வீதியுலா வருவார்.