தூது

18 views
Skip to first unread message

ஆதித்ய இளம்பிறையன்

unread,
Dec 31, 2012, 1:12:59 AM12/31/12
to sanka...@googlegroups.com
நான் யாழ் கருத்துக் களத்தில்(www.yarl.com) எழுதிய தூது பற்றிய திரி

காற்றை தூது விடலாம், மேகத்தை தூது விடலாம், நிலவைக் கூட தூது விடலாம் ஆனால் தன் உயிரை (நெஞ்சை) தூது விட முடியுமா?  இங்கு ஒருத்தி தன் உயிரை தூது விடுகிறாள்.

கூர்மையாக நிற்கும் குராமரத்தின் சிறிய அரும்புகளைக் கொண்டிருக்கும் நல்ல வாசனை கொண்ட மலரில் விழுந்த வண்டினால் உண்டான வாசத்தை தென்றல்காற்று புகுந்து கலந்து வீச, கண்கள் அவற்றை நோக்கி மகிழ்வடைகின்ற அழகமைந்த அத்தறுவாயில், மிகுதியான காதலால் எனை இன்பத்தில் திழைக்க வைக்கும் காதலனின் செய்கையால் நான் மெலிவடைந்து என் ஒளி பொருந்திய வளையல்கள் நெகிழ்ந்து போகும். அப்படிப்பட்ட காதலன் தற்போது பொருள் தேட வெளியூர் சென்று விட்டான்.  அவன் பிரிவால் நான் படும் துன்பத்தை உணர்த்துவதற்காக என் நெஞ்சம் அவனிடம் சென்றது . சென்ற நெஞ்சம் இன்னும் வரவில்லை. அங்கே அவர் செய்யும் தொழிலுக்கு துணையாக இருந்து அவரையும் அழைத்துக் கொண்டு ஒருங்கே வரலாம் என்ற ஆசையால்  உடனிருந்து  வருந்துகிறதோ?? அல்லது காதலர் கண்டு கொள்ளாததால் வருந்தி இங்கே திரும்பி வந்து, அதற்குள் பழைய அழகு எல்லாம் இழந்து விட்ட என் பசலை நிறத்தைப் பார்த்து, என்னை அறிய முடியாமல் இவள் அயலாள் என்று எண்ணி திரும்பிப் போய்விட்டதோ ?? துன்பம் எய்தி போய்விட்டதோ ?? என்று புலம்புகிறாள். நெஞ்சத்தை தூது விட்டால் நேரத்தோடு திரும்பி வராதோ ??

காதலனின் கைகள் பட்டதும் காதலி அணிந்த கைவளையல்கள் நெகிழுமோ?? இது உண்மையா கற்பனையா எனத் தெரியவில்லை . தெரிந்தவர்கள் பகருங்கள். இதே கருத்தை வைத்தே தில் என்ற படத்தில் கழட்ட முடியாத லைலாவின் மோதிரத்தை விக்ரம் கைபட்டதும் கழண்டு விடுவதாக காண்பிப்பார்கள்.


அந்த அகநானூற்றுப் பாடல் இதுதான்


குறுநிலைக் குரவின் சிறுநனை நறுவீ     
வண்டுதரு நாற்றம் வளிகலந் தீயக் 
கண்களி பெறூஉங் கவின்பெறு காலை    
எல்வளை ஞெகிழ்த்தோர்க் கல்லல் உறீஇயர் 
சென்ற நெஞ்சஞ் செய்வினைக் குசாவாய்     
ஒருங்குவரல் நசையொடு வருந்துங் கொல்லோ      
அருளா னாதலின் அழிந்திவண் வந்து    
தொன்னலன் இழந்தவென் பொன்னிற நோக்கி     
ஏதி லாட்டி இவளெனப்  
போயின்று கொல்லோ நோய்தலை மணந்தே.


சிறுநனை நறுவீ   - நனைந்ததால் உண்டான நறுமணம்
எல்வளை ஞெகிழ்த்தோர்க் -  ஒளி பொருந்திய வளையலை நெகிழச் செய்தவர்
உறீஇயர்  - அறிவுறுத்த



குற்றால நாதருக்கு தோழியை தூதனுப்பும் ஒரு பேதைப்பெண் 

தூது நீ சொல்லி வாராய்- பெண்ணே
குற்றாலா முன்போய்த் தூது நீ சொல்லி வாராய்!
ஆதிநாட் சுந்தரர்க்குத் தூது போனவர் முன்னே (தூதுநீ)
வந்தாலிந்நேரம் வரச்சொல்லு- வராதிருந்தால்
மாலையாகினும் வாச...- நுற்றலாதம்..
கந்தாலென நொஞ்சைத் தரச்சொல்லு- தராதிருந்தால்
தான் பெண்ணாவிய, பெண்ணை நானாவிடேனென்று


ஆதி சுந்தரரிடம் தூது போன அந்த குற்றால நாதரை என்னுடன் வரச்சொல்லு. அப்படி வராவிடில் கந்தலாகிப் போன என் நெஞ்சை தரச் சொல்லு. அப்படி தராவிட்டால் நான் அவர விட மாட்டேன் என்று சொல்ல தூதனுப்புகிறாள்.



நண்டையும் தூது விடலாம் தானே!!

கானலும் கழறாது; கழியும் கூறாது;
தேனிமிர் நறுமலர் புன்னையும் மொழியாது;
ஒருநின் அல்லது பிறிதுயாது இலனே;
இருங்கழி மலர்ந்த கண்போல் நெய்தல்
கமழ்இதழ் நாற்றம் அமிழ்துனென நசைஇத்;
தண்தாது ஊதிய வண்டினம் களிசிறந்து,
பறைஇய தளரும் துறைவனை, நீயே,
சொல்லல் வேண்டுமால் - அலவ! பல்கால்
கைதையம் படுசினை எவ்வமொடு அசாஅம்
கடற்சிறு காக்கை காமர் பெடையோடு
கோட்டுமீன் வழங்கும் வேட்டமடி பரப்பின்
வெள்இறாக் கனவும் நள்ளென் யாமத்து
'நின்னுறு விழுமம் களைந்தோள்
தன்னுறு விழுமம் நீந்துமோ!'


கடற்கரைச் சோலையும் தூது செல்லாது , உப்பங்கழியும் எடுத்துச் சொல்லாது, வண்டுகள் ஒலிக்கும் வாசம் மிகுந்த மலரினையுடைய புன்னை மரமும் மொழியாது. நின்னையன்றி வேறு துணை எனக்கு இல்லை !! .  கரிய நீரோடையில் மலர்ந்த கண்ணைப் போல் உள்ள நெய்தற் பூவின் இதழ் வாசத்தினை அமிழ்தம் என்று எண்ணி அதில் உள்ள  குளிர்ந்த தாதினை உண்ட வண்டின் கூட்டம் களிப்பு மிகுந்ததால் பறக்க இயல்லாமல் சோர்ந்து போகும். அத்தகைய ஊரை சேர்ந்த  தலைவனுக்கு நீதான் சொல்ல வேண்டும் நண்டே !!

தாழை மரத்தின் தாழ்ந்த கிளையில் விருப்பம் மிக்க பெடையுடன் வருத்தமுடன் அமர்ந்திருக்கும் சிறிய கடற்காக்கை, சுறாமீன் வேட்டையாடிய  இடத்தில் எஞ்சி கிடக்கும் வெள்ளிய இறாமீனைப் பற்றி உண்பதாகக் கனவு காணும். இருள்செறிந்த நடு இரவில் வரும் உனக்கு, பல நாளும் உனது  மிக்க துயரினை நீக்கிய நான், உனது பிரிவால் எழும்  கடுமையான துயரினைக் கடக்க முடியாமல் உள்ளேன் என்று கூறு..!!

ஒரு நின் அல்லதுபிறிது யாதும்இலன் - நின்னையே யன்றி வேறுஎத்துணையும் இல்லேன்
இரு கழி மலர்ந்த- கரிய நீரோடையில் மலர்ந்த
கண் போல்நெய்தல் கமழ் இதழ் நாற்றம் - கண்ணைப்போலும்நெய்தற் பூவின் கமழும் இதழ் நாற்றத்தினை
தண்தாது ஊதிய வண்டினம் களிசிறந்து -  குளிர்ந்ததாதினை உண்ட வண்டின்கூட்டம் களிப்புமிக்கு
பறைஇய தளரும் துறைவனை, நீயே - பறத்தற்கு இயலாது சோரும் துறையையுடைய தலைவனுக்கு
கைதைஅம் படுசினை - தாழை மரத்தின் தாழ்ந்த கிளையில்
எவ்வமொடு அசாஅம் - விருப்பம் மிக்கபெடையுடன் வருத்தமுடன் தளர்ந்திருக்கும்
கடல்சிறு காக்கை - சிறிய கடற்காக்கை,
 கோட்டு மீன்வழங்கும் வேட்டம் மடி பரப்பின் - சுறாமீன்இயங்கும் வேட்டையாடுதல் நீங்கிய இடத்திலுள்ள,
வெள் இறா கனவும் - வெள்ளிய இறாமீனைப் பற்றியுண்பதாகக் கனவு காணும்,
நள் என் யாமத்து - இருள்செறிந்த நடுஇரவில் வந்து,
பல்கால் நின் உறுவிழுமம் களைந்தோள் - பல நாளும் நினது மிக்கதுயரினை நீக்கியோள்,
தன் உறு விழுமம் நீந்துமோஎனவே - நின் பிரிவால் எய்திய தனது மிக்கதுயரினைக் கடக்க வல்லளோ என்று ;


குரு பார்வை என்ற படத்தில் வரும் ஒரு பாடல்... நந்தவனப் பூவை தூது சொல்ல வேண்டும் தலைவனும் தலைவியும்....
ஒரு அழகிய தமிழ்ப் பாடல்  ... 

நந்தவனப் பூவே தூது செல்ல வா
மன்னன் முகம் பார்த்து சேதி சொல்லி வா
இது மாமன் மாடக் கிளியே
நடமாடும் கோவில் சிலையே
விழி பார்வை தூவும் பணியே
தினம்  வாடுது தானாய் தனியே

வஞ்சி இவள் கொலுசு கொஞ்சி கொஞ்சி உரசி
சொல்லுவதை சொல்லிவிட்டு வா
அஞ்சு விரல் வளைத்து அஞ்சுகத்தை அணைக்க
சம்மதத்தை சொல்லிவிட்டு வா

செங்கமலப் பூவே சங்கதியைச் சொல்லு
வீரன் இவன் வேல்விழி பட்டு
வீழ்ந்ததை நீ போய்ச் சொல்லு

பூவரசம் பூவே போதுமெனச் சொல்லு
பாசம் வைத்தத்தாலே நானும் மோசம் போனேன் எனச் சொல்லு

கொடியில் பிறவா மலரே உனக்குள்  வாசம் வந்ததைச் சொல்லு
மாமன் மடியில் மணக்கத்தானே மலர்ந்தேன் என்பதைச் சொல்லு
சித்தகத்தி மலரே சித்திரைவெயில் நிலவை பத்திரமாய்  வரச் சொல்லி வா
அத்தை மகள் அணைச்சு முத்த மழை பொழிய உத்தரவு தரச் சொல்லி வா

ஜாதி மல்லிப் பூவே ஜோதிடம் நீ சொல்லு
தோகை தோளில் மாலை சூடும் தேதியை நீயும் கேட்டுச் சொல்லு
தூது வலைப் பூவே தூது நீயும் செல்லு
தையல் எந்தன் கையகம் சேர மையல் கொண்டதைச் சொல்லு
ஆடும் மயிலாய் இருந்தால் எனக்கு இறகாய் இருக்கச் சொல்லு
இனியோர் பிறவி இருந்தால் அதிலும் துணையாய் வருவேன் சொல்லு ..
.
Reply all
Reply to author
Forward
0 new messages