பாடியவர்: அவ்வையார்
பறைபட, பணிலம் ஆர்ப்ப, இறை கொள்பு
தொல் மூதாலத்து பொதியில் தோன்றிய
நால் ஊர் கோசர் நல்மொழி போல,
வாய் ஆகின்றே- தோழி! - ஆய் கழல்
சேயிலை வெள்வேல் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே!
(உடன் போயின பின்றை, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றாள். நிற்ப, செவிலித்தாய் நற்றாய்க்கு அறத்தொடு நின்றது)
*பறைகள் ஒலிக்கவும் சங்குகள் ஊதவும் கூடி
பழைய முதிய ஆல மரத்தடி பொது மன்றத்தில் உரைத்த
நான்கு ஊர் குடியினரா கோசர்களின் சூளுரை போல
உண்மையானதே தோழி- ஆய்ந்து செய்யப்பட்ட கழலும்
சிவந்த இலையுடன் வெள்ளிபோன்ற வேலினையும் உடைய தலைவனுடன்
தொகுப்பாக வளையல்களை முன் கையில் அணிந்த மடந்தையின் நட்பே!
அரும் சொற்பொருள்:
பறை பட = பறை அடிக்க
பணிலம் = சங்கு
ஆர்ப்ப = ஒலிக்க
இறை = தங்குதல்
கொள்பு = கொள்ள
மூதாலம் = மூது + ஆலம் = முதிய ஆலமரம்
பொதியில் = பொது மன்றம் , அம்பலம்
கோசர் = ஒரு வீர குடியினர்
நல்மொழி = வஞ்சினம், சூளுரை
வாய் ஆகின்றே= வாய்மை ஆனதே
கழல் = ஆடவர் காலில் அணியும் அணி
சேயிலை= சே + இலை = வேலின் சிவந்த இலை,
வெள்வேல் = வெள்ளிபோல் ஒளிரும் வேல்
விடலை = பாலை நிலத்து தலைவன்
தொகுவளை = வளையல்களின் தொகுதி
மடந்தை = ஒரு பருவத்து பெண்
( மோகூர் பழையன் என்பானுக்கு மோரியர்களுடனான போரில் உதவுவோம் என்று உறுதி கொடுத்த கோசர்கள் சொல்லிய சொல்லை நிறைவேற்றினார்களாம்)