துனீசியாவில் ஏற்பட்ட புரட்சி முஸ்லிம் நாடுகளில் பசியாலும், வேலையில்லாத் திண்டாட்டத்தினாலும் சர்வாதிகார ஆட்சியாளர்களால் அவதிக்குள்ளாகும் மக்களுக்கு அரசுக்கெதிரான போராட்டத்திற்கு உத்வேகத்தை அளித்துள்ளது.
அல்ஜீரியா, யெமன், எகிப்து,ஜோர்டான் போன்ற நாடுகளில் அரசுக்கெதிரான போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் எகிப்து நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வரும் அமெரிக்காவின் கைப்பாவையான ஹுஸ்னி முபாரக்கின் ஆட்சி எகிப்திய மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் என்ற பிரதான எதிர்கட்சியினருக்கு தடை, தேர்தல்களில் முறைகேடு, அரசுக்கெதிராக போராட்டம் நடத்த தடை, சமூக இணையதளங்களுக்கு தடை என ஹுஸ்னி முபாரக்கின் சர்வாதிகாரத்திற்கு அளவேயில்லாமல் போய்விட்டது.
இந்நிலையில் துனீசியா நாட்டில் ஏற்பட்ட மக்கள் புரட்சியினால் அந்நாட்டு அதிபர் பின் அலி நாட்டைவிட்டு வெளியேறியது எகிப்திய மக்களுக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது. இதன் காரணமாக எகிப்தின் கெய்ரோ உள்பட பல்வேறு நகரங்களில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில், எகிப்திய தலைநகரான கெய்ரோவில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்குமிடையே நடந்த போராட்டத்தில் ஒரு போலீஸ்காரரும், போராட்டக்காரர் ஒருவரும் கொல்லப்பட்டனர் என presstv தெரிவிக்கிறது.
போராட்டக்காரர்கள் காக்டைல் பாட்டில்களை துறைமுக நகரமான சூயஸில் அரசு கட்டிடங்களின் மீது வீசினர். ஆளுங்கட்சியான தேசிய ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு தீவைக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டதாக நேரில் கண்டவர் தெரிவிக்கிறார்.
ஹுஸ்னி முபாரக்கின் கடந்த 30 ஆண்டுகால ஆட்சியில் வெறுத்துப்போன ஆயிரக்கணக்கான எகிப்திய மக்கள் அந்நாட்டு வீதிகளில் இறங்கி அரசுத் தடையையும் மீறி போராடத் துவங்கியுள்ளனர்.
போராட்டக்காரர்கள் டயர்களை கொளுத்தியதோடு போலீசார் மீது கல் வீசினர். போராட்டக்காரர்களை விரட்டியடிப்பதற்காக கலவரத் தடுப்புப் போலீசார் எகிப்து நகரங்களில் குவிக்கப்பட்டுள்ளனர்.
அரசியல் ஆய்வாளர் ஒருவர் தெரிவிக்கையில், வட ஆப்பிரிக்க நாடுகள், அதிலும் குறிப்பாக எகிப்து அங்கு ஆளும் அரசுகள் அமெரிக்காவின் ஆதரவைப் பெற்றிருந்தபோதிலும் ஜனநாயக காலக்கட்டத்தை நோக்கி செல்வதாக கூறுகிறார்.
பிரஸ் டிவிக்கு பேட்டியளித்த வட ஆப்பிரிக்க அரசியல் ஆய்வாளர் நீ அகுட்டே தெரிவிக்கையில், துனீசியாவில் ஏற்பட்ட புரட்சி வட ஆப்பிரிக்க நாடுகளுக்கு சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட உத்வேகத்தை அளித்துள்ளது என கூறியுள்ளார்.
சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு மாறும் காலம் ஆச்சரியப்படும் வகையில் விரைவில் வரும் என கூறுகிறார் நீ அகுட்டே.
புதன்கிழமையும் ஆயிரக்கணக்கான மக்கள் ஹுஸ்னி முபாரக்கின் ஆட்சிக்கெதிராக கெய்ரோ மற்றும் அலெக்சாண்ட்ரியா நகரங்களில் போராட்டத்தை நடத்தினர். 20 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டிருந்த போதிலும் கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தை நடத்தினர். அவர்கள் ஒரேகுரலில்,மக்கள் சர்வாதிகார ஆட்சி பதவி விலகவேண்டும் என விரும்புவதாக கோஷங்களை எழுப்பினர்.
'முபாரக்கே வெளியேறு!' 'ரொட்டி,விடுதலை,கண்ணியம்’, 'நாங்கள் துனீசியாவை பின்பற்றுவோம்' என முழக்கமிட்டனர்.
இதற்கிடையே, அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் அக்பார் அல் அரப் என்ற இணையதளம், ஹுஸ்னி முபாரக்கிற்கு அடுத்ததாக பதவி வகிக்க காத்திருக்கும் அவரது மகன் ஜமால் முபாரக் தனது மனைவி மற்றும் மகளுடன் நாட்டைவிட்டு வெளியேறி பிரிட்டனுக்கு சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளது.
source:presstv