பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் பேரருளால் கடந்த எட்டு வருடங்களாக குவைத் இந்திய தூதரகம், குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம், மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகம் மற்றும் பள்ளிவாசல்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டு, குவைத் வாழ் தமிழ் மக்களுக்கு சமூகம், சமயம், கல்வி என பல்வேறு தளங்களில் சீரிய சிந்தனையாளர்களின் ஆலோசனைகளாலும், சீர்மிகு ஆலிம் பெருமக்களின் வழிகாட்டுதலின் அடிப்படையிலும், ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை அடிப்படையிலும் குவைத்தில் இயங்கும் K-Tic (கே-டிக்) என்றழைக்கப்படும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம், குவைத் வாழ் தமிழ் மக்களுக்காக சமூக மாற்றத்திற்கான ஓர் பயிற்சிக்களமாக பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை எடுத்துரைக்கும் "மக்கள் கருத்தரங்கம்" என்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியை "சமூக அவலங்களும்... அதற்கான தீர்வுகளும்..." என்ற கருப்பொருளில் குவைத்தில் கடந்த 21.12.2012 வெள்ளிக்கிழமை இரவு 6:30 மணி முதல் இஷா தொழுகையைத் தொடர்ந்து இரவு 10:30 மணி வரை குவைத், ஃகைத்தான், K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலாக அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி)' பள்ளிவாசலில் முதல் முறையாக ஏற்பாடு செய்தது. அல்ஹம்து லில்லாஹ்...
சங்கத்தின் தலைவர் மவ்லவீ அல்ஹாஜ் அஷ்ஷைஃக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ தலைமையில் நடைபெற்ற இச்சிறப்புமிகு நிகழ்ச்சியை இளவல் எஸ். அல் அமீன் இறைமறை திருக்குர்ஆனை "கிராஅத்" ஓதி துவக்கி வைக்க, சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அஷ்-ஷைஃக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., தொகுத்து வழங்கியதுடன் கருத்தரங்க நோக்கத்தையும், நெறிமுறைகளையும் எடுத்துரைத்தார்.
தலைவரின் தலைமையுரைக்குப் பின் தமிழகம், புதுச்சேரி மற்றும் இலங்கையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட சகோதர, சகோதரிகள் தங்களின் கருத்துக்ளை ஒற்றுமை, அரசியல், இதழியல், குடும்பவியல், இறையச்சம், அலைபேசி, இணையதளம், ஒழுக்கம், சமுதாயம், கூட்டமைப்பு, கல்வி, தற்கொலை, வரதட்சணை, ஏழைவரி (ஜகாத்) மற்றும் மகளிர் என பல்வேறு தலைப்புகளில் சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் அவலங்களையும், அதற்கான தீர்வுககளையும் எடுத்துரைத்தனர்.
தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை (TMCA), காயிதே மில்லத் பேரவை (QMF), தமிழக இஸ்லாமிய மாணவர் பேரவை (TISA), தாய்மண் கலை இலக்கியப் பேரவை மற்றும் தமிழோசை கவிஞர் மன்றம் உள்ளிட்ட குவைத் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும் தங்களின் கருத்துரைகளை வழங்கினர்.
சங்கத்தின் இணைப்பொருளாளர் அல்ஹாஜ் எச். முஹம்மது நாஸர், நன்றியுரையாற்ற, சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லவீ அல் ஹாஃபிழ் அல்ஹாஜ் அஷ்-ஷைஃக் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ, துஆ ஓத "மக்கள் கருத்தரங்கம்" இனிதே நிறைவுற்றது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டோருக்கும் வழங்கப்பட்ட கருத்துக் கேட்பு படிவத்தில் "இந் நிகழ்ச்சி சிறப்பான நிகழ்ச்சி", "மாதத்திற்கொருமுறை நடத்த வேண்டும்", "மதம், கொள்கை மற்றும் அமைப்பு வேறுபாடின்றி தமிழ் மக்கள் தங்களின் கருத்துக்களை எடுத்துரைப்பதற்கு குவைத் மண்ணில் ஏற்பாடு செய்யப்பட்ட முதல் நிகழ்ச்சி இதுதான்", "சமூக ஒற்றுமைக்கு அடித்தளமாக விளங்கும் நிகழ்ச்சி", "குவைத்தின் பல பகுதிகளிலும் இந்நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும்" என்று பலவிதமான கருத்துக்களை மக்கள் பதிவு செய்தனர்.
கருத்துரைகளை வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ்களும், சிறப்பாக உரையாற்றிய ஒருவருக்கு சிறப்புப் பரிசும் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஜனவரி மாத இறுதியில் நடைபெறும் சங்கத்தின் 8ம் ஆண்டு ஸீரத்துன் நபி (ஸல்) பெருவிழாவில் வழங்கப்படும் என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பெண்களுக்கு தனியிட வசதியுடன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர் சங்க நிர்வாகிகள். பெண்கள், குழந்தைகள் உட்பட ஏறக்குறைய நூற்றி ஐம்பதுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் இனிப்பு பாயாசம், தேநீர், இரவு உணவு மற்றும் சங்கத்தின் 2013ம் ஆண்டு நாட்காட்டி ஆகியவை வழங்கப்பட்டன.
தொடர்ந்து நமது சங்கத்திற்கு ஆதரவு அளித்துக் கொண்டிருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும், நமது செய்திகளை தொடர்ந்து வெளியிடும் இணையதளங்கள், இதழ்கள், வலைப்பூக்கள், தொலைக்காட்சிகள் மற்றம் ஊடகங்கள் ஆகியவற்றின் நிர்வாகிகளுக்கும், ஆசிரியர் குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன், தொடர்ந்து எங்களின் சேவைகளை செய்திகளாக மக்களிடம் சேர்ப்பிக்குமாறும், குவைத்திற்கு வெளியே வாழும் சகோதரர்கள் குவைத்தில் வசிக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் இந்தச் செய்தியை எத்தி வைக்குமாறும், நம் சங்கத்தின் பணிகள் மென்மேலும் விரிவடைய தங்களின் இருகரமேந்திய பிரார்ததனைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர் K-Tic சங்க நிர்வாகிகள்.
-----------------------------------------------------------------------------------------------------
செய்தி:
தகவல் தொடர்பு & ஊடகப் பிரிவு,
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),
குவைத்.