-------------------------------------------
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் பேரருளால் கடந்த எட்டு வருடங்களுக்கும் முன் ஹிஜ்ரீ 1427 / இஸ்லாமியப் புத்தாண்டு துவங்கும் முஹர்ரம் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டு, குவைத் இந்திய தூதரகம், குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம், மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகம் மற்றும் பள்ளிவாசல்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டு, குவைத் வாழ் தமிழ் மக்களுக்கு சமூகம், சமயம், கல்வி என பல்வேறு தளங்களில் சீரிய சிந்தனையாளர்களின் ஆலோசனைகளாலும், சீர்மிகு ஆலிம் பெருமக்களின் வழிகாட்டுதலின் அடிப்படையிலும், ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை அடிப்படையில் குவைத்தில் இயங்கும் K-Tic (கே-டிக்) என்றழைக்கப்படும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம், ஒவ்வொரு ஆண்டும் சங்கத்தின் துவக்க நிகழ்ச்சியை ஹிஜ்ரா நிகழ்ச்சியுடன் சேர்த்து கல்வி / சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் இணைத்து முப்பெரும் விழாவாக நடத்திக் கொண்டு வருகின்றது. இவ்வருடம் நாற்பெரும் விழாவாக நடைபெற்றது.
அந்த அடிப்படையில் 'குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)'ஏற்பாடு செய்த (1) ஹிஜ்ரீ 1434 / இஸ்லாமியப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி (2) கல்வி / சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி (3) சங்கத்தின் 8ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி மற்றும் (4) இறைத்தூதுர் முஹம்மது (ஸல்) நூல் வெளியீட்டு நிகழ்ச்சி ஆகிய 'நாற்பெரும் விழா' கீழ்க்கண்ட முறையில் தொடர்ந்து இரண்டு நாட்கள் மூன்று இடங்களில் பல்வேறு தலைப்புகளில் நடத்தியது. அல்ஹம்துலில்லாஹ்...
சங்கத்தின் தலைவர் மவ்லவீ அல்ஹாஜ் அஷ்ஷைஃக் M.S. முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இச்சிறப்புமிகு நிகழ்ச்சிகள் அனைத்திலும் தமிழகத்திலிருந்து வருகை தந்த பிரபல மட்டைப்பந்து (கிரிக்கெட்) விளையாட்டு வர்ணனையாளரும், மூத்த தமிழ் ஒலிபரப்பாளரும், பன்னூல் ஆசிரியரும், சீரிய சிந்தனையாளருமான தமிழ் மாமணி சாத்தான்குளம் எஸ்.எம். அப்துல் ஜப்பார் அவர்கள் சங்கத்தின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சங்கத்தின் இணைப் பொதுச் செயலாளர் அல்ஹாஜ் ஏ.கே.எஸ். அப்துல் நாஸர் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைப்பு செய்தார்.
15.11.2012 வியாழக்கிழமை இரவு 7:00 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து இரவு 10:30 மணி வரை குவைத், ஃபஹாஹீல், 'மிஜ்யத் அல் ஹிலால் அல் உதைபீ' பள்ளிவாசலில் சிறப்புரை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் ஆலோசகர்கள் முன்னிலை வகிக்க, சங்கத்தின் மார்க்க அறிஞர்(உலமாக்)கள் குழு மூத்த உறுப்பினர் மவ்லவீ காரீ அஷ்-ஷைஃக் எஸ்.ஏ.கே. முஹம்மது இப்ராஹீம் நூரானீ காஷிஃபி, அறிமுகவுரையாற்ற, சிறப்பு விருந்தினர் அவர்கள் "ஹிஜ்ரா ஒரு பயணத்தின் ஆரம்பமல்ல..." என்ற தலைப்பில் சிந்திக்க வைக்கும் அற்புதமான சொற்பொழிவை நிகழ்த்தினார்கள். சங்கத்தின் பொருளாளர் அல்ஹாஜ் எம். ஜாஹிர் ஹுஸைன் நன்றியுரையாற்ற, சங்கத் தலைவர் துஆ ஓத, கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
இரண்டாவது நிகழ்ச்சி:
16.11.2012 வெள்ளிக்கிழமை நண்பகல் 12:30 மணி முதல் ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து பகல் 1:45 மணி வரை குவைத், ஃகைத்தான் பகுதியிலுள்ள K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலான அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளிவாசலில் சிறப்புரை நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர் அவர்கள் "கல்வி - நாம் சந்திக்கும் சவால்கள்" என்ற தலைப்பில் சிந்திக்க வைக்கும் அற்புதமான சொற்பொழிவை நிகழ்த்தினார்கள். சங்கத் தலைவர் அவர்கள் துஆ ஓத நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
மூன்றாவது நிகழ்ச்சி:
16.11.2012 ஞாயிற்றுக்கிழமை இரவு 7:00 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து இரவு 10:30 மணி வரை குவைத், ஃகைத்தான் பகுதியிலுள்ள K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலான அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளிவாசலில் சிறப்புரை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் ஆலோசகர்கள் முன்னிலை வகிக்க, சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவீ காரீ அஷ்-ஷைஃக் எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ அறிமுகவுரையாற்ற, சிறப்பு விருந்தினர் அவர்கள் "சீதனம் / வரதட்சனை - நாம் யாரை ஏமாற்றுகிறோம்?" என்ற தலைப்பில் சிந்திக்க வைக்கும் அற்புதமான சொற்பொழிவை நிகழ்த்தினார்கள். சங்கத்தின் இணைப் பொருளாளர் அல்ஹாஜ் H.M. முஹம்மது நாஸர் நன்றியுரையாற்ற, சங்கத் தலைவர் அவர்கள் துஆ ஓத, கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
நூல் வெளியீட்டு நிகழ்ச்சி:
தமிழில் 'இஸ்லாமிய கலைக் களஞ்சியத் தொகுப்பு' உள்ளிட்ட பல தன் முனைப்பு நூல்களை எழுதிய அறிஞர் எம்.ஆர்.எம். அப்துர் ரஹீம் அவர்கள் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கைச் சரிதையை வசன நடையாகவும் கவிதை வழியிலும் எழுதியுள்ளார். அவர் ஆங்கிலத்தில் எழுதிய பெருமானார் சரிதை 'MUHAMMAD THE PROPHET'. சுமார் 800 பக்கங்கள் கொண்ட இந்த நூலை 'இறைத்தூதர் முஹம்மத் (ஸல்)' என்ற பெயரில் 23 மாதங்கள் உழைத்து சங்கத்தின் சிறப்பு விருந்தினர் அழகிய தமிழ் நடையில், எளிய முறையில் மொழிப் பெயர்த்துள்ளார்.
அச்சிறப்பு நூலின் வெளியீட்டு நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. நூலாசிரியரின் நூல் அறிமுகவுரைக்குப் பின் சங்கத்தின் தலைவர் நூலை வெளியிட சங்கத்தின் ஆலோசனை குழு உறுப்பினர்கள் பெற்றுக் கொண்டனர்.
இச்சிறப்புமிகு நிகழ்ச்சிகள் அனைத்திலும் குவைத் வாழ் தமிழ் பேசும் மக்கள் முஸ்லிம்கள் மற்றும் சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த பலர் கொள்கை, கட்சி, அமைப்பு, இயக்கம், அரசியல் வேறுபாடின்றி, தங்கள் குடும்பத்தார், மனைவி, மக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் பங்கேற்று பயனடைந்தனர். ஃபஹாஹீலில் ஏறக்குறைய 300 நபர்களும், ஃகைத்தானில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ நிகழ்ச்சியில் 600 நபர்களும், இரவு நிகழ்ச்சியில் 200 நபர்களும் கலந்து கொண்டனர். ஒட்டுமொத்தமாக அனைத்து நிகழ்ச்சிகளிலும் சுமார் 1,100 நபர்கள் வரை கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.
தொடர்ந்து நமது சங்கத்திற்கு ஆதரவு அளித்துக் கொண்டிருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும், நமது செய்திகளை தொடர்ந்து வெளியிடும் இணையதளங்கள், இதழ்கள், வலைப்பூக்கள், தொலைக்காட்சிகள் மற்றம் ஊடகங்கள் ஆகியவற்றின் நிர்வாகிகளுக்கும்,ஆசிரியர் குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன், தொடர்ந்து எங்களின் சேவைகளை செய்திகளாக மக்களிடம் சேர்ப்பிக்குமாறும், குவைத்திற்கு வெளியே வாழும் சகோதரர்கள் குவைத்தில் வசிக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் இந்தச் செய்தியை எத்தி வைக்குமாறும், நம் சங்கத்தின் பணிகள் மென்மேலும் விரிவடைய தங்களின் இருகரமேந்திய பிரார்ததனைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர் K-Tic சங்க நிர்வாகிகள்.
------------------------------------------------------------------------------------------------------