பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாட்டின் மூலம் குவைத் வாழ் தமிழ் இஸ்லாமிய மக்களுக்கு கடந்த இரண்டாண்டுகளாக சிறப்பாக நடத்தப்பட்ட புனித ரமழான் மாத கடைசிப் பத்து நாட்களுக்கான கியாமுல் லைல் சிறப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இவ்வருடமும் (1434 / 2013) 28.07.2013 ஞாயிற்றுக்கிழமை (ரழமான் பிறை 20) முதல் 06.08.201 (ரமழான் பிறை 29) வரை தினந்தோறும் நள்ளிரவு 11:30 மணி முதல் அதிகாலை 2:15 மணி வரை குவைத், ஃகைத்தான் பகுதியில் அமைந்திருக்கும் K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலில் கீழ்க்கண்ட முறையில் சிறப்புடன் நடைபெற்றன. அல்ஹம்துலில்லாஹ்...
நிகழ்ச்சி 1: கியாமுல் லைல் சிறப்புத் தொழுகை
சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் அஷ்-ஷைஃக் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ பத்து தினங்களும் சிறப்புத் தொழுகைகளை இமாமாக நின்று நடத்தி வைத்தார். இமாம் அவர்கள் தொழுகையில் நிறுத்தி நிதானமாக தெளிவாக ஓதிய கிராஅத் (திருக்குர்ஆன் ஓதுதல்) தொழுகையாளிகளுக்கு தொழுகையில் ஓர் ஈர்ப்பையும், உள ஓர்மையையும் அளித்ததை கலந்து கொண்டவர்களின் எண்ணங்கள் வார்த்தைகளாக வெளிவந்தன.
நிகழ்ச்சி 2: இஸ்லாமிய வினாடி வினா
தினந்தோறும் தொழுகைகளின் இடைவேளை நேரத்தில் முதல் நான்கு ரக்அத்துகள் முடிந்தவுடன் கலந்து கொண்டோருக்கு ஒரு கேள்வி கேட்கப்பட்டு, அதற்கு சரியாக பதில் சொல்லும் நபர்களில் ஆண்களில் ஒருவருக்கும், பெண்களில் ஒருவருக்கும் பரிசுகள் வழங்கும் வினாடி வினா நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அரிதான கேள்விகள் கேட்கப்பட்டு, மறுநாள் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களின் பெயர்களுடன் அதற்கான பதில்களும் விளக்கமாக சொல்லப்பட்டன. இந் நிகழ்ச்சியிரும் அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அஷ்-ஷைஃக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., இந்நிகழ்ச்சியை நடத்தி வைத்தார்.
நிகழ்ச்சி 3: தஜ்வீத் பயிற்சி வகுப்பு & திருக்குர்ஆன் ஹல்கா
திருக்குர்ஆனை முறையாக ஓத கற்றுக் கொடுக்கும் சிறப்பு "தஜ்வீத்" பயிற்சி வகுப்புகளும், "திருக்குர்ஆன் ஹல்கா" என்றழைக்கப்டும் அனைவரும் ஒன்றாக சேர்ந்து திருக்குர்ஆனை ஓதும் சிறப்பு பயிற்சிகளும் தினந்தோறும் சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் அஷ்-ஷைஃக் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ அவர்களால் நடத்தப்பட்டன. குறிப்பாக இவ்வருடம் திருக்குர்ஆனின் இதயமாக திகழும் "யாஸீன்" அத்தியாயத்தை முறையாக ஓதுவதற்கான பயிற்சி வழங்கப்பட்டது.
முதல் நாள் பெற்ற பயிற்சியை அடிப்படையாக வைத்து அடுத்த நாள் சபையோர் முன்னிலையில் திருக்குர்ஆனை ஓதிக்காட்டுவதற்கு சிறியோர் முதல் பெரியோர் போட்டிப் போட்டுக் கொண்டு ஓத முன்வந்தது பயிற்சி வகுப்புகளின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்திருந்தது. திருக்குர்ஆனை முறையாக ஓதப்படுவதற்கு இந்தப் பயிற்சி தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்று அனைவரும் சங்க நிர்வாகத்தினரிடம் கோரிக்கை வைத்தனர்.
நிகழ்ச்சி 4: சிறப்பு சொற்பொழிவுகள்
தமிழகத்திலிருந்து வருகை தந்த சிறப்பு விருந்தினர் தமிழகத்தின் மூத்த ஆலிம் பெருந்தகை மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் அஷ்-ஷைஃக் ஆன்மீக அறிவொளி அ. முஹம்மது ஷப்பீர் அலீ ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் (நிறுவனர் & முதல்வர், ஜாமிஆ மதீனத்துல் இல்ம் அரபுக் கல்லூரி, சென்னை) அவர்கள் "இறைநம்பிக்கை (ஈமான்)" குறித்த பல்வேறு தலைப்புகளில் சிறப்பு சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்கள்.
ஆரம்ப நான்கு நாட்களில் சங்கத்தின் தலைவர் மவ்லவீ அல்ஹாஜ் அஷ்ஷைஃக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ , துணைத்தலைவர் மவ்லவீ காரீ அஷ்-ஷைஃக் எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ, பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அஷ்-ஷைஃக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., மற்றும் சங்கத்தின் மார்க்க அறிஞர்கள் (ஜமாஅத்துல் உலமா) குழு உறுப்பினர் மவ்லவீ காரீ அஷ்-ஷைஃக் பி.எம். ஷஃபீக் அஹ்மத் நுழாரி அல் ரவ்ழி (இலங்கை) ஆகியோர் சொற்பொழிவாற்றினர்.
நிகழ்ச்சி 5: திக்ர் மஜ்லிஸ்
& துஆ மன்றம்
சிறப்புத் தொழுகையும், வித்ரு தொழுகையும் முடிந்தவுடன் திக்ருகள் ஓதப்பட்டு சிறப்பு பிரார்த்தனைகள் அரபியிலும், தமிழிலும் செய்யப்பட்டன. சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் அஷ்-ஷைஃக் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ மற்றும் சங்கத்தின் பயிற்சி மற்றும் வழிகாட்டல் குழு செயலாளர் மவ்லவீ காரீ ஹாஃபிழ் அஷ்-ஷைஃக் எம். மஹ்பூப் பாஷா ரஷாதீ ஆகியோர் உள்ளம் உருக, கண்ணீர் மல்க சிறப்பு பிரார்த்தனைகளை ஓத, சபையோர் அனைவரும் கூட்டாக ஆமீன் சொன்னார்கள்.
நிகழ்ச்சி 6: தஸ்பீஹ் (ஜமாஅத்) தொழுகை
ஒற்றைப்படை இரவுகளில் தஸ்பீஹ் தொழுகை என்றழைக்கப்படும் சிறப்புத் தொழுகையும் ஜமாஅத்தாக தொழ வைக்கப்பட்டது. சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் காரீ அஷ்-ஷைஃக் ஏ.ஆர். முஹம்மது இப்ராஹீம் மன்பயீ மற்றும் சங்க உறுப்பினர் எம். முஹம்மது அர்ஷத் (இலங்கை) ஆகியோர் இச் சிறப்புத் தொழுகையை இமாமாக நின்று தொழ வைத்தனர்.
நிகழ்ச்சி 7: திருக்குர்ஆன் ஓதுதல் போட்டி
நிகழ்ச்சியின் கடைசி இரண்டு நாட்கள் யாஸீன் ஸூராவை முறையாக, தெளிவான உச்சரிப்புடன் ஓதக்கூடிய போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறுவர், சிறுமியர், ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனியாக போட்டி நடத்தப்பட்டது. மொத்தமாக 40க்கும் மேற்பட்டோர் போட்டியில் பங்கெடுத்தனர்.
நிகழ்ச்சி 8: இறையில்லத் தூய்மைப் பணி
பெருநாள் இரவு K-Tic தமிழ் ஃகுத்பா பள்ளிவாசலையும், சுற்றப்புற வளாகத்தையும் தூய்மைப்படுத்தும் அரும்பணிகளும் நடைபெற்றன. சுமார் 50க்கும் மேற்பட்ட சகோதரர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் களப்பணியாளர்களுடன் இணைந்து பள்ளிவாசல் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர்.
இச்சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு முதல் ஏழு நாட்கள் வரை தினந்தோறும் பெண்கள், குழந்தைகள் உட்பட 400க்கும் அதிகமான நபர்கள் கலந்து கொண்டனர். எட்டாவது நாளான 27ம் தினத்தன்று ஏறக்குறைய 1,200 நபர்கள் கலந்து கொண்டனர். கடைசி இரண்டு நாட்கள் தினந்தோறும் 500 நபர்கள் வரை கலந்து கொண்டனர். ஆக மொத்தம் (5,000) ஐயாயிரத்துக்கும் அதிகமான சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். குவைத் நாட்டில் தமிழ் மொழியில் பல இடங்களில் கியாமுல் லைல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும் K-Tic பள்ளியில்தான் மக்கள் கூட்டம் அலைமோதியது என்பது வருகை தந்தோரின் பதிவுகளாக அமைந்திருந்தது. அல்ஹம்து லில்லாஹ்...
ஒவ்வொரு நாளும் வருகை தந்திருந்த அனைவருக்கும் தொழுகையின் இடைவேளை நேரங்களில் தேநீர், குளிர்பானங்கள், பேரீத்தம் பழங்கள், இனிப்பு வகைகள், பிஸ்கட்கள், தண்ணீர் போன்றவையும், நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் ஸஹர் உணவும் வழங்கப்பட்டன. பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததது. சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்தச் சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்து மக்கள் மன நிறைவுடன் மகிழ்ச்சிகளை பகிர்ந்து கொண்டனர்.
குவைத்திற்கு வெளியே வாழும் சகோதரர்கள் குவைத்தில் வசிக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் இதுபோன்ற செய்திகளை எத்தி வைக்குமாறும், சங்க நிகழ்வுகளில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்குமாறும், நம் சங்கத்தின் பணிகள் மென்மேலும் விரிவடைய தங்களின் இருகரமேந்திய பிரார்ததனைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர் K-Tic சங்க நிர்வாகிகள்.
இத்துடன் நிகழ்வுகளின் சில புகைப்படங்கள் மட்டும் இணைக்கப்பட்டுள்ளன. கூடுதல் தகவல்களுக்கும், இணைந்து செயல்படுவதற்கும் தொடர்பு கொள்க:
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),குவைத்.
-------------------------------------------------------------------------------------------------------