ஆதித்த கரிகாலன் கொலையும் அதன் மர்மங்களும்

326 views
Skip to first unread message

ஆதித்ய இளம்பிறையன்

unread,
Jun 21, 2011, 5:56:14 AM6/21/11
to அருந்தமிழ் கேளீர்
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தை வாசித்த பின்பு தமிழ் மீது
பற்றுக் கொண்ட பலருள் நானும் ஒருவன். வாசித்தவர்களிடம் ஒரு வீரியமான
தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது இந்தப் புதினம். அதற்குப் பின்பு
அகிலன், விக்கிரமன்,சாண்டில்யன் மற்றும் பாலகுமாரனின் உடையார் முதற்க்
கொண்டு எல்லாம் வாசித்து விட்டேன். ஆனாலும் பொன்னியின் செல்வன் இன்னும்
பசுமையாய் இருக்கிறது.

இப்புதினத்தை வாசித்த பின்பு எல்லோர் மனதிலும் எழும் ஒரு சந்தேகம்
"ஆதித்த கரிகாலனை கொன்றது யார்?".இன்றும் விடை காணமுடியாத ஒரு கேள்வி..
சோழ வரலாற்றில் பல மர்மங்கள் நிறைந்த கொலை இது. இன்றும் இது விவாதப்
பொருளாகவே இருக்கிறது. இதைப் பற்றிய விவாதங்கள் இணையத்தில் ஏராளம்
காணலாம். ஆதித்தன் கொலை பற்றி நான் அறிந்தவற்றை இங்கு தொகுத்து தர
முயன்றுள்ளேன்.

பொன்னியின் செல்வன் வாசித்த பலரும் இதை ஒரு வரலாற்று நூலாகவே
கருதுகின்றனர். இது கொஞ்சம் வரலாறும், அதிகம் கற்பனையும் கலந்த ஒரு
புதினம். பூங்குழலி, ஊமை ராணி,நந்தினி மற்றும் சேந்தன் அமுதன் யாவரும்
கல்கியின் கற்பனைப் பாத்திரங்கள். சேந்தன் அமுதன் பினனால் உத்தம சோழனாக
புதினத்தில் மாற்றப்பட்டிருப்பார்.அனால் உண்மையில் அவர் கண்டராதித்தரின்
மகனாவார்.

இக்கொலை நடக்கும்போது இருந்த வரலாற்று சூழ்நிலைகளை கொஞ்சம் பார்க்கலாம்.
சுந்தர சோழன் ஆட்சி ஏறும்போது தெற்கில் பாண்டியர்களும் , வடக்கில்
இராட்டிரகூடர்களும் வலிமையில் மேலோங்கியிருந்தனர். சோழ நாட்டின் எல்லை
சுருங்கிப் போயிருந்தது. சுந்தர சோழனோ, உத்தம சோழனோ போர்களில்
பங்கேற்கவில்லை. ராசா ராசன் இளைஞனாக இருந்தபடியால் அவனும் போர்களில்
பங்கேற்கவில்லை. அரச குடும்பத்தை காணும்போது, தனது வீரத்தின் மூலம்
எதிரிகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கிய ஒரே அரச வாரிசு ஆதித்த கரிகாலன்
மட்டுமே. அப்போது ஆதித்தனின் வயது 16. முதலில் ஆதித்தன் சோழ நாட்டின்
வடக்குப் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த இராட்டிரகூடர்களை விரட்டி
அவர்கள் மேலும் வராதபடி வலுவான படைகளை உருவாக்கினான். பிறகு அவனது கவனம்
பண்டியர்களின்பால் திரும்பியது. பாண்டியர்கள் மீண்டும் தலையெடுக்க
முடியாதபடி ஒழிக்க வேண்டும் எனக் கருதி, வீர பாண்டியன் மீது படைஎடுத்து
அவன் தலையைக் கொய்து அரண்மனையில் நட்டு வைத்தான். விசயாலய சோழன்
காலத்தில் தொடங்கி ஐந்து தலைமுறைகளுக்குப் பினனால் சோழ நாட்டிற்கு ஓயாத
தொல்லையாக இருந்த இரு பெரும் அரசுகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது இவன்
காலத்தில்தான். அப்பேர்பட்ட வீரன்.

ஆதித்தன் எப்படி கொல்லப்பட்டான் என்பதே பெரிய மர்மம் தான். பொன்னியின்
செல்வனில் சம்பூர்வர் அரண்மனையில் வைத்து கொல்லப்பட்டதாகச்
சொல்லப்படும். ஆனால் கல்வெட்டுகளிலோ /செப்பெடுகளிலோ நான் அறிந்தமட்டில்
அதைப் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. எப்படியோ மிகப்பெரிய வீரன் சதியால்
கொல்லப்பட்டான்.

இக்கொலைக்கு காரணம் மூன்று விதமாக நோக்கப்படுகிறது.
1. பாண்டியன் ஆபத்துவிகள்
2. உத்தம சோழன்
3. சிற்றரசர்கள், ராசா ராசன் மற்றும் குந்தவையின் கூட்டுசதி

1. பாண்டியன் ஆபத்துவிகள்
வரலாறு முழுவதும் பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் தொடர்ந்து போர்
நடந்து கொண்டுதான் இருந்தது. பழிவாங்குதலும்,பழிவாங்கப்படலும் இடைவிடாத
நிகழ்வு.சுந்தர சோழன் ஆட்சியில் வீரபாண்டியன் இலங்கை வேந்தனுடன்
சேர்ந்துகொண்டு சோழப் படையை தாக்குவதும் பின் காடுகளில் சென்று மறைவதுமாக
இருந்தான். கடைசியாக நடந்த போரில் வீரபாண்டியன் படுகாயமடைந்து காடுகளில்
புகுகிறான். இம்முறை எப்படியேனும் அவனைக் கொல்ல வேண்டும் என்று ஆதித்த
கரிகாலன் தலைமையில் சோழப் படையும் காடுகளில் துரத்திச் செல்கிறது. அங்கு
நிராயுதபாணியாக இருந்த வீரபாண்டியனை ஆதித்த கரிகாலன்
கொல்கிறான்(படுகாயமுற்று , நிராயுதபாணியாக இருந்த வீரபாண்டியனை போர்
மரபுகளுக்கு மாறாக கொன்ற கோழை என்ற நாட்டுப் புற பாடல் ஒன்று பாண்டிய
நாட்டில் ஒலித்தாகவும் கேள்வி).ஆதித்த கரிகாலன் பாண்டியனின் தலையைக்
கொய்து,ஒரு கழியில் சொருகி, தஞ்சாவூர் அரண்மனை வாயிலில் நட்டு வைத்தான்
என்று கூறுகிறது. இக்கொலைக்கு பழிவாங்கும் விதமாக வீர பாண்டியனின்
ஆபத்துவிகள்(மெய்க்காப்பாளர் படை) ரவிதாசன் தலைமையில் ஆதித்த கரிகாலனை
கொன்று இருக்கலாம். உடையார்குடி கல்வெட்டில் ரவிதாசன் குழுவினர்தான்
ஆதித்த கரிகாலனை கொன்றதாக அவர்களுக்கு விதித்த தண்டனையின் விபரம்
சொல்லப்படுகிறது.

2. உத்தம சோழன்
உத்தம சோழன் பின்புலம் பற்றி சிறிது காண்போம்.முதலாம் பராந்தகனின்
பதினோரு மனைவிகளில் இரு மகன்கள் தான் கண்டராதித்தர் மற்றும் அரிஞ்சய
சோழன். முதலாம் பராந்தகனின் மறைவிக்குப் பின் கண்டராதித்தர் பதவியேற்று
ஆட்சி நடத்துகிறார். அவருக்கு புதல்வர்கள் இல்லாததால் தன் தம்பி அரிஞ்சய
சோழனை பட்டது இளவரசனாக ஆக்குகிறார். ஆனால் கடைசி காலத்தில்
கண்டராதித்தருக்கு ஒரு ஆண் மகன் பிறக்கிறான். அவன்தான் உத்தம சோழன்.
ஏற்கனவே அரிஞ்சயனை இளவரசனாக அறிவித்து விட்டதால் கண்டராதித்தர்
மறைவுக்குப் பின் அரிஞ்சய சோழன் ஆட்சிப் பொறுப்பேற்கிறார். ஆட்சிப்
பொறுப்பேற்ற கொஞ்ச நாட்களிலே அரிஞ்சய சோழன் இறந்து விடுகிறார்.
கண்டராதித்தன் இறந்ததும் முறைப்படி பதவிக்கு வரவேண்டிய உத்தம சோழன் வயது
காரணம் காட்டி தவிர்க்கப்பட்டு அதற்க்கு பதிலாக அரிஞ்சய சோழன் மகனாகிய
சுந்தர சோழன் பதவியேற்கிறார். இதுவரைக்கும் எந்த பிரச்சனையும் எழவில்லை.
ஆனால் சுந்தர சோழன் ஆதித்த கரிகாலனுக்கு இளவரசு பட்டம் கட்டியவுடன்
பிரச்சனை ஆரம்பிக்கிறது.

உத்தமன் அரச மரபுப்படி இளவரசு பதவி தனக்கே வரவேண்டும் என எண்ணுகிறான்.
இதனால் பாண்டியன் ஆபத்துவிகள் மற்றும் சிற்றரசர்களுடன் இணைந்து ஆதித்தனை
கொன்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சோழர்களைப் பற்றி பல நூல்கள் எழுதிய
நீலகண்ட சாஸ்திரிகள் உத்தமனே கொலைக்கு காரணம் எனக் கூறுகிறார்.

3. சிற்றரசர்கள், ராசா ராசன் மற்றும் குந்தவையின் கூட்டுசதி
ஆதித்தன் வடக்கில் இராட்டிரகூடர்களைத் தடுத்து நிறுத்தியுதடன், போரில்
அவர்களிடம் இருந்து பெறப்பட்ட பொன்னால் காஞ்சியில் ஒரு மாளிகையை
அமைத்தான். ஆதித்தன் போரில் பெற்ற செல்வங்களில் ஒரு துளியைக் கூட
தஞ்சைக்குக் அனுப்பவில்லை. அவன் தனி அரசன் போலவே செயல்பட்டான் எனக்
கூறப்படுகிறது, இதனால் சிற்றரசர்களின் ஒரு பிரிவினர் அவன்மேல்
அதிருப்தியடைந்தனர். சோழ ராஜ்ஜியத்தில் மிகுந்த செல்வாக்குப் பெற்ற
குந்தவை ஆதித்தனின் இந்த செயலை விரும்பவில்லை. குந்தவை தன் இளைய தம்பி
ராசா ராசனின் மூலமே சோழப் பேரரசு உயர்ந்த நிலையை எட்டும் என நம்பினாள்.

பின்வரும் கேள்விகளை நோக்கும்போது ராசா ராசனுக்கும் இக்கொலையில் பங்கு
இருக்குமோ என்ற சந்தேகம் எழுவது இயற்கையே..

1..உத்தம சோழன் பதவியேற்கும்போது அவனுக்கு ஒரு மகன் இருக்கிறான். அரச
விதிமுறைகளின்படி உத்தம சோழன் மகனுக்குத் தான் இளவரசு பட்டம் கட்ட
வேண்டும் அனால் எல்லாவற்றிகும் முரணாக ராசா ராசா சோழனுக்கு ஏன் பட்டம்
சூட்ட வேண்டும்?

2. ஆட்சி பொறுப்பேற்றதும் ரவிதாசன் முதலியவர்களின் சொத்தை பறித்துக்
கொண்டு ஊரை விட்டு துரத்துகிறான் ராசா ராசன். ஆதித்தனின் கொலைக்கு ஊரை
விட்டு துரத்துவது தான் தண்டனையா? பிராமணர்கள் போரிடுவது, பிராமணர்களை
கொல்லுவது எல்லாம் அப்போது நடந்த ஒன்று தான். ராசா ராசான் மேலைச்
சாளுக்கிய மன்னன் சத்தியாச்சரியனுடன் போரிட்டபோது அந்நாட்டில்
பிராமணர்களைக் கொன்று குவித்தான் எனக் கல்வெட்டுகள் கூறுகின்றன.ஆகையால்
பிராமணர்களை கொல்லுவது ஆகாது எனக் கருதி ஊரை விட்டு துரத்தினார்கள்
என்பதெல்லாம் ஏற்புடையதாக இல்லை.

3. ராசா ராசன் தான் செய்யும் எல்லாவற்றையும் கல்வெட்டு செயும் பழக்கம்
உள்ளவன்(தேவதாசிகளின் பெயர்கள் உள்பட). அப்படி இருக்க எந்த கல்வெட்டிலும்
ஆதித்தனின் கொலைக்கான காரணத்தைப் பற்றியோ, கொலைகாரர்களை எப்படி
கண்டுபிடித்தார்கள் என்பது பற்றியோ எந்த குறிப்பும் இல்லை.

4.ராசா ராசா சோழன் ஆட்சியில் உத்தம சோழன் மகன் கோவில்களை நிர்வகிக்கும்
பதவியில் இருந்தான். பின்னாளில் ஊழல் புகார் காரணமாக அவன் கொல்லப்பட்டு
ராஜேந்திர சோழனுக்கு போட்டி இல்லாமல் செய்யப்பட்டதாவும் ஒரு தகவல்
உண்டு .மேலும் உத்தமனின் ஆட்சி முழுவதும் வந்தியத் தேவன்(பன்னிரண்டு
ஆண்டுகள்) சிறையில் இருக்கிறான். ராசா ராசனின் ஆட்சிக்கு பிறகுதான் அவன்
விடுதலை செய்யப்படுகிறான்.

மிகவும் சுவாரசியதுமானதும், பல மர்மங்களும் நிறைந்த ஆதித்தன் கொலை
இன்னும் ஆராயதக்கதே.

Reply all
Reply to author
Forward
0 new messages