Subject: திருமண முகூர்த்த நேரம் குறிப்பது எப்படி?
திருமண முகூர்த்த நேரம் குறிப்பது எப்படி?
-----------------------------------------------------------

இன்று பல ஊர்களில் பஞ்சாங்கம் பார்க்க ஆளே இல்லை. இருக்கும் ஊர்களிலும் அரைகுறை ஞானம் உடையவர்களாகச் சிலர் இருக்கின்றனர். தப்பான நாட்களில் திருமணம் நிகழ்வதும் இன்றைய விவாகரத்துக்களுக்கு ஒரு காரணம்.
எனவே எளிய முறையில் திருமண முகூர்த்த நேரம் குறிப்பது பற்றி இங்கு விளக்கியுள்ளேன். பயன் பெறும் என்று எண்ணுகிறேன். குறைந்த பட்சம் சரிபார்த்துக் கொள்ளவாவது உதவும் அல்லவா
திருமணம் செய்வதற்கு ஒரு ஆணும் பெண்ணும் எப்படி அவசியமோ, அதே போலத் தான் முகூர்த்த நாள் குறிப்பதும். முகூர்த்தம் என்பது மூன்றே முக்கால் நாழிகை (ஒன்றரை மணி நேர அளவுள்ள காலமாகும்).
ஒரு குழந்தையின் எதிர்காலம், ஆரோக்கியம், புகழ், ஆயுள் போன்றவற்றைப் பார்க்க எப்படி குழந்தையின் ஜனன ஜாதகம் அவசியமோ அதே போல முகூர்த்த நாள் மற்றும் நேரம் பார்ப்பதும் மிகவும் அவசியமாகும்....
மணமக்களின் ஜாதகங்களில் ஒரு சில குறைகள் இருந்தாலும் இந்த முகூர்த்த நேர இலக்னம் நன்கு அமையுமானால் அந்தக் குறைகள் காணாமல் போய்விடும்.
குருபகவான் அவரவர் ஜென்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11 ம் இடங்களில் பிரவேசம் செய்யும் போது குரு பலம் ஏற்படும். திருமணத்திற்கு ஒருவருக்கு குருபலமோ,விதியோ இருந்தால் போதும்.
குருபகவான் 2 ல் இருக்கும் போது திருமணம் செய்வித்தால் அந்த தம்பதியருக்குத் தனசம்பத்துகள் கிடைக்கும்.
5 ல் குரு இருக்கும் போது திருமணம் நடந்தால் சொற்படி நடக்கும் சத்புத்திரர்கள் பிறப்பார்கள்.
7ல் குரு இருந்தால் பெண்கள் என்றும் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள்.
9ல் இருக்கும்போது கணவருக்கு சகல செல்வாக்கும்,
11ல் குரு தங்கும் போது திருமணம் செய்தால் மனைவி அல்லது கணவன் மூலம் செல்வங்கள் பல வந்து சேரும்.
குருபலம் ஆண் பெண் இருவருக்கும் இருப்பின் மிக்க நலம்.
இதில் பெண்ணிற்கு மட்டுமாவது இருப்பது இன்றியமையாதது.
குருபலம் போலவே சூரிய பலமும் சிறிது முக்கியமாகக் கருதப்பெறுகிறது. சூரிய பலம் என்பது ஒருவரின் ஜென்ம ராசிக்கு சூரியன் 3, 6, 10, 11 ம் இடங்களில் பிரவேசம் செய்வதே ஆகும். சூரிய பலம் பெண்ணைவிட ஆணுக்கு மிக முக்கியமாக கருதப்பெறுகிறது.
திருமணக்காலங்கள் மணமக்களுக்கு யோகாதிபதிகளின் தசாபுக்திகளாக அமைந்தால் அந்தத் திருமணம் சீரும் சிறப்புமாக அமையும். மணமக்கள் இருவருக்கும் குருபலம் இல்லாத சமயத்தில் இவர்களுக்கு சுக்ரன், அல்லது 2, 7, 11 ம் அதிபதிகளின் தசாபுக்திகள் நடந்தாலும் திருமணம் செய்விக்கலாம்.
மணமக்களுக்கு அஷ்டம சனி காலத்திலும் (சந்திரன் நின்ற இராசியிலிருந்து சனி 8 ஆமிடத்தில் இருப்பது) விரய சனி (சனி 12ஆம் இடத்தில் இருப்பது) நேரத்திலும் திருமணத்தை தள்ளிப்போடுவது சிறப்பைத் தரும்.
குருபலம், சூரியபலம், நல்ல தசாபுக்தி மற்றும் சனிபகவானின் தாக்கம் இல்லாத காலங்களைத் தேர்ந்தெடுத்த பின்னர் ஒரு நல்ல நாளைக் கீழ்கண்டவாறு தேர்வு செய்யலாம்.

சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, ஐப்பசி மற்றும் தை மாதங்ளைத் தேர்வு செய்து இவைகளில் மலமாதம் இல்லாத மாதத்தைத் (இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருமேயானால் அதற்கு மலமாதம் என்று பெயர்) தேர்ந்தெடுக்க வேண்டும்.
வளர்பிறையின் துவிதியை, திரிதியை, பஞ்சமி, சப்தமி மற்றும் திரயோதசி உள்ள நாட்கள் சிறப்பானவை.
இருவர் நட்சத்திரத்திற்கும் தாராபலம் ஏற்றார்போல் உள்ள நாட்கள்.
அன்றைக்கு சந்திரன் ஐன்ம ராசிக்கு 1, 3, 6, 7, 10, 11 ராசிகளில் இருப்பது.
இரு கண்ணுள்ள நாட்களான புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகள் சிறந்தது.
ஒரு கண்ணுள்ள நாட்களான ஞாயிறு மற்றும் திங்கள் பாதி சிறந்தது.
குருட்டு நாட்களான செவ்வாய் சனியை தவிர்ப்பது நல்லது.
அக்னி ராசிகளான சிம்மம் மற்றும் மேசம் முகூர்த்த லக்னமாக இல்லாமல் இருப்பது சிறப்பு.
முகூர்த்த லக்னத்திற்க்கு ஏழாமிடம் சுத்தமாக இருப்பின் நல்ல கணவன் மனைவி அமையும்
எட்டாம் இடம் சுத்தமாயின் நீடித்த திருமணபந்தம்.
12ஆம் இடம் சந்தோசத்தை குறிக்கின்றது.
ஆக 2,7,8ஆம் இடங்கள் சுத்தமாக இருக்க வேண்டும் மற்றும் எட்டாம் இடத்தை குரு அல்லது சுக்ரன் பார்க்கலாம். இந்த இடங்களில்இவர்கள் யாரும் இருக்கக்கூடாது.
உபஜெய ஸ்தானங்களான 3, 6, 11 ல் தீய கிரகங்கள் இருப்பது வாழ்க்கையின் வெற்றி மற்றும் ஆதாயங்களை குறிக்கும்.
திருமணநாள் மணமக்களின் ஜென்ம நட்சத்திரமாகவோ, ஜென்ம கிழமையாகவோ அமையாமல் இருப்பது மிக நல்லது.
நவக்கிரகங்களில் அதிக சுபத்தன்மை பொருந்திய குருவும் சுக்ரனும் மூடம் என்கின்ற அஸ்தங்க தோஷம் (சூரியனுக்கு
பத்து டிக்ரிக்குள் வரும் கிரகங்கள் தன் சுய பலத்தை இழந்து விடும். இதனை அஸ்தங்க தோஷம் என்பர்) .அடைந்திருக்கக் கூடவே கூடாது.
இராகு காலம் மற்றும் எமகண்டம் போன்ற நேரங்களை ஒதுக்க வேண்டும். குளிகை காலத்தைக் கூட தவிர்ப்பது சிறந்தது. காரணம் குளிகை காலத்தில் செய்யும் காரியங்கள் திரும்பவும் செய்ய
நேரிடலாம்.
மொத்தம் உள்ள பதினோறு கரணங்களில் அசுப கரணங்களை ஒதுக்கவேண்டும். சித்தயோகத்தை மாங்கல்ய தாரணத்திற்கும் அமிர்தயோகத்தை சாந்தி முகூர்த்தத்திற்க்கும் தேர்வு செய்தல் வேண்டும்.
“பஞ்சகம்” என்ற முறையில் நல்ல நாளை தேர்வு செய்ய வேண்டும். (சுப கார்யம் செய்யத் தேர்ந்தெடுத்த நாளின் திதி, வாரம் (கிழமை), நக்ஷத்திரம், தேர்ந்தெடுத்த இலக்கினம் இவற்றைக் கூட்டி ஒன்பதால் வகுத்து வரும் மீதி 0, 3, 5, 7, 9 ஆகில் உத்தம பஞ்சகம். ப்ரதமை -1, த்விதியை - 2 என்று கணக்கிடவேண்டும். அதுபோல் அஸ்விநி -1, பரணி - 2 என வரிசை எண்ணையே அந்த நக்ஷத்திரத்தின் எண்ணாகக் கொள்ளவேண்டும். அதுபோல் ஞாயிறு -1, திங்கள்-2, செவ்-3 என்று கிழமைக்கும், மேஷம் -1, ரிஷபம்-2 ... மீனம் -12 என இலக்னங்களுக்கும் எண் தெரிந்துகொள்ளவேண்டும். இது தவிர இலக்ன துருவ எண் (4 இலக்னங்களுக்கு மட்டும்) மேஷம் - 5, ரிஷபம் - 7, மகரம் -2, கும்பம் - 4, மீனம் -6 இவற்றையும் கூட்டிப் பின் 9 ஆல் வகுக்க வேண்டும். 0,3,5,7,9 ஆகியவை நிஷ் பஞ்சகம் உத்தமம் என்றும் மற்ற 1, 2, 4, 6, 8 ஆகிய பஞ்சகங்களுக்கும் முறையே ரத்னம், சந்தனம், எலுமிச்சை, தீபம், தானியம் இவற்றை தானமாக அளித்து பரிகாரம் செய்து கொண்டு சுபங்கள் செய்யலாம் என்று பல பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.)
பெண்ணிற்கு மாதவிலக்குக்கு உரிய நாட்களாக அமையாமல் இருப்பது அவசியம். ஏனென்றால் இதில் புனிதமான அக்னியை வார்த்து இறைவனை அதில் வரவழைத்து வணங்குகிறோம்.
திருமணம் செய்ய இருக்கும் நாளுக்கு 15 தினங்கள் முன்பு அவரவர் குல தெய்வத்திற்குப் பொங்கலிட்டு ஆராதனைகள் செய்து பிறகு முன்னோர்களைத் தியானித்து அனுமதி பெறவேண்டும்.
இப்படி அமையும் திருமண உறவு என்றும் நிலைத்திருப்பதுடன், ஒருவரையொருவர் விட்டுத் தராமல் அன்புடன் இல்லற இன்பம் பெறுவார்கள் என்பது ஜோதிட ரகசியங்களில் ஒன்றாகும்.