குவைத் அரசு சிறப்பு விருந்தினராக ஆவூர் மவ்லானா
மு. அப்துஷ் ஷுகூர் ஃபாஜில் மன்பயீ ஹழ்ரத் பங்கேற்று சிறப்புரை!!
-------------------------------------------
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் பேரருளால் கடந்த ஏழு வருடங்களாக குவைத் இந்திய தூதரகம், குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம், மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகம் மற்றும் பள்ளிவாசல்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டு, குவைத் வாழ் தமிழ் மக்களுக்கு சமூகம், சமயம், கல்வி என பல்வேறு தளங்களில் சீரிய சிந்தனையாளர்களின் ஆலோசனைகளாலும், சீர்மிகு ஆலிம் பெருமக்களின் வழிகாட்டுதலின் அடிப்படையிலும், ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை அடிப்படையிலும் குவைத்தில் இயங்கும் K-Tic (கே-டிக்) என்றழைக்கப்படும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம், 7ம் ஆண்டு மாபெரும் இஸ்ராஃ / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சிகளை இம்மாதம் (ஜூன் 2012) 14 முதல் 18 ஆகிய தேதிகளில் "அண்ணல் நபியின் விண்ணுலகப் பயணம் - நன்மையே! மண்ணுலகில் வாழும் மானிடருக்கு!" என்ற கருப்பொருளில் தொடர்ந்து ஐந்து நாட்கள் ஐந்து இடங்களில் (4 பெரிய நிகழ்ச்சிகள் மற்றும் 3 உள்ளரங்கு நிகழ்ச்சிகள் என) ஏழு நிகழ்ச்சிகளை பல்வேறு தலைப்புகளில் நடத்தியது. அல்ஹம்துலில்லாஹ்...
இச்சிறப்புமிகு நிகழ்ச்சிகள் அனைத்திலும் தமிழகத்திலிருந்து வருகை தந்த தமிழ்நாடு மாநில ஜமாஅ(த்)துல உலமா சபை துணைத் தலைவரும், திருவாரூர் மாவட்டம் ஆவூர் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலின் தலைமை இமாமுமாகிய மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் அஷ்-ஷைஃக் 'செங்கோட்டைச் சிங்கம்' மு. அப்துஷ் ஷுகூர் ஃபாஜில் மன்பயீ ஹழ்ரத் அவர்கள் குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
முதல் நிகழ்ச்சி:
14.06.2012 வியாழக்கிழமை இரவு 7:00 மணி முதல் மக்ரிப் தொழுகையை தொடர்ந்து இரவு 10:30 மணி வரை குவைத், ஃபஹாஹீல், 'மிஜ்யத் அல் ஹிலால் அல் உதைபீ' பள்ளிவாசலில் சிறப்புரை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் ஆலோசகர்கள் முன்னிலை வகிக்க, மிஜ்யத் அல் ஹிலால் அல் உதைபீ பள்ளிவாசலின் இமாம் சிரியாவைச் சேர்ந்த அஷ்-ஷைஃக் ஸாமீ அப்துல் முத்தலிப் அல் பாஜ் அல் ஸக்ரபா, மிஃராஜ் நிகழ்வின் வரலாற்றுச் சுருக்கத்தை அரபியில் அறிமுகவுரையாற்ற நிகழ்ச்சி இனிதே துவங்கியது. இமாம் அவர்களின் சொற்பொழிவை சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லவீ அஷ்ஷைஃக் எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ தமிழில் வழங்கினார்.
சிறப்பு விருந்தினர் மவ்லானா மு. அப்துஷ் ஷுகூர் ஃபாஜில் மன்பயீ ஹழ்ரத் அவர்கள் "இஸ்லாமிய ஷரீஅத்" என்ற தலைப்பில் சிந்திக்க வைக்கும் அற்புதமான சொற்பொழிவை நிகழ்த்தினார்கள். சங்கத்தின் பொருளாளர் அல்ஹாஜ் எம். ஜாஹிர் ஹுஸைன் நன்றியுரையாற்ற, ஹழ்ரத் அவர்கள் துஆ ஓத, கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
இரண்டாவது நிகழ்ச்சி:
15.06.2012 வெள்ளிக்கிழமை நண்பகல் 12:30 மணி முதல் ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து பகல் 1:45 மணி வரை குவைத், ஃகைத்தான் பகுதியிலுள்ள K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலான அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளிவாசலில் சிறப்புரை நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர் மவ்லானா மு. அப்துஷ் ஷுகூர் ஃபாஜில் மன்பயீ ஹழ்ரத் அவர்கள் 'இறைத்தூதர்களும், சமுதாயச் சேவைகளும்' என்ற தலைப்பில் சிந்திக்க வைக்கும் அற்புதமான சொற்பொழிவை நிகழ்த்தினார்கள். ஹழ்ரத் அவர்கள் துஆ ஓத, கலந்து கொண்ட அனைவருக்கும் குளிர்பானம் வழங்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
மூன்றாவது நிகழ்ச்சி:
15.06.2012 வெள்ளிக்கிழமை இரவு 8:30 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து இரவு 10:45 மணி வரை குவைத் சிட்டி, மிர்காப், 'அல்-ஷாயா' பள்ளிவாசலில் சிறப்புரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் மாணவ மாணவியர் அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களான "அஸ்மாவுல் ஹுஸ்னா"வை குழுவாக ஓத, சங்கத்தின் ஆலோசகர்கள் முன்னிலை வகிக்க நிகழ்ச்சி இனிதே துவங்கியது.
சிறப்பு விருந்தினர் மவ்லானா மு. அப்துஷ் ஷுகூர் ஃபாஜில் மன்பயீ ஹழ்ரத் அவர்கள் 'இஸ்லாமியக் குடும்பவியல்' என்ற தலைப்பில் கருத்தாழமிக்க அற்புதமான பேருரை ஒன்றை நிகழ்த்தினார்கள். சிறப்பு விருந்தினர் மவ்லானா ஹழ்ரத் அவர்கள் துஆ ஓத, கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
நான்காவது நிகழ்ச்சி:
17.06.2012 ஞாயிற்றுக்கிழமை இரவு 7:00 மணி முதல் மக்ரிப் தொழுகையை தொடர்ந்து இரவு 10:30 மணி வரை குவைத், ஃகைத்தான் பகுதியிலுள்ள K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலான அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளிவாசலில் சிறப்புரை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் மாணவ மாணவியர் அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களான "அஸ்மாவுல் ஹுஸ்னா"வை குழுவாக ஓத, சங்கத்தின் ஆலோசகர்கள் முன்னிலை வகிக்க, சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவீ காரீ ஹாஃபிழ் அல்ஹாஜ் அஷ்-ஷைஃக் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ அறிமுகவுரையாற்ற நிகழ்ச்சி இனிதே துவங்கியது.
சிறப்பு விருந்தினர் மவ்லானா மு. அப்துஷ் ஷுகூர் ஃபாஜில் மன்பயீ ஹழ்ரத் அவர்கள் 'வரலாற்று ஒளியில் இஸ்ராஃ / மிஃராஜ்' என்ற தலைப்பில் சிந்திக்க வைக்கும் அற்புதமான சொற்பொழிவை நிகழ்த்தினார்கள். சங்கத்தின் இணைப் பொருளாளர் அல்ஹாஜ் H.M. முஹம்மது நாஸர் நன்றியுரையாற்ற, சிறப்பு விருந்தினர் மவ்லானா ஹழ்ரத் அவர்கள் துஆ ஓத, கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
சங்கத்தின் தலைவர் மவ்லவீ அஷ்ஷைஃக் M.S. முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இச்சிறப்புமிகு நிகழ்ச்சிகள் அனைத்தையும் சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அஷ்-ஷைஃக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A., தொகுத்து வழங்கியதுடன் சங்கத்தின் செயற்திட்டங்கள் குறித்தும் சிறப்புரையாற்றினார்.
இச்சிறப்புமிகு நிகழ்ச்சிகள் அனைத்திலும் குவைத் வாழ் தமிழ் பேசும் மக்கள் முஸ்லிம்கள் மற்றும் சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த பலர் கொள்கை, கட்சி, அமைப்பு, இயக்கம், அரசியல் வேறுபாடின்றி, தங்கள் குடும்பத்தார், மனைவி, மக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் பங்கேற்று பயனடைந்தனர். ஃபஹாஹீலில் ஏறக்குறைய 300 நபர்களும், ஃகைத்தானில் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சியில் 800 நபர்களும், ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் 200 நபர்களும், மிர்காபில் 250 நபர்களும், மூன்று உள்ளரங்க நிகழ்ச்சிகளில் மொத்தமாக 200 நபர்களும் கலந்து கொண்டனர். ஒட்டுமொத்தமாக அனைத்து நிகழ்ச்சிகளிலும் சுமார் 1750 நபர்கள் வரை கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.
தொடர்ந்து நமது சங்கத்திற்கு ஆதரவு அளித்துக் கொண்டிருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும், நமது செய்திகளை தொடர்ந்து வெளியிடும் இணையதளங்கள், இதழ்கள், வலைப்பூக்கள், தொலைக்காட்சிகள் மற்றம் ஊடகங்கள் ஆகியவற்றின் நிர்வாகிகளுக்கும்,ஆசிரியர் குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன், தொடர்ந்து எங்களின் சேவைகளை செய்திகளாக மக்களிடம் சேர்ப்பிக்குமாறும், குவைத்திற்கு வெளியே வாழும் சகோதரர்கள் குவைத்தில் வசிக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் இந்தச் செய்தியை எத்தி வைக்குமாறும், நம் சங்கத்தின் பணிகள் மென்மேலும் விரிவடைய தங்களின் இருகரமேந்திய பிரார்ததனைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர் K-Tic சங்க நிர்வாகிகள்.
------------------------------------------------------------------------------------------------------