திரைப் பாடல்களில் சங்க இலக்கிய வரிகள் - 1

717 views
Skip to first unread message

ஆதித்ய இளம்பிறையன்

unread,
Oct 30, 2012, 3:45:18 AM10/30/12
to sanka...@googlegroups.com
சங்க இலக்கியம் என்பது கற்பனையின் ஊற்றுக்கண் . கண்ணதாசன் முதல் வைரமுத்து வரை அதை தொட்டுச் செல்லாமல் இருக்க முடிந்ததில்லை. சங்க இலக்கிய வரிகள் என்னென்ன திரைப்பட பாடல்களில் வந்துள்ளது என்பதை பற்றி ஒரு சிறிய அலசல்.

சங்க இலக்கியம் என்றாலே எனக்கு முதலில் நினைவுக்கு வருவது இருவர் படத்தில் வரும் "நறுமுகையே நறுமுகையே" பாடல் தான். அதில் வரும்  

"அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித் தரள நீர் வடிய கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா"
 - அன்றொரு நாள் வெண்ணிலவின் ஒளியில் நெற்றியில் நீர்த் திவலைகள் முத்துப் போல் உருள கொற்றவனுக்கு உரித்தான சுனையில் நீரடியவள் நீயா?. (பொய்கை என்றால் இயற்கை நீர் நிலை : சுனை. குளமன்று) 

இந்த வரிகளை கேட்கும் ஒவ்வொரு முறையும் ஒரு சில்லிடும் உணர்வு. இந்தப் பாடலில் வரும் மிகப் பிரசித்தி பெற்ற வரிகள்  "அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்" புறநானூற்றில் நூற்றுப் பன்னிரண்டாம் பட்டிலிருந்து எடுத்தாண்ட வரிகள். கடையேழு வள்ளல்களில் ஒருவரான் பாரியின் மகள் பாடியதாக வரும். புறநானூற்றில் சோகத்தை சொன்ன அதே வரிகள் ..இருவர் படத்தில் காதலை சொல்லும்... அதே பாடலில் "யாயும் ஞாயும்  யார் ஆகியரோ" எனத் தொடங்கும் வரிகள் ஒரு அருமையான குறுந்தொகைப் பாடல் 

"யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர்
யானு நீயு மெவ்வழி யறிதுஞ்
செம்புலப் பெய்ந்நீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே" என்ற வரிகளை வைரமுத்து கீழ்வருமாறு மாற்றி எழுதியிருப்பார்.

யாயும் ஞாயும்  யார் ஆகியரோ
நெஞ்சு நேர்ந்தது என்ன?
யானும் நீயும் எவ்வழி அறிதும்
உறவு சேர்ந்தது என்ன? 
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன 
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன

நம் காதல் நிலைக்குமா? நிறைவேறுமா ? என கவலை கொண்ட காதலியை தேற்ற காதலன் பாடியதாக வரும் இந்தப் பாடலின் விளக்கம் இது தான். உன் தாயும் என் தாயும் யாரோவென தொடர்பற்றவர்கள். என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவினர்கள் இல்லை. நீயும் நானும் கூட இதற்கு முன்பாய் அறிமுகமானவர்கள் இல்லை. செம்மண்ணில் பெய்த மழை செந்நிறத்தை பெற்று பிரிக்க முடியாதது போல  போல நம்மிருவர் நெஞ்சங்கள் தாமாகக் கலந்துவிட்டன.

அடுத்த முறை வேறு ஒரு பாடலை காணலாம்...
Reply all
Reply to author
Forward
0 new messages