ஆதிசங்கரர் கைவல்ய பதத்தை அடையும் முன்னர் தன சீடர்களுக்கு உபதேசித்த “சோபான/சாதனா பஞ்சகம்” என்ற தத்துவ திரட்டைதழுவி எழுதப்பட்டது.
சோபானம் = ஏணிப்படி, பஞ்சகம் = 5 பாடல்கள்.

உள்ளத் தூய்மை வேண்டின்
உள் நின்று வேதமோது!
கள்ளப் புலன்கள் தேடியோடும்
ஆசைகளை அறவே கொல்லு!
மெல்ல மெல்ல மலையெனக் குவிந்த
பாவக் குவியல்களை நீக்கு!
இல்லமென்னும் பொய்யின்பத்
தளை நீக்கி ஆத்மாவை நோக்கு!
திருக்கூட்ட மரபில் வந்த
பெருமகனார் நட்பை நாடு!
குரு பாதம் சரணடைந்து
மறவாமல் இறையைத் தேடு!
மாறாத பிரணவ மந்திரமாம்
“ஓம்” என்னும் மூல மந்திரம்
தேறாத சிந்தனை தனை தேற்றவைக்கும்
உபநிடதம் வாழ்க்கை மந்திரம்.
யாவினும் மேலான பரம்பொருள்
இதை உணர்ந்தவர்க்கு இல்லை மன இருள்!
ஆவியிருக்கும் வரை சுருதியின்
அடிப்படை கோட்பாடுகளைப் பிடித்துக் கொள்!
அகந்தைக் கிழங்கை அடியோடு
அகழ்ந்து அழித்துக் கொல்!
தேகம் நான் என்ற எண்ணம் தவிர்
ஞானியருடன் விவாதம் என் கொல்?
பசியென்னும் நோய்க்கு உணவே மருந்து
நாள் தோறும் உணவை யாசித்துப் பெறு!
ருசி என்னும் தேவைக்கு உணவே விடம்
இறைவன் விதிப்படி என்று யோசித்து ஆறு!
இருமை எதிர்மறைகளாம் சுகம் துக்கம்
வெப்பம் குளிர்ச்சி ஏற்பது அறிவு!
பொறுமை நடுவு நிலைமை, வீண் பேச்சு
இன்மை, பாசவலை பாதுகாப்பு, செறிவு!
இனிது இனிது தனிமை இரண்டில்லா
ஒன்றே ஆனந்தம் அமைதிச் சின்னம்!
தனி மனிதன் செய்திட்ட முன்ஜென்ம
பாவங்கள் இனித்தொடரா வண்ணம்பற்றி
நற்செயலால் வெற்றி கொள்வீர்
ஞானி என்னும் தோணி பற்றி!
தற்செயலாய் நேருகின்ற எதிர்காலச்
செயல் பயனை அவனுக்கே அர்பணித்துப் போற்று
நீயே பரப்ரம்மமென பறை சாற்று!