மவ்லானா கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ ஹழ்ரத் வஃபாத்; K-Tic விடுக்கும் இரங்கல் அறிக்கை!

6 views
Skip to first unread message

Kuwait Tamil Islamic Committee

unread,
Dec 21, 2012, 7:49:21 AM12/21/12
to
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...
 
நாடறிந்த மார்க்க அறிஞரும், அற்புதமான சொல்லாற்றல் மிக்கவரும், மார்க்கப் பணிகளில் மிகப் பெரும் சேவையாற்றியவரும் காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் எஸ்.எஸ். கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ ஹழ்ரத் அவர்கள், வியாழன் (20.12.2012) அதிகாலை 2.30 மணியளவில் சென்னையில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
 
ஹழ்ரத் அவர்களுக்கு வயது 72. நெல்லை மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த இவர்கள், காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக் கல்லூரியின் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார்கள். அப்போது முதல்வராக இருந்த மர்ஹூம் மவ்லவீ எஸ்.எம். ஸாஹிப் தம்பி ஆலிம் மறைவுக்குப் பின், அக்கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார்.
 
அன்னாரின் ஜனாஸா சென்னையிலிருந்து அவர்களின் சொந்த ஊரான கடையநல்லூருக்கு கொண்டு வரப்பட்டு, இன்று (21.12.2012 வெள்ளிக்கிழமை) காலை 09.00 மணியளவில் கடையநல்லூர் நடு அய்யாபுரம் ஜமாஅத் பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, அய்யாபுரம் ஜமாஅத் பள்ளிவாசல் வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
 
ஹழ்ரத் அவர்களின் நல்லடக்க நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சங்கைக்குரிய உலமா பெருமக்களும், சமுதாயப் பிரமுகர்களும், ஜமாஅத்தினரும் கலந்து கொண்டனர்.
 
சிந்திக்க வைக்கும் சொற்பொழிவுக்கு சொந்தக்காரரான ஆலிம் பெருந்தகையான ரஹ்மானீ ஹஜ்ரத் அவர்களின் மரணச் செய்தி ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்தையும் குலுக்கி எடுக்கும் துக்கச் செய்தியாகியுள்ளது.
 
அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை பற்றிய தெளிவான விளக்கங்களை மக்களுக்கு விளக்கியவர்கள். சன்மார்க்க விளக்கம் தருவதில் முன்மாதிரியான அறிஞராகவும், சிக்கலான மார்க்க விஷயங்களைக் கூடப் பாமரரும் புரிந்திடும் வகையில் விவரித்துக் கூறுவதில் வல்லவராகவும் திகழ்ந்தவர்கள் ரஹ்மானீ ஹஜ்ரத் அவர்கள்.
 
தமிழகத்தில் மீலாது விழாக்களிலும், ஷரீஅத் மாநாடுகளிலும், கல்லூரி விழாக்களிலும், ஹஜ்ரத் அவர்களின் உரை என்றால், அதனைக் கேட்கும் கூட்டம் தனியே தெரியும். இதயங்களை ஈர்க்கும் இனிய சொல்லரசாக விளங்கினார். ஹஜ்ரத் அவர்களின் சொற்பொழிவுகள் பல்லாயிரக்கணக்கில் ஒளி, ஒலிப் பேழைகளாக உலகம் முழுவதும் பரவியுள்ளன.
 
மிகச்சிறந்த நாடறிந்த நாவலரும், சுன்னத்து வல் ஜமாஅத் கொள்கை கோட்பாடுகளில் மிக உறுதி மிக்கவருமான கண்ணியத்துக்குரிய  ரஹ்மானி அவர்கள் மிகவும் அற்புதமான பேச்சாற்றல் கொண்ட நல்ல ஒரு மனிதர்.  இஸ்லாமிய சரித்திரத்தின் கருவூலத்தை மனக்கண் முன் கொண்டு வரும் ஆற்றல் மிக்க சொல்லின் செல்வர். சொல்லேர் உழவர் அவர்கள். மாற்றுக் கருத்து உள்ளவர்களும் அவர்களின் அற்புதமான பேச்சை கேட்க குழுமியிருப்பார்கள். தமிழும் அரபியும் குர்ஆனும் ஹதீசும் அவர்களுக்கு கை வந்த கலை. நூற்றுக்கணக்கான மணவர்களை ஆலிம்களாக உருவாக்கிய மகத்தான மனிதர். கனீரெனும் குரலில் ஹதீஸ்களை சொல்லும் பேச்சாற்றல் மிக்க பெருந்தகை.
 
தமிழக மக்களின் இறைநம்பிக்கை(ஈமான்)யை தகர்த்தெறிந்த நவீன குழப்பவாதிகளின் முகத்திரைகளை கிழித்தெறிந்தார்கள். சத்திய மார்க்கத்தை தெளிவான முறையில் எடுத்துரைத்தார்கள். ஃபிக்ஹ் சட்டங்கள் குறித்து எழுந்த முறையற்ற விமர்சனங்களுக்கும், குழப்பவாதிகளால் தவறாக சித்தரிக்கப்பட்ட சட்டங்களுக்கும் ஆதாதங்களுடன் பதில் கொடுத்து குழப்பவாதிகளின் வாய்களை அடைத்தார்கள்.
 
யாருக்கும் பயப்படாமல், எந்தவித மிரட்டலுக்கும் அஞ்சிவிடாமல் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு மார்க்கப் பணியாற்றினார்கள். உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் பழக்கமில்லாத மார்க்க மேதை. எதையும் இதயத்தைத் தொடும்படியாக எடுத்துக் கூறும் இயல்புள்ள அறிஞர். சிந்தனையாளர்களுக்கு தூண்டுகோல், செயல் வீரர்களுக்கு துணைவர். மொத்தத்தில் சமுதாய ஒற்றுமைக்கும், சன்மார்க்க எழுச்சிக்கும் பாடுபட்டு மறைந்துள்ள பண்பட்ட தாயி, அவர்களின் மறைவு, உண்மையில் அறிவுலகத்திற்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும்.
 
அறிஞரின் மறைவு அகிலத்தின் மறைவு என்னும் பழமொழிதான் இங்கே நினைவுக்கு வருகிறது.
 
எல்லாம் வல்ல அல்லாஹ் ஹழ்ரத் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மாணவர்கள், ஆலிம் பெருமக்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) பிரார்த்தனை செய்கிறது. ஆமீன்!
 
உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

குவைத்தில் இன்று (வெள்ளிக்கிழமை 21.12.2012) K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு ஹழ்ரத் அவர்களின் சேவைகள் நினைவு கூறப்பட்டு, மறுமை வாழ்வின் வெற்றிக்காக சிறப்பு துஆ செய்யப்பட்டது.


நன்றி! வஸ்ஸலாம்.

 

அன்புடன்....

மவ்லவீ அல்ஹாஜ் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ – தலைவர்

மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., - பொதுச் செயலாளர்

மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள். 

 

---------------------------

தகவல் தொடர்பு & ஊடகப் பிரிவு,

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),

குவைத்.

துரித சேவை அலைபேசி: (+965) 97 87 24 82

மின்னஞ்சல்: q8_...@yahoo.com / ktic....@gmail.com

இணையதளம்: www.k-tic.com

யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group

கூகுள் குழுமம்: http://groups.google.com/group/q8tic




-------------------------------------------------------------------------------------------------------
Web & Media Wing,
Kuwait Tamil Islamic Committee (K-Tic)
Kuwait.
Hotline : (+965) 97 87 24 82
Official Website : www.k-tic.com
SSKM.jpg
sskm1.jpg
sskm2.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages