நாம்நகை யுடையம் நெஞ்சே!- கடுந்தெறல்
வேனில் நீடிய வானுயர் வழிநாள்,
வறுமை கூரிய மண்நீர்ச் சிறுகுளத்
தொடுகுழி மருங்கில் துவ்வாக் கலங்கல்
கன்றுடை மடப்பிடிக் கயந்தலை மண்ணிச் .121-5
சேறுகொண் டாடிய வேறுபடு வயக்களிறு
செங்கோல் வாலிணர் தயங்கத் தீண்டிச்
சொறிபுறம் உரிஞிய நெறியியல் மராஅத்து
அல்குறு வரிநிழல் அசைஇ, நம்மொடு
தான்வரும் என்ப, தடமென் தோளி- .121-10
உறுகண மழவர் உருள்கீண் டிட்ட
ஆறுசெல் மாக்கள் சோறுபொதி வெண்குடைக்
கணைவிசைக் கடுவளி எடுத்தலின், துணைசெத்து
வெருளேறு பயிரும் ஆங்கண்,
கருமுக முசுவின் கானத் தானே. .121-15
இரும்பிழி மகாஅரிவ் அழுங்கல் மூதூர்
விழவின் றாயினும் துஞ்சா தாகும்:
மல்லல் ஆவணம் மறுகுடன் மடியின்,
வல்லுரைக் கடுஞ்சொல் அன்னை துஞ்சாள்;
பிணிகோள் அருஞ்சிறை அன்னை துஞ்சின். .122-5
துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்;
இலங்குவேல் இளையர் துஞ்சின், வைஎயிற்று
வலஞ்சுரித் தோகை ஞாளி மகிழும்;
அரவவாய் ஞமலி மகிழாது மடியின்,
பகலுரு உறழ நிலவுக்கான்று விசும்பின் .122-10
அகல்வாய் மண்டிலம் நின்றுவிரி யும்மே;
திங்கள் கல்சேர்வு கனைஇருள் மடியின்,
இல்எலி வல்சி வல்வாய்க் கூகை
கழுதுவழங்கு யாமத்து அழிதகக் குழறும்;
வளைக்கண் சேவல் வாளாது மடியின், .122-15
மனைச்செறி கோழி மாண்குரல் இயம்பும்;
எல்லாம் மடிந்த காலை, ஒருநாள்
நில்லா நெஞ்சத்து அவர்வா ரலரே; அதனால்
அரிபெய் புட்டில் ஆர்ப்பப் பரிசிறந்து,
ஆதி போகிய பாய்பரி நன்மா .122-20
நொச்சி வேலித் தித்தன் உறந்தைக்
கல்முதிர் புறங்காட் டன்ன
பல்முட் டின்றால் - தோழி!- நம் களவே. .122-23
உண்ணா மையின் உயங்கிய மருங்கின்
ஆடாப் படிவத் தான்றோர் போல,
வரைசெறி சிறுநெறி நிரைபுடன் செல்லும்
கான யானை கவினழி குன்றம்
இறந்து, பொருள் தருதலும் ஆற்றாய்: சிறந்த .123-5
சில்லைங் கூந்தல் நல்லகம் பொருந்தி
ஒழியின், வறுமை அஞ்சுதி; அழிதகவு
உடைமதி-வாழிய, நெஞ்சே!-நிலவு என
நெய்கனி நெடுவேல் எஃகிலை இமைக்கும்
மழைமருள் பல்தோல் மாவண் சோழர் .123-10
கழைமாய் காவிரிக் கடல்மண்டு பெருந்துறை,
இறவொடு வந்து கோதையொடு பெயரும்
பெருங்கடல் ஓதம் போல,
ஒன்றிற் கொள்ளாய், சென்றுதரு பொருட்கே. .123-14
'நன்கலம் களிற்றொடு நண்ணார் ஏந்தி,
வந்துதிறை கொடுத்து, வணங்கினர், வழிமொழிந்து
'சென்றீக' என்ப ஆயின், வேந்தனும்
நிலம் வகுந்துறாஅ ஈண்டிய தானையொடு
இன்றே புகுதல் வாய்வது; நன்றே, .124-5
மாட மாண்நகர்ப் பாடமை சேக்கைத்
துனிதீர் கொள்கைநம் காதலி இனிதுறப்,
பாசறை வருத்தம் வீட, நீயும்-
மின்னுநிமிர்ந் தன்ன பொன்னியற் புனைபடைக்,
கொய்சுவல் புரவிக், கைகவர் வயங்குபரி .124-10
வண்பெயற்கு அவிழ்ந்த பைங்கொடி முல்லை
வீகமழ் நெடுவழி ஊதுவண் டிரிய,
காலை எய்தக், கடவு மதி - மாலை
அந்திக் காவலர் அம்பணை இமிழ்இசை
அரமிய வியலகத்து இயம்பும் .124-15
நிரைநிலை ஞாயில் நெடுமதில் ஊரே. .124-16
அரம்போழ் அவ்வளை தோள்நிலை நெகிழ,
நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி-
ஈர்ங்காழ் அன்ன அரும்புமுதிர் ஈங்கை
ஆலி யன்ன வால்வீ தாஅய்
வைவால் ஓதி மையணல் ஏய்ப்பத் .125-5
தாதுஉறு குவளைப் போதுபணி அவிழப்,
படாஅப் பைங்கண் பாவடிக் கயவாய்க்
கடாஅம் மாறிய யானை போலப்,
பெய்துவறிது ஆகிய பொங்குசெலற் கொண்மூ
மைதோய் விசும்பின் மாதிரத்து உழிதரப், .125-10
பனிஅடூஉ நின்ற பானாட் கங்குல்
தனியோர் மதுகை தூக்காய், தண்ணென,
முனிய அலைத்தி, முரண்இல் காலை;
கைதொழு மரபின் கடவுள் சான்ற
செய்வினை மருங்கிற் சென்றோர் வல்வரின் .125-15
விரியுளைப் பொலிந்த பரியுடை நன்மான்
வெருவரு தானையொடு வேண்டுபுலத்து இறுத்த
பெருவளக் கரிகால் முன்னிலைச் செல்லார்,
சூடா வாகைப் பறந்தலை, ஆடுபெற
ஒன்பது குடையும் நன்பகல் ஒழித்த .125-20
பீடில் மன்னர் போல,
ஓடுவை மன்னால் - வாடை!- நீ எமக்கே. .125-22
நினவாய் செத்து நீபல உள்ளிப்,
பெரும்புன் பைதலை வருந்தல் அன்றியும்,
மலைமிசைத் தொடுத்த மலிந்துசெலல் நீத்தம்
தலைநாள் மாமலர் தண்துறைத் தயங்கக்
கடற்கரை மெலிக்குங் காவிரிப் பேரியாற்று .126-5
அறல்வார் நெடுங்கயத்து அருநிலை கலங்க,
மாலிருள் நடுநாட் போகித் தன்னையர்
காலைத் தந்த கணைக்கோட்டு வாளைக்கு,
அவ்வாங்கு உந்தி, அஞ்சொல் பாண்மகள்,
நெடுங்கொடி நுடங்கு நறவுமலி மறுகில் .126-10
பழஞ்செந் நெல்லின் முகவை கொள்ளாள்,
கழங்குறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம்
பயங்கெழு வைப்பிற் பல்வேல் எவ்வி
நயம்புரி நன்மொழி அடக்கவும் அடங்கான்,
பொன்னிணர் நறுமலர்ப் புன்னை வெஃகித், .126-15
திதியனொடு பொருத அன்னி போல
விளிகுவை கொல்லோ, நீயே - கிளியெனச்
சிறிய மிழற்றுஞ் செவ்வாய்ப், பெரிய
கயலென அமர்த்த உண்கண், புயலெனப்
புறந்தாழ்பு இருளிய பிறங்குகுரல் ஐம்பால்: .126-20
மின்னோர் மருங்குல், குறுமகள்
பின்னிலை விடாஅ மடங்கெழு நெஞ்சே! .126-22
இலங்குவளை நெகிழச் சாஅய், அல்கலும்,
கலங்கஞர் உழந்து, நாம்இவண் ஒழிய
வலம்படு முரசின் சேர லாதன்
முந்நீர் ஓட்டிக் கடம்புஅறுத்து, இமயத்து
முன்னோர் மருள வணங்குவிற் பொறித்து, .127-5
நன்னகர் மாந்தை முற்றத்து ஒன்னார்
பணிதிறை தந்த பாடுசால் நன்கலம்
பொன்செய் பாவை வயிரமொடு ஆம்பல்
ஒன்றுவாய் நிறையக் குவைஇ, அன்றவண்
நிலம்தினத் துறந்த நிதியத்து அன்ன, .127-10
ஒருநாள் ஒருபகற் பெறினும், வழிநாள்
தங்கலர் - வாழி, தோழி!- செங்கோற்
கருங்கால் மராஅத்து வாஅல் மெல்இணர்ச்
சுரிந்துவணர் பித்தை பொலியச் சூடிக்,
கல்லா மழவர் வில்லிடம் தழீஇ, .127-15
வருநர்ப் பார்க்கும் வெருவரு கவலை
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்,
பழிதீர் காதலர் சென்ற நாட்டே. .127-18
மன்றுபா டவிந்து மனைமடிந் தன்றே;
கொன்றோ ரன்ன கொடுமையோ டின்றே
யாமம் கொளவரின் கனைஇக், காமங்
கடலிலும் உரைஇக், கரைபொழி யும்மே
எவன்கொல்- வாழி, தோழி!- மயங்கி .128-5
இன்னம் ஆகவும், நன்னர் நெஞ்சம்
என்னொடும் நின்னொடும் சூழாது, கைம்மிக்கு,
இறும்புபட்டு இருளிய இட்டருஞ் சிலம்பிற்
குறுஞ்சுனைக் குவளை வண்டுபடச் சூடிக்,
கான நாடன் வரூஉம், யானைக் .128-10
கயிற்றுப்புறத் தன்ன, கன்மிசைச் சிறுநெறி,
மாரி வானந் தலைஇ நீர்வார்பு,
இட்டருங் கண்ண படுகுழி இயவின்,
இருளிடை மிதிப்புழி நோக்கி, அவர்
தளர்அடி தாங்கிய சென்றது, இன்றே? .128-15
'உள்ளல் வேண்டும் ஒழிந்த பின்' என
நள்ளென் கங்குல் நடுங்குதுணை யாயவர்
நின்மறந்து உறைதல் யாவது? 'புல் மறைந்து
அலங்கல் வான்கழை உதிர்நெல் நோக்கிக்'
கலைபிணை விளிக்கும் கானத்து ஆங்கண், .129-5
கல்சேர்பு இருந்த கதுவாய்க் குரம்பைத்
தாழிமுதற் கலித்த கோழிலைப் பருத்திப்
பொதிவயிற்று இளங்காய் பேடை ஊட்டிப்,
போகில்பிளந் திட்ட பொங்கல் வெண்காழ்
நல்கூர் பெண்டிர் அல்குற் கூட்டும் .129-10
கலங்குமுனைச் சீறூர் கைதலை வைப்பக்,
கொழுப்புஆ தின்ற கூர்ம்படை மழவர்,
செருப்புடை அடியர், தெண்சுனை மண்டும்
அருஞ்சுரம் அரிய வல்ல; வார்கோல்
திருந்திழைப் பணைத்தோள் தேன்நாறு கதுப்பின் .129-15
குவளை உண்கண், இவளொடு செலற்கு 'என
நெஞ்சுவாய் அவிழ்ந்தனர் காதலர்-
அஞ்சில் ஓதி ஆயிழை!- நமக்கே. .129-18
அம்ம வாழி, கேளிர்! முன்நின்று
கண்டனிர் ஆயின், கழறலிர் மன்னோ-
நுண்தாது பொதிந்த செங்காற் கொழுமுகை
முண்டகம் கெழீஇய மோட்டுமணல் அடைகரைப்,
பேஎய்த் தலைய பிணர் அரைத் தாழை .130-5
எயிறுடை நெடுந்தோடு காப்பப், பலவுடன்
வயிறுடைப் போது வாலிதின் விரீஇப்,
புலவுப்பொருது அழித்த பூநாறு பரப்பின்
இவர்திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம்
கவர்நடைப் புரவிக் கால்வடுத் தபுக்கும் .130-10
நற்றேர் வழுதி கொற்கை முன்துறை
வண்டுவாய் திறந்த வாங்குகழி நெய்தற்
போதுபுறங் கொடுத்த உண்கண்
மாதர் வாண்முகம் மதைஇய நோக்கே. .130-14
'விசும்புற நிவந்த மாத்தாள் இதணைப்
பசுங்கேழ் மெல்லிலை அருகுநெறித் தன்ன,
வண்டுபடுபு இருளிய, தாழ்இருங் கூந்தல்
சுரும்புஉண விரிந்த பெருந்தண் கோதை
இவளினும் சிறந்தன்று, ஈதல் நமக்கு என .131-5
வீளை அம்பின் விழுத்தொடை மழவர்
நாள்ஆ உய்த்த நாமவெஞ் சுரத்து
நடைமெலிந்து ஒழிந்த சேட்படர் கன்றின்
கடைமணி உகுநீர் துடைத்த ஆடவர்
பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும், .131-10
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்
வேல்ஊன்று பலகை வேற்றுமுனை கடுக்கும்
வெருவரு தகுந கானம் 'நம்மொடு
வருக' என்னுதி ஆயின்,
வாரேன்; நெஞ்சம்! வாய்க்கநின் வினையே. .131-15
ஏனலும் இறங்குகுரல் இறுத்தன; நோய்மலிந்து,
ஆய்கவின் தொலைந்த இவள் நுதலும்; நோக்கி
ஏதில மொழியும் இவ்வூரும்; ஆகலின்,
களிற்றுமுகந் திறந்த கவுளுடைப் பகழி,
வால்நிணப் புகவின், கானவர் தங்கை .132-5
அம்பணை மென்தோள் ஆயஇதழ் மழைக்கண்
ஒல்கியற் கொடிச்சியை நல்கினை ஆயின்,
கொண்டனை சென்மோ நுண்பூண் மார்ப!
துளிதலைத் தலைஇய சாரல் நளிசுனைக்
கூம்புமுகை அவிழ்த்த குறுஞ்சிறைப் பறவை .132-10
வேங்கை விரியிணர் ஊதிக், காந்தள்
தேனுடைக் குவிகுலைத் துஞ்சி, யானை
இருங்கவுட் கடாஅம் கனவும்,
பெருங்கல் வேலி, நும் உறைவின் ஊர்க்கே. .132-14
'குன்றி அன்ன கண்ண, குருஉமயிர்ப்,
புன்தாள், வெள்ளெலி மோவாய் ஏற்றை
செம்பரல் முரம்பில் சிதர்ந்த பூழி,
நல்நாள் வேங்கைவீ நன்களம் வரிப்பக்,
கார்தலை மணந்த பைம்புதற் புறவின், .133-5
வில்எறி பஞ்சியின் வெண்மழை தவழும்
கொல்லை இதைய குறும்பொறை மருங்கில்,
கரிபரந் தன்ன காயாஞ் செம்மலொடு
எரிபரந் தன்ன இலமலர் விரைஇப்,
பூங்கலுழ் சுமந்த தீம்புனற் கான்யாற்று .133-10
வான்கொள் தூவல் வளிதர உண்கும்;
எம்மொடு வருதல் வல்லையோ மற்று?' எனக்
கொன்ஒன்று வினவினர் மன்னே- தோழி!-
இதல்முள் ஒப்பின் முகைமுதிர் வெட்சி
கொல்புனக் குருந்தொடு கல்அறை தாஅம் .133-15
மிளைநாட்டு அத்தத்து ஈர்ஞ்சுவற் கலித்த
வரிமரல் கறிக்கும் மடப்பிணைத்
திரிமருப்பு இரலைய காடிறந் தோரே. .133-18
வானம் வாய்ப்பக் கவினிக் கானம்
கமஞ்சூல் மாமழை கார்பயந்து இறுத்தென;
மணிமருள் பூவை அணிமலர் இடையிடைச்,
செம்புற மூதாய் பரத்தலின், நன்பல
முல்லை வீகழல் தாஅய், வல்லோன் .134-5
செய்கை அன்ன செந்நிலப் புறவின்;
வாஅப் பாணி வயங்குதொழிற் கலிமாத்
தாஅத் தாளிணை மெல்ல ஒதுங்க,
இடிமறந்து, ஏமதி- வலவ! குவிமுகை
வாழை வான்பூ ஊழுறுபு உதிர்ந்த .134-10
ஒழிகுலை அன்ன திரிமருப்பு ஏற்றொடு
கணைக்கால் அம்பிணைக் காமர் புணர்நிலை
கடுமான் தேர்ஒலி கேட்பின்,
நடுநாட் கூட்டம் ஆகலும் உண்டே. .134-14
திதலை மாமை தளிர்வனப்பு அழுங்கப்,
புதலிவர் பீரின் எதிர்மலர் கடுப்பப்,
பசலை பாய்ந்த நுதலேன் ஆகி,
எழுதெழில் மழைக்கண் கலுழ, நோய் கூர்ந்து,
ஆதி மந்தியின் அறிவுபிறி தாகிப் .135-5
பேதுற் றிசினே - காதல்அம் தோழி!
காய்கதிர் திருகலின் கனைந்துகால் கடுகி,
ஆடுதளிர் இருப்பைக் கூடுகுவி வான்பூக்
கோடுகடை கழங்கின், அறைமிசைத் தாஅம்
காடிறந் தனரே, காதலர்; அடுபோர், .135-10
வீயா விழுப்புகழ், விண்தோய் வியன்குடை,
ஈர்-எழு வேளிர் இயந்துஒருங்கு எறிந்த
கழுவுள் காமூர் போலக்
கலங்கின்று மாது, அவர்த் தெளிந்தஎன் நெஞ்சே. .135-14
மைப்புஅறப் புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு
வரையா வண்மையொடு புரையோர்ப் பேணிப்,
புள்ளுப் புணர்ந்து இனிய ஆகத் தெள்ஒளி
அம்கண் இருவிசும்பு விளங்கத், திங்கட்
சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்துக், .136-5
கடிநகர் புனைந்து, கடவுட் பேணிப்,
படுமண முழவொடு பரூஉப்பணை இமிழ,
வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப்,
பூக்கணும் இமையார் நோக்குபு மறைய,
மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை, .136-10
பழங்கன்று கறித்த பயம்பமல் அறுகைத்
தழங்குகுரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற
மண்ணுமணி அன்ன மாஇதழ்ப் பாவைத்
தண்நறு முகையொடு வெந்நூல் சூட்டித்,
தூஉடைப் பொலிந்து மேவரத் துவன்றி, .136-15
மழைபட் டன்ன மணன்மலி பந்தர்,
இழைஅணி சிறப்பின் பெயர்வியர்ப்பு ஆற்றித்
தமர்நமக்கு ஈத்த தலைநாள் இரவின்,
'உவர்நீங்கு கற்பின்எம் உயிர்உடம் படுவி!
முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇப், .136-20
பெரும்புழுக் குற்றநின் பிறைநுதற் பொறிவியர்
உறுவளி ஆற்றச் சிறுவரை திற' என
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்,
உறைகழி வாளின் உருவுபெயர்ந்து இமைப்ப,
மறைதிறன் அறியாள் ஆகி, ஒய்யென .136-25
நாணினள் இறைஞ்சி யோளே- பேணிப்
பரூஉப்பகை ஆம்பற் குரூஉத்தொடை நீவிச்
சுரும்பிமிர் ஆய்மலர் வேய்ந்த
இரும்பல் கூந்தல் இருள்மறை ஒளித்தே. .136-29
ஆறுசெல் வம்பலர் சேறுகிளைத்து உண்ட
சிறும்பல் கேணிப் பிடியடி நசைஇச்,
களிறுதொடூஉக் கடக்குங் கான்யாற்று அத்தம்
சென்றுசேர்பு ஒல்லார் ஆயினும், நினக்கே-
வென்றெறி முரசின் விறற்போர்ச் சோழர் .137-5
இன்கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண்,
வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று
உருவ வெண்மணல் முருகுநாறு தண்பொழிற்
பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்
வீஇலை அமன்ற மரம்பயில் இறும்பில் .137-10
தீஇல் அடுப்பின் அரங்கம் போலப்,
பெரும்பாழ் கொண்டன்று, நுதலே, தோளும்,
தோளா முத்தின் தெண்கடற் பொருநன்
திண்தேர்ச் செழியன் பொருப்பிற் கவாஅன்
நல்லெழில் நெடுவேய் புரையும் .137-15
தொல்கவின் தொலைந்தன: நோகோ யானே. .137-16
இகுளை! கேட்டிசின் காதலம் தோழி !
குவளை உண்கண் தெண்பனி மல்க,
வறிதியான் வருந்திய செல்லற்கு அன்னை
பிறிதொன்று கடுத்தனள் ஆகி - வேம்பின்
வெறிகொள் பாசிலை நீலமொடு சூடி, .138-5
உடலுநர்க் கடந்த கடல்அம் தானைத்,
திருந்துஇலை நெடுவேல் தென்னவன் - பொதியில்
அருஞ்சிமை இழிதரும் ஆர்த்துவரல் அருவியின்
ததும்புசீர் இன்னியங் கறங்கக், கைதொழுது,
உருகெழு சிறப்பின் முருகுமனைத் தரீஇக், .138-10
கடம்பும் களிறும் பாடி, நுடங்குபு
தோடுந் தொடலையும் கைக்கொண்டு, அல்கலும்
தேடினர் ஆதல் நன்றோ?- நீடு
நின்னொடு தெளித்த நன்மலை நாடன்
குறிவரல் அரைநாட் குன்றத்து உச்சி, .138-15
நெறிகெட வீழ்ந்த துன்னருங் கூர்இருள்,
திருமணி உமிழ்ந்த நாகம் காந்தட்
கொழுமடற் புதுப்பூ ஊதுந் தும்பி
நன்னிறம் மருளும் அருவிடர்
இன்னா நீள்இடை நினையும்என் நெஞ்சே. .138-20
துஞ்சுவது போலஇருளி, விண்பக
இமைப்பது போலமின்னி, உறைக்கொண்டு
ஏறுவதுப் போலப் பாடுசிறந்து உரைஇ
நிலம்நெஞ்சு உட்க ஓவாது சிலைத்தாங்கு,
ஆர்தளி பொழிந்த வார்பெயற் கடைநாள்; .139-5
ஈன்றுநாள் உலந்த வாலா வெண்மழை
வான்தோய் உயர்வரை ஆடும் வைகறைப்
புதல்ஒளி சிறந்த காண்பின் காலைத்,
தண்நறும் படுநீர் மாந்திப், பதவு அருந்து
வெண்புறக்கு உடைய திரிமருப்பு இரலை; .139-10
வார்மணல் ஒருசிறைப் பிடவுஅவிழ் கொழுநிழல்,
காமர் துணையொடு ஏமுற வதிய;
அரக்குநிற உருவின் ஈயல் மூதாய்
பரப்பி யவைபோற் பாஅய்ப், பலவுடன்
நீர்வார் மருங்கின் ஈர்அணி திகழ; .139-15
இன்னும் வாரார் ஆயின்- நன்னுதல்!
யாதுகொல் மற்றுவர் நிலையே? காதலர்
கருவிக் கார்இடி இரீஇய
பருவம் அன்று, அவர்: 'வருதும்' என்றதுவே. .139-19
பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்
இருங்கழி செறுவின் உழாஅது செய்த
வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றி,
என்றூழ் விடர குன்றம் போகும்
கதழ்கோல் உமணர் காதல் மடமகள் .140-5
சில்கோல் எல்வளை தெளிர்ப்ப வீசி
'நெல்லின் நேரே வெண்கல் உப்பு' எனச்
சேரி விலைமாறு கூறலின், மனைய
விளியறி ஞமலி குரைப்ப, வெரீஇய
மதர்கயல் மலைப்பின் அன்னகண் எனக்கு, .140-10
இதைமுயல் புனவன் புகைநிழல் கடுக்கும்
மாமூ தள்ளல் அழுந்திய சாகாட்டு
எவ்வந் தீர வாங்குந் தந்தை
கைபூண் பகட்டின் வருந்தி
வெய்ய உயிர்க்கும் நோயா கின்றே. .140-15
அம்ம வாழி, தோழி ! கைம்மிகக்
கனவுங் கங்குல்தோ றினிய: நனவும்
புனைவினை நல்இல் புள்ளும் பாங்கின!
நெஞ்சும் நனிபுகன்று உறையும்; எஞ்சாது
உலகுதொழில் உலந்து, நாஞ்சில் துஞ்சி .141-5
மழைகால் நீங்கிய மாக விசும்பில்
குறுமுயல் மறுநிறம் கிளர, மதி நிறைந்து,
அறுமீன் சேறும் அகல்இருள் நடுநாள்:
மறுகுவிளக் குறுத்து, மாலை தூக்கிப்,
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய .141-10
விழவுஉடன் அயர, வருகதில் அம்ம!
துவரப் புலர்ந்து தூமலர் கஞலித்,
தகரம் நாறுந் தண்நறுங் கதுப்பின்
புதுமண மகடூஉ அயினிய கடிநகர்ப்
பல்கோட்டு அடுப்பில் பால்உலை இரீஇ .141-15
கூழைக் கூந்தற் குறுந்தொடி மகளிர்
பெருஞ்செய் நெல்லின் வாங்குகதிர் முறித்துப்
பாசவல் இடிக்கும் இருங்காழ் உலக்கைக்
கடிதுஇடி வெரீஇய கமஞ்சூல் வெண்குருகு
தீங்குலை வாழை ஓங்குமடல் இராது: .141-20
நெடுங்கால் மாஅத்துக் குறும்பறை பயிற்றுஞ்
செல்குடி நிறுத்த பெரும்பெயர்க் கரிகால்
வெல்போர்ச் சோழன் இடையாற்று அன்ன
நல்லிசை வெறுக்கை தருமார், பல்பொறிப்
புலிக்கேழ் உற்ற பூவிடைப் பெருஞ்சினை .141-25
நரந்த நறும்பூ நாள்மலர் உதிரக்,
கலைபாய்ந்து உகளும், கல்சேர் வேங்கைத்,
தேம்கமழ் நெடுவரைப் பிறங்கிய
வேங்கட வைப்பிற் சுரன்இறந் தோரே. .141-29
இலமலர் அன்ன அம்செந் நாவிற்
புலம்மீக் கூறும் புரையோர் ஏத்தப்,
பலர்மேந் தோன்றிய கவிகை வள்ளல்
நிறையருந் தானை வெல்போர் மாந்தரம்-
பொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற .142-5
குறையோர் கொள்கலம் போல, நன்றும்
உவஇனி - வாழிய, நெஞ்சே!- காதலி
முறையின் வழா அது ஆற்றிப் பெற்ற
கறையடி யானை நன்னன் பாழி,
ஊட்டரு மரபின் அஞ்சு வரு பேய்எக் .142-10
கூட்டெதிர் கொண்ட வாய்மொழி மிஞிலி
புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும்பெயர்
வெள்ளத் தானை அதிகற் கொன்றுஉவந்து
ஒள்வாள் அமலை ஞாட்பிற்,
பலர் அறி வுறுதல் அஞ்சிப், பைப்பய, .142-15
நீர்த்திரள் கடுக்கும் மாசில் வெள்ளிச்
சூர்ப்புறு கோல்வளை செறித்த முன்கைக்
குறை அறல் அன்ன இரும்பல் கூந்தல்,
இடனில் சிறுபுறத்து இழையொடு துயல்வரக்,
கடல்மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து. .142-20
உருவுகிளர் ஏர்வினைப் பொலிந்த பாவை
இயல்கற் றன்ன ஒதுக்கினள் வந்து,
பெயல் அலைக் கலங்கிய மலைப்பூங் கோதை
இயல்எறி பொன்னின் கொங்குசோர்பு உறைப்பத்
தொடிக்கண் வடுக்கொள - முயங்கினள்: .142-25
வடிப்புறு நரம்பின் தீவிய மொழிந்தே. .142-26
செய்வினைப் பிரிதல் எண்ணிக், கைம்மிகக்
காடுகவின் ஒழியக் கடுங்கதிர் தெறுதலின்,
நீடுசினை வறிய வாக, ஒல்லென
வாடுபல் அகலிலை கோடைக்கு ஒய்யும்
தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கெழுபு .143-5
முளிஅரிற் பிறந்த வளிவளர் கூர்எரிச்
சுடர்நிமிர் நெடுங்கொடி விடர்முகை முழங்கும்
'வெம்மலை அருஞ்சுரம் நீந்தி - ஐய!
சேறும்' என்ற சிறுசொற்கு... இவட்கே,
வசைஇல் வெம்போர் வானவன் மறவன் .143-10
நசையின் வாழ்நர்க்கு நன்கலஞ் சுரக்கும்,
பொய்யா வாய்வாள், புனைகழல் பிட்டன்
மைதவழ் உயர்சிமைக் குதிரைக் கவாஅன்
அகல்அறை நெடுஞ்சுனை, துவலையின் மலர்ந்த
தண்கமழ் நீலம் போலக், .143-15
கண்பனி கலுழ்ந்தன; நோகோ யானே. .143-16
"வருதும்" என்ற நாளும் பொய்த்தன;
அரியேர் உண்கண் நீரும் நில்லா;
தண்கார்க்கு ஈன்ற பைங்கொடி முல்லை
வைவாய் வான்முகை அவிழ்ந்த கோதை
பெய்வனப்பு இழந்த கதுப்பும் உள்ளார், .144-5
அருள்கண் மாறலோ மாறுக- அந்தில்
அறன்அஞ் சலரே!- ஆயிழை! நமர்' எனச்
சிறிய சொல்லிப் பெரிய புலப்பினும்,
பனிபடு நறுந்தார் குழைய, நம்மொடு,
துனிதீர் முயக்கம் பெற்றோள் போல .144-10
உவக்குநள்- வாழிய, நெஞ்சே!- விசும்பின்
ஏறெழுந்து முழங்கினும் மாறெழுந்து சிலைக்கும்
கடாஅ யானை கொட்கும் பாசறைப்,
பார்வேட்டு எழுந்த மள்ளர் கையதை
கூர்வாட் குவிமுகஞ் சிதைய நூறி .144-15
மானடி மருங்கில் பெயர்த்த குருதி
வான மீனின் வயின்வயின் இமைப்ப,
அமரோர்த்து, அட்ட செல்வம்
தமர்விரைந்து உரைப்பக் கேட்கும் ஞான்றே. .144-19
வேர்முழுது உலறி நின்ற புழற்கால்,
தேர்மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும்,
வற்றல் மரத்த பொன்தலை ஓதி
வெயிற்கவின் இழந்த வைப்பின் பையுள் கொள,
நுண்ணிதின் நிவக்கும் வெண்ஞெமை வியன்காட்டு .145-5
ஆளில் அத்தத்து, அளியள் அவனொடு-
வாள்வரி பொருத புண்கூர் யானை
புகர்சிதை முகத்த குருதி வார,
உயர்சிமை நெடுங்கோட்டு உருமென முழங்கும்
'அருஞ்சுரம் இறந்தனள்' என்ப- பெருஞ்சீர் .145-10
அன்னி குறுக்கைப் பறந்தலைத், திதியன்
தொல்நிலை முழுமுதல் துமியப் பண்ணிய
நன்னர் மெல்லிணர்ப் புன்னை போலக்,
கடுநவைப் படீஇயர் மாதோ - களி மயில்
குஞ்சரக் குரல குருகோடு ஆலும், .145-15
துஞ்சா முழவின் துய்த்தியல் வாழ்க்கைக்,
கூழுடைத் தந்தை இடனுடை வரைப்பின்,
ஊழடி ஒதுங்கினும் உயங்கும் ஐம்பாற்
சிறுபல் கூந்தற் போதுபிடித்து அருளாது,
எறிகோல் சிதைய நூறவும், சிறுபுறம், .145-20
'எனக்குஉரித்து' என்னாள், நின்ற என்
அமர்க்கண் அஞ்ஞையை அலைத்த கையே! .145-22
வலிமிகு முன்பின் அண்ணல் ஏஎறு
பனிமலர்ப் பொய்கைப் பகல்செல மறுகி
மடக்கண் எருமை மாண்நாகு தழீஇ,
படப்பை நண்ணிப், பழனத்து அல்கும்
கலிமகிழ் ஊரன் ஒலிமணி நெடுந்தேர் .146-5
ஒள்ளிமழை மகளிர் சேரிப், பல்நாள்
இயங்கல் ஆனாது ஆயின்; வயங்கிழை
யார்கொல் அனியள் தானே- எம்போல்
மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி
வளிபொரத் துயல்வரும் தளிபொழி மலரின் .146-10
கண்பனி ஆகத்து உறைப்பக், கண் பசந்து
ஆயமும் அயலும் மருளத்,
தாயோம்பு ஆய்நலம் வேண்டா தோளோ? .146-13
ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த
வேங்கை வெறித்தழை வேறுவகுத் தன்னை
ஊன்பொதி அவிழாக் கோட்டுகிர்க் குருளை
மூன்றுடன் ஈன்ற முடங்கர் நிழத்த,
துறுகல் விடரளைப் பிணவுபசி கூர்ந்தெனப், .147-5
பொறிகிளர் உழுவைப் போழ்வாய் ஏற்றை
அறுகோட்டு உழைமான் ஆண்குரல் ஓர்க்கும்
நெறிபடு கவலை நிரம்பா நீளிடை,
வெள்ளி வீதியைப் போல நன்றும்
செலவு அயர்ந் திசினால் யானே; பல புலந்து, .147-10
உண்ணா உயக்கமொடு உயிர்செலச் சா அய்,
தோளும் தொல்கவின் தொலைய, நாளும்
பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி,
மருந்துபிறிது இன்மையின், இருந்துவினை இலனே! .147-14
பனைத்திரள் அன்ன பருஏர் எறுழ்த் தடக்கைச்
கொலைச்சினந் தவிரா மதனுடை முன்பின்,
வண்டுபடு கடாஅத்து, உயர்மருப்பு யானை
தண்கமழ் சிலம்பின் மரம்படத் தொலைச்சி:
உறுபுலி உரறக் குத்தி; விறல்கடிந்து, .148-5
சிறுதினைப் பெரும்புனம் வவ்வும் நாட!
கடும்பரிக் குதிரை ஆஅய் எயினன்
நெடுந்தேர் மிஞிலியொடு பொருது, களம் பட்டெனக்
காணிய செல்லாக் கூகை நாணிக்
கடும்பகல் வழங்கா தாஅங்கு, இடும்பை .148-10
பெரிதால் அம்ம இவட்கே: அதனால்
மாலை வருதல் வேண்டும் - சோலை
முளைமேய் பெருங்களிறு வழங்கும்
மலைமுதல் அடுக்கத்த சிறுகல் ஆறே. .148-14
சிறுபுன் சிதலை சேண்முயன்று எடுத்த;
நெடுஞ்செம் புற்றத்து ஒடுங்கிரை முனையின்,
புல்லரை இருப்பைத் தொள்ளை வான்பூப்,
பெருங்கை எண்கின் இருங்கிளை கவரும்
அத்த நீள்இடைப் போகி, நன்றும் .149-5
அரிதுசெய் விழுப்பொருள் எளிதினிற் பெறினும்
வாரேன்- வாழி, என் நெஞ்சே!- சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க,
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும் .149-10
வளம்கெழு முசிறி ஆர்ப்பெழ வளஇ,
அருஞ்சமம் கடந்து படிமம் வவ்விய
நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்
கொடிநுடங்கு மறுகின் கூடற் குடாஅது,
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயரிய, .149-15
ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து,
வண்டுபட நீடிய குண்டுசுனை நீலத்து
எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரிமதர் மழைக்கண் தெண்பனி கொளவே. .149-19
பின்னுவிட நெறித்த கூந்தலும், பொன்னென
ஆகத்து அரும்பிய சுணங்கும், வம்புவிடக்
கண்ணுருத்து எழுதரு முலையும் நோக்கி,
'எல்லினை பெரிது' எனப் பன்மாண் கூறிப்
பெருந்தோள் அடைய முயங்கி, நீடு நினைந்து, .150-5
அருங்கடிப் படுத்தனள் யாயே; கடுஞ்செலல்
வாட்சுறா வழங்கும் வளைமேய் பெருந்துறைக்,
கனைத்த நெய்தற் கண்போன் மாமலர்
நனைத்த செருந்திப் போதுவாய் அவிழ,
மாலை மணியிதழ் கூம்பக் காலைக் .150-10
கள்நாறு காவியொடு தண்ணென் மலருங்
கழியுங், கானலுங் காண்தொறும் பலபுலந்து;
வாரார் கொல்? எனப் பருவரும்-
தார் ஆர் மார்ப! நீ தணந்த ஞான்றே! .150-14
'தம்நயந்து உறைவோர்த் தாங்கித் தாம்நயந்து
இன்னமர் கேளிரொடு ஏமுறக் கெழீஇ,
நகுதல் ஆற்றார் நல்கூர்ந் தோர்!' என,
மிகுபொருள் நினையும் நெஞ்சமொடு அருள்பிறிது
ஆபமன் - வாழி, தோழி ! கால் விரிபு .151-5
உறுவளி எறிதொறும் கலங்கிய பொறிவரிக்
கலைமான் தலையின் முதன்முதற் கவர்த்த
கோடலம் கவட்ட குறுங்கால் உழுஞ்சில்
தாறுசினை விளைந்த நெற்றம், ஆடுமகள்
அரிக்கோற் பறையின், ஐயென ஒலிக்கும் .151-10
பதுக்கை ஆய செதுக்கை நீழற்,
கள்ளி முள்ளரைப் பொருந்திச் செல்லுநர்க்கு
உறுவது கூறுஞ், சிறுசெந் நாவின்
மணிஓர்த் தன்ன தெண்குரல்
கணிவாய்ப் பல்லிய காடிறந் தோரே! .151-15
நெஞ்சுநடுங்கு அரும்படர் தீர வந்து,
குன்றுழை நண்ணிய சீறூர் ஆங்கண்
செலீஇய பெயர்வோள் வணர்சுரி ஐம்பால்-
நுண்கோல் அகவுநர்ப் புரந்த பேரிசைச்
சினங்கெழு தானைத் தித்தன் வெளியன் .152-5
இரங்குநீர்ப் பரப்பின் கானலம் பெருந்துறைத்,
தனம்தரு நன்கலம் சிதையத் தாக்கும்
சிறுவெள் இறவின் குப்பை அன்ன
உறுபகை தரூஉம் மொய்ம்மூசு பிண்டன்
முனைமுரண் உடையக் கடந்த வென்வேல், .152-10
இசைநல் ஈகைக் களிறுவீசு வண்மகிழ்ப்
பாரத்துத் தலைவன், ஆர நன்னன்;
ஏழில் நெடுவரைப் பாழிச் சிலம்பிற்
களிமயிற் கலாவத் தன்ன தோளே-
வல்வில் இளையர் பெருமகன்; நள்ளி .152-15
சோலை அடுக்கத்துச் சுரும்புஉண விரிந்த
கடவுட் காந்தள் உள்ளும் பலவுடன்
இறும்பூது கஞலிய ஆய்மலர் நாறி-
வல்லினும் வல்லார் ஆயினும் சென்றோர்க்குச்
சாலவிழ் நெடுங்குழி நிறைய வீசும், .152-20
மாஅல் யானை ஆஅய் கானத்துத்
தலையாற்று நிலைஇய சேயுயர் பிறங்கல்
வேயமைக் கண்ணிடை புரைஇச்
சேய ஆயினும், நடுங்குதுயர் தருமே. .152-24
நோகோ யானே; நோதகும் உள்ளம்;
அம்தீங் கிளவி ஆயமொடு கெழீஇப்,
பந்துவழிப் படர்குவள் ஆயினும், நொந்துநனி
வெம்புமன், அளியள் தானே - இனியே,
வன்க ணாளன் மார்புஉற வளஇ, .153-5
இன்சொற் பிணிப்ப நம்பி, நம்கண்
உறுதரு விழுமம் உள்ளாள், ஒய்யெனத்
தெறுகதிர் உலைஇய வேனில் வெங்காட்டு,
உறுவளி ஒலிகழைக் கண்ணுறுபு தீண்டலின்
பொறிபிதிர்பு எடுத்த பொங்கெழு கூர் எரிப் .153-10
பைதறு சிமையப் பயம்நீங்கு ஆர்இடை
நல் அடிக்கு அமைந்த அல்ல; மெல்லியல்
வல்லுநள் கொல்லோ தானே- எல்லி
ஓங்குவரை அடுக்கத்து உயர்ந்த சென்னி
மீனொடு பொலிந்த வானின் தோன்றித் .153-15
தேம்பாய்ந்து ஆர்க்குந் தெரியிணர்க் கோங்கின்
காலுறக் கழன்ற கள்கமழ் புதுமலர்
கைவிடு சுடரின் தோன்றும்
மைபடு மாமலை விலங்கிய சுரனே? .153-19
படுமழை பொழிந்த பயமிகு புறவின்
நெடுநீர் அவல பகுவாய்த் தேரை
சிறுபல் இயத்தின் நெடுநெறிக் கறங்கக்
குறும்புதற் பிடவின் நெடுங்கால் அலரி
செந்நில மருங்கின் நுண்அயிர் வரிப்ப, .154-5
வெஞ்சின அரவின் பைஅணந் தன்ன
தண்கமழ் கோடல் தாதுபிணி அவிழத்,
திரிமருப்பு இரலை தெள்அறல் பருகிக்
காமர் துணையொடு ஏமுற வதியக்,
காடுகவின் பெற்ற தண்பதப் பெருவழி .154-10
ஓடுபரி மெலியாக் கொய்சுவற் புரவித்
தாள்தாழ் தார்மணி தயங்குபு இயம்ப
ஊர்மதி - வலவ! தேரே- சீர்மிகுபு
நம்வயிற் புரிந்த கொள்கை
அம்மா அரிவையைத் துன்னுகம், விரைந்தே. .154-15
'அறன்கடைப் படாஅ வாழ்க்கையும், என்றும்
பிறன்கடைச் செலாஅச் செல்வமும், இரண்டும்
பொருளின் ஆகும், புனையிழை!' என்றுநம்
இருளேர் ஐம்பால் நீவி யோரே-
நோய்நாம் உழக்குவம் ஆயினும், தாந்தம் .155-5
செய்வினை முடிக்க தோழி ! பல்வயின்
பயநிரை சேர்ந்த பாண்நாட்டு ஆங்கண்
நெடுவிளிக் கோவலர் கூவல் தோண்டிய
கொடுவாய்ப் பத்தல் வார்ந்துகு சிறுகுழி,
நீர்காய் வருத்தமொடு சேர்விடம் பெறாது .155-10
பெருங்களிறு மிதித்த அடியகத்து, இரும்புலி
ஒதுங்குவன கழிந்த செதும்பல் ஈர்வழி,
செயிர்தீர் நாவின் வயிரியர் பின்றை
மண்ஆர் முழவின் கண்ணகத்து அசைத்த
விரலூன்று வடுவில் தோன்றும் .155-15
மரல்வாடு மருங்கின் மலைஇறந் தோரே. .155-16
முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டும்
மூட்டுறு கவரி தூக்கி யன்ன
செழுஞ்செய் நெல்லின் சேயரிப் புனிற்றுக் கதிர்
மூதா தின்றல் அஞ்சிக், காவலர்
பாகல் ஆய்கொடிப் பகன்றையொடு பரீஇக் .156-5
காஞ்சியின் அகத்துக், கரும்பருத்தி, யாக்கும்
தீம்புனல் ஊர! திறவதாகக்
குவளை உண்கண் இவளும் யானும்
கழனி ஆம்பல் முழுநெறிப் பைந்தழை
காயா ஞாயிற் றாகத், தலைப்பெய, .156-10
'பொய்தல் ஆடிப் பொலிக!' என வந்து,
நின்நகாப் பிழைத்த தவறே - பெரும!
கள்ளுங் கண்ணியும் கையுறை யாக
நிலைக்கோட்டு வெள்ளை நாள்செவிக் கிடாஅய்
நிலைத்துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சித், .156-15
தணிமருங்கு அறியாள், யாய்அழ,
மணிமருள் மேனி பொன்னிறம் கொளலே? .156-17
அரியற் பெண்டிர் அலகுற் கொண்ட
பகுவாய்ப் பாளைக் குவிமுலை சுரந்த
வரிநிறக் கலுழி ஆர மாந்திச்
செருவேட்டுச், சிலைக்கும் செங்கண் ஆடவர்,
வில்லிட வீழ்ந்தோர் பதுக்கைக் கோங்கின் .157-5
எல்லி மலர்ந்த பைங்கொடி அதிரல்
பெரும்புலர் வைகறை அரும்பொடு வாங்கிக்
கான யானை கவளங் கொள்ளும்
அஞ்சுவரு நெறியிடைத் தமியர் சென்மார்
நெஞ்சுண மொழிப மன்னே - தோழி .157-10
முனைபுலம் பெயர்த்த புல்லென் மன்றத்துப்
பெயலுற நெகிழ்ந்து, வெயிலுறச் சாஅய்
வினையழி பாவையின் உலறி,
மனைஒழிந் திருத்தல் வல்லு வோர்க்கே! .157-14
'உருமுரறு கருவிய பெருமழை தலைஇப்
பெயல்ஆன்று அவிந்த தூங்கிருள் நடுநாள்,
மின்னு நிமிர்ந்தன்ன கனங்குழை இமைப்பப்,
பின்னுவிடு நெறியிற் கிளைஇய கூந்தலள்,
வரைஇழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி, .158-5
மிடைஊர்பு இழியக்கண்டனென், இவள் என
அலையல் - வாழிவேண்டு அன்னை!- நம் படப்பைச்
சூருடைச் சிலம்பில், சுடர்ப்பூ வேய்ந்து
தாம்வேண்டு உருவின் அணங்குமார் வருமே;
நனவின் வாயே போலத் துஞ்சுநர்க் .158-10
கனவாண்டு மருட்டலும் உண்டே: இவள்தான்
சுடரின்று தமியளும் பனிக்கும்: வெருவர
மன்ற மராஅத்த கூகை குழறினும்
நெஞ்சழிந்து அரணஞ் சேரும்: அதன்தலைப்
புலிக்கணத் தன்ன நாய்தொடர் விட்டு, .158-15
முருகன் அன்ன சீற்றத்துக் கடுந்திறல்
எந்தையும் இல்லன் ஆக,
அஞ்சுவள் அல்லளோ, இவளிது செயலே! .158-18
தெண்கழி விளைந்த வெண்கல் உப்பின்
கொள்ளை சாற்றிய கொடுநுக ஒழுகை
உரறுடைச் சுவல பகடுபல பரப்பி
உமண் உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின்
வடியுறு பகழிக் கொடுவில் ஆடவர் .159-5
அணங்குடை நோன்சிலை வணங்க வாங்கிப்
பல்ஆன் நெடுநிரை தழீஇக் கல்லென
அருமுனை அலைத்த பெரும்புகல் வலத்தர்,
கனைகுரற் கடுந்துடிப் பாணி தூங்கி,
உவலைக் கண்ணியர் ஊன்புழுக்கு அயரும் .159-10
கவலை, 'காதலர் இறந்தனர்' என, நனி
அவலம் கொள்ளன்மா காதல் அம் தோழி!
விசும்பின் நல்லேறு சிலைக்குஞ் சேட்சிமை
நறும்பூஞ் சாரற் குறும்பொறைக் குணாஅது
வில்கெழு தடக்கை வெல்போர் வானவன் .159-15
மிஞிறுமூசு கவுள சிறுகண் யானைத்
தொடியுடைத் தடமறுப்பு ஒடிய நூறிக்
கொடுமுடி காக்குங் குரூஉக்கண் நெடுமதில்
சேண்விளங்கு சிறப்பின் - ஆமூர் எய்தினும்,
ஆண்டமைந்து உறையுநர் அல்லர், நின் .159-20
பூண்தாங்கு ஆகம் பொருந்துதன் மறந்தே. .159-21
ஒடுங்கீர் ஓதி நினக்கும் அற்றே?
நடுங்கின்று, அளித்தென் நிறையில் நெஞ்சம்
அடும்புகொடி சிதைய வாங்கிக் கொடுங்கழிக்
குப்பை வெண்மணற் பக்கம் சேர்த்தி,
நிறைச்சூல் யாமை மறைத்து ஈன்று புதைத்த .160-5
கோட்டுவட்டு உருவின் புலவுநாறு முட்டைப்
பார்புஇடன் ஆகும் அளவை, பகுவாய்க்
கணவன் ஓம்பும் கானலஞ் சேர்ப்பன்
முள்ளுறின் சிறத்தல் அஞ்சி, மெல்ல
வாவுஉடை மையின் வள்பிற் காட்டி, .160-10
ஏத்தொழில் நவின்ற எழில்நடைப் புரவி
செழுநீர்த் தண்கழி நீந்தலின், ஆழி
நுதிமுகங் குறைந்த பொதிமுகிழ் நெய்தல்,
பாம்புஉயர் தலையின் சாம்புவன நிவப்ப,
இரவந் தன்றால் திண்தேர்; கரவாது .160-15
ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல்வாய் .160-16
அரவச் சீறூர் காணப்
பகல்வந் தன்றல், பாய்பரி சிறந்தே. .160-18
வினைவயிற் பிரிதல் யாவது?- 'வணர்சுரி
வடியாப் பித்தை வன்கண், ஆடவர்
அடியமை பகழி ஆர வாங்கி;
வம்பலர்ச் செகுத்த அஞ்சுவரு கவலைப்
படுமுடை நசைஇய வாழ்க்கைச் செஞ்செவி .161-5
எருவைச் சேவல் ஈண்டுகிளை பயிரும்
வெருவரு கானம் நீந்தி, பொருள் புரிந்து
இறப்ப எண்ணினர்' என்பது சிறப்பக்
கேட்டனள் கொல்லோ தானே? தோழ் தாழ்பு
சுரும்பு உண ஒலிவரும் இரும்பல் கூந்தல், .161-10
அம்மா மேனி, ஆயிழைக் குறுமகள்
சுணங்கு சூழ் ஆகத்து அணங்குஎன உருத்த
நல்வரல் இளமுலை நனைய;
பல்லிதழ் உண்கண் பரந்தன பனியே. .161-14
கொளக்குறை படாஅக் கோடுவளர் குட்டத்து
அளப்பு அரிது ஆகிய குவைஇருந் தோன்றல,
கடல்கண் டன்ன மாக விசும்பின்
அழற்கொடி அன்ன மின்னுவசிபு நுடங்கக்
கடிதுஇடி உருமொடு கதழுறை சிதறி .162-5
விளிவுஇடன் அறியா வான்உமிழ் நடுநாள்
அருங்கடிக் காவலர் இகழ்பதம் நோக்கிப்,
பனிமயங்கு அசைவளி அலைப்பத், தந்தை
நெடுநகர் ஒருசிறை நின்றனென் ஆக;
அறல்என அவிரும் கூந்தல் மலர்என .162-10
வாண்முகத்து அலமரும் மாஇதழ் மழைக்கண்,
முகைநிரைத் தன்ன மாவீழ் வெண்பல்;
நகைமாண்டு இலங்கும் நலம்கெழு துவர்வாய்க்,
கோல்அமை விழுத்தொடி விளங்க வீசிக்,
கால்உறு தளிரின் நடுங்கி ஆனாது, .162-15
நோய்அசா வீட முயங்கினன் - வாய்மொழி
நல்லிசை தரூஉம் இரவலர்க்கு உள்ளிய
நசைபிழைப்பு அறியாக் கழல்தொடி அதிகன்
கோள்அறவு அறியாப் பயம்கெழு பலவின்
வேங்கை சேர்ந்த வெற்பகம் பொலிய, .162-20
வில்கெழு தானைப் பசும்பூண் பாண்டியன்
களிறணி வெல்கொடி கடுப்பக் காண்வர
ஒளிறுவன இழிதரும் உயர்ந்துதோன்று அருவி
நேர்கொள் நெடுவரை கவா அன்
சூரா மகளிரிற் பெறற்குஅரி யோளே. .162-25
விண்அதிர்பு தலைஇய விரவுமலர் குழையத்
தண்மழை பொழிந்த தாழ்பெயற் கடைநாள்,
எமியம் ஆகத் துனிஉளம் கூரச்
சென்றோர் உள்ளிச் சில்வளை நெகிழப்
பெருநகை உள்ளமொடு வருநசை நோக்கி .163-5
விளியும் எவ்வமொடு 'அளியள்' என்னாது
களிறுஉயிர்த் தன்ன கண்அழி துவலை
முளரி கரியும் முன்பனிப் பானாள்,
குன்றுநெகிழ்பு அன்ன குளிர்கொள் வாடை!
எனக்கே வந்தனை போறி ! புனற்கால் .163-10
அயிர்இடு குப்பையின் நெஞ்சு நெகிழ்ந்து அவிழக்,
கொடியோர் சென்ற தேஎத்து, மடியாது
இனையை ஆகிச் செல்மதி;
வினைவிதுப் புறுநர் உள்ளலும் உண்டே! .163-14
கதிர்கை யாக வாங்கி ஞாயிறு
பைதறத் தெறுதலின் பயங்கரந்து மாறி,
விடுவாய்ப் பட்ட வியன்கண் மாநிலம்
காடுகவின் எதிரக் கனைபெயல் பொழிதலின்
பொறிவரி இனவண்டு ஆர்ப்பப் பலவுடன் .164-5
நறுவீ முல்லையொடு தோன்றி தோன்ற'
வெறியேன் றன்றே வீகமழ் கானம்-
'எவன்கொல் மற்று அவர் நிலை?' என மயங்கி,
இகுபனி உறைக்குங் கண்ணொடு இனைபு ஆங்கு
இன்னாது உறைவி தொன்னலம் பெறூஉம் .164-10
இதுநற் காலம்; கண்டிசின் - பகைவர்
மதின்முகம் முருக்கிய தொடிசிதை மருப்பின்;
கந்துகால் ஒசிக்கும் யானை;
வெஞ்சின வேந்தன் வினைவிடப் பெறினே! .164-14
கயந்தலை மடப்பிடி பயம்பில் பட்டெனக்
களிறுவிளிப் படுத்த கம்பலை வெரீஇ,
ஒய்யென எந்த செவ்வாய்க் குழவி
தாதுஎரு மறுகின் மூதூர் ஆங்கண்
எருமை நல் ஆன் பெறுமுலை மாந்தும் .165-5
நாடுபல இறந்த நன்ன ராட்டிக்கு
ஆயமும் அணிஇழந்து அழுங்கின்று! தாயும்
'இன்தோள் தாராய், இறீஇயர்என் உயிர்! என,
கண்ணும் நுதலும் நீவித், தண்ணெனத்,
தடவுநிலை நொச்சி வரிநிழல் அசைஇத், .165-10
தாழிக் குவளை வாடுமலர் சூட்டித்,
'தருமணற் கிடந்த பாவைஎன்
அருமக ளே' என முயங்கினள் அழுமே! .165-13
'நல்மரங் குழீஇய நனைமுதிர் சாடி
பல்நாள் அரித்த கோஒய் உடைப்பின்,
மயங்குமழைத் துவலையின் மறுகுடன் பனிக்கும்
பழம்பல் நெல்லின் வேளூர் வாயில்,
நறுவிரை தெளித்த நாறிணர் மாலைப், .166-5
பொறிவரி இனவண்டு ஊதல கழியும்
உயர்பலி பெறூஉம் உருகெழு தெய்வம்,
புனைஇருங் கதுப்பின் நீகடுத் தோள்வயின்
அனையேன் ஆயின், அணங்குக, என்!' என
மனையோட் தேற்றும் மகிழ்நன் ஆயின், .166-10
யார்கொல்- வாழி, தோழி !- நெருநல்
தார்பூண் களிற்றின் தலைப்புணை தழீஇ,
வதுவை ஈர்அணிப் பொலிந்து, நம்மொடு,
புதுவது வந்த காவிரிக்
கோடுதோய் மலிர்நிறை, ஆடி யோரே? .166-15
வயங்குமணி பொருத வகையமை வனப்பின்
பசுங்காழ் அல்குல் மாஅயோ ளொடு
வினைவனப்பு எய்திய புனைபூஞ் சேக்கை,
விண்பொரு நெடுநகர்த் தங்கி, இன்றே
இனிதுடன் கழிந்தன்று மன்னே; நாளைப் .167-5
பொருந்தாக் கண்ணேம் புலம்வந்து உறுதரச்
சேக்குவம் கொல்லோ, நெஞ்சே! சாத்துஎறிந்து
அதர்கூட் டுண்ணும் அணங்குடைப் பகழிக்
கொடுவில் ஆடவர் படுபகை வெரீஇ
ஊர்எழுந்து உலறிய பீர்எழு முதுபாழ் .167-10
முருங்கை மேய்ந்த பெருங்கை யானை
வெரிந்ஓங்கு சிறுபுறம் உரிஞ ஒல்கி
இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென,
மணிப்புறாத் துறந்த மரம்சோர் மாடத்து
எழுதுஅணி கடவுள் போகலின், புல்லென்று .167-15
ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன் திணைப்
பால்நாய் துள்ளிய பறைக்கட் சிற்றில்,
குயில்காழ் சிதைய மண்டி, அயில்வாய்க்
கூர்முகச் சிதலை வேய்ந்த
போர்மடி நல்இறைப் பொதியி லானே! .167-20
யாமம் நும்மொடு கழிப்பி, நோய்மிக,
பனிவார் கண்ணேம் வைகுதும், இனியே:
ஆன்றல் வேண்டும் வான்தோய் வெற்ப!
பல்ஆன் குன்றில் படுநிழல் சேர்ந்த
நல்ஆன் பரப்பின் குழுமூர் ஆங்கண்- .168-5
கொடைக்கடன் ஏன்ற கோடா நெஞ்சின்
உதியன் அட்டில் போல ஒலிஎழுந்து,
அருவி ஆர்க்கும் பெருவரைச் சிலம்பின்
ஈன்றணி இரும்பிடி தழீஇக் களிறு தன்
தூங்குநடைக் குழவி துயில்புறங் காப்ப, .168-10
ஒடுங்குஅளை புலம்பப் போகிக், கடுங்கண்
வாள்வரி வயப்புலி நன்முழை உரற,
கானவர் மடிந்த கங்குல்,
மான்அதர்ச் சிறுநெறி வருதல், நீயே? .168-14
மரம்தலை கரிந்து நிலம்பயம் வாட,
அலங்குகதிர் வேய்ந்த அழல்திகழ் புனந்தலைப்,
புலிதொலைத்து உண்ட பெருங்களிற்று ஒழிஊன்
கலிகெழு மறவர் காழ்க்கோத்து ஒழிந்ததை
ஞெலிகோற் சிறுதீ மாட்டி, ஒலிதிரைக் .169-5
கடல்விளை அமிழ்தின் கணஞ்சால் உமணர்
சுனைகொள் தீநீர்ச் சோற்றுஉலைக் கூட்டும்
சுரம்பல கடந்த நம்வயின் படர்ந்து: நனி
பசலை பாய்ந்த மேனியள், நெடிது நினைந்து
செல்கதிர் மழுகிய புலம்புகொள் மாலை .169-10
மெல்விரல் சேர்த்திய நுதலள், மல்கிக்
கயலுமிழ் நீரின் கண்பனி வாரப்,
பெருந்தோள் நெகிழ்ந்த செல்லலொடு
வருந்துமால், அளியள் திருந்திழை தானே! .169-14
கானலும் கழறாது: கழியும் கூறாது:
தேன்இமிர் நறுமலர்ப் புன்னையும் மொழியாது:
ஒருநின் அல்லது பிறிதுயாதும் இலனே:
இருங்கழி மலர்ந்த கண்போல் நெய்தல்
கமழ்இதழ் நாற்றம் அமிழ்துஎன நசைஇத்: .170-5
தண்தாது ஊதிய வண்டினம் களிசிறந்து,
பறைஇய தளரும் துறைவனை, நீயே,
சொல்லல் வேண்டுமால் - அலவ! பல்கால்
கைதையம் படுசினை எவ்வமொடு அசாஅம்
கடற்சிறு காக்கை காமர் பெடையொடு .170-10
கோட்டுமீன் வழங்கும் வேட்டமடி பரப்பின்
வெள்இறாக் கனவும் நள்ளென் யாமத்து,
'நின்னுறு விழுமம் களைந்தோள்
தன்னுறு விழுமம் நீந்துமோ!' எனவோ! .170-14
'நுதலும் நுண்பசப்பு இவரும், தோளும்
அகன்மலை இறும்பின் ஆய்ந்துகொண்டு அறுத்த
பணைஎழில் அழிய வாடும்; நாளும்
நினைவல் மாதுஅவர் பண்பு' என்று ஓவாது
இனையல் - வாழி, தோழி ! புணர்வர் - .171-5
இலங்குகோல் ஆய்தொடி நெகிழப், பொருள்புரிந்து
அலந்தலை ஞெமையத்து அதர்அடைந் திருந்த
மால்வரைச் சீறூர் மருள்பன் மாக்கள்
கோள்வல் ஏற்றை ஓசை ஓர்மார்,
திருத்திக் கொண்ட அம்பினர், நோன்சிலை .171-10
எருத்தத்து இரீஇ, இடந்தொறும் படர்தலின்
கீழ்ப்படு தாரம் உண்ணா, மேற்சினைப்
பழம்போற் சேற்ற தீம்புழல் உணீஇய,
கருங்கோட்டு இருப்பை ஊரும்
பெருங்கை எண்கின் சுரன்இறந் தோரே! .171-15
வாரணம் உரறும் நீர்திகழ் சிலம்பில்
பிரசமொடு விரைஇய வயங்குவெள் அருவி
இன்இசை இமிழ்இயம் கடுப்ப, இம்மெனக்
கல்முகை விடர்அகம் சிலம்ப, வீழும்
காம்புதலை மணந்த ஓங்குமலைச் சாரல், .172-5
இரும்புவடித் தன்ன கருங்கைக் கானவன்
விரிமலர் மராஅம் பொருந்திக், கோல்தெரிந்து,
வரிநுதல் யானை அருநிறத்து அழுத்தி,
இகல்இடு முன்பின் வெண்கோடு கொண்டுதன்
புல்வேய் குரம்பை புலர ஊன்றி, .172-10
முன்றில் நீடிய முழவுஉறழ் பலவின்
பிழிமகிழ் உவகையன், கிளையொடு கலிசிறந்து,
சாந்த ஞெகிழியின் ஊன்புழுக்கு அயரும்
குன்ற நாட! நீ அன்பிலை ஆகுதல்
அறியேன் யான்; அஃது அறிந்தனென் ஆயின்- .172-15
அணி இழை, உண்கண், ஆய்இதழ்க் குறுமகள்
மணிஏர் மாண்நலம் சிதையப்,
பொன்னேர் பசலை பாவின்று மன்னே! .172-18
'அறம் தலைப்பிரியாது ஒழுகலும், சிறந்த
கேளிர் கேடுபல ஊன்றலும், நாளும்
வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல்' எனச்
செய்வினை புரிந்த நெஞ்சினர், 'நறுநுதல்
மைஈர் ஓதி ! அரும்படர் உழத்தல் .173-5
சிலநாள் தாங்கல் வேண்டும்' என்று, நின்
நல்மாண் எல்வளை திருத்தினர் ஆயின்,
வருவர் - வாழி, தோழி !- பலபுரி
வார்கயிற்று ஒழுகை நோன்சுவற் கொளீஇ,
பகடுதுறை ஏற்றத்து உமண்விளி வெரீஇ, .173-10
உழைமான் அம்பிணை இனன்இரிந்து ஓடக்,
காடுகவின் அழிய உறைஇக், கோடை
நின்றுதின விளிந்த அம்புணை, நெடுவேய்க்
கண்விடத் தெறிக்கும் மண்ணா முத்தம்
கழங்குஉறழ் தோன்றல, பழங்குழித் தாஅம் .173-15
இன்களி நறவின் இயல்தேர் நன்னன்
விண்பொரு நெடுவரைக் கவாஅன்
பொன்படு மருங்கின் மலைஇறந் தோரே. .173-18
'இருபெரு வேந்தர் மாறுகொள் வியன்களத்து,
ஒருபடை கொண்டு, வருபடை பெயர்க்கும்
செல்வம் உடையோர்க்கு நின்றன்று விறல்' எனப்,
பூக்கோள் ஏய தண்ணுமை விலக்கிச்
செல்வேம் ஆதல் அறியாள், முல்லை .174-5
நேர்கால் முதுகொடி குழைப்ப, நீர் சொரிந்து,
காலை வானத்துக் கடுங்குரற் கொண்மூ
முழங்குதொறும் கையற்று, ஒடுங்கி, நப் புலந்து,
பழங்கண் கொண்ட பசலை மேனியள்
யாங்குஆ குவள் கொல் தானே - வேங்கை .174-10
ஊழுறு நறுவீ கடுப்பக் கேழ்கொள,
ஆகத்து அரும்பிய மாசுஅறு சுணங்கினள்,
நன்மணல் வியலிடை நடந்த
சின்மெல் ஒதுக்கின், மாஅ யோளே? .174-14
வீங்கு விளிம்பு உரீஇய விசைஅமை நோன்சிலை
வாங்கு தொடை பிழையா வன்கண் ஆடவர்
விடுதொறும் விளிக்கும் செவ்வாய் வாளி
ஆறுசெல் வம்பலர் உயிர்செலப் பெயர்ப்பின்,
பாறுகிளை பயிர்ந்து படுமுடை கவரும் .175-5
வெஞ்சுரம் இறந்த காதலர் நெஞ்சுஉணர
அரிய வஞ்சினம் சொல்லியும் பல்மாண்
தெரிவளை முன்கை பற்றியும், 'வினைமுடித்து
வருதும்' என்றனர் அன்றே - தோழி !-
கால்இயல் நெடுந்தேர்க் கைவண் செழியன் .175-10
ஆலங் கானத்து அமர்கடந்து உயர்த்த
வேலினும் பல்ஊழ் மின்னி, முரசு என
மாஇரு விசும்பிற் கடிஇடி பயிற்றி,
நேர்கதிர் நிறைத்த நேமியம் செல்வன்
போர்அடங்கு அகலம் பொருந்திய தார்போல் .175-15
திருவில் தேஎத்துக் குலைஇ, உருகெழு
மண்பயம் பூப்பப் பாஅய்த்,
தண்பெயல் எழிலி தாழ்ந்த போழ்தே! .175-18
கடல்கண் டன்ன கண்அகன் பரப்பின்
நிலம்பக வீழ்ந்த வேர்முதிர் கிழங்கின்
கழைகண் டன்ன தூம்புடைத் திரள்கால்,
களிற்றுச்செவி அன்ன பாசடை மருங்கில்,
கழுநிவந் தன்ன கொழுமுகை இடைஇடை .176-5
முறுவல் முகத்தின் பன்மலர் தயங்கப்,
பூத்த தாமரைப் புள் இமிழ் பழனத்து,
வேப்புநனை அன்ன நெடுங்கண் நீர்ஞெண்டு
இரைதேர் வெண்குருகு அஞ்சி, அயலது
ஒலித்த பகன்றை இருஞ்சேற்று அள்ளல் .176-10
திதலையின் வரிப்ப ஓடி, விரைந்து தன்
நீர்மலி மண்அளைச் செறியும் ஊர!
மனைநகு வயலை மரன்இவர் கொழுங்கொடி
அரிமலர் ஆம்பலொடு ஆர்தழை தைஇ,
விழவுஆடு மகளிரொடு தழூஉ அணிப் பொலிந்து, .176-15
மலர்ஏர் உண்கண் மாண்இழை முன்கைக்
குறுந்தொடி துடக்கிய நெடுந்தொடர் விடுத்தது
உடன்றனள் போலும், நின் காதலி?' எம்போல்
புல்லுளைக் குடுமிப் புதல்வற் பயந்து,
நெல்லுடை நெடுநகர் நின்னின்று உறைய, .176-20
என்ன கடத்தளோ, மற்றே? தன் முகத்து
எழுதெழில் சிதைய அழுதனள் ஏங்கி,
அடித்தென உருத்த தித்திப் பல்ஊழ்
நொடித்தெனச் சிவந்த மெல்விரல் திருகுபு,
கூர்நுனை மழுகிய எயிற்றள் .176-25
ஊர்முழுது நுவலும்நிற் காணிய சென்மே. .176-26
'தொன்னலம் சிதையச் சாஅய், அல்கலும்
இன்னும் வாரார்: இனி எவன் செய்கு? எனப்,
பெரும்புலம் புறுதல் ஓம்புமதி - சிறுகண்
இரும்பிடித் தடக்கை மான, நெய்அருந்து
ஒருங்குபிணித்து இயன்ற நெறிகொள் ஐம்பால் .177-5
தேம்கமழ் வெறிமலர் பெய்ம்மார், காண்பின்
கழைஅமல் சிலம்பின் வழைதலை வாடக்
கதிர்கதம் கற்ற ஏகல் நெறியிடைப்,
பைங்கொடிப் பாகற் செங்கனி நசைஇக்,
கான மஞ்ஞைக் கமஞ்சூல் மாப்பெடை .177-10
அயிரியாற்று அடைகரை வயிரின் நரலும்
காடுஇறந்து அகன்றோர் நீடினர் ஆயினும்
வல்லே வருவர் போலும் - வென்வேல்
இலைநிறம் பெயர ஓச்சி, மாற்றோர்
மலைமருள் யானை மண்டுஅமர் ஒழித்த .177-15
கழற்கால் பண்ணன் காவிரி வடவயின்
நிழற்கயம் தழீஇய நெடுங்கால் மாவின்
தளிர்ஏர் ஆகம் தகைபெற முகைந்த
அணங்குடை வனமுலைத் தாஅய நின்
சுணங்கிடை வரித்த தொய்யிலை நினைந்தே. .177-20
வயிரத் தன்ன வைஏந்து மருப்பின்,
வெதிர்வேர் அன்ன பரூஉமயிர்ப் பன்றி
பறைக்கண் அன்ன நிறைச்சுனை பருகி,
நீலத் தன்ன அகல்இலைச் சேம்பின்
பிண்டம் அன்ன கொழுங்கிழங்கு மாந்தி, .178-5
பிடிமடிந் தன்ன கல்மிசை ஊழ் இழிபு,
யாறுசேர்ந் தன்ன ஊறுநீர்ப் படாஅர்ப்
பைம்புதல் நளிசினைக் குருகுஇருந் தன்ன,
வண்பிணி அவிழ்ந்த வெண்கூ தாளத்து
அலங்குகுலை அலரி தீண்டித், தாது உக, .178-10
பொன்உரை கட்டளை கடுப்பக் காண்வரக்,
கிளைஅமல் சிறுதினை விளைகுரல் மேய்ந்து
கண்இனிது படுக்கும் நன்மலை நாடனொடு
உணர்ந்தனை புணர்ந்த நீயும், நின்தோட்
பணைக்கவின் அழியாது துணைப்புணர்ந்து, என்றும், .178-15
தவல்இல் உலகத்து உறைஇயரோ - தோழி -
எல்லையும் இரவும் என்னாது, கல்லெனக்
கொண்டல் வான்மழை பொழிந்த வைகறைத்
தண்பனி அற்சிரம் தமியோர்க்கு அரிது' எனக்,
கனவிலும் பிரிவு அறியலனே: அதன்தலை .178-20
முன்தான் கண்ட ஞான்றினும்
பின்பெரிது அளிக்கும், தன் பண்பினானே. .178-22
விண்தோய் சிமைய விறல்வரைக் கவாஅன்,
வெண்தேர் ஓடும் கடம்கால் மருங்கில்,
துனைஎரி பரந்த துன்அரும் வியன்காட்டுச்,
சிறுகண் யானை நெடுங்கை நீட்டி
வான்வாய் திறந்தும் வண்புனல் பெறாஅது, .179-5
கான்புலந்து கழியும் கண் அகன் பரப்பின்
விடுவாய்ச் செங்கணைக் கொடுவில் ஆடவர்
நல்நிலை பொறித்த கல்நிலை அதர,
அரம்புகொள் பூசல் களையுநர்க் காணாச்
சுரம்செல விரும்பினிர் ஆயின் - இன் நகை, .179-10
முருந்துஎனத் திரண்ட முள்எயிற்றுத் துவர்வாய்,
குவளை நாண்மலர் புரையும் உண்கண், இம்
மதிஏர் வாள்நுதல் புலம்ப,
பதிபெயர்ந்து உறைதல் ஒல்லுமோ, நுமக்கே? .179-14
நகைநனி உடைத்தால் - தோழி ! தகைமிக,
கோதை ஆயமொடு குவவுமணல் ஏறி,
வீததை கானல் வண்டல் அயர,
கதழ்பரித் திண்தேர் கடைஇ வந்து,
தண்கயத்து அமன்ற ஒண்பூங் குவளை .180-5
அரும்புஅலைத்து இயற்றிய சுரும்புஆர் கண்ணி
பின்னுப்புறம் தாழக் கொன்னே சூட்டி,
நல்வரல் இளமுலை நோக்கி, நெடிது நினைந்து,
நில்லாது பெயர்ந்தனன், ஒருவன்; அதற்கே
புலவுநாறு இருங்கழி துழைஇப் பலஉடன் .180-10
புள்இறை கொண்ட முள்ளுடை நெடுந்தோட்டுத்
தாழை மணந்து ஞாழலொடு கெழீஇப்
படப்பை நின்ற முடத்தாட் புன்னைப்
பொன்நேர் நுண்தாது நோக்கி,
என்னும் நோக்கும், இவ் அழுங்கல் ஊரே. .180-15
துன்அருங் கானமும் துணிதல் ஆற்றாய்,
பின்நின்று பெயரச் சூழ்ந்தனை ஆயின்,
என்நிலை உரைமோ - நெஞ்சே!- ஒன்னார்
ஓம்பரண் கடந்த வீங்குபெருந் தானை
அடுபோர் மிஞிலி செருவேல் கடைஇ, .181-5
முருகுறழ் முன்பொடு பொருதுகளம் சிவப்ப,
ஆஅய் எயினன் வீழ்ந்தென, ஞாயிற்று
ஒண்கதிர் உருப்பம் புதைய ஓராங்கு
வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந்தோடு
விசும்பிடை தூரஆடி, மொசிந்து உடன், .181-10
பூவிரி அகன்துறைக் கணைவிசைக் கடுநீர்க்
காவிரிப் பேர்யாற்று அயிர்கொண்டு ஈண்டி,
எக்கர் இட்ட குப்பை வெண்மணல்
வைப்பின் யாணர் வளம்கெழு வேந்தர்
ஞாலம் நாறும் நலம்கெழு நல்இசை, .181-15
நான்மறை முதுநூல் முக்கட் செல்வன்,
ஆல முற்றம் கவின்பெறத் தைஇய
பொய்கை சூழ்ந்த பொழில்மனை மகளிர்
கைசெய் பாவைத் துறைக்கண் இறுக்கும்
மகர நெற்றி வான்தோய் புரிசைச் .181-20
சிகரம் தோன்றாச் சேண்உயர் நல்இல்
புகாஅர் நல்நாட் டதுவே - பகாஅர்
பண்டம் நாறும் வண்டுஅடர் ஐம்பால்,
பணைத்தகைத் தடைஇய காண்புஇன் மென்தோள்,
அணங்குசால், அரிவை இருந்த .181-25
மணம்கமழ் மறுகின் மணற்பெருங் குன்றே. .181-26
பூங்கண் வேங்கைப் பொன்னிணர் மிலைந்து,
வாங்கமை நோன்சிலை எருத்தத்து இரீஇ,
தீம்பழப் பலவின் சுளைவிளை தேறல்
வீளைஅம்பின் இளையரொடு மாந்தி,
ஓட்டியல் பிழையா வயநாய் பிற்பட, .182-5
வேட்டம் போகிய குறவன் காட்ட
குளவித் தண்புதல் குருதியொடு துயல்வர,
முளவுமாத் தொலைச்சும் குன்ற நாடே!
அரவுஎறி உருமோடு ஒன்றிக் கால்வீழ்த்து
உரவுமழை பொழிந்த பானாட் கங்குல், .182-10
தனியை வந்த ஆறுநினைந்து அல்கலும்,
பனியொடுகலுழும் இவள் கண்ணே: அதனால்,
கடும்பகல் வருதல் வேண்டும் - தெய்ய
அதிர்குரல் முதுகலை கறிமுறி முனைஇ,
உயர்சிமை நெடுங்கோட்டு உகள, உக்க .182-15
கமழ்இதழ் அலரி தாஅய் வேலன்
வெறிஅயர் வியன்களம் கடுக்கும்
பெருவரை நண்ணிய சார லானே. .182-18
'குவளை உண்கண் கலுழவும், திருந்திழைத்
திதலை அல்குல் அவ்வரி வாடவும்,
அத்தம்ஆர் அழுவம் நத்துறந்து அருளார்
சென்றுசேண் இடையர் ஆயினும், நன்றும்
நீடலர், என்றி - தோழி !- பாடுஆன்று .183-5
பனித்துறைப் பெருங்கடல் இறந்து, நீர் பருகி,
குவவுத்திரை அருந்து கொள்ளைய குடக்குஏர்பு,
வயவுப்பிடி இனத்தின் வயின்வயின் தோன்றி
இருங்கிளைக் கொண்மூ ஒருங்குடன் துவன்றி
காலை வந்தன்றால் காரே - மாலைக் .183-10
குளிர்கொள் பிடவின் கூர்முகை அலரி
வண்டுவாய் திறக்கும் தண்டா நாற்றம்
கூதிர்அற் சிரத்து ஊதை தூற்ற,
பனிஅலைக் கலங்கிய நெஞ்சமொடு
வருந்துவம் அல்லமோ, பிரிந்திசினோர் திறத்தே? .183-15
கடவுட் கற்பொடு குடிக்குவிளக்கு ஆகிய
புதல்வற் பயந்த புகழ்மிகு சிறப்பின்
நன்ன ராட்டிக்கு அன்றியும், எனக்கும்
இனிதுஆ கின்றால், சிறக்க, நின் ஆயுள்!
அருந்தொழில் முடித்த செம்மல் உள்ளமொடு .184-5
சுரும்புஇமிர் மலர கானம் பிற்பட
வெண்பிடவு அவிழ்ந்த வீகமழ் புறவில்
குண்டைக் கோட்ட குறுமுள் கள்ளிப்
புன்தலை புதைத்த கொழுங்கொடி முல்லை
ஆர்கழல் புதுப்பூ உயிர்ப்பின் நீக்கித், .184-10
தெள்அறல் பருகிய திரிமருப்பு எழிற்கலை
புள்ளிஅம் பிணையொடு வதியும் ஆங்கண்,
கோடுடைக் கையர், துளர்எறி வினைஞர்,
அரியல் ஆர்கையர், விளைமகிழ் தூங்கச்,
செல்கதிர் மழுகிய உருவ ஞாயிற்றுச் .184-15
செக்கர் வானம் சென்ற பொழுதில்,
கற்பால் அருவியின் ஒலிக்கும் நற்றேர்த்
தார்மணி பலஉடன் இயம்ப-
சீர்மிகு குருசில்!- நீ வந்துநின் றதுவே. .184-19
எல்வளை ஞெகிழச் சாஅய், ஆய்இழை
நல்எழிற் பணைத்தோள் இருங்கவின் அழிய,
பெருங்கை யற்ற நெஞ்சமொடு நத்துறந்து,
இரும்பின் இன்உயிர் உடையோர் போல,
வலித்து வல்லினர், காதலர்: வாடல் .185-5
ஒலிகழை நிவந்த நெல்லுடை நெடுவெதிர்
கலிகொள் மள்ளர் வில்விசையின் உடைய,
பைதுஅற வெம்பிய கல்பொரு பரப்பின்
வேனில் அத்தத்து ஆங்கண், வான்உலந்து
அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில் .185-10
பெருவிழா விளக்கம் போலப், பலவுடன்
இலைஇல மலர்ந்த இலவமொடு
நிலையுயர் பிறங்கல் மலைஇறந் தோரே. .185-13
வானம் வேண்டா வறனில் வாழ்க்கை
நோன்ஞாண் வினைஞர் கோளறிந்து ஈர்க்கும்
மீன்முதிர் இலஞ்சிக் கலித்த தாமரை
நீர்மிசை நிவந்த நெடுந்தாள் அகலிலை
இருங்கயம் துளங்கக், கால்உறு தொறும் .186-5
பெருங்களிற்றுச் செவியின் அலைக்கும் ஊரனொடு
எழுந்த கௌவையோ பெரிதே: நட்பே,
கொழுங்கோல் வேழத்துப் புணைதுணை யாகப்
புனல்ஆடு கேண்மை அனைத்தே; அவனே,
ஒண்தொடி மகளிர் பண்டையாழ் பாட, .186-10
ஈர்ந்தண் முழவின் எறிகுணில் விதிர்ப்ப,
தண்நறுஞ் சாந்தம் கமழும் தோள்மணந்து,
இன்னும் பிறள்வயி னானே: மனையோள்
எம்மொடு புலக்கும் என்ப, வென்வேல்
மாரி அம்பின், மழைத்தோற் பழையன் .186-15
காவிரி வைப்பின் போஒர் அன்ன, என்
செறிவளை உடைத்தலோ இலனே: உரிதினின்
யாம்தன் பகையேம் அல்லேம்; சேர்ந்தோர்
திருநுதல் பசப்ப நீங்கும்
கொழுநனும் சாலும், தன் உடன்உறை பகையே. .186-20
தோள்புலம்பு அகலத் துஞ்சி, நம்மொடு
நாள்பல நீடிய கரந்துஉறை புணர்ச்சி
நாண் உடைமையின் நீங்கிச், சேய்நாட்டு
அரும்பொருள் வலித்த நெஞ்சமொடு ஏகி,
நம் உயர்வு உள்ளினர் காதலர் - கறுத்தோர் .187-5
தெம்முனை சிதைத்த கடும்பரிப் புரவி,
வார்கழற் பொலிந்த வன்கண் மழவர்
பூந்தொடை விழவின் தலைநாள் அன்ன,
தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றம்
புலம்புறும் கொல்லோ - தோழி !- சேண்ஓங்கு .187-10
அலந்தலை ஞெமையத்து ஆள்இல் ஆங்கண்,
கல்சேர்பு இருந்த சில்குடிப் பாக்கத்து,
எல்விருந்து அயர, ஏமத்து அல்கி,
மனைஉறை கோழி அணல்தாழ்பு அன்ன
கவைஒண் தளிர கருங்கால் யாஅத்து .187-15
வேனில் வெற்பின் கானம் காய,
முனைஎழுந்து ஓடிய கெடுநாட்டு ஆர்இடை,
பனைவெளிறு அருந்து பைங்கண் யானை
ஒண்சுடர் முதிரா இளங்கதிர் அமையத்து,
கண்படு பாயல் கைஒடுங்கு அசைநிலை .187-20
வாள்வாய்ச் சுறவின் பனித்துறை நீந்தி,
நாள்வேட்டு எழுந்த நயன்இல் பரதவர்
வைகுகடல் அம்பியின் தோன்றும்
மைபடு மாமலை விலங்கிய சுரனே? .187-24
பெருங்கடல் முகந்த இருங்கிளைக் கொண்மூ!
இருண்டுஉயர் விசும்பின் வலன்ஏர்பு வளைஇப்,
போர்ப்புஉறு முரசின் இரங்கி, முறைபுரிந்து
அறன்நெறி பிழையாத் திறன்அறி மன்னர்
அருஞ்சமத்து எதிர்ந்த பெருஞ்செய் ஆடவர் .188-5
கழித்துஎறி வாளின், நளிப்பன விளங்கும்
மின்னுடைக் கருவியை ஆகி, நாளும்
கொன்னே செய்தியோ, அரவம்? பொன்னென
மலர்ந்த வேங்கை மலிதொடர் அடைச்சிப்,
பொலிந்த ஆயமொடு காண்தக இயலித், .188-10
தழலை வாங்கியும், தட்டை ஓப்பியும்,
அழலேர் செயலை அம்தழை அசைஇயும்,
குறமகள் காக்கும் ஏனல்
புறமும் தருதியோ? வாழிய, மழையே! .188-14
பசும்பழப் பலவின் கானம் வெம்பி,
விசும்புகண் அழிய, வேனில் நீடிக்,
கயம்கண் அற்ற கல்லோங்கு வைப்பின்
நாறுஉயிர் மடப்பிடி தழீஇ, வேறுநாட்டு
விழவுப்படர் மள்ளரின் முழவெடுத்து உயரிக், .189-5
களிறுஅதர்ப் படுத்த கல்லுயர் 'கவாஅன்
வெவ்வரை அத்தம் சுட்டிப்' பையென,
வயல்அம் பிணையல் வார்ந்த கவாஅன்
திதலை அல்குல் குறுமகள் அவனொடு
சென்று பிறள் ஆகிய அளவை, என்றும் .189-10
படர்மலி எவ்வமொடு மாதிரம் துழைஇ,
மனைமருண்டு இருந்த என்னினும், நனைமகிழ்
நன்ன ராளர் கூடுகொள் இன்னியம்
தேர்ஊர் தெருவில் ததும்பும்
ஊர்இழந் தன்று, தன் வீழ்வுஉறு பொருளே. .189-15
திரைஉழந்து அசைஇய நிரைவளை ஆயமொடு
உப்பின் குப்பை ஏறி எற்பட,
வருதிமில் எண்ணும் துறைவனொடு, ஊரே
ஒருதன் கொடுமையின் அலர்பா டும்மே;
அலமரல் மழைக்கண் அமர்ந்து நோக்காள்; .190-5
அலையல் - வாழி ! வேண்டு, அன்னை!- உயர்சிமைப்
பொதும்பில், புன்னைச் சினைசேர்பு இருந்த
வம்ப நாரை இரிய, ஒருநாள்,
பொங்குவரல் ஊதையொடு புணரி அலைப்பவும்,
உழைக்கடல் வழங்கலும் உரியன்; அதன்தலை .190-10
இருங்கழி புகாஅர் பொருந்தத் தாக்கி
வயச்சுறா எறிந்தென: வலவன் அழிப்ப,
எழிற்பயம் குன்றிய சிறைஅழி தொழில
நிரைமணிப் புரவி விரைநடை தவிர,
இழுமென் கானல் விழுமணல் அசைஇ, .190-15
ஆய்ந்த பரியன் வந்து, இவண்
மான்ற மாலைச் சேர்ந்தன்றே இலனே! .190-17
அத்தப் பாதிரித் துய்த்தலைப் புதுவீ
எரிஇதழ் அலரியொடு இடைப்பட விரைஇ,
வண்தோட்டுத் தொடுத்த வண்டுபடு கண்ணி,
தோல்புதை சிரற்றுஅடிக், கோலுடை உமணர்
ஊர்கண் டன்ன ஆரம் வாங்கி, .191-5
அருஞ்சுரம் இவர்ந்த அசைவுஇல் நோன்தாள்
திருந்துபகட்டு இயம்பும் கொடுமணி, புரிந்துஅவர்
மடிவிடு வீளையொடு, கடிதுஎதிர் ஓடி,
ஓமைஅம் பெருங்காட்டு வரூஉம் வம்பலர்க்கு
ஏமம் செப்பும் என்றூழ் நீள்இடை, .191-10
அரும்பொருள் நசைஇப், பிரிந்துஉறை வல்லி
சென்று: வினை எண்ணுதி ஆயின், நன்று,
உரைத்திசின் வாழி - என் நெஞ்சே!- நிரைமுகை
முல்லை அருந்தும் மெல்லிய ஆகி,
அறல்என விரிந்த உறல்இன் சாயல் .191-15
ஒலிஇருங் கூந்தல் தேறும்' என,
வலிய கூறவும் வல்லையோ, மற்றே? .191-17
மதிஇருப் பன்ன மாசுஅறு சுடர்நுதல்
பொன்நேர் வண்ணம் கொண்டன்று: அன்னோ?
யாங்குஆ குவள்கொல் தானே? விசும்பின்
எய்யா வரிவில் அன்ன பைந்தார்ச்,
செவ்வாய்ச், சிறுகிளி சிதைய வாங்கி, .192-5
பொறைமெலிந் திட்ட புன்புறப் பெருங்குரல்
வளைசிறை வாரணம் கிளையொடு கவர,
ஏனலும் இறங்குபொறை உயிர்த்தன; பானாள்
வந்து அளிக்குவை எனினே மால்வரை
மைபடு விடரகம் துழைஇ, ஒய்யென .192-10
அருவிதந்த, அரவுஉமிழ், திருமணி
பெருவரைச் சிறுகுடி மறுகுவிளக் குறுத்தலின்
இரவும் இழந்தனள்: அளியள்- உரவுப்பெயல்
உருமிறை கொண்ட உயர்சிமைப்
பெருமலை நாட - நின் மலர்ந்த மார்பே. .192-15
கானுயர் மருங்கில் கவலை அல்லது,
வானம் வேண்டா வில்லேர் உழவர்
பெருநாள் வேட்டம், கிளைஎழ வாய்த்த
பொருகளத்து ஒழிந்த குருதிச் செவ்வாய்ப்,
பொறித்த போலும் வால்நிற எருத்தின்: .193-5
அணிந்த போலும் செஞ்செவி, எருவை:
குறும்பொறை எழுந்த நெடுந்தாள் யாஅத்து
அருங்கவட்டு உயர்சினைப் பிள்ளை ஊட்ட,
விரைந்துவாய் வழுக்கிய கொழுங்கண் ஊன்தடி
கொல்பசி முதுநரி வல்சி ஆகும் .193-10
சுரன்நமக்கு எளிய மன்னே; நல்மனைப்
பன்மாண் தங்கிய சாயல், இன்மொழி,
முருந்தேர் முறுவல், இளையோள்
பெருந்தோள் இன்துயில் கைவிடு கலனே. .193-14
பேர்உறை தலைஇய பெரும்புலர் வகைறை,
ஏர்இடம் படுத்த இருமறுப் பூழிப்
புறமாறு பெற்ற பூவல் ஈரத்து,
ஊன்கிழித் தன்ன செஞ்சுவல் நெடுஞ்சால்,
வித்திய மருங்கின் விதைபல நாறி, .194-5
இரலைநல் மானினம் பரந்தவை போலக்,
கோடுடைத் தலைக்குடை சூடிய வினைஞர்,
கறங்குபறை சீரின் இரங்க வாங்கி,
களைகால் கழீஇய பெரும்புன வரகின்
கவைக்கதிர் இரும்புறம் கதூஉ உண்ட, .194-10
குடுமி நெற்றி நெடுமாத் தோகை
காமர் கலவம் பரப்பி, ஏமுறக்
கொல்லை உழவர் கூழ்நிழல் ஒழித்த
வல்லிலைக் குருந்தின் வாங்குசினை இருந்து,
கிளிகடி மகளிரின் விளிபடப் பயிரும் .194-15
கார்மன் இதுவால் - தோழி !- 'போர்மிகக்
கொடுஞ்சி நெடுந்தேர் பூண்ட, கடும்பரி,
விரிஉளை, நல்மான் கடைஇ
வருதும்' என்று, அவர் தெளித்த போழ்தே. .194-19
'அருஞ்சுரம் இறந்தஎன் பெருத்தோட் குறுமகள்
திருந்துவேல் விடலையொடு வரும்' எனத் தாயே
புனைமாண் இஞ்சி பூவல் ஊட்டி,
மனைமணல் அடுத்து, மாலை நாற்றி,
உவந்து, இனிது அயரும் என்ப: யானும், .195-5
மான்பிணை நோக்கின் மடநல் லாளை
ஈன்ற நட்பிற்கு அருளான் ஆயினும்
இன்னகை முறுவல் ஏழையைப் பல்நாள்,
கூந்தல் வாரி: நுசுப்புஇவர்ந்து, ஓம்பிய
நலம்புனை உதவியோ உடையன் மன்னே: .195-10
அஃது அறி கிற்பினோ நன்றுமன் தில்ல,
அறுவை தோயும் ஒருபெருங் குடுமி,
சிறுபை நாற்றிய பல்தலைக் கொடுங்கோல்,
ஆகுவது அறியும் முதுவாய், வேல!
கூறுக மாதோ, நின் கழங்கின் திட்பம்; .195-15
மாறா வருபனி கலுழும் கங்குலில்,
ஆனாது துயருமெம் கண்இனிது படீஇயர்
எம்மனை முந்துறத் தருமோ?
தன்மனை உய்க்குமோ? யாதவன் குறிப்பே? .195-19
நெடுங்கொடி நுடங்கும் நறவுமலி பாக்கத்து,
நாள்துறைப் பட்ட மோட்டிரு வராஅல்
துடிக்கண் கொழுங்குறை நொடுத்து, உண்டுஆடி
வேட்டம் மறந்து, துஞ்சும் கொழுநர்க்குப் பாட்டி
ஆம்பல் அகலிலை, அமலைவெஞ் சோறு .196-50
தீம்புளிப் பிரம்பின் திரள்கனி பெய்து,
விடியல் வைகறை இடூஉம் ஊர!
தொடுகலம்: குறுக வாரல் - தந்தை
கண்கவின் அழித்ததன் தப்பல், தெறுவர,
ஒன்றுமொழிக் கோசர்க் கொன்று, முரண்போகிய, .196-10
கடுந்தேர்த் திதியன் அழுந்தை, கொடுங்குழை
அன்னி மிஞிலியின் இயலும்
நின்நலத் தகுவியை முயங்கிய மார்பே! .196-13
மாமலர் வண்ணம் இழந்த கண்ணும்,
பூநெகிழ் அணையின் சாஅய தோளும்
நன்னர் மாக்கள் விழைவனர் ஆய்ந்த
தொன்னலம் இழந்த துயரமொடு, என்னதூஉம்
இனையல் - வாழி; தோழி !- முனை எழ .197-5
முன்னுவர் ஓட்டிய முரண்மிகு திருவின்,
மறமிகு தானைக், கண்ணன் எழினி
தேமுது குன்றம் இறந்தனர் ஆயினும்,
நீடலர் யாழநின் நிரைவளை நெகிழத்-
தோள்தாழ்வு இருளிய குவைஇருங் கூந்தல் .197-10
மடவோள் தழீஇய விறலோன் மார்பில்
புன்தலைப் புதல்வன் ஊர்புஇழிந் தாங்கு,
கடுஞ்சூல் மடப்பிடி தழீஇய வெண்கோட்டு
இனம்சால் வேழம், கன்றுஊர்பு இழிதரப்,
பள்ளி கொள்ளும் பனிச்சுரம் நீந்தி, .197-15
ஒள்ளிணர்க் கொன்றை ஓங்குமலை அத்தம்
வினைவலி யுறூஉம் நெஞ்சமொடு
இனையர்ஆகி, நம் பிரிந்திசி னோரே. .197-18
'கூறுவம் கொல்லோ? கூறலம் கொல்?' எனக்
கரந்த காமம் கைந்நிறுக் கல்லாது,
நயந்துநாம் விட்ட நல்மொழி நம்பி,
அரைநாள் யாமத்து விழுமழை கரந்து,
கார்விரை கமழும் கூந்தல், தூவினை .198-5
நுண்நூல் ஆகம் பொருந்தினன், வெற்பின்
இளமழை சூழ்ந்த மடமயில் போல,
வண்டுவழிப் படரத், தண்மலர் மேய்ந்து,
வில்வகுப் புற்ற நல்வாங்கு குடைச்சூல்
அஞ்சிலம்பு ஒடுக்கி அஞ்சினள் வந்து, .198-10
துஞ்சுஊர் யாமத்து முயங்கினள், பெயர்வோள்,
ஆன்ற கற்பின் சான்ற பெரியள்,
அம்மா அரிவையோ அல்லள்: தெனாஅது
ஆஅய் நல்நாட்டு அணங்குடைச் சிலம்பிற்,
கவிரம் பெயரிய உருகெழு கவாஅன், .198-15
ஏர்மலர் நிறைசுனை உறையும்
சூர்மகள் மாதோ என்னும்- என் நெஞ்சே! .198-17
கரைபாய் வெண்திரை கடுப்பப், பலஉடன்,
நிரைகால் ஒற்றலின், கல்சேர்பு உதிரும்
வரைசேர் மராஅத்து ஊர்மலர் பெயல் செத்து,
உயங்கல் யானை நீர்நசைக்கு அலமரச்,
சிலம்பி வலந்த வறுஞ்சினை வற்றல் .199-5
அலங்கல் உலவை அரிநிழல் அசைஇத்,
திரங்குமரல் கவ்விய கையறு தொகுநிலை,
அரம்தின் ஊசித் திரள்நுதி அன்ன,
திண்ணிலை எயிற்ற செந்நாய் எடுத்தலின்:
வளிமுனைப் பூளையன் ஒய்யென்று அலறிய .199-10
கெடுமான் இனநிரை தரீஇய கலையே
கதிர்மாய் மாலை ஆண்குரல் விளிக்கும்
கடல்போற் கானம் பிற்படப், 'பிறர்போல்
செல்வேம்ஆயின், எம் செலவுநன்று' என்னும்
ஆசை உள்ளம் அசைவின்று துரப்ப, .199-15
நீ செலற்கு உரியை - நெஞ்சே!- வேய்போல்
தடையின மன்னும், தண்ணிய, திரண்ட,
பெருந்தோள் அரிவை ஒழியக், குடாஅது,
இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவில்,
பொலம்பூண் நன்னன் பொருதுகளத்து ஒழிய, .199-20
வலம்படு கொற்றம் தந்த வாய்வாள்,
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்
இழந்த நாடு தந்தன்ன
வளம்பெரிது பெறினும், வாரலென் யானே. .199-24
நிலாவின் இலங்கு மணல்மலி மறுகில்,
புலால்அம் சேரிப், புல்வேய் குரம்பை,
ஊர்என உணராச் சிறுமையொடு, நீர்உடுத்து,
இன்னா உறையுட்டு ஆயினும், இன்பம்
ஒருநாள் உறைந்திசி னோர்க்கும், வழிநாள், .200-5
தம்பதி மறக்கும் பண்பின் எம்பதி
வந்தனை சென்மோ - வளைமேய் பரப்ப!-
பொம்மற் படுதிரை கம்மென உடைதரும்
மரன்ஓங்கு ஒருசிறை பல பாராட்டி,
எல்லை எம்மொடு கழிப்பி, எல்உற, .200-10
நல்தேர் பூட்டலும் உரியீர்: அற்றன்று,
சேந்தனிர் செல்குவிர் ஆயின், யாமும்
எம்வரை அளவையின் பெட்குவம்
நும் ஒப்பதுவோ? உரைத்திசின் எமக்கே.- .200-14