நோக்கம்: மண் வளத்தை பாதுகாக்கவும், உரச்செலவை குறைக்கவும், இடும் உரம்
பயிருக்கு முழுமையாக கிடைக்கவும் மண் மாதிரி எடுத்து மண் பரிசோதனை
மேற்கொள்ள வேண்டும்.
தேவையான பொருள்கள்:
மூங்கில் குச்சி அல்லது அலுமினியகரண்டி, துணிப்பை, மண்வெட்டி.
எடுக்கும்முறை:
மண் மாதிரியை மர நிழல், வரப்பு, வயலோரம், வாமடைப்பகுதி, எரு கொட்டிய இடம்
ஆகிய இடங்களிலிருந்து எடுக்கக்கூடாது.
ஒரு வயலில் குறைந்தது 10-16 இடங்களில் மண் மாதிரிகள் எடுக்கவேண்டும். ஒரு
ஏக்கருக்கு இறுதியாக ஒரு மண் மாதிரி போதுமானது ஆகும். மண் மாதிரி
எடுக்கும் இடங்களில் இருக்கும் இலை தழைகளை எடுத்துவிடவேண்டும். மேல்
மண்ணை அப்புறப்படுத்த கூடாது. முதலில் மண்வெட்டி கொண்டு 15 செ.மீ.
ஆழத்திற்கு ‘V’ வடிவத்தில் வெட்டவேண்டும். பின்னர் ‘V’ யின் இரு
பக்கங்களிலும் மூங்கில் குச்சி அல்லது அலுமினிய கரண்டியால் மண்ணை சுரண்டி
எடுக்கவேண்டும். இதுபோல் 10-15 இடங்களில் எடுக்கவேண்டும்.
சேகரித்த மண்ணை கால் பங்கிட்டு முறையில் 1/2 கிலோ மண் வரும் வரை பங்கீடு
செய்து துணிப்பை அல்லது பாலித்தீன் பையில் சேகரிக்கவேண்டும். அந்த பையில்
விவசாயியின் முழு முகவரி, பாசன வகை, கடந்த பருவத்தில் சாகுபடி செய்த
பயிர் தற்போது சாகுபடி செய்ய உள்ள பயிர், சர்வே எண், வயல் பெயர், போன்ற
விபரங்களை எழுதி வைக்கவேண்டும்.
மண் மாதிரி எடுக்கவேண்டிய ஆழம்
* நெல் - 15 செமீ
* கரும்பு, பருத்தி - 30 செமீ
* நிலக்கடலை – 22 செமீ
* தென்னை - 30-45 செமீ
களர், உவர் நிலங்களுக்கு தனித்தனியாக மண் மாதிரிகள் எடுக்கவேண்டும்.
Rajesh - Future Farmer