கலித்தொகை-குறிஞ்சிக்கலி-பொருள்

12,635 views
Skip to first unread message

வேந்தன் அரசு

unread,
Jan 21, 2007, 7:20:38 PM1/21/07
to sanga...@googlegroups.com

************************கபிலரின் குறிஞ்சிக்கலி: 37.********************************

கய மலர் உண் கண்ணாய்! காணாய்; ஒருவன்         
வய மான் அடித் தேர்வான் போலத், தொடை மாண்ட 
கண்ணியன், வில்லன், வரும்; என்னை நோக்குபு,    
முன்னத்தின் காட்டுதல் அல்லது, தான் உற்ற         
நோய் உரைக்கல்லான் பெயரும்மன், பல் நாளும்!           37-5
பாயல் பெறேஎன், படர் கூர்ந்து, அவன் வயின்,               
சேயேன்மன் யானும் துயர் உழப்பேன்; ஆயிடைக்       
கண் நின்று கூறுதல் ஆற்றான், அவன் ஆயின்;          
பெண் அன்று, உரைத்தல் நமக்கு ஆயின்; 'இன்னதூஉம்      
காணான், கழிதலும் உண்டு' என்று, ஒரு நாள், என்      37-10
தோள் நெகிழ்பு உற்ற துயரால் துணிதந்து, ஓர்          
நாண் இன்மை செய்தேன், நறு நுதால்! ஏனல்              
இனக் கிளி யாம் கடிந்து ஓம்பும் புனத்து அயல்,             
ஊசல் ஊர்ந்து ஆட, ஒரு ஞான்று வந்தானை,            
'ஐய! சிறிது என்னை ஊக்கி' எனக் கூறத்,           37-15
'தையால்! நன்று' என்று அவன் ஊக்கக், கை நெகிழ்பு,  
பொய்யாக வீழ்ந்தேன், அவன் மார்பில்; வாய்யாச் செத்து,       
ஒய்யென ஆங்கே எடுத்தனன்; கொண்டான் மேல் 
மெய் அறியாதேன் போல் கிடந்தேன்மன்; ஆயிடை 
மெய் அறிந்து ஏற்று எழுவேன் ஆயின், மற்று ஒய்யென,     37-20
'ஒண் குழாய்! செல்க' எனக் கூறி விடும் பண்பின்         
அங்கண் உடையன் அவன்!           
----------------------------------------------------------------------
பொருள்:

கய மலர் உண் கண்ணாய்! காணாய்; ஒருவன்         
வய மான் அடித் தேர்வான் போலத், தொடை மாண்ட 
கண்ணியன், வில்லன், வரும்; என்னை நோக்குபு,    
முன்னத்தின் காட்டுதல் அல்லது, தான் உற்ற         
நோய் உரைக்கல்லான் பெயரும்மன், பல் நாளும்! 

*குளத்தில் உள்ள மலர் போன்ற (மை) உண்ட கண்ணை உடைய தோழியே! காண்பாயாக:
ஒருவன், வலிமை உடைய விலங்கின் காலடிகளை ஆய்பவன் போல; அவன் அழகாக கட்டிய கண்ணியை உடையவன்; கையில் வில்லை ஏந்தியவன்; என்னை நோக்கி தன் முக குறிப்பால் காட்டுதல் அல்லாது தான் உற்ற காதல் நோயை எனக்கு உரைக்க மாட்டான்; சென்று விடுவான்; பல நாளூம்.

அரும் சொற்பொருள்: கயம் - குளம்; வயம் - வலிமை; மான் -மா, விலங்கு; தொடை மாண்ட - மாண்புடன் தொடுக்கப்பட்ட; கண்ணி - தலையில் சூடும் மலர் கொத்து; நோக்குபு - நோக்கி; முன்னம் - குறிப்பு; உரைக்கல்லான் - உரைக்க மாட்டான்;

*********************************

பாயல் பெறேஎன், படர் கூர்ந்து, அவன் வயின்,               
சேயேன்மன் யானும் துயர் உழப்பேன்; ஆயிடைக்       
கண் நின்று கூறுதல் ஆற்றான், அவன் ஆயின்;          
பெண் அன்று, உரைத்தல் நமக்கு ஆயின்; 'இன்னதூஉம்      
காணான், கழிதலும் உண்டு' என்று, ஒரு நாள், என்   
தோள் நெகிழ்பு உற்ற துயரால் துணிதந்து, ஓர்          
நாண் இன்மை செய்தேன், நறு நுதால்!


*(நானும்) பாயலில் கண் உறங்கேன், அவன் வசம் காதல் நோய் மிகுந்தேன். நெருக்கம் இல்லை என்றாலும் நானும்  துயரால் வருந்தினேன். இந்த நிலையில், கண்முன் நின்று கூறுவது அவனால் இயலாது என்றால், அவனிடம் சொல்லுவதும் நமக்கு பெண்மை அல்லவே!. எதுவும் காணாமல் அவன் இறந்துபடுவானோ என்று, என் தோள்கள் மெலிந்து உற்ற துன்பத்தால் துணிந்து வெட்கமில்லாத ஒரு செயலை செய்தேன், நறு மணம் கொண்ட நுதலவளே!

அரும் பொருள்: பாயல் - படுக்கை;  படர் - துன்பம்; கூர்தல் - மிகுதல்; வயின் - வசம்; சேய் - தொலைவு; கழிதல் -  இறத்தல்;  நுதல் - நெற்றி;

****************************************

-----------------------------------------------------------------------ஏனல்              
இனக் கிளி யாம் கடிந்து ஓம்பும் புனத்து அயல்,             
ஊசல் ஊர்ந்து ஆட, ஒரு ஞான்று வந்தானை,            
'ஐய! சிறிது என்னை ஊக்கி' எனக் கூறத்,           37-15
'தையால்! நன்று' என்று அவன் ஊக்கக், கை நெகிழ்பு,  
பொய்யாக வீழ்ந்தேன், அவன் மார்பில்;

*இன கிளிகளை விரட்டுதல் மேற்கொண்டு காக்கும்  தினைப்புனத்தின் அருகில்  ஊயல் ஊர்ந்து நான் ஆட, ஒருநாள் அங்கு வந்தவனை, "ஐயா, என்னை சிறிது ஆட்டுக" என்று கூற, "பெண்ணே, நல்லது" என்று ஊக்கினான். அப்போது கை நெகிழ்ந்து வீழ்வதுபோல் பொய்யாக அவன் மார்பில் விழுந்தேன்.

அரும் சொற்பொருள்: ஏனல் - தினைப்புனம்; கடிந்து - விரட்டி, ஓம்பும் - காக்கும்; ஒரு ஞான்று - ஒருநாள்; ஊக்கி - ஆட்டுக; நெகிழ்பு - நழுவி;

****************************

--------------------------------------------------------வாயாச் செத்து,       
ஒய்யென ஆங்கே எடுத்தனன்; கொண்டான் மேல் 
மெய் அறியாதேன் போல் கிடந்தேன்மன்; ஆயிடை 
மெய் அறிந்து ஏற்று எழுவேன் ஆயின், மற்று ஒய்யென,
'ஒண் குழாய்! செல்க' எனக் கூறி விடும் பண்பின்         
அங்கண் உடையன் அவன்!  

*(அந்த என் செயலை) உண்மை என்று  நம்பி உடனே என்னை எடுத்தான். தன் மார்பிலே ஏந்தியதை அறியாதவள்போல் கிடந்தேன். அந்நேரத்தில், நடப்பது என்ன என்று அறிந்து மயக்கம் தெளிந்தவள் போல் எழுவேன். அவனும், உடனே "ஒண்குழாய், செல்க!" என்று கூறி என்னை விடுவிக்கும் (அவளுக்கு அதனால் அவமானம் வரும் என்று கருதி) கண்ணோட்டம் கொண்டவனாக அங்கே காணப்பட்டான் அவன்.

அரும் சொற்பொருள்: வாயா - உண்மையா; செத்து - கருதி; ஆயிடை - அந்நேரத்தில்;  ஒய்யென - விரைவாக; ஏற்று - மயக்கம் தெளிந்து;
ஒண்குழாய் - ஒளி பெற்ற குழைகளை உடையவளே;  அங்கண் -கண்ணோட்டம்.

வேந்தன் அரசு

unread,
Jan 23, 2007, 9:19:09 PM1/23/07
to sanga...@googlegroups.com

*************** கபிலரின் குறிஞ்சிக்கலி - 38 ஆம் பாடல்
 
இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன்                 38-1
உமை அமர்ந்து உயர் மலை இருந்தனன் ஆக,                
ஐ இரு தலையின் அரக்கர் கோமான்                                  
தொடிப் பொலி தடக்கையின் கீழ் புகுத்து, அம் மலை     
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல -                              38-5

உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக்                 
கறுவு கொண்டு, அதன் முதல் குத்திய மத யானை,      
நீடு இரு விடர் அகம் சிலம்பக் கூய்த், தன்                  
கோடு புய்க்கல்லாது, உழக்கும் நாட! கேள்;   

 
அரும் சொற் பொருள்:
 

வாங்கிய = வளைத்த ; ஈர்ஞ்சடை=     (கங்கையால்) ஈர சடை, தொடி=  வளை; தடக்கை = அகன்ற கை, உழப்பவன் = துன்புறுபவன்; உறுபுலி = ஊக்கம் மிகு புலி:  ஏய்ப்ப = ஏமாற்ற, ஒப்ப; வேங்கை = வேங்கை மரம்; கறுவு = கறுவுதல் (பழி வாங்க துடிக்கும் சினம்); நீடு இரு விடர் அகம் - நெடிய இருண்ட மலை பக்கம்; சிலம்ப = ஒலிப்ப; கூய் = கூவி; கோடு = கொம்பு; புய்க்க = மீட்டு எடுக்க
 
பொருள்:
 
*கயிலையிலே சிவ தனுசுவை வளைத்த ஈர சடையை உடைய அந்தணனாகிய சிவன், உமையவளொடு அமர்ந்து இருந்தான். அப்போது பத்து தலைகளை உடைய, அரகர்களின் தலைவன் இராவணன், வளை பொலிந்த தன் கைகளை அடியில் புகுத்தி  பின் அந்த மலையை எடுக்க முடியாமல் (அரற்றி) உழல்பவன் போல், 
 
புலியின்  உருவம் என ஏமாறும் வண்ணம் பூக்களை பூத்திருந்த வேங்கை  மரத்தின் அடியை சினத்தால் குத்திய மதம் கொண்ட யானை, நெடிய இருண்ட மலையகம் முழுதும் ஒலிக்குமாறு கூவி தன் கொம்புகளை மீட்டு எடுக்க முடியாமல் உழக்கும் நாட்டை உடையவனே! கேட்பாயாக!

ஆர் இடை என்னாய் நீ அரவு அஞ்சாய் வந்தக்கால்,   38-10
நீர் அற்ற புலமே போல் புல்லென்றாள், வைகறை,          
கார் பெற்ற புலமே போல், கவின் பெறும்; அக் கவின்  
தீராமல் காப்பது ஓர் திறன் உண்டேல் உரைத்தைக் காண்! 

*(கடப்பதற்கு) அரிய இடம் (காடு) என்று  கருதாய். நீ (அங்கே) பாம்புகளை அஞ்சா மாட்டாய். அவ்வாறு நீ வருகின்ற போது, நீர் அற்ற நிலத்தின்  பயிர்கள் போல் பொலிவு அழிந்து நின்ற இவள், விடியலில், மழையை பெற்ற புலத்தின் பயிர்கள் போல் அழகு பெறுகிறாள்,
 
அந்த அழகு தீராமல் காக்கும் ஓர் வழி உண்டு என்றால் சொல்லுவாயாக!  
 
அரும் சொற்பொருள்: ஆர் = அரிய; அரவு= பாம்பு; புலம் = விளை நிலம்; புல்லென்றாள் = பொலிவு அல்லது அழகு இழந்தாள். வைகறை = விடியல்; கார் = மழை; கவின்= அழகு; திறன் = செய்திறன்; உரைத்தைக்காண் = சொல்வாயாக

இருள் இடை என்னாய் நீ இரவு அஞ்சாய் வந்தக்கால்,           38-14
பொருள் இல்லான் இளமை போல் புல்லென்றாள், வைகறை,        
அருள் வல்லான் ஆக்கம் போல் அணிபெறும்; அவ் அணி             
தெருளாமல் காப்பது ஓர் திறன் உண்டேல், உரைத்தைக் காண்;   

*இருள்  வழி என்று கருதாய்; நீ இரவு என்று அஞ்சாய்; அவ்வாறு நீ வருகின்ற போது, செல்வம் இல்லாதவன் இளமைக்காலம் போல் பொலிவு இழந்து நினற இவள், விடியலில், கொடை வழங்குவதில் வல்ல ஒருவனுடைய செல்வம் போல் அழகு பெறுவாள்.
 
அவ்வழகு (அவ்வழகுக்கு பிறர் காரணம் என்று) உணரா வண்ணம் காக்க ஒரு வழி இருக்கும் என்றால் சொல்லுவாயாக!
 
அரும் சொற்பொருள்:  அருள் வல்லான் = கொடையில் சிறந்தவன்; அணி பெறும் = அழகு பெறும்;  தெருளாமல் = உணராமல் (அவ்வழகு தலைவன் வருகையால் வந்தது என்று யாரும் உணரா வண்ணம்; உண்டேல் = உண்டு என்றால்;

மறந்திருந்தார் என்னாய் நீ மலை இடை வந்தக்கால்,              38-18
அறம் சாரான் மூப்பே போல் அழிதக்காள், வைகறை,               
திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திருத்தகும்; அத் திருப்             
புறங்கூற்றுத் தீர்ப்பது ஓர் பொருள் உண்டேல் உரைத்தைக் காண்;  
    
* (கானவர்கள்) தங்கள் (கொலை தொழிலான) மறம் திருந்தமாட்டார் என்று கருதாய்; நீ மலைஇடை கடந்து வருகின்ற போது, அற வழியில் நில்லாதவன் முதுமைக் காலம் போல் வருந்திக்கொண்டிருந்த இவள். விடியலில், ஆற்றல் உடையவனின் செல்வம் போல் திருத்தமாக விளங்குவாள்.
 
அந்த திருத்தம் அயலார் பழிப்புக்கு ஆளாகாமல் தீர்க்கும் ஒரு வழி உண்டு என்றால் அதை சொல்லுவாயாக!

அரும் சொற்பொருள்: மறம் = கொலைத்தொழில்; மூப்பு = முதுமை; சாரான் = சார்ந்து நில்லான்; ஆக்கம் = செல்வம்; திருத்தகும் = திருத்தம் பெறும்; புறம் கூறு = பழித்தல்;

        என ஆங்கு,                                                  38-22 
 நின் உறு விழுமம் கூறக்கேட்டு                      38-23
 வருமே, தோழி! நல் மலை நாடன் -                        
 வேங்கை விரிவு இடம் நோக்கி,                        
 வீங்கு இறைப் பணைத் தோள் வரைந்தனன் கொளற்கே.   
  
*என்ற வாறு,
தோழி! நீ உற்ற துன்பம் நான் கூற, அந்த நல்ல  மலை நாட்டினன் கேட்டு, வேங்கை மரம் பூக்கும் காலம் எதிர் பார்த்து,  அக்காலத்தில் நின் பருத்த முன்கை,  மூங்கில் போல் தோளினை மணந்து கொள்ள வருவான்.  (எனவே கவலை ஒழிவாயாக)

அரும் சொற்பொருள்: விழுமம் =  துயரம்; வேங்கை = ஒரு மரம்; விரிவு = பூக்கள் மலரும் காலம்; வீங்கு இறை = பருத்த முன் கை. (அக்காலத்தே, அவளது மெலிந்த முன் கைகள் பழைய அழகை பெற்று விடும்) ; பணைத் தோள் = மூங்கில் போன்ற தோள்கள்.
 
38 ஆம் பாடல் முற்றியது.


 

வேந்தன் அரசு

unread,
Jan 24, 2007, 9:08:06 PM1/24/07
to sanga...@googlegroups.com
*************** ********** கலித்தொகை ********************************************
 
                         கபிலரின் குறிஞ்சிக்கலி - 39 ஆம் பாடல்

காமர் கடும் புனல் கலந்து எம்மோடு ஆடுவாள்,                    39-1
தாமரைக் கண் புதைத்து,  அஞ்சித் தளர்ந்து, அதனோடு ஒழுகலான்       
நீள் நாக நறும் தண் தார் தயங்கப் பாய்ந்து, அருளினால்,            
பூண் ஆகம் உற தழீஇ போதந்தான் அகல் அகலம்,                
வரு முலை புணர்ந்தன என்பதனால், என் தோழி                     
அரு மழை தரல் வேண்டின் தருகிற்கும் பெருமையளே;                  

**'யாவரும் விரும்பும் விரைந்து ஓடும் வெள்ளத்தில், எம்முடன் கலந்து நீர் ஆடுகின்ற இவள் தாமரை ஒத்த தன் கண்களை மூடி, அஞ்சி கால் தளர்ந்து, வெள்ளத்தே போகும் போது,  நீண்ட சுர புன்னையின் வாச மலர்களால் ஆன குளிர்ந்த மாலை அசைய, வெள்ளத்தே பாய்ந்து,   பூண் அணிந்த இவள் மார்பை தன்னொடு தழுவி கரையில் போக விட்ட  போது, 'அவனுடைய அகன்ற மார்பை இவளது வளர்கின்ற  கொங்கைகள் கூடின', என்று பிறர் கூறுகின்றார். அந்த கூற்றாலே என்னுடைய தோழி நமக்கு அரிய மழையை பெய்விக்க நாம் விரும்பினால் அதை தரவல்ல பெருமை உடையவளே!

அரும் சொற் பொருள்: காமர் = விருப்பம்; தார் = மாலை; தயங்க = ஆட ஆகம் = மார்பு; போதந்தான் = போக விட்டான்; அகலம் = மார்பு; தருகிற்கும் = தரச் செய்யும்

அவனும் தான், ஏனல் இதணத்து அகில் புகை உண்டு இயங்கும்         39-7
வான் ஊர் மதியம் வரை சேரின், அவ் வரைத்,                          
'தேனின் இறால்' என, ஏணி இழைத்திருக்கும்          
கான் அகல் நாடன் மகன்;   

 **அவனும் மட்டும் என்ன? திணை புனத்தில் பரண் மேல் எரியும் அகில் புகை உண்டதால் ஒளி மழுங்கி திரியும் வானில் ஊரும் மதியம் மலை சென்று அடைந்தால், அதை தேனடை என்று மயங்கி, அந்த தேனை அழிக்க ஏணியை  சமைத்திருக்கும் காடு அகன்ற நாட்டு தலைவனின் மகன்.

அரும் சொற் பொருள்: ஏனல்= திணை புனம்; இதணம் = பரண்; வரை = மலை; இறால் = தேனடை; இழைத்திருக்கும் = படைத்திருக்கும்; கான் = காடு;
 
தொடரும்.........

வேந்தன் அரசு

unread,
Jan 25, 2007, 11:13:22 PM1/25/07
to sanga...@googlegroups.com

கபிலரின் குறிஞ்சிக்கலி - 39 ஆம் பாடல் தொடர்ச்சி...

சிறுகுடியீரே!  சிறுகுடியீரே! -                                                39-11
வள்ளி கீழ் வீழா; வரை மிசைத் தேன் தொடா;          
கொல்லை குரல் வாங்கி ஈனா - மலை வாழ்நர் 
அல்ல புரிந்து ஒழுகலான்;        
 
**சிறுகுடி வாழ்வீரே! சிறுகுடி வாழ்வீரே!
வள்ளிக்கிழங்கு நிலத்தின் கீழ் விழாது; மலை மேலே தேன் தொடுக்காது; கொல்லையில் தினை வளைந்து ஈனாது;
மலையில் வாழ்வோர் அலர் பேசி ஒழுகுவதால்.
 
காந்தள் கடி கமழும், கண் வாங்கு, இரும் சிலம்பின்         39-15
வாங்கு அமை மென் தோள் குறவர் மட மகளிர்           
தாம் பிழையார்; கேள்வர்த் தொழுது எழலால், தம் ஐயரும்        தாம் பிழையார் தாம் தொடுத்த கோல்;                         
 
                                      என ஆங்கு,                          
அறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட           39-20
என்னையர்க்கு உய்த்து உரைத்தாள் யாய்;    
          
**காந்தள் மலர் மணம் கமழும், வைத்த கண் வாங்காமல் பார்க்க தோன்றும், வளைந்த மூங்கில் ஒத்த மெல்லிய தோள்களை உடைய, குறவர்களின் மடப்பம் உடைய மகளிர், தாம் பிழை செய்ய மாட்டார்.  அவர் தம் கணவரை தொழுது எழுதலால் அவர் அண்ணன்மாரும் தாம் தொடுத்த அம்புகளை எய்வதில் பிழை செய்ய மாட்டார். 
 
இப்படியாக, அறத்தொடு நின்ற என்னை கண்டு, என் தாய், என் தமையன்மார்களுக்கு திறம்பட வழிகாட்டி உரைத்தாள்.
 
அவரும், தெரி கணை நோக்கிச் சிலை நோக்கிக், கண் சேந்து         39-22 
ஒரு பகல் எல்லாம் உருத்து எழுந்து, ஆறி,                       
'இருவர் கண் குற்றமும் இல்லையால்' என்று,           
தெருமந்து சாய்த்தார் தலை;                             
 
**அது கேட்டு அவரும், ஒரு பொழுது எல்லாம் கண் சிவந்து தம் தெரிந்த அம்புகளை நோக்கி, வில்லினை நோக்கி, சினந்து எழுந்து, பின் அது தணிந்து, 'இருவரிடமும் குற்றம் இல்லை' என்று நினைத்து  மனம் குழம்பி பின் தலை கவிழ்ந்தனர்.
 
அரும் சொற் பொருள்: வள்ளி= கிழங்கு; குரல் = திணை; கண் வாங்கு = கண் வைத்து; வாங்கு அமை = வளைந்த மூங்கில்;  காந்தள் = ஒரு மலர்; கேள்வர்= கணவர், ஐயர் = அண்ணன்மார்; சிலை =  வில், சேந்து = சிவந்து; தெருமந்து = கலங்கி
 
தொடரும்.........

வேந்தன் அரசு

unread,
Jan 28, 2007, 9:50:23 PM1/28/07
to sanga...@googlegroups.com
 கபிலரின் குறிஞ்சிக்கலி - 39 ஆம் பாடலின் தொடர்ச்சி...
 
தெரி இழாய்! நீயும் நின் கேளும் புணர,                39-26
வரை உறை தெய்வம் உவப்ப, உவந்து
குரவை தழீஇ யாம் ஆடக் குரவையுள்             
கொண்டு நிலை பாடிக் காண்; 
                       
**தேர்ந்த இழை அணிந்தவளே, நீயும் நின் காதலனும் மணம் செய்துகொள்ள, அந்த மலை உறை தெய்வம் மகிழ நாம் மகிழ்வுடன்  கைகோர்த்து குரவை ஆட, அந்த குரவையினுள் "கொண்டு நிலை  செய்யுள்' பாடிக் காண்போம்.
 
 
        நல்லாய் -                                 39-30
நன்னாள் தலை வரும் எல்லை, நமர் மலைத் 
தம் நாண் தாம் தாங்குவார், என் நோற்றனர் கொல்?
புன வேங்கைத் தாது உறைக்கும் பொன் அறை முன்றில்    
நனவில் புணர்ச்சி நடக்குமாம் அன்றோ?         
நனவில் புணர்ச்சி நடக்கலும் ஆங்கே,
கனவில் புணர்ச்சி கடிதுமாம் அன்றோ? 

தலைவி சொல்லியது: **நல்லவளே, அந்த நன்னாள் நமக்கு வரும் வரை நம் உறவினர் தம் மலை நாட்டிடை தமது வெட்கத்தை தாங்குவார். அவர் அவ்வாறு தாங்கிக்கொள்ள என்ன தவம் செய்தாரோ?
 
கொல்லையில் நிற்கும் வேங்கை மரம் பூந்தாது வீழ்ந்து உறைந்து பொன்னிறமாக காட்சி தரும் முற்றத்திலே, நனவில் அவரொடு சேர்த்து வைக்கும் நிகழ்ச்சி நடக்குமாம் அன்றோ? அவ்வாறு நனவில் புணர்ச்சி நடக்க, இனி கனவிலே நிகழும் கூட்டம் தவிர்க்கலாம் அன்றோ?
 

விண் தோய் கல் நாடனும் நீயும் வதுவையுள்                  39-37
பண்டு அறியாதீர் போல் படர்கிற்பீர்மன் கொல்லோ?  
பண்டு அறியாதீர் போல் படர்ந்தீர் பழம் கேண்மை
கண்டு அறியாதேன் போல் கரக்கிற்பென்மன் கொல்லோ?       

*தோழி சொல்லியது: விண்ணை எட்டும் மலை நாட்டவனும் நீயும் திருமண நிகழ்ச்சியுள், முன்பே அறியாதவர் போல் நடந்து கொள்வீரோ?  முன்பே அறியாதவர் போல் நடந்து கொள்வீராயின், நும் பழைய நட்பை நான் கண்டறியாதவள் போல் மறைத்துக்கொள்வேன் அல்லவோ?

அரும் சொற்பொருள்: தெரி இழாய்= தேர்ந்த அணிகலன்; கேள் - உறவு; புணர்ச்சி = கூட்டம்; வரை, கல், வெற்பு = மலை; குரவை= ஒரு வகை ஆடல், கொண்டுநிலை = ஒரு வகை பாட்டு;  வரும் எல்லை= வரும் வரை; தமர், நமர்= உறவினர்; கடிதல் = ஒறுத்தல், தவிர்தல்; வதுவை = திருமண நிகழ்ச்சி; பண்டு =  முன்பு ஒரு காலத்தில்; படர்தல் = நடத்தல்; கேண்மை = நட்பு; கரக்கிற்பென்= மறைப்பேன்; (கரத்தல் = மறைத்தல்)

தொடரும்.......


 

வேந்தன் அரசு

unread,
Jan 29, 2007, 8:20:55 PM1/29/07
to sanga...@googlegroups.com
கபிலரின் குறிஞ்சிக்கலி - 39 ஆம் பாடலின் தொடர்ச்சி...
 
மை தவழ் வெற்பன் மண அணி காணாமல்,    39-41
கையால் புதை பெறூஉம் கண்களும் கண்களோ? 
என்னைமன், நின் கண்ணால் காண்பென்மன், யான்; 
நெய்தல் இதழ் உண் கண், நின் கண் ஆக, என் கண் மன;  

இருள் மேகம் தவழும் மலை நாட்டவன் மணக்கோலம் காணாமல் வெட்கத்தால் கையால் புதை பெறும் கண்களும் கண்கள் ஆகுமோ?

தலைவி: என்னம்மா, (அவர் மணக்கோலத்தை) நின் கண்ணால் காண்பேன் அன்றோ நான்!

தோழி: நெய்தல் இதழ்போன்ற மை உண்ட நின் கண்ணாக என் கண்கள் மிகவும் ஆவதாக!
 
        என ஆங்கு,                                 39-45
நெறி அறி செறி குறி புரி திரிபு அறியா அறிவனை முந்துறீஇத்,     
தகை மிகு தொகை வகை அறியும் சான்றவர் இனம் ஆக,           
வேய் புரை மென் தோள் பசலையும், அம்பலும், 
மாய புணர்ச்சியும், எல்லாம் உடன் நீங்கச், 
சேய் உயர் வெற்பனும் வந்தனன்; 
பூ எழில் உண் கணும் பொலிக மா இனியே!

**என்று நாம் சொல்லும் காலத்தே, நூல்நெறி அறிந்த, நீங்கள் இருவரும் கூடும் பொழுதை குறித்திட, தப்புதல் ஒருபோதும் அறியாத கணியை (சோதிடன்) முன்வைத்து,  தகைமை மிக்க, தொகுத்தலும் வகுத்தலும் நன்கு அறிந்த சான்றோர்கள் புடை சூழ,  மூங்கில் ஒத்த மெல்லிய உன் தோளில் ஊர்ந்த பசலையும் இவ் ஊரார் அம்பலும், நும் களவு கூட்டமும் எல்லாம் ஒருங்கே இனி நீங்க,  நீண்டு உயர்ந்த மலையின் நாடனும் வந்தானே! பூப்போன்ற அழகும் மை உண்ட கண்ணும் இனி பொலிவதாக!

 
அரும் சொற் பொருள்: மை= மேகம், முகில்;
மண அணி = திருமணக்கோலம்; 
நெய்தல் = ஒரு மலர்; உண்கண் = மையுண்ட கண்;
 
நின் கண் ஆக, என் கண் மன-  என் கண்கள் உன் கண்கள் (மிகவும்) ஆவதாகுக;
 
நெறி அறி = நூல் நெறி
செறி குறி = சேரும் நாள் (முகூர்த்தம்)
புரி திரிபு அறியா =  தவறுதல் அறியா
அறிவனை = கணி
முந்துறீஇத் = முன்னிறுத்தி
தகை மிகு = அழகு மிகு
தொகை வகை = தொகுத்தல், வகுத்தல்
வேய்புரை = மூங்கில் ஒப்ப
அம்பலை = அலர்
சேய் உயர் = தொலைவான உயரம்
உண் கணும் = மை உண்ணும் கண்
பொலிக = தோற்றம் சிறக்க
 
கபிலரின் குறிஞ்சிக்கலி - 39 ஆம் பாடல் முற்றும்

வேந்தன் அரசு

unread,
Feb 4, 2007, 11:06:56 AM2/4/07
to sanga...@googlegroups.com

கபிலரின் குறிஞ்சிக்கலி - 40 ஆம் பாடல்.

அகவினம் பாடுவாம், தோழி!  அமர்க் கண்            40-1
நகை மொழி, நல்லவர் நாணும் நிலை போல்,              
தகை கொண்ட ஏனலுள் தாழ் குரல் உரீஇ,           
முகை வளர் சாந்து உரல், முத்து ஆர் மருப்பின்              
வகை சால் உலக்கை வயின் வயின் ஓச்சிப்,       40-5           
பகை இல் நோய் செய்தான் பய மலை ஏத்தி,              
அகவினம் பாடுவாம், நாம்.       

**மனதில் தோன்றின எல்லாம் பாடலாம் தோழி! முகத்துக்கு ஏற்ற கண்களும், மகிழ்ச்சி கொண்ட மொழியும் உடைய நல்ல மகளிர் நாணும் தன்மையை போல்,  அழகான தினைப்புனத்தில் முற்றி தாழ்ந்த தினையை உருவி,  அரும்பு முகை வளர்ந்த சந்தன உரலில் இட்டு, முத்து பதிந்த யானை கொம்பால் வகையாக வடித்த உலக்கையை மாற்றி மாற்றி ஓங்கி இட்டு, பகை இல்லாத நோயான காதல் நோயை நமக்கு செய்தவனின் பயன் விளையும் மலையை வாழ்த்தி, அகவினம் பாடுவோம் நாம்.

ஆய் நுதல், அணி கூந்தல், அம் பணைத் தட மென் தோள்
தேன் நாறு கதுப்பினாய்! - யானும் ஒன்று ஏத்துகு -
வேய் நரல் விடர் அகம் நீ ஒன்று பாடித்தை;   40-10
கொடிச்சியர் கூப்பி வரை தொழு கை போல்,             
எடுத்த நறவின் குலை அலங்கு காந்தள்          
தொடுத்த தேன் சோரத், தயங்கும் - தன் உற்றார்     
இடுக்கண் தவிர்ப்பான் மலை;                            

** அழகிய நுதல், அழகிய கூந்தல், அழகிய மூங்கில் போலவும் அகன்ற மெல்லிய தோளும், தேன் மலர் நாறும் கன்னங்களும் உடையவளே! நானும் ஒன்று வாழ்த்துவேன்! மூங்கில் ஒலிக்கும் மலையகம் பற்றி நீ ஒன்று பாடுக!

தோழி பாடுவாள்:" கொடிச்சியர் கூப்பி முருகனின் மலையை தொழும் கைகள் போல, உயர்ந்த தேன்கொண்ட குலை ஆட காந்தள் மலரில் வைத்த தேன் ஒழுக அம்மலர்கள் அசையும் - அவனை சேர்ந்தவர்களின் துயரை தீர்ப்பானுடைய மலை."

(காந்தள் அசைவது கொடிச்சியர் முருகனை கூப்பி தொழும் கை போல தோன்றும்)

அரும் சொற் பொருள்: அகவினம் = மனதில் தோன்றினவற்றை குரலெடுத்து பாடும் பாட்டு. அமர் = பொருத்தமான; தட = அகன்ற; நரல் = ஒலிக்கும்; விடர் = மலை;  கொடிச்சியர்=  குறிஞ்சி நில பெண்டிர்; நறவு = தேன்; சோர = ஒழுக; வகை சால் = நன்கு வகுத்த(வடித்த); வயின் வயின் = (நீயும் நானும்) மாற்றி மாற்றி; ஓச்சி = ஓங்கி
 
கல்லாக் கடுவன் கணம் மலி சுற்றத்து,            40-15
மெல் விரல் மந்தி குறை கூறும் செம்மற்றே -  
தொல் எழில் தோய்ந்தார் தொலையின், அவரினும்
அல்லல் படுவான் மலை; 

**கல்லாத ஆண் குரங்கு, பெரிய கூட்டமான சுற்றத்தாரிடம் சென்று தன் மெல்லிய விரலால் ஒரு பெண்குரங்கினை சுட்டி ,'இவளை எனக்கு மகட்கொடை தருக' என்றுணர்த்தும் தன்மையை கொண்டது அல்லவோ,  தான் கூடின மகளிரின் பழைய எழில் வாடினால், அவர்களை விட தான் மிகவும் வருந்துகிற நம் தலைவனுடைய நாட்டின் மலை!!

அரும் சொற்பொருள்: கடுவன் = ஆண் குரங்கு; மந்தி= பெண்குரங்கு; செம்மற்று= தன்மையானது; தொல் = தொன்மை

புரி விரி, புதை துதை, பூத்ததைந்த தாழ் சினைத்      40-19
தளிர் அன்ன எழில் மேனி தகை வாட, நோய் செய்தான்
அரு வரை அடுக்கம் நாம் அழித்து ஒன்று பாடுவாம்;

**தலைவி: முறுக்கு விரிந்து, மறைந்தும் செறிந்தும் உள்ள,  பூக்கள் அடர்ந்த, தாழ்ந்த சினையில் உள்ள தளிர்கள் போன்ற அழகிய மேனி, அதன் தகைமை வாட நமக்கு நோய் செய்தவனுடைய அரிய மலைத்தொடரை நாம் பழித்து ஒன்று பாடுவோம் .

அரும் சொற்பொருள்: புரி = முறுக்கு அல்லது கூம்புதல், புதை = மறைந்த; துதை; அடர்ந்த; ததை; நெருங்கிய; வரை அடுக்கம் =  மலைத்தொடர்; அழித்து = உண்மை அழித்து மற்றதை கூறல்.

விண் தோய் வரைப், பந்து எறிந்த அயா வீடத்,           40-22
தண் தாழ் அருவி, அரமகளிர், ஆடுபவே - 
பெண்டிர் நலம் வௌவித் தண்சாரல் தாது உண்ணும்
வண்டின் துறப்பான் மலை;        

**விண்ணை தீண்டும் மலைப்பக்கத்தில், பந்து எறிந்து ஆடிய அயர்ச்சி அழிய, குளிர்ந்து பாயும் அருவியில் , தேவ மகளிர்கள் ஆடுவார்களே - தன் காதலியின் அழகை கவர்ந்து பின், குளிர்ச்சியான மலைச்சாரலில் மலர்தேன் உண்ணும் வண்டினைப்போல அவர்களை துறந்து செல்கின்றவனுடைய மலையில்.

அரும் சொற்பொருள்: தோய்= தொடும், தீண்டும்; அயா = அலைச்சல்; அரமகளிர் = அரம்பையர்; வெளவி = கவர்ந்து ( பிரிவால் அழகு வாட) ; தண்சாரல் = குளிர்ந்த மலைச்சாரல்; தாது = தேன்.

ஒடுங்கா எழில் வேழம் வீழ் பிடிக்கு உற்ற           40-26
கடுஞ் சூல் வயாவிற்கு அமர்ந்து, நெடுஞ் சினைத்
தீம் கண் கரும்பின் கழை வாங்கும் - 'உற்றாரின்
நீங்கலம்' என்பான் மலை;

**தோழி: (அதே நேரத்தில்) ஒடுக்கம் இல்லாத அழகிய ஆண்யானை தான் விரும்பிய பெண் யானை உற்ற கடுமையான சூலால் உண்டான மசக்கைக்கு கருணை கொண்டு, நெடிய கொம்புகளின் கணுக்களில் முளைத்த இனிய கரும்பு போன்ற மூங்கில்களை வளைத்து கொடுக்கும், 'தன்னை சேர்ந்தவர்களை என்றும் நீங்க மாட்டோம்' என்று சொல்லும் தலைவனுடைய மலை.

அரும் சொற்பொருள்:ஒடுங்கா = மடிப்புக்கள் இல்லாத; வேழம் = களிறு; வீழ்  = விரும்பிய; வயா= மசக்கை அல்லது சூல் காலத்து தோன்றும் ஆசை; கழை = மூங்கில்; கண்= மூங்கில் கணு; தீம் = இனிய; நீங்கலம் = நீங்க மாட்டேன்.


        என நாம்,                           
தன் மலை பாட, நயவந்து கேட்டு அருளி,             40-31
மெய் மலி உவகையன் புகுதந்தான் - புணர்ந்து ஆரா
மென் முலை ஆகம் கவின் பெறச்
செம்மலை ஆகிய மலை கிழவோனே!
                

**என்று நாம் ,
தன்னுடைய மலையை நாம் பாட, விரும்பி வந்து, கேட்டு, நம்மேல் கருணை கொண்டு, உண்மையான மகிழ்ச்சியுடன் வந்து நின்றானே, தழுவி மகிழ்ந்தறியா மெல்லிய முலை கொண்ட மார்பு அழகு பெறச்செய்யும் பெருந்தன்மை கொண்டவன் ஆனான், அந்த மலைக்கு உரிமையானவன்.

அரும் சொற்பொருள்: நய வந்து = நயந்து, விரும்பி; மெய்மலி= உண்மை மிகுந்த; புகுதந்தான் = திருமணம் பேச வந்து நின்றான். புணர்ந்து ஆரா= தழுவி மகிழா; செம்மலை = செம்மல் ஆனவன், செவ்விய தன்மையன்; மலை கிழவோன் = மலைக்கு உரிமையானவன்.  

கபிலரின் குறிஞ்சிக்கலி - 40 ஆம் பாடல் முற்றும்.

 

வேந்தன் அரசு

unread,
Feb 7, 2007, 11:04:45 PM2/7/07
to sanga...@googlegroups.com

கபிலரின் குறிஞ்சிக்கலி - 41 ஆம் பாடல்.

பாடுகம், வா - வாழி, தோழி! வயக் களிற்றுக்                41-1
கோடு உலக்கை ஆக, நல் சேம்பின் இலை சுளகா
ஆடு கழை நெல்லை அறை உரலுள் பெய்து, இருவாம்
பாடுகம், வா - வாழி, தோழி! நல் தோழி! - பாடுற்று;     

**நாம் பாடுவோம் வா, நீ வாழ்வாயாக தோழி! வலிமை கொண்ட யானையின் கொம்பினை உலக்கை ஆக்கி, நல்ல சேம்பு செடியின் இலையால் உரலை சுற்றி மறைத்து, அசைகின்ற மூங்கிலில் விளைந்த நெல்லை குற்றுதற்கான உரலுள் இட்டு, நாம் இருவரும் பாடுக்கொண்டே, வா தோழி, நல்ல தோழி, குற்றுவோம்.

அரும் சொற்பொருள்: வயக்களிறு = வலிமை கொண்ட ஆண்யானை;  கோடு = தந்தம்; சுளகு= சுற்றி அமைக்கும் காப்பு, (முறங்களில் சிறிய வகை என்றும் கருதப்படும்); கழை= மூங்கில்; அறை =குற்றுதல் (பாறையில் அமைந்த உரல் எனவும் சொல்வர்); பாடுற்று = அழகு பெற;

இடி உமிழ்பு இரங்கிய விரவு பெயல் நடுநாள்,                  41-5
கொடி விடுபு இருளிய மின்னுச் செய் விளக்கத்துப்,  
பிடியொடு மேயும் புன்செய் யானை 
அடி ஒதுங்கு இயக்கம் கேட்ட கானவன், 
நெடு வரை ஆசினிப் பணவை ஏறிக் 
கடு விசை கவணையில் கல் கை விடுதலின், 
இறு வரை வேங்கையின் ஒள் வீ சிதறி,
ஆசினி மெல் பழம் அளிந்தவை உதிராத், 
தேன் செய் இறாஅல் துளைபடப் போகி,
நறு வடி மாவின் பை துணர் உழக்கிக்,
குலை உடை வாழைக் கொழு மடல் கிழியாப், 
பலவின் பழத்துள் தங்கும், மலை கெழு வெற்பனைப்
பாடுகம், வா - வாழி, தோழி! நல் தோழி! - பாடுற்று; 

இடி உமிழ்தால் ஒலித்து, எங்கும் கலந்து, மழையால் இருண்ட நடுநாளில், கொடி விடுவது போல் மின்னுவதால் உண்டான வெளிச்சத்தில், தன் பெண்யானையுடன் புன்செய் நிலத்தில் களிறுகள் மேயும். அவ் யானைகளின் காலடி இயக்கம் கேட்ட கானவன், நெடிய மலையில்  வளர்ந்த பலா மரத்தின் மேல் அமைத்த பரண் மேல் ஏறி கடுமையான வேகம் கொண்டு கவணையால் கல்லை எறிவான்.
அந்த கல்,
மலைப்பிளவில் வளர்ந்த வேங்கை மரத்தின் ஒளிபொருந்திய மலர்கள் சிதறவும், 
பலாமரத்தின் மெலிந்த பழங்களில் ஞெகிழ்ந்தவை உதிரவும்,
தேனை தருகின்ற இறால் துளைபடவும், மணமும் வடிவமும் உள்ள மா இலையின் பசிய கொத்துக்களை சிதறச்செய்யவும்,
குலையை உடைய வாழையின் கொழுவிய இலையை கிழிக்கவும் செய்து பின்,
பலாமரத்தின் பழத்துள் சென்று தங்கும். அப்படிப்பட்ட மலைகள் பொருந்திய மலைநாடனை அழகுபெற பாடுவோம், வா தோழி, நல்ல தோழி!
அரும் சொற்பொருள்:  இரங்கிய = ஒலித்த; விரவு= கலந்த; பெயல்= மாரி; ஆசினி= ஒருவகை பலா; பணவை = பரண்; இறுவரை = மலைபிளவு;  ஒள் வீ = ஒளிமிக்க மலர்கள்; அளிந்த= நெகிழ்ந்த; இறால் = தேனடை; பை = பசுமை; துணர்= கொத்து; உழக்கி = உதிர்த்து;  கிழியா = கிழித்து; மலைகெழு= மலைகள் பொருந்திய; வெற்பன் = மலை நாடன்; வெற்பு மலை;
 
தொடரும்.

வேந்தன் அரசு

unread,
Feb 8, 2007, 10:09:08 PM2/8/07
to sanga...@googlegroups.com
கபிலரின் குறிஞ்சிக்கலி - 41 ஆம் பாடல் தொடர்ச்சி.
 
இலங்கும் அருவித்து, இலங்கும் அருவித்தே;           41-18
வானின் இலங்கும் அருவித்தே - தான் உற்ற
சூள் பேணான் பொய்த்தான் மலை;

**தலைவி:  "தோன்றும் அருவி உடையதே; விளங்கித் தோன்றும் அருவி உடையதே; மழையின்  காரணமாக  தோன்றும் அருவி உடையதே- தான் சொல்லிய உறுதிமொழி
நிறைவேற்றாமல் பொய் சொல்லியவனுடைய மலை." (பொய் வலாளனுடைய் மலையிலும் மழை பெய்யுமா? அருவி பாய்கிறதே!)

பொய்த்தற்கு உரியனோ? பொய்த்தற்கு உரியனோ?   41-21
'அஞ்சல் ஓம்பு' என்றாரைப் பொய்த்தற்கு உரியனோ?
குன்று அகல் நல் நாடன் வாய்மையில் பொய் தோன்றின்
திங்களுள் தீத் தோன்றியற்று;

**தோழி: தன் சூளுரையை தலைவன் பொய்த்தல் செய்பவனோ? பொய்த்தல் செய்பவனோ? 'அஞ்சுதல் தவிர்' என்று நம்மை சொல்லியவர் பொய்த்தல் செய்பவனோ? மலை அகன்ற நாட்டை உடைய்வன் வாய்மையில் பொய் தோன்றினால் நிலவில் தீ தோன்றியது என்று சொல்வதற்கு ஒப்பாகும். ( அவ்வாறு கூறாதே என்பதாகும்)

இள மழை ஆடும்; இள மழை ஆடும்;                 41-25
இள மழை வைகலும் ஆடும் - என் முன்கை
வளை நெகிழ வாராதோன் குன்று;

** தலைவி: புதிய மேகங்கள் ஆடும்; புதிய மேகங்கள் ஆடும்;
புதிய மேகங்கள் நாள்தோறும் ஆடுமே, என்னுடைய முன்னம் கையில் உள்ள வளைகளை நெகிழ்ந்து விழவும், இன்னும் வாராவனுடைய மலையில்?

வாராது அமைவானோ? வாராது அமைவானோ?                  41-28
வாராது அமைகுவான் அல்லன்; மலை நாடன்,
ஈரத்துள் இன்னவை தோன்றின், நிழல் கயத்து
நீருள் குவளை வெந்தற்று;  

**தோழி: வாராது இருப்பானோ; வாராது இருப்பானோ; வாராது இருப்பவன் அல்லன் அவன்; அந்த மலைநாடன் ஈர நெஞ்சிலே இத்தன்மையான செயல்கள் தோன்றின என்றால் குளிர்ந்த நீருக்குள்  மலர்ந்த குவளை மலர் வெந்துவிட்டது என்பதற்கு ஒப்பாகும். (எனவே அவன் வருவான்.)
 
 
அரும் சொற் பொருள்: இலங்கும் = விளங்கும்; அருவித்தே = அருவியை உடைத்தே; வான் = மழை; பேணான்= காப்பாற்றாதவன்; வைகல் = தினமும்; ஓம்பு = தவிர்; ஈரம் = கருணை; கயம் = குளம்;
 
தொடரும்........

வேந்தன் அரசு

unread,
Feb 9, 2007, 9:01:51 PM2/9/07
to sanga...@googlegroups.com
கபிலரின் குறிஞ்சிக்கலி - 41 ஆம் பாடல் தொடர்ச்சி..

மணி போலத் தோன்றும்; மணி போலத் தோன்றும்;       41-32
மண்ணா மணி போலத் தோன்றும் - என் மேனியைத் 
துன்னான் துறந்தான் மலை; 
       
தலைவி:நீல மணியை போல தோன்றும்; நீல மணியை போல தோன்றும்;
கழுவாத நீல மணியை போல தோன்றும்; என் மேனியை
தழுவாது துறந்தவனுடைய மலை. (மலை மணிபோல் ஒளிரும் என்றால் அங்கே மழை பெய்கிறதே?)

துறக்குவன் அல்லன்; துறக்குவன் அல்லன்;              41-35
தொடர் வரை வெற்பன் துறக்குவன் அல்லன் -  
தொடர்புள் இனையவை தோன்றின், விசும்பில்
சுடருள் இருள் தோன்றியற்று;


தோழி: நம்மை தலைவன் கைவிடுவான் அல்லன்; கைவிடுவான்அல்லன்;
மலைத்தொடருக்கு உரிமையான வெற்பன் நம்மை கைவிடுவான் அல்லன்-
அவன் நம்மோடு கொண்ட நட்புள் இவையெல்லாம் தோன்றினால், வானத்து
சுடரான கதிரவனுள் இருள் தோன்றியது போலாகும்.  ( எனவே நீ அங்கனம் கூறாதே!)

        என ஆங்கு,                         41-39
நன்று ஆகின்றால் -தோழி! நம்  வள்ளையுள்             41-40
ஒன்றி நாம் பாட, மறை நின்று  கேட்டு அருளி,
மென் தோள் கிழவனும் வந்தனன்; நுந்தையும்
மன்றல் வேங்கைக் கீழ் இருந்து,
மணம் நயந்தனன், அம் மலை கிழவோற்கே.

**இங்கனமாக,
நன்று நடந்ததே, தோழி! நாம் நம் வள்ளை பாட்டில் ஒன்றி பாட, மறைந்து நின்று கேட்டு நம் மேல் கருணை கொண்டு. நம் மெல்லிய தோள்களுக்கு உரிமையானவன் வந்தானே! உன் தந்தையும்  மணத்தையுடைய வேங்கை மரத்தின் கீழே இருந்து விரும்பி திருமணம்  முடித்தான், உன்னை அந்த மலை நாட்டவனுக்கே!

அரும் சொற்பொருள்: மண்ணா = கழுவாத; துன்னான் = சேரான்; இனையவை= இவை போன்றவை; கிழவன் = உரிமை யுடையவன்;  நயந்தனனன் இசைந்தனன்

கபிலரின் குறிஞ்சிக்கலி - 41 ஆம் பாடல் முற்றும்.

வேந்தன் அரசு

unread,
Mar 4, 2007, 6:32:28 PM3/4/07
to sanga...@googlegroups.com
கபிலரின் குறிஞ்சிக்கலி - 42 ஆம் பாடல்  

மறம் கொள் இரும் புலித் தொல் முரண் தொலைத்த 42-1
முறம் செவி வாரணம் முன் குளகு அருந்திக்

கறங்கு வெள் அருவி ஓலின் துஞ்சும்

பிறங்கு இரும் சோலை நல் மலை நாடன்

மறந்தான் ; மறக்க; இனி , எல்லா! நமக்குச்

சிறந்தமை நாம் நற்கு அறிந்தனம்; ஆயின், அவன் திறம்
கொல் யானைக் கோட்டால் வெதிர் நெல் குறுவாம் நாம்
வள்ளை அகவுவம் வா , இகுளை! நாம்
வள்ளை அகவுவம் , வா

காணிய வா - வாழி தோழி! - வரைத் தாழ்பு - 42-10
வாள் நிறம் கொண்ட அருவித்தே , நம் அருளா

நாண் இலி நாட்டு மலை;

*வீரம் கொண்ட பெரிய புலியின் பழைய எதிர்ப்பை தொலைத்த முறம் போன்ற செவிகளை உடைய யானையானது இளைய பசிய இலைகளை உண்டு,  ஒலிக்கின்ற வெள்ளை அருவியின் ஓசையில் தூங்கும்

அதுபோலும் வளம்மிக்க அடர்ந்த சோலையை கொண்ட நம் மலைநாடன் நம்மை மறந்தான். மறந்து போகட்டும்! . இனி, அடியே! அவர் நமக்கு மிக வேண்டியவர் என்பதை நாம் நன்கு உணர்ந்துள்ளோம். இருப்பினும்அவனுடைய கொடுமையை, கொல்லும் தொழில் கொண்ட யானையின் கொம்பினால் மூங்கில் நெல்லை குற்றுகின்ற நாம் வள்ளை பாடலால் இசைப்போம் . தோழி! வள்ளை பாடலால் இசைப்போம் வா!

காண வா!

- வாழி தோழி! மலையிலிருந்து தாழ்ந்துவரும் வெள்ளை நிறம் கொண்ட அருவியை கொண்டு விளங்குதே . நமக்கு அருள் செய்யாத, வெட்கம் இல்லாதவனுடைய , நாட்டின் மலை!

 அரும் சொற்பொருள்:

தொல் = பழைய ; முரண் = மாறுபாடு, பகைமை ; வாரணம் = யானை; குளகு = தழை உணவு; முன் குளகு = கொழுந்து இலை ; கறங்கு= ஒலிக்கின்ற; ஓல் = தாலாட்டு ஓசை; பிறங்கு = வளம்மிக்க; இரும்புலி = பெரிய புலி ; இரும் சோலை= கரிய, அடர்ந்த சோலை; நற்கு = நன்கு; அவன் திறம் = அவன் செய்தவை (இங்கு கொடுமையை) யானைக்கோடு = யானை கொம்பு ; வெதிர் = மூங்கில் ; குற்றுவாம் = குற்றுவோம்; வள்ளை - உலக்கை பாட்டு ; இகுளை = தோழி. எல்லா = அழைக்கும் சொல்; அகவுதல் = பாடுதல்; வரை= மலை; தாழ்பு = இழிந்து வரும்; வாள் = ஒளிமிகு ; வெண்மை; அருவித்தே= அருவியை உடையதே

வேந்தன் அரசு

unread,
Mar 6, 2008, 6:41:36 PM3/6/08
to sanga...@googlegroups.com
கபிலரின் குறிஞ்சிக்கலி - 42 ஆம் பாடல்   தொடர்ச்சி

ஆர்வுற்றார் நெஞ்சம் அழிய விடுவானோ -              42-13
ஓர்வு உற்று ஒரு திறம்  ஒல்காத நேர்கோல்
அறம் புரி நெஞ்சத்தவன்?

*தன்னால் நுகரப்பட்டவர் நெஞ்சம் அழியுமாறு செய்வானோ?  தானே ஒரு முடிவாக கொண்டு ஒரு பக்கம் சாயாத நேர்மையினை உடையது துலாக்கோல். அதுபோல, அவனும் சொல் தவறாத நேர்மையாளன். அறம் நிறைந்த நெஞ்சினன்.

தண் நறும் கோங்கம் மலர்ந்த வரை எல்லாம்      42-16
பொன் அணி யானை போல்  தோன்றுமே - நம் அருளாக்
கொன்னாளன் நாட்டு மலை;

*குளிர்ந்த மணமுள்ள கோங்கு மலர்ந்து உதிர்வதால் மலைகள் எல்லாம் பொன் அணி சூடிய மதயானைகளைப் போல தோன்றுகின்றனவே!  நமக்கு அருளாமல் வறிதே ஆளுகின்றவனுடைய நாட்டின் மலைகள்!

 கூரு நோய் ஏய்ப்ப விடுவானோ? - தன் மலை       42-19
 நீரினும் சாயல் உடையன்,  நயந்தோர்க்குத் 
 தேர் ஈயும் வண் கையவன்; 

* பெருகும் நோய் நம்மை வருத்த விடுவானோ? அவன் மலை அருவி நீரினும் இனிய தன்மையை உடையவன், (அவனிடம் சென்று) வேண்டியவருக்குத் தேரும் கொடுக்கும் வள்ளல் தன்மை உடையவன்?

 வரை மிசை மேல் தொடுத்த நெய் கண் இறாஅல்   42-22
 மழை நுழை திங்கள் போல் தோன்றும் - இழை நெகிழ
 எவ்வம் உறீஇயினான் குன்று; 

*அவன் மலை மேல் உயரத்தே கட்டிய தேன் கொண்ட தேன்கூடு மேகத்துள் நுழைகின்ற திங்கள் போல தேன்றுமே!  என் அணிகலன்கள் நெகிழ்ந்து போகும் அளவு துன்பத்தை கொடுத்தவனுடைய குன்று!


 எஞ்சாது, எல்லா! கொடுமை நுவலாதி -                 42-25
 அஞ்சுவது அஞ்சா அறன் இலி அல்லன், என்
 நெஞ்சம் பிணிக்கொண்டவன்!

*ஒன்று மிச்சம் இல்லாமல், அடியே, அவன் செய்யும் கொடுமைகளை சொல்லாதே. என் நெஞ்சத்தை தன் அன்பால் பிணித்துக் கொண்ட அவன், அஞ்சுவது அஞ்சாத அன்பு இல்லாதவன் அல்ல.

 என்று யாம் பாட, மறை நின்று கேட்டனன்;            42-28
 தாழ் இரும் கூந்தல் என் தோழியைக் கை கவியாச்,
 சாயல் இன் மார்பன் சிறுபுறம் சார்தர, 
 ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது என்                
 ஆய் இழை மேனிப் பசப்பு.  

*இவ்வாறு நாங்கள் பாட, மறைவிலே நின்று காதலனும் கேட்டு விட்டான். கேட்டவன்,  தாழ்ந்த கரிய கூந்தலை உடைய என் தோழியை  கைகவித்து பின்புறத்தை தன் இனிய சாயல் மார்பிலே அணைக்க, ஞாயிற்றின் முன்னர் இருள்போல,  தேர்ந்த அணிகலன்களை அணிந்தவளுடைய மேனியின் பசலை மறைந்துவிட்டனவே!


சொற்பொருள்:

மறம் -வீரம்;   இரும் -பெரிய;  தொன்முரண் -பழம் பகை; குளகு -தழை உணவு; கறங்கு -ஒலிக்கின்ற;  ஒலி -தாலாட்டுதல் போன்ற அருவி ஒலி; பிறங்கு -வளம் பெருகும்; மறக்க - மறப்பானாக; நற்கு -நன்கு; வெதிர் -மூங்கில்; நாண் இலி - நாண் அற்றவன்; ஓர்வு உற்று -ஆராய்தலை மேற்கொண்டு;   ஒல்காத - சாயாத; கொன் -பயன் இன்மை; ஆளான் - செய்பவன்; அஃதாவது பயனில் செயல் புரிபவன். கூரும் நோய் - மிக்க நோய்;  ஏய்ப்ப -அடைய; நெய்க்கண் இறால் -தேன் நிறைந்த தேனடை; எவ்வம் -துன்பம்;  உறீஇயினான் - தந்தவன்; எல்லா -ஏடீ!

 



வேந்தன் அரசு

unread,
Mar 6, 2008, 7:01:05 PM3/6/08
to sanga...@googlegroups.com
 
கபிலரின் குறிஞ்சிக்கலி - 43 ஆம் பாடல்
 
 
வேங்கை தொலைத்த வெறி பொறி வாரணத்து                43-1
ஏந்து மருப்பின், இன வண்டு இமிர்பு ஊதும்
சாந்த மரத்தின், இயன்ற உலக்கையால், 
ஐவன வெண் நெல் அறை உரலுள் பெய்து, இருவாம்,
ஐயனை ஏத்துவாம் போல,  அணிபெற்ற மை படு சென்னிப் பய மலை
நாடனைத்  தையலாய்! பாடுவாம் நாம்;
 
விளக்கம்: வேங்கையை வென்ற மதம் கொண்ட புள்ளிகள் தோன்றும் முகத்து யானையின் கொம்பு,  (மற்றும்) வண்டுகளின் குழாம்
ஒலித்துக்கொண்டு தேன் ஊதும் சந்தனமரம் ஆகியவற்றால் செய்த உலக்கைகளை கொண்டு, ஐவனம் என்ற வெண்மை நெல்லை  பாறை
உரலுள் இட்டு (நாம் இருவரும்) குற்றி, முருக கடவுளை போற்றுகின்றவர் போல் பாவித்து கரிய மேகம் தவழ்கின்ற உச்சிகளை உடைய
அழகிய, பயன்மிக்க, நம் மலை நாட்டவனை, தையலே!, நாம் பாடுவோம்.
 
அரும்சொற்பொருள்:
வெறி -மதம்.
இமிர்பு -ஒலித்து.
அறை உரல் - அறையப்படுகின்ற உரல் அல்லது பாறை உரல்
இருவாம் -  குற்றுவோம்.
ஐயன் -முருகன்
மை -கரு மேகம்.
படு -உண்டாகி நின்ற.
சென்னி - தலை
பயமலை -பயன் தரும் மலை.
 
 தகையவர் கைச் செறித்த தாள் போலக் காந்தள்           43-8
 முகையின் மேல் தும்பி இருக்கும் - பகை எனின்,
 கூற்றம் வரினும் தொலையான்,  தன் நட்டார்க்குத்
 தோற்றலை நாணாதோன் குன்று;
 வெருள்பு உடன் நோக்கி,  வியல் அறை யூகம்,
 இருள் தூங்கு இறு வரை ஊர்பு இழிபு ஆடும்
 வருடைமான் குழவிய வள மலை நாடனைத்
 தெருளத் தெரி இழாய்! - நீ ஒன்று பாடித்தை; 
 
விளக்கம்: அழகிய தகைமையுள்ள பெண்கள் கைவிரலில் மாட்டிய கடகம் போலக் காந்தள் முகையின்மேல் தும்பி அமர்ந்து இருக்கும். அது
மலர்வதை நோக்கிக் காத்திருப்பதனைப் பாராய்!    பகையாக  எமனே வந்தாலும் அவன் தோற்றுவிட மாட்டான். (ஆனால்) தனக்கு நட்பு
ஆனவருக்கு பணிதலை வெட்கப்பட மாட்டான்.  அவன் மலையைப் பார்! 
அகன்ற பாறை மேல் உள்ள குரங்கினை அச்சத்துடன் நோக்கி, இருள் தூங்குகின்ற மலைச்சாரலில் ஏறி இறங்கி ஆடும் வருடை மானின்
குழவியை உடைய வளமான மலை நாடனை, பொலிகின்ற, தேர்ந்த இழைஅணிகளை உடையவளே,  நீ ஒன்று பாடுக.
 
அரும் சொற்பொருள்:
தகையவர் -நல்ல தகைமை உடைய மகளிர்.
செறித்த -அணிந்த.
தாள் -விரல் அணி.
முகை -அரும்பு.
வெருள்பு -மருண்டு.
யூகம் -கருங்குரங்கு.
இருள் தூங்கு -இருள் நிறைந்த.
ஊர்புஇழிபு -ஏறி இறங்கி.
தெருள -விளங்க, பொலிய
பாடித்தை -பாடி அருள்க.
  
 நுண் பொறி மான் செவி போல,  வெதிர் முளைக்           43-16
 கண் பொதி பாளை கழன்று உகும்  பண்பிற்றே -
 மாறு கொண்டு ஆற்றார் எனினும், பிறர் குற்றம்
 கூறுதல் தேற்றாதோன் குன்று;
 புணர் நிலை வளகின் குளகு அமர்ந்து உண்ட
 புணர் மருப்பு எழில் கொண்ட வரை புரை செலவின்
 வயங்கு எழில் யானைப் பய மலை நாடனை -
 மணம் நாறு கதுப்பினாய்! - மறுத்து ஒன்று பாடித்தை;
 
விளக்கம்: நுணுக்கமாக கேட்கும் தன்மை கொண்ட மானின் காதுகளைப் போல, மூங்கில் முளைகளிலிருந்து (மூங்கில்) கண்கள் பொதிந்த பாளை
கழன்று விழும் தன்மை கொண்டதே -  தன்னை எதிர்த்து எவரும் வெற்றிபெறவே முடியாது என்றாலும், அதற்காக பிறரை குறைவாகப்
பேசும் இயல்பு கொள்ளாதவனின் குன்று.
 
பிடியொடு கூடி திரியும் தன்மை கொண்ட, வளகு என்னும் பயிரின் தழையை ஆற அமர்ந்து உண்ட, இணையான கொம்புகளொடு, அழகிய
மலை போல் நடந்து திரிகின்ற, எழில் விளங்கும் யானைகளை பயந்த மலை நாடனை, மணம் நாறும் கூந்தலினை உடையவளே! மறுத்து,
நீயும் ஒரு பாட்டுப் பாடுக!
 
அரும் சொற்பொருள்:
நுண்பொறி -மெல்லிய ஒலிகளையும் கேட்கவல்ல உறுப்பு.

வெதிர் -மூங்கில்
புணர் மருப்பு - இணை கொம்புகள்
மாறுகொண்டு -மாறுபட்டு.
தேற்றாதோன் -தெளியாதவன்.
வளகு -ஒருவகைத் பயிர்.
குளகு - தழை
வரைபுரை -மலையை ஒத்த.
வயங்கு எழில் -விளங்குகின்ற அழகு.
கதுப்பு - கூந்தல்
 
 கடும் கண் உழுவை அடி போல  வாழைக்              43-24
 கொடும் காய் குலை தொறூஉம் தூங்கும் - இடும்பையால்
 இன்மை உரைத்தார்க்கு, அது நிறைக்கல் ஆற்றாக்கால், 
 தன் மெய் துறப்பான் மலை;
        என ஆங்கு,
 கூடி அவர் திறம் பாட, என் தோழிக்கு
 வாடிய மென் தோளும் வீங்கின - 
 ஆடு அமை வெற்பன் அளித்தக்கால் போன்றே!
 
விளக்கம்: கொடுங்கண்களையுடைய புலியின் கால் அடிகள் போல, வாழையின்  வளைந்த காய்கள் குலைகளிலே தொங்கும் - வறுமையால் வாடி
வந்து, தம் இல்லாமையை அவனிடம் சொல்வாருக்கு, அதனைப் போக்கி அவரை நிறைவுடையவர் ஆக்காமற் போனால் தன் உடலையே
போக்கிவிடும் இயல்பை உடையவனது மலையைப் பாராய்!
 
     என் இவ்வாறு,
அங்கே நாங்களிருவரும் கூடி, அவன் பெருமையைப் பாட,
அவளுடைய வாடிய மென்மையான தோள்களும் பூரித்தன - அசைந்தாடும் மூங்கில்கள் நிறைந்த மலைநாடன், நேரிலேயே வந்து அருள்
செய்துவிட்டது போலவே!

அரும் சொற்பொருள்:
உழுவை -புலி.
கொடுங்காய் -வளைந்த காய்.
தூங்கும் -தொங்கும்.
ஆடு அமை -அசைகின்ற மூங்கில்.
வெற்பன் - மலைநாடன்
நிறைக்கல் ஆற்றாக்கால் - நிறைவு செய்தால் இயலாக்கால்
இடும்பை - துன்பம்

வேந்தன் அரசு

unread,
Mar 16, 2008, 11:35:22 PM3/16/08
to sanga...@googlegroups.com, seethaalakshmi subramanian
கபிலரின் குறிஞ்சிக்கலி - 44 ஆம் பாடல்
 
கதிர் விரி கனை சுடர்க் கவின் கொண்ட நனம் சாரல்    44-1
எதிர் எதிர் ஓங்கிய மால் வரை அடுக்கத்து,              
அதிர் இசை அருவி தன் அம் சினை மிசை வீழ,          
முதிர் இணர் ஊழ் கொண்ட முழவுத் தாள் எரி வேங்கை,      
வரி நுதல் எழில் வேழம் பூ நீர் மேல் சொரிதரப்,            
புரி நெகிழ் தாமரை மலர் அம் கண் வீறு எய்தித்          
திரு நயந்து இருந்தன்ன தேம் கமழ் விறல் வெற்ப!  
          
*ஞாயிற்றின் கதிர்கள் விரிந்து அடர்ந்த ஒளியால் அழகு கொண்ட அகன்ற மலைச்சாரலில், எதிர் எதிரே ஓங்கி நின்ற கரிய மலைத்தொடர்களில்,  அதிருகின்ற இசையை எழுப்பும் அருவி, தனது அழகிய கிளைகளின் மேல் விழ, முதிர்ந்த மலர்கொத்துகள் மலர்கின்ற முழவு போலும் அடிமரம் படைத்த்த, (மலர்களின் நிறம் காரணமாக) நெருப்புபோல் தோன்றும் வேங்கை மரத்தின் மேல், நெற்றியில் வரிகளையுடைய அழகிய களிறு ஒன்று, மலரும் நீரும் கலந்து ( தீ அணைக்க?) பொழிய, மொட்டு அவிழ்ந்த தாமரை மலர், தன்னிடத்தே அழகு பெற்று, திருமகள் விரும்பி இருப்பது போல், அதன் தேனின் மணம் கமழும் வெற்றியை உடைய மலைநாடனே!

 தன் எவ்வம் கூரினும், நீ செய்த அருள் இன்மை                 44-8
 என்னையும் மறைத்தாள், என் தோழி - அது கேட்டு    
 நின்னை யான் பிறர் முன்னர்ப் பழி கூறல் தான் நாணி;  
 
* தன் துன்பம் மிகுந்தாலும், நீ செய்யும் அருள் இல்லாதவற்றை என்னிடமும் மறைத்தாள், என் தோழி. அந்த துன்பம் கேட்டு உன்னை நான் பிறர் முன்னர் பழித்து சொல்வேன் என்பதை தான் நாணி;

 கூரும் நோய் சிறப்புவும், நீ செய்த அருள் இன்மை   44-11
 சேரியும் மறைத்தாள், என் தோழி -அது கேட்டாங்கு,
 'ஓரும் நீ நிலையலை' எனக் கூறல் தான் நாணி;
 
*மிகுகின்ற காமநோய் கடுமையுற்றாலும், நீ செய்த அருளற்ற செயலை சேரியினரிடமும் மறைத்தாள் என் தோழி. அதை கேட்ட அவர்கள்  'நீ ஓர் நிலையான போக்கு உடையவன் அல்லன்' என்று கூறிவிடுவார் எனபதை தான் நாணி;
 
 நோய் அட வருந்தியும், நீ செய்த அருள் இன்மை                 44-14
 ஆயமும் மறைத்தாள், என் தோழி - அது கேட்டு  
 மாய நின் பண்பு இன்மை பிறர் கூறல் தான் நாணி;  
 
*காம நோய் தாக்க துன்புற்றும், நீ  செய்த அருளற்ற செயலை தன் விளையாட்டு குழுவிடமும் மறைத்தாள் என் தோழி. அதை கேட்டு அவர்கள், மாயதன்மையின், உன் பண்பிலாமையை பிறரும் கூறுவதை தான் நாணி;
 
        என ஆங்கு,                        
 இனையன தீமை நினைவனள் காத்தாங்கு,                 44-18
 அனை அரு பண்பினான், நின் தீமை காத்தவள் 
 அரும் துயர் ஆர் அஞர் தீர்க்கும்  
 மருந்து ஆகி செல்கம், பெரும! நாம் விரைந்தே! 
 
*இவ்வாறு,
வருத்தம் தரும் தீமையை மனதுக்குள்ளேயே காக்கும் தன்மையையுடைய அருமையான பண்பை உடையவள்  ஆதலால்,  நின் தீமையை தவிர்த்து. அவளுடை பெரிய துயர் மிகு நோயை தீர்க்கும் மருந்து ஆகி உடனே செல்வோம் பெருமானே! நாம் விரைந்து!
 
சொற்பொருள்:

கதிர் -ஞாயிறு.
கனைசுடர் -பேரொளி.
 நனம் - அகன்ற
 மால்வரை -கரியமலை
அம்சினை -அழகிய கிளை.
இணர் -பூங்கொத்து.
ஊழ்கொண்ட -நெருங்க மலர்ந்த.
முழவுத்தாள் -முரசுபோல் பருத்த அடி.
வீறு -பிறவற்றிற்கில்லாத சிறப்பு.
திரு -திருமகள்.
நயந்து - விரும்பி
விறல்- வெற்றி, வீரம்
எவ்வம் -துயர்.
கூரினும் -மிகினும்.
ஒரும் -அசை.
அட- தாக்க
தீமை காத்த - தீமை தராமல் காத்து
இனையன -இவைபோலும்.
நினைவனள் -பிறர் அறியாதவாறு மனதில் வைத்து
அனை அரும் பண்பு -அத்தகைய உயர்ந்த பண்பு.

வேந்தன் அரசு

unread,
Mar 26, 2008, 11:25:05 PM3/26/08
to sanga...@googlegroups.com, seethaalakshmi subramanian, முத்தமிழ்
கபிலரின் குறிஞ்சிக்கலி - 44 ஆம் பாடல்

விடியல் வெம் கதிர் காயும்  வேய் அமல் அகல் அறைக்,         45-1
கடி சுனைக் கவினிய காந்தள் அம் குலையினை,   
அரு மணி அவிர் உத்தி அரவு நீர் உணல் செத்துப்,     
பெரு மலை மிளிர்ப்பன்ன காற்றுடைக் கனைப் பெயல்   
உருமுக் கண்ணுறுதலின், உயர் குரல் ஒலி ஓடி, 
நறு வீய நனம் சாரல் சிலம்பலின், கதுமெனச்,   
சிறுகுடி துயில் எழூஉம் சேண் உயர் விறல் வெற்ப! 
 
*விடியல்  பொழுதிலே வெம்மையான கதிர்கள் காய்கின்றன். மூங்கில்கள்  நெருங்கியுள்ள அகன்ற பாறையின் மேல் ஓடும் மணம் கொண்ட  நீர் சுனையை அழகு படுத்தும் அழகிய காந்தள் மலர் குலைகள்.  (அதை) அருமை மிக்க மணி ஒளிரிகின்ற படத்தையுடைய அரவம் நீர் உண்கிறதோ
என கருதி, பெரிய மலை கீழ் மேலாகப் பெயர்த்துவிடுவது போல் காற்று கலந்த வலுத்த மழையுடைய  இடி, உயர்ந்து எழுந்த முழக்கத்தின் ஓசை பரவி,  மணமுள்ள பூக்கள் கொண்ட அகன்ற மலைச்சாரலில் ஒலிக்கையினாலே, விரைந்து, சிறிய குடியுள்ளோர் துயில் எழுந்து கொள்ளும் மிக
உயர்ந்த வெற்றியை தரும் மலை நாடனே!  
 
கால் பொர நுடங்கல கறங்கு இசை அருவி நின்                  45-8
மால் வரை மலி சுனை மலர் ஏய்க்கும் என்பதோ -
புல் ஆராப் புணர்ச்சியால் புலம்பிய என் தோழி  
பல் இதழ் மலர் உண் கண் பசப்ப! நீ சிதைத்ததை?
 
*காற்று மோதுதலால் அசையாத, ஒலிக்கின்ற இசை அருவி உள்ள நினது கரிய மலையின் மேல் நிறைந்து உள்ள சுனை மலர்களை (கண்கள்) ஒப்பும் என்று கருதியோ? ( என்ற பொறாமையாலோ?)  தழுவித்தீராத கூடலுக்கு வருந்துகின்ற என் தோழியின் பல இதழ்களையுடைய
மலர்போன்ற மை உண்ட கண்கள் பசலையுற்று வாடுமாறு நீ சிதைத்தாய்?
 
 புகர் முகக் களிறொடு புலி பொருது உழக்கும் நின்  45-12
 அகல் மலை அடுக்கத்த அமை ஏய்க்கும் என்பதோ - 
 கடை எனக் கலுழும் நோய் கைம்மிக, என் தோழி  
 தடையின திரண்ட தோள் தகை வாடச் சிதைத்ததை? 
 
*புள்ளிகள் உடைய முகத்தின் களிற்றொடு புலி பொருது வருந்தும், நின் அகன்ற மலையின் அடுக்கங்களிலே உள்ள மூங்கிலை ஒப்பும் என்று கருதியோ? (என்ற பொறாமையாலோ?) (வாழ்நாள்) இறுதி வந்ததோ என வருந்தும் நோய் கட்டு மீற, என் தோழியின் பருத்து திரண்ட தோள்கள்
தம் அழகிய தன்மை வாட சிதைத்தாய்?

 சுடர் உற உற நீண்ட சுரும்பு  இமிர் அடுக்கத்த             45-16
 விடர் வரை எரி வேங்கை இணர் ஏய்க்கும் என்பதோ -  
 யாமத்தும் துயிலலள் அலமரும் என் தோழி  
 காமரு நல் எழில் கவின் வாடச் சிதைத்ததை? 
 
*கதிரவனை தொடுவதுபோல் மிக உயர்ந்து, வண்டுகள் ஒலிக்கும், அடுக்கங்களை உடைய,  பிளவுகளை உடைய மலை மேல் ஒளிருகின்ற வேங்கைமலர் கொத்துகளை ஒப்பும் என்று கருதியோ? (என்ற பொறாமையாலோ?), சாமத்து நேரத்திலும் துயிலாதவளாய் (உன்னையே நினைந்து)
வருந்தும் யாவரும் விரும்பும் நல்ல எழிலான பொலிவு வாடுமாறு நீ சிதைத்தாய்?
 

        என ஆங்கு,                         45-20 

 தன் தீமை பல கூறிக்  கழறலின், என் தோழி  
 மறையில் தான் மருவுற மணந்த நட்பு அருகலான் 
 பிறை புரை நுதல்! அவர்ப் பேணி நம்
 முறை வரைந்தனர், அவர் உவக்கும் நாளே.
 
 * என்று இவ்வாறு,
 
அவன் தீமைகளை பலவும் கூறி சொல்ல, என் தோழி களவாக தான் கலந்து மகிழ கூடும் நட்பு அருகி வருதலால், பிறை போன்ற நெற்றியை உடையவளே! அந்த நிலையை அவர்  எண்ணி நம் உறவினரிடம் வந்து மணம் பேசினார், நம் உறவினரும் அவருக்கு (உள்ளம் ) இசைந்த அந்த
நாளிலே.

    [களவு தடைப்பட்டது! அதனால், தலைவி துடிக்கிறாள், தோழி தலைவனிடம் சென்று அவனால் விளைந்த கேடுகளைக் கூருகிறாள். அதனைக் கேட்டுத் தெளிவுபெற்று, முறையாக மணம் பேச வருகிறான் அவன். பெண் வீட்டார் இசைகின்றனர். தூது சொல்லி வந்த தோழி, தலைவியிடம்
சென்று, தான் போய்ச் சொன்னதும், நிகழ்ந்ததும் கூறுகிறாள்.]
 
அரும் சொற்பொருள்:
அமல் - நெருங்கல்
கடி -மணம்.
அருமணி -அரிய மாணிக்கம்.
அவிர் -ஒளிர்கின்ற.
உத்தி -பாம்பின் படத்தில் உள்ள வளைந்த கோடு.
செத்து - எனக் கருதி.
மிளிர்த்தல் -கீழ் மேலாகப் புரட்டல்.
உருமு -இடி.
வீ -மலர்.
வீய -மலர்களை உடைய.
சிலம்பல் -ஒலித்தல்.
கதுமென = விரைவாக
கால் -காற்று.
பொர= பொருத
நுடங்கல் -ஒடுங்கி அசைதல், நுடங்கல (எதிர்மறை)
கறங்கு - ஒலிக்கும்.
புல் - ஆராப் புணர்ச்சி -புல்லப்புல்ல வேட்கை மிகும் புணர்ச்சி.
புகர் -புள்ளிகள்.
அமை -மூங்கில்.
கடை என -இதுவே என் வாழ்நாளின் இறுதிக் காலமாம் என.
கலுழும் -வருந்தும்.
தடையின -பருத்த.
சுடர் உற - ஞாயிற்றைத் தீண்ட.
உற  நீண்ட -மிகநீண்ட.
விடர் = மலை பிளவு, குகை
எரிவேங்கை -நெருப்பைப் போலும் நிறம் பொருந்திய பூக்களைப் பூக்கும் வேங்கை மரம்.
அலமரும் - வருந்தும்
கழறல் -இடித்துக் கூறல்.
.மறையில் -களவொழுக்கக் காலத்தில்.
புரை -ஒத்த.
முறை -உறவினர்.

வேந்தன் அரசு

unread,
May 1, 2008, 3:13:04 PM5/1/08
to சங்கத்தமிழ்
கபிலரின் குறிஞ்சிக்கலி - 46 ஆம் பாடல்


வீ அகம் புலம்ப, வேட்டம் போகிய 46-1
மாஅல் அம் சிறை மணி நிறத் தும்பி,
வாய் இழி கடாத்த, வால் மருப்பு ஒருத்தலோடு
ஆய் பொறி உழுவை தாக்கிய பொழுதின்,
'வேங்கை அம் சினை' என விறல் புலி முற்றியும்
பூம் பொறி யானைப் புகர் முகம் குறுகியும்,
வலி மிகு வெகுளியான் வாள் உற்ற மன்னரை
நயன் நாடி நட்பு ஆக்கும் வினைவர் போல், மறிதரும்
அயம் இழி அருவிய அணி மலை நல் நாட!

* மலர்கள் தம்முள் புலம்ப, (பிற பூக்களை நாடி) வேட்டைக்கு சென்ற
பெருமையான அழகிய சிறகுகள் கொண்ட நீலமணி நிறத்தின் வண்டுகளானது, வாயில்
வழியும் மதநீரும், வெண்மையான கொம்பும் உடைய ஆண் யானை தலைவனொடு, அழகிய
பொறிகளை உடைய புலி தாக்கிய பொழுது, வேங்கை மரத்தின் அழகிய கிளைகள் என
கருதி, வீறு கொண்ட புலியை அணுகியும், பூப்போல் புள்ளிகளையுடைய யானையின்
புகர்முகத்தை அணுகியும், வலிமை மிகுந்த சினம் கொண்ட வாட்போர்
மனனர்களிடையே நன்மை தரும் நட்பை ஏற்படுத்தும் வினை வல்லவர்கள்
போல் திரிந்து கொண்டு இருக்கும், பள்ளத்தில் இறங்கும் அருவிகள் அணி
செய்யும், நல்ல மலை நாடனே!

ஏறு இரங்கு இருள் இடை இரவினில் பதம் பெறாஅன், 46-10
மாறினென் எனக் கூறி மனம் கொள்ளும், தான் என்ப -
கூடுதல் வேட்கையான், குறி பார்த்துக் குரல் நொச்சிப்
பாடு ஓர்க்கும் செவியோடு பைதலேன் யான் ஆக;

* இடி ஏறு முழங்கும் இருள் நடுவே இரவில் வந்து (என்னை கூடும்) செவ்வி
பெறாமல் திரும்பி சென்றேன் என கூறி மனதுக்குள் வருந்துவேன் தான் என்பார்
- ஆனால், அவரை கூடும் வேட்கையால் குறி பார்த்து இருக்கையில், நொச்சிப்பூ
கொத்து விழுவதால் எழும் அழகிய ஓசைகளை (அவன் வருகையால் என் கருதி அல்லது
தனிமையின் போது பூக்கள் உதிரும் ஓசையை) கூர்ந்து கவனிக்கும் செவிகளொடு
வருந்தி இருப்பவள் நான் ஆக:

அரும் செலவு ஆர் இடை அருளி வந்து, அளி பெறாஅன் 46-14
வருந்தினென் என பல வாய்விடூஉம், தான் என்ப -
நிலை உயர் கடவுட்குக் கடம் பூண்டு தன் மாட்டுப்
பல சூழும் மனத்தோடு பைதலேன் யான் ஆக;

* கடத்தற்கு அரிய வழிகளை அரிய பயணம் செய்து என் மேல் அருள்கூர்ந்து
வந்தும் என் அருள் பெறாஅமையால் வருந்தினேன் என பலவாறாக வாய்விட்டு
அரற்றுவேன் தான் என்பார் - நிலை உயர்ந்த கடவுளுக்கு நேர்த்திக்கடன்
பூண்டு எனக்குள்ளே பலவாறு எண்ணும் மனத்தோடு வருந்துபவள் நான் ஆக:

கனை பெயல் நடுநாள் யான் கண் மாறக், குறி பெறாஅன், 46-18
புனை இழாய்! என் பழி நினக்கு உரைக்கும், தான் என்ப -
துளி நசை வேட்கையான் மிசை பாடும் புள்ளின், தன்
அளி நசை ஆர்வுற்ற அன்பினேன் யான் ஆக;

*அடர்ந்த மழையில் நடு நாளில் நான் இடம் மாறியதாலே குறி பெறாமையால்,
'புனைந்த இழைகளை உடையவளே, என் தீவினையை உனக்கு சொல்லுவேன்' தான் என்பார்
- மழைத்துளியை விரும்பிய வேட்கையால் வானத்தை பாடும் வானம்பாடி
புள்ளைப்போல் அவருடைய அருளை விரும்பும் ஆர்வம் மிக்க அன்பை உடையவளாக நான்
ஆக;

என ஆங்கு,
கலந்த நோய் கைம்மிகக் கண் படா என் வயின் 46-23
புலந்தாயும் நீ ஆயின், பொய்யானே வெல்குவை -
இலங்கு தாழ் அருவியோடு அணி கொண்ட நின் மலைச்
சிலம்பு போல், கூறுவ கூறும்
இலங்கு ஏர் எல் வளை, இவள் உடை நோயே.

* என இவ்வாறு
இவளைக் கலந்த நோய் அளவு மீற, அதனால் கண்கள் உறங்காத என்னை வெறுத்தவன் நீ
என்பதால் சில பொய்களால் வெல்வாயாக! விளங்குகின்ற தாழும் அருவிகளொடு
அழகு கொண்ட நின் மலை எதிரொலிபோல், நீ கூறுவதையே தானும் கூறும், விளங்கும்
உயர்ந்த
ஒளிபொருந்திய வளை அணீந்த இவளுடைய நோயையே!

[காத்திருந்து, தலைவனைக் காணாது துடிக்கிறாள் தலைவி. அவனோ காண வந்தும்
காணாது வாடினான். தோழி இருவர் நிலையையும் அறிகிறாள். 'எப்படியாவது
போகட்டும், பொய்யாக எதாவது கூறியேனும் அவள் நோயைத் தீர்ப்பாயாக' என்று
அவனை வேண்டுகின்றாள்.]

அரும் சொற்பொருள்:

கடாம் -மதநீர்.
மருப்பு -தந்தம்.
ஒருத்தல் -யானைத் தலைவன்.
அயம் - அவல் - பள்ளம்.
ஏறு -இடி.
பதம் -செவ்வி - காணும் வாய்ப்பு.
குரல் -கொத்து.
பாடு -வீழும் ஒலி.
ஓர்க்கும் -நுணுகிக் கேட்கும்.
கனை பெயல் - அடர் மழை
பைதல் -துன்பம்.
சிலம்பு -பக்க மலை, ஒலிப்பதும் ஆம்
ஏர் - அழகு, ஒத்த
எல் -ஒளி.
பொய்யானே வெல்லுகை: அவள் துயர் போகுமாறு, புனைந்துரை பலவும் கூறி, அவளை
ஆற்றுவித்துக் கூடுதல்.

வேந்தன் அரசு

unread,
Sep 28, 2008, 10:21:41 PM9/28/08
to சங்கத்தமிழ்

கபிலரின் குறிஞ்சிக்கலி - 47 ஆம் பாடல்


   [ஓர் இளைஞன் ஒரு தலைவியைச் சுற்றிக் கொண்டே இருக்கின்றான். அவன் தோற்றமும், நிலையும் அவளுக்கும் பிடித்திருந்தது. என்ன செய்வது? எப்படி, யார் முதலில் உறவைத் தொடங்குவது?  இந்த கவலை தீரும் பொருட்டு தோழி,  தலைவி கேட்க, தனக்குள் தானே பேசுகின்றாள்.]

 ஒன்று இரப்பான் போல் எளிவந்தும் சொல்லும், உலகம்         47-1
 புரப்பான் போல்வது ஓர் மதுகையும் உடையன்;
 வல்லாரை வழிபட்டு ஒன்று அறிந்தான் போல்,
 நல்லார் கண் தோன்றும் அடக்கமும் உடையன்;
 இல்லோர் புன்கண், ஈகையின் தணிக்க
 வல்லான் போல்வது ஓர் வண்மையும் உடையன்;
 அன்னான் ஒருவன் தன் ஆண்தகை விட்டு, என்னைச்
 சொல்லும் சொல், கேட்டீ - சுடர் இழாய்! பல் மாணும்;

* என்னிடம் வந்து ஒருவன் சொல்லுகின்ற சொற்களைக் கேட்டாயோடீ! சுடரும் இழையணிந்தவளே! பலவகையிலும் பொருள்படும் அவற்றை கேள்:

என்னிடம், 'ஏதோ ஒன்றை இரப்பவனை போல எளிமையுடையவன் போலவும் காட்டி,  ஏதேதோ சொல்லுகின்றான். உலகையே காக்கும்  வலிமை உடையவன் போலவும் தோற்றுகின்றான். வல்லவர்களைப் பின் பற்றிச் சிறந்த அறிவுத்திறங்களை அறிந்தவன்போல தோற்றுகின்றான். நல்லவர்களிடம் தோன்றும் அடக்கமும் உடையவனாக இருக்கின்றான். இரவலர்களின் வறுமையைப் போக்க வல்லவன் போன்ற வளமுடையவன் போலவும் தோன்றுகிறான். அத்தகைய ஒருவன், தன் ஆண்மை தன்மைகளை எல்லாம் இழந்துவிட்டு, என்னிடம் :சொல்லும் பல மாட்சிமைப்பட்ட சொற்களை கேட்டு அருள்வாய், சுடரும் இழை அணீந்தவளே, 

 'நின் இன்றி அமையலேன், யான்' என்னும் அவன் ஆயின்,             47-9
 அன்னான் சொல் நம்புண்டல் யார்க்கும் இங்கு அரிது ஆயின்,
 என் உற்ற பிறர்க்கும் ஆங்கு உள கொல்லோ? - நறுநுதால்!  

 *"நீயின்றி  உயிர் வாழேன் யான்" என்பான் அவன். அவ்வாறாயின், 'அவன் பேச்சை நம்புவது இங்குள்ளார் யார்க்கும் அரிது' எனில் எனக்கு ஏற்பட்ட இந்நிலை (என்னைப் போல) பிறர்க்கும்  ஏற்படுவது உண்டோ? - "நறிய நுதலாளே!
 
 'அறியாய் நீ, வருந்துவல் யான்' என்னும் அவன் ஆயின்,         47-12
 தமியரே துணிகிற்றல் பெண்டிர்க்கும் அரிது ஆயின், 
 அளியரோ, எம் போல ஈங்கு இவன் வலைப்பட்டார்?

*"யான் வருந்துகின்றேன்; இது நீ அறியாயோ?" என்பான் அவன். அவ்வாறாயின், 'அதன் உண்மையைத் தனியாக இருக்கும் ஒரு பெண் உணர்வதற்கு இயலுதல் அரிது என்றால், எம்போல் இங்கு இவன் வலைப்பட்டார் பிற பெண்டிரும் இரக்கத்துக்கு உரியரோ? ( இல்லை வலியரோ?)

 'வாழலேன், யான்' என்னும் 'நீ நீப்பின்' அவன் ஆயின், 47-15
 ஏழையர் எனப் பலர் கூறும் சொல் பழி ஆயின், 
 சூழும்கால், நினைப்பது ஒன்று அறிகலேன், வருந்துவல்; 
 சூழும்கால், நறு நுதால்! நம் உளே சூழ்குவம்.

*'நீ அருளாவிடில், நான் உயிர் வாழேன்' என்பான் அவன். அவ்வாறாயின், 'இப் பெண் இவ்வளவு பேதையாகுபவளோ?' எனப் பலரும் பழி சொல்வார்களோ? அவ்வாறாயின், ஆராய்ந்தாலும், ஒரு முடிவும் அறியாமல் வருந்துகின்றேன்.  இனி (அவனுக்குச் செய்வதை) ஆராயும்போது, மணமுள்ள நுதலாளே!, நாம் இருவரும் சேர்ந்தே ஒரு முடிவுக்கு வருவோம்.

        அவனை,                                   47-19

 நாண் அடப் பெயர்த்தல் நமக்கும் ஆங்கு ஒல்லாது; 
 'பேணினர்' எனப்படுதல் பெண்மையும் அன்று; அவன் 
 'வௌவினன் முயங்கும் மாத்திரம் வா' எனக்
 கூறுவென் போலக் காட்டி 
 மற்று அவன் மேஎவழி மேவாய் நெஞ்சே!

*(இதனைக் கேட்டபின், தோழி, தலைவி கேட்குமாறு, தானே தனக்குள் பேசுவதுபோல இப்படிக் கூறுகின்றாள்)

 நாணம் நம்மை வருத்துதலால் அவனை போக்குதல் நமக்கும் அங்கே பொருந்தாது.   அவன் நீத்தலை பேணினாள் எனும் பிறர் பழிக்கு ஆளாதல் பெண்மையின் இயல்பும் அன்று. அவன் 'தழுவிக் கொள்ள மாத்திரம் வருக' என்று கூறுவது போலக் காட்டுகின்றேன். அதன்பின், அவன் விருப்பத்தின்படி செல்வாய், நெஞ்சமே!


சொற்பொருள்:

எளிவந்த= எளியவனாக
மதுகை= வலிமை
புன்கண் = வருத்தம்
நீப்பின் - கை விடின்.
ஏழ்மை -ஈண்டு அறிவுக் குறைபாடு.
சூழ்தல் -ஆராய்தல்.
துணிகிற்றல் = முடிவு செய்தல்
அட = மிக
வௌவுதல் -மேற்கொள்ளுதல்.
மேஎவழி -தங்கி உள்ள இடம்.
மேவாய் -சென்று சேர்வாயாக.

 

Reply all
Reply to author
Forward
0 new messages