விதை நேர்த்திப் பணிகளை முறையாகச் செய்யாமல் விட்டாலும், தட்ப வெப்பநிலை
மாற்றங்கள் காரணமாகவும், காற்று மற்றும் நீர் மூலமாகவும் பயிர்களை
பூச்சிகள் பெருமளவுக்குத் தாக்கி சேதப் படுத்துகின்றன. மிகவும் அபாயகரமான
விஷத் தன்மை கொண்ட பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்தப் பட்டாலும்,
பூச்சிகள் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படுவது இல்லை.
ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகள் மனிதர்களுக்கும், விலங்கினங்களுக்கும்
பெருத்த சேதத்தை விளைவிக்கின்றன. பல நேரங்களில் பயிர்களுக்கு நன்மை
செய்யும் பூச்சிகளும் சேர்த்து அழிக்கப்பட்டு விடுகின்றன.
எனவே ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளின் மோசமான விளைவுகளால், விவசாயிகள்
பரவலாகப் பயன்படுத்தி வந்த, என்டோசல்ஃபான், டெமக்ரான் போன்றவை தடை
செய்யப்பட்டு வருகின்றன.
எனவே இயற்கை மருந்துகளைப் பயன்படுத்துமாறு அண்மைக் காலமாக வேளாண்
விஞ்ஞானிகள் சிபாரிசு செய்கின்றனர்.
அசுவணி, கம்பளிப்புழு, நெற்கதிர் நாவாய்ப் பூச்சி ஆகியவற்றைக்
கட்டுப்படுத்த, ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ மிளகாய்த்தூள்
கலந்து, கரைத்து வடிகட்டித் தெளிக்கலாம்.
இலைச் சுருட்டுப் புழு, சாறு உறிஞ்சும் பூச்சி, புரோடினியா ஆகியவற்றைக்
கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ வேப்பெண்ணையைக் கலந்து,
ஒட்டுதிரவமாக சோப்பு கரைசல் 200 மில்லி கலந்து தெளிக்கலாம்.
நெல் குலை நோய்க்கு வேலிக்காத்தான் இலைச்சாறு 20 கிலோவை, 200 லிட்டர்
தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். அசுவணி, இலைப்பேன், வெள்ளை ஈ போன்றவற்றைக்
கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ மஞ்சள், மற்றும் 200
லிட்டர் தண்ணீரில் 8 கிலோ சாம்பல் கலந்து தெளிக்கலாம்.
நெல் இலைச் சுருட்டுப் புழுவைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 2
கிலோ உப்பு மற்றும் 200 லிட்டர் தண்ணீரில் 8 கிலோ சாம்பல் கலந்து
தெளிக்கலாம்.
அனைத்து காய் துளைப்பான் பூச்சிகளைக் கட்டுப்படுத்த 200 லிட்டர்
தண்ணீரில், 2 கிலோ பூண்டு மற்றும் 200 லிட்டர் தண்ணீரில் 400 மில்லி
மண்ணெண்ணெய் கலந்து தெளிக்கலாம்.
வெள்ளை ஈ, இலைப்பேன், மிளகாய்ப்பேன் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த 200
லிட்டர் தண்ணீரில் 6 லிட்டர் பசுக்கோமியம் மற்றும், 200 லிட்டர்
தண்ணீரில் 200 மில்லி புகையிலைச்சாறு கலந்து தெளிக்கலாம். பாக்டீரியா,
பூஞ்சாணம் நோயைக் கட்டுப்படுத்த 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ துளசி
இலைச்சாறு கலந்து தெளிக்கலாம். அல்லது 200 லிட்டர் தண்ணீரில் 10 கிலோ
பப்பாளி இலைச்சாறு கலந்தும் தெளிக்கலாம்.
அனைத்து சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர்
தண்ணீரில் 2 கிலோ அரைத்த சீத்தாப்பழ விதை மற்றும் 200 லிட்டர் தண்ணீரில்
6 கிலோ சீத்தா இலைச்சாறு கலந்து தெளிக்கலாம்.
கம்பளிப் புழு பாக்டீரீயாவைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 10
கிலோ சோற்றுக் கற்றாளைச் சாறு கலந்து தெளிக்கலாம். கம்பளிப்புழு சுருள்
பூச்சி, இலை சுருட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர்
தண்ணீரில் 10 கிலோ வேப்ப இலைச்சாறு கலந்து தெளிக்கலாம்.
மிளகாய்ப் பேன், வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த 200 லிட்டர் தண்ணீரில் 600
கிராம் புகையிலைச் சாறு கலந்து தெளிக்கலாம். நெல் இலை சுருட்டுப்
புழுவைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 20 கிலோ நெய்வேலி
காட்டாமணிச் சாறு கலந்து தெளிக்கலாம். நெல் தூர்அழுகல், இலை அழுகல்
நோயைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 6 கிலோ வேப்பெண்ணெய் கலந்து
தெளிக்கலாம்.
பாக்டீரியா இலைக் கருகல் நோயைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 20
கிலோ குன்றிமணி இலைச்சாறு அல்லது வேப்ப இலைச்சாறு கலந்து தெளிக்கலாம்.
நிலக்கடலை தூர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 6
கிலோ வேப்பெண்ணெயுடன் ஒரு லிட்டர் சோப்புத் திரவம் கலந்து தெளிக்காலம்.
பயறு வகை சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 6 கிலோ
வேப்பெண்ணெயுடன் ஒரு லிட்டர் சோப்புத்திரவம் கலந்து தெளிக்கலாம். தென்னை
வாடல் நோயைக் கட்டுப்படுத்த, 200 லிட்டர் தண்ணீரில் 5 கிலோ வேப்பம்
பிண்ணாக்கு கலந்து, மரத்தைச் சுற்றி இட்டு மண்ணால் மூடிவிட வேண்டும்.
Rajesh - Future Farmer