கலித்தொகை-பாலைக்கலி-பொருள்

4,044 views
Skip to first unread message

வேந்தன் அரசு

unread,
Jul 8, 2007, 11:32:03 AM7/8/07
to sanga...@googlegroups.com
2 ஆம் பாட்டு: பாலை  பாடிய பெருங்கடுங்கோ:
 
தொடங்கல் கண் தோன்றிய
முதியவன் முதலாக,            2-1
 அடங்காதார் மிடல் சாய,
அமரர் வந்து இரத்தலின்,            2-2
 மடங்கல் போல் சினைஇ, மாயம்
செய் அவுணரைக்           2-3
 கடந்து அடு முன்பொடு,
முக்கண்ணான் மூவெயிலும்        2-4
 உடன்றக்கால், முகம் போல ஒண்
கதிர் தெறுதலின்             2-5
 சீறு அரும் கணிச்சியோன்
சினவலின், அவ்வெயில்           2-6
 ஏறு பெற்று உதிர்வன போல்,
வரை பிளந்து, இயங்குநர்    2-7
 ஆறு கெட விலங்கிய அழல்
அவிர் ஆர் இடை -           2-8
 மறப்பு அரும் காதல் இவள்
ஈண்டு ஒழிய,           2-9
 இறப்பத் துணிந்தனிர்,
கேண்மின் மற்று ஐய!                2-10
 
பொழிப்புரை:
 
தோழி:
 
உலகம் தோன்றிய காலத்தே தோன்றிய
முதியவனான நான்முகன் முதலாக,
அடங்காதவர்களின் (அரக்கர்) வலிமை
சாய்ந்து ஒழியுமாறு,
தேவர் பலரும் வந்து முறையிட,
சிங்கம் போல் சினத்துடன் சென்று,
மாய வேலை செய்யும் அரக்கர்களை
வென்று எரிக்கும் வலிமையொடு,
முக்கண்ணனான சிவன் முப்புரங்களையும் எரிக்க
சினந்து நோக்கிய போது தோன்றிய அவன் முகம்போல,
ஒளிரும் கதிரவன் (தீப்பிழம்பாக) சுடுகின்றான்.
சீறுகின்ற கணிச்சி படையை உடைய அந்த சிவன்
சினந்து நோகியதால் அந்த மதில் சுவர்கள்
படைகளால் தாக்கு பெற்று உதிர்வனபோல்
(அக் கதிரவனின் வெம்மையால்)
மலை வெடித்துச் சிதறி வழியை அடைத்து கிடக்கும்.
தீபிழம்பாக ஒளிறும் அரிய அவ்வழியாக -
நீயும் கடந்து செல்ல நினைக்கிறாய்.
உன்னைப் மறக்கல் ஆற்றாத காதல் தலைவி
இங்கே வருத்தப்பட்டு அழியவும்,
நீ அந்த வழிகளில் கடக்க துணிந்தனை போலும்!
ஐயனே, யான் சொல்வதையும் கேட்பாயாக;

 தொலைவு ஆகி, இரந்தோர்க்கு
ஒன்று ஈயாமை இழிவு என          2-11
 மலை இறந்து செயல் சூழ்ந்த
பொருள் பொருள் ஆகுமோ -         2-12
 நிலைஇய கற்பினாள், நீ
நீப்பின் வாழாதாள்,              2-13
 முலை ஆகம் பிரியாமை பொருள்
ஆயின் அல்லதை;     2-14

'(தம் பொருள்களை பிறர்க்கு வழங்கி)
தொலைத்து விட்டுத் நம்மை இரந்து நிற்பவர்க்கு
நாம் ஏதும் கொடாமற்போவது இழிவல்லவோ?'  என்று கருதி,
மலை பல கடந்து பொருள் ஈட்டும் செயலில் துணிந்தனை.
அவ்வாறு ஈட்டும் பொருள் ஒரு பொருளாகுமோ?
நிலைபெற்ற கற்பினை உடையவளான,
நீ பிரிந்தால் உயிர் வாழாது மடிபவளான.
இவளது (தழுவிய) முலைமார்பை  பிரியாதிருத்தல்
என்பதே உண்மையான செல்வம் அன்றி?

இல் என இரந்தோர்க்கு ஒன்று
ஈயாமை இழிவு எனக்    2-15
கல் இறந்து செயல் சூழ்ந்த
பொருள் பொருள் ஆகுமோ -         2-16
தொல் இயல் வழாஅமைத் துணை
எனப் புணர்ந்தவள்          2-17
புல் ஆகம் பிரியாமை பொருள்
ஆயின் அல்லதை;             2-18

'எம்மிடம் ஏதும் இல்லை; உதவுக' என்று இரந்தவர்களுக்கு
எதாவது தராதிருந்தால், அது இழிவல்லவோ?' என்று
மலை பல கடந்து  (பொருள் ஈட்டும்) செயலை செய்ய
நினைக்கின்றாய்.
அந்த பொருளும் ஒரு பொருளாகுமோ?
பழைய பண்பாட்டினின்றும் வழுவாமல்,
நீயே துணையென்று நின்னை மணந்தவளான,
இவளது தழுவுதல் தகும் மார்பை  பிரியாமை
ஒரு பொருள் ஆகுமே அன்றி?

இடன் இன்றி இரந்தோர்க்கு
ஒன்று ஈயாமை இழிவு எனக்    2-19
கடன் இறந்து செயல் சூழ்ந்த
பொருள் பொருள் ஆகுமோ -         2-20
வடமீன் போல் தொழுது ஏத்த
வயங்கிய கற்பினாள்               2-21
தட மென் தோள் பிரியாமை
பொருள் ஆயின் அல்லதை;  2-22

'வேறு போக்கிடம் ஏதுமில்லை; உதவுக, என்று வந்தவர்க்கு
ஒன்றும் கொடாமலிருப்பது இழிவல்லவோ?' எனக் கருதி,
காடுகள் பலவும் கடந்து சென்று, பொருள் தேடி வருவதற்கு
நினைக்கின்றாயே,
அந்த பொருளும் ஒரு பொருளாகுமோ?
வடமீனை போல பலரும் தொழுது போற்ற விளங்கும்
உயர்ந்த கற்பினாள் நின் மனைவியின்
அகன்ற மெல்லிய தோள்களை பிரியாதிருத்தல்
உண்மையான பொருள் ஆகுமே அன்றி?'

        என இவள்,                            2-23
புன்கண் கொண்டு இனையவும்,
பொருள் வயின் அகறல்      2-24
அன்பு அன்று, என்று யான்
கூற, அன்புற்றுக்            2-25
காழ் வரை நில்லாக் கடும்
களிற்று ஒருத்தல்                  2-26
யாழ் வரைத் தங்கியாங்குத்,
தாழ்பு, நின்                        2-27
தொல்கவின் தொலைதல் அஞ்சி,
என்                       2-28
சொல்வரைத் தங்கினர்,
காதலோரே.                          2-29

என்று, நான் உன்பால் சொல்லும்படியாக,

 'இங்கே இவள் துன்பத்தால்
பொலிவு கெட்டு வருந்தவும்,
பொருள் தேடிவருதலையே கருதி இவளை பிரிந்து நீ போவது,
அன்பின் செயலே அன்று.'     என்று, நான்  கூறவும்,
அதனைக் கேட்ட அவன் அன்பு மேலுற்று
குத்துக்கோலாரின் ஏவலுக்கும் அடங்காது கட்டுமீறிச்செல்லும்
கொடிய களிற்றுத்தலைவன், (அண்ணல் யானை)
இனிய யாழ் ஒலி கேட்டதும் அமைதியுற்று நிற்பது போலத்
தலை தாழ்த்தி,
நின் இயற்கை எழிலானது அழிந்துவிடுமோ என அஞ்சி, 
என் சொல்லினைக் கேட்டு,
நின்னைப் பிரிந்து போகாது நின்றான்,
நின் காதலனே.

('ஆதலின், நின் கவலையை விட்டொழிப்பாயாக' என்பது வேண்டுகோள்.)

விளக்கம்:
        'ஈதல் இசைபட வாழ்தலே' என்றாலும், பிறருக்கு இரங்கி ஈவதாகச் சொல்பவன், தன் உயிர்த்துணையான மனைவிக்கு ஏற்படும் துயரினைக் கருத வேண்டாவோ என்று சொல்வது இது. இல்வாழ்விலே, நுகர்தற்குரியதான கட்டிளமைப் பருவத்திலே, கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பிரியாது வாழ்தல் ஒன்றே பிற செல்வத்திலும் புகழினும் சிறந்ததாகும் என்ற நெறியை வற்புறுத்துவது இதுவாகும்.

          'பொருள் பொருளாகுமோ' என்பதனுள், முதலது செல்வம்; இரண்டாமது பொருள் பொதிந்த அறமுறை.

சொற்பொருள்:
தொடங்கற்கண் - உலகத் தோற்றக்காலத்தில்,
முதியவன் - முன் தோன்றியதால் முதியவனான நான்முகன்.
அடங்காதார் - பகைவர்,
மிடல் - வலி (ஆற்றல்)
மட்ங்கல் - எமன்,
அவுணர் - அரக்கர்
கடந்து அடு முன்பு - எதிர நின்று அழிகின்ற ஆற்றல்,
மூவெயில் -இரும்பு, பொன், வெள்ளியால் ஆகிய மூன்று கோட்டைகள்
உடன்றக்கால் -சினந்து நோக்கிய பொழுது,
ஒண்கதிர் -தீயைக்கக்கும் ஞாயிறு,
தெறுதலின் -சுடுவதால்,
கணிச்சியோன் - மழுவேந்திய சிவன் 
ஏறுபெற்று - ஆயுதம் தாக்கி,
வரை - மலை,
அழல் அவிர் ஆரிடை - அழல்வீசும் செல்லுவதற்கு அரிய வழி
இறப்ப - பொருள் கருதிப் பிரிய
இறந்து - கடந்து
கல் -மலை
புல்லாகம் - புல்லுதற்கு இனிய மார்பு
கடன் -காடுசேர்ந்த நிலம்
வடமீன் -அருந்ததி,
வயங்கிய -பிறரால் போற்றுதற்குரிய
தடமென்தோள் - பெரிய மென்மையான தோள்
புண்கண் - துன்பம்,
இணையவும் -வருந்தவும்
காழ்வரை -குத்துக் கோலாரின் ஆணையின் கருத்துக்கு,
கடுங்களிற்று ஒருத்தல் - மதம் மிக்க யானைத்தலைவன்
 

Reply all
Reply to author
Forward
Message has been deleted
0 new messages