• Monday, July 16, 2012, 6:10
தமிழ்த்தேனீ
தமிழ்த்தேனீயாகிய நான் எழுதி வல்லமை இதழில் வெளியாகிய கதைகளில் 52 கதைகளை
“வெற்றிச் சக்கரம்“ என்னும் பெயரில் சிறுகதைத் தொகுப்பாக மணிவாசகம்
நூலகத்தார் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள்.
அந்த செய்தியைப் பகிர்ந்து கொள்ள ஒரு முன்னுரை எழுதி இருக்கிறேன்.
****************************
வாசகப் பெருமக்களே, ரசிகப் பெருமக்களே,
நான் ஒரு நடிகன், கவிஞன், எழுத்தாளன், ஆம் உங்கள் இல்லத்துக்கு உங்கள்
அனுமதியோடு உலா வருகின்ற நக்ஷத்திரம், உங்கள் தொலைக் காட்சியில், உங்கள்
கணிணியில், உங்கள் அனுமதியோடு உங்கள் இல்லத்துக்கு வரும் உங்கள்
சகோதரன்.
என்னுடைய இயற்பெயர் ஆர்.கிருஷ்ணமாச்சாரி, ஸ்ரீவில்லிபுத்தூர் திருவாளர்
ரங்கஸ்வாமி ஐயங்கார் அவர்களுக்கும், எழுத்தாளர் ஸ்ரீரங்கம் ஆர்.கமலம்மாள்
அவர்களுக்கும் எட்டாவது பிள்ளையாக பிறந்தவன். உலகில் நம்மை மீறிய ஒரு
சக்தி இருப்பதை ஒப்புக்கொண்டால், உன்னுள்ளும், மற்றவர்களிடமும், அனைத்து
உயிர்களிலும் தெய்வம் இருக்கிறது என்று ஒப்புக்கொண்டால் மற்றவர்களிடம்
அன்பு செலுத்தி அவர்களையும் நல்வழிப்படுத்த வேண்டும் என்று என் தாயார்
ஆர் கமலம்மாள் கூறிய சொற்கள் என்னைப் பண்படுத்தின.
கோயிலுக்கு சென்று இறைவனை வணங்குகிறாயோ இல்லையோ, உதவி செய்ய முடிந்தால்
உதவி செய், அதுவும் உன் சக்திக்கேற்ப, ஆனால் யாருக்கும் எந்த த்ரோகமும்,
தீங்கும் செய்யாதவனாக வாழக் கற்றுக்கொள் என்று என் தந்தையார் ஆர்.
ரங்கஸ்வாமி அவர்கள் கூறிய அறிவுரை என்னை மேலும் பண்படுத்தியது.
என் தாயார் நோயுற்று நலிந்த காலத்தில் அவர் மனதில் தோன்றும் கவிதைகளை,
கதைகளை வாயால் சொல்லுவார்கள். நான் உட்கார்ந்து எழுதுவேன். அந்தப்
பயிற்சி என்னை எழுத்தாளனாக மாற்றியது என்றால் அது மிகையல்ல. என்னை
எழுத்தாளனாக வடிவமைத்த பெருமை என் தாயார் கமலம்மாளையே சேரும். “உன்
மனதில் நீ ஒரு எழுத்தாளன் என்று எப்போது முழுமையாக உணர்கிறாயோ அப்போது
அறிவித்துவிடு நீ ஒரு எழுத்தாளன் என்று” என்று என் தாயார் கூறிய
அறிவுரையை ஏற்று ஓரளவு எனக்கே மனம் ஒப்பிய பிறகுதான் நான் எழுத்தாளர்
சங்கத்தில் இந்தச் செய்தியைக் கூறியே திரு விக்ரமன் அவர்கள் மூலமாக என்
பெயரைப் பதிந்தேன் நானும் ஒரு எழுத்தாளனென்று.
பதினான்கு நாடகங்கள் எழுதி இயக்கி உள்ளேன் பல முதற்பரிசுகள்
பெற்றுள்ளேன். கவிதைக்கு விசாலி கண்ணதாசன் அவர்கள் பரிசளித்தார்கள்.
ஆண்டாள் பிரியதர்ஷினி தேர்ந்தெடுத்தார். 24 மணி நேர இடைவிடாத நாடகத்தில்
நடித்தேன், லிம்கா அவார்ட் பெற்றது. ப்ரபல எழுத்தாளர்கள் புஷ்பா
தங்கதுரை, கூத்தபிரான், எஸ் வீ வெங்கட்ராமன் போன்றோர் என் நாடகத்தைப்
பாராட்டி முதற்பரிசு வழங்கியுள்ளார்கள்.
நான் என் தாயாருக்கு எட்டாவது பிள்ளையாகப் பிறந்த போது என் தாயாருக்கு
ப்ரசவம் பார்த்த மருத்துவர், டாக்டர் திரிபுர சுந்தரி என்னும் எழுத்தாளர்
லக்ஷ்மி அவர்கள், இந்தச் செய்தியை எழுத்தாளர் லக்ஷ்மி அவர்களே ஐ சீ எப்
நாடக அரங்கத்தில் நான் எழுதி இயக்கிய நாடகத்துக்கு முதற்பரிசும்
அளித்துவிட்டு எல்லோர் முன்னிலையிலும் கூறினார் என்பது நான் மிகவும்
மதிக்கும் பொன்னான தருணம்.
அப்போது அவர்கள் கூறிய சொல் என்னை மிகவும் மகிழ்வைத்த பெருமைப்பட வைத்த
சொல். ஆர். கிருஷ்ணமாச்சாரி என்னும் தமிழ்த்தேனீ ”என் கையில் பூத்த மலர்
” இவனுடைய தாயார் ஆர் கமலம்மாள் என் பால்ய ஸ்னேகிதி, சகோதரி, நானும் ஆர்
கமலம்மாளும் வை மூ கோதைநாயகியோடு சேர்ந்து சுதந்திரப் போராட்டம் நடந்த
காலத்தில் ”வாருங்கள் மறியல் செய்து மனம் மகிழந்திட வாருங்கள்” என்று
பாடிக்கொண்டே அவர்களது கைவளையல்களை கழற்றிக் மஹாத்மா காந்தியிடம்
நாட்டுக்காக கொடுத்தவர்கள். என்று கூறினார்.
முன்பெல்லாம் என் தாயார் ஆர் கமலம்மாள் அவர்களின் படைப்புகள் வராத
பத்திரிகையே இல்லை. ”கிருஷ்ணதீர்த்தம் “ என்னும் சிறு கதை எழுதி
ஜன்கல்யாண் அமைப்பில் போட்டியில் முதற்பரிசு பெற்று திரு
சங்கராச்சாரியார் அவர்களின் பொற்கரத்தால் தங்க காசு அளிக்கப்பட்டு
கௌரவிக்கப் பட்டார் என் தாயார். அவர்கள் எழுதிய பாடல்கள் ” தெய்வீகப்
பாமாலை ” என்னும் பெயரில் திருமதி பம்பாய் சகோதரிகளால் பாடப்பட்டு, எல்
கிருஷ்ணன் அவர்களால் இசையமைக்கபட்டு சங்கீதா நிறுவனத்தாரால் ஒலி நாடாவாக
வெளியிடப்பட்டது.
”ஓவ்வொரு மனிதரிடமும் எல்லாவித சக்திகளும் உண்டு, எந்த சக்தியை
வள்ர்த்துக் கொள்கிறோமோ அந்த சக்தி வளரும்” என்னும் கொள்கையில் நம்பிக்கை
உடையவன் நான். அதனால் பாட்டுப் போட்டிகள் கவிதைப் போட்டிகள், சித்திரப்
போட்டிகள் போன்ற பல போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்று என்னை
பண்படுத்திக் கொண்டே வருகிறேன். இன்று நான் ஒரு நடிகன், ஒரு எழுத்தாளன்.
மேடை நாடகங்களில் பல நூறு முறை நடித்திருக்கிறேன். இந்தியத்தொலைக்
காட்சியில் அனுமதிக்கப்பட்ட நடிகன். மேலும் பல தொலைக்காட்சித் தொடர்களில்
நடித்தவன், பல திரைப்படங்களில் நடித்தவன்.
இணையத்தில் ”தினம் ஒரு கவிதை” என்னும் இணையதள பத்திரிகையில் என் முதற்
கவிதை வெளியாகியது. அதன் பிறகு தினம் ஒரு கவிதை எழுதவேண்டும் என்னும்
ஆர்வம் என்னைப் பற்றியது, இன்றளவும் அதை கடைப்பிடிக்கிறேன். அதன் பிறகு
அன்புடன், மின் தமிழ், மழலைகள், இல்லம், போன்ற சுமார் முப்பது
குழுமங்களில் நான் எழுதி வருகிறேன்.
இணையத்தில் என்னை தமிழ்த்தேனீ என்று அறிவர். மின்தமிழ் அமைப்பில் ஒரு
மரபு அணிலாக என்னை ஈடுபடுத்திக்கொண்டு செயலாற்றி வருகிறேன். இணையத்தில்
கூகிள் தேடலில் தமிழ்த்தேனீ என்று தேடினால் நான் கிட்டத்தட்ட 10
வருடங்களாக எழுதிய கதைகள், கவிதைகள், கட்டுரைகள் அனைத்தும் கிடைக்கும்.
என்னுடைய இருவதாவது வயதில் நான் என் எழுத்துப் பணியை தொடங்கினேன்.
என்னுடைய முதல் படைப்பு . ”காசில்லாக் கல்யாணம்” என்னும் ஒரு நாடகம்.
நான் லூகாஸ் டீ வீ எஸ்ஸில் பணிபுரிய ஆரம்பித்து இருவருடங்கள் ஆன நிலையில்
அந்த நிறுவனத்தின் மனமகிழ் மன்றத்தின் வருடாந்திர நாடகப் போட்டிக்குதான்
முதன் முதலாக எழுதத் தொடங்கினேன். அதன் பிறகு பல கவிதைப் போட்டிகள்,
கட்டுரைப் போட்டிகள், நாடகப் போட்டிகளில் என் எழுத்து கருவாகி உருவானது.
பல வயதான முதியவர்கள் பணியிலிருந்து ஓய்வு கொண்டு மீதம் இருக்கும்
வாழ்நாளின் நேரத்தை எப்படி செலவிடுவது என்று முறையாகத் திட்டமிடாத
காரணத்தாலும், தங்களுக்கு வயதாகிவிட்டது என்னும் மனோ நிலை அளித்த மன
அழற்சியாலும் வாழ்க்கையில் சோக மயமாகக் காட்சி அளிப்பதை கண்டு, என்
வாழ்க்கையை முறையாகத் திட்டமிட்டேன். அதன் விளைவாக என் பணிக்காலம்
இன்னும் ஐந்து ஆண்டுகள் மீதம் இருந்த நிலையிலேயே குடும்பத்தின் கடமைகளை
ஓரளவு முடித்துவிட்ட நிலையில் விருப்ப ஒய்வு கொண்டேன்.
நான் 53 வயது இளைஞன் என்னும் மன நிலையில் மீதம் இருக்கும் வாழ்நாளை நான்
பிறந்த இந்த பாரத தேசத்தின் நலனுக்காகவும், இங்கே இருக்கும் என் மக்களின்
நலனுக்காகவும் ஏதேனும் செய்யவேண்டும் என்று தீர்மானித்தேன்.இப்போது
எனக்கு வயது 65. நான் அனுபவித்த இன்பங்கள், துன்பங்கள், துயரங்கள்,
வினோதங்கள், யாத்திரைகள், ஆன்மீக உணர்வுகள், ஆகியவற்றின் மூலமாக எனக்குக்
கிடைத்த அனுபவங்களைப் பதிவு செய்து நான் வாழ்க்கையில் கற்ற பாடங்களை
மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் படைப்புகளாக மாற்றும் பணியில்
மும்முரமாக ஈடுபட்டேன்.
அது மட்டுமல்ல பல பள்ளிகளில் இந்த நாட்டின் வருங்காலத் தூண்கள் என்று
நாம் நினைக்கும் மாணவர்களுக்கு என்னுடைய அனுபவங்களை எடுத்துக்
கூறிஅவர்களை நல்வழிப் படுத்தும் விதமாக உரையாற்றி வருகிறேன், மற்றும்
எக்ஸ்னோரா என்னும் அமைப்பில் என்னை ஈடுபடுத்திக்கொண்டு பல இடங்களில்
மரங்களை நட்டு வருகிறேன், நம் நாட்டை தூய்மையான நாடாக மாற்ற என்னாலான
பணிகளை செய்து வருகிறேன். எக்ஸ்னோரா அமைப்பில் சுற்றுச் சூழல்
விழிப்புணர்வு தொடர்பாக பல பொது மேடைகளில் உரையாற்றுகிறேன்.
தமிழிலுள்ள பலவகைப் பூக்களில் தமிழ்ப்பூக்களில் உள்ள மகரந்தத்தை சுவைத்து
அதிலுள்ள தேனை உறிஞ்சி சேகரித்து வைத்து, அந்தத் தேனை உங்களுக்கு அளித்து
மகிழ மனம் கொண்டதனால், தமிழ்த்தேனீ என்று மிகவும் விரும்பிப் பெயர்
வைத்துக் கொண்டேன்.
ஆம் நான் உங்கள் தமிழ்த்தேனீ, அதுவும் உங்கள் மேல் அன்பும், அக்கறையும்,
பாசமும், நேசமும் கொண்ட உங்கள் தமிழ்த்தேனீ. நான் பிறந்து இதுவரை
வாழ்ந்து அன்றாடம் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை என் மனதில்
இருத்திக்கொண்டு, அவற்றை அசைபோட்டு அதன் வாயிலாக கிடைத்த உணர்வுகளை,
பெற்ற ஞானத்தை, உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டு என்னுடைய சிறு வயது
முதற்கொண்டு நடந்த அனைத்து ரசமான நிகழ்வுகளை அப்படியே உங்களிடம் பகிர
என்னுடைய நினைவுப் பெட்டகத்தில் சேமித்து வைத்திருக்கிறேன்.
அவற்றில் பல உங்களுக்கு பயன்படலாம் என்னும் கருத்தில் உங்களுடன்
பகிர்கிறேன். உறக்கமில்லாத, விழிப்புமில்லாத ஒரு மோன நிலையில் நான்
என்னுள் மூழ்கியிருந்த ஒரு இதமான வேளையில், என் நினைவுத் தடாகத்தில்
சிந்தனை மீன்கள் நீந்தத் தொடங்கின, வாழ்க்கை என்னும் தடாகத்தில்
கல்லெறிவோரும் உண்டு, மீன் பிடிப்போரும் உண்டு, முங்கிக் குளித்து பேறு
பெருவோரும் உண்டு,பாசம் வழுக்கி நீரில் அழுந்தி எழமுடியாது போவோரும்,
தளைகளை அறுத்து மீண்டும் எழுவோரும் உண்டு,அது அவரவர் வழி,அதை விதி என்று
ஏற்போரும் மதியின் அதிகப்ரசங்கித்தனம் என்று வாதிடும் முற்போக்குச்
சிந்தனை கொண்டோரும், அனைவருமே தம்முடைய நினைவுத் தடாகத்தில் மூழ்கி
சிந்தனைப் பெருங்கடலில் கலக்க முயல்வர் எனபது தெளிவு.
நான் என்னுடைய வாழ்க்கைத் தடாகத்தில் ஓரளவு முங்கி, மூச்சு முட்டும்போது
வெளியே எட்டிப்பார்த்து, கடினமான மற்ற நேரங்களில் மல்லாந்து படுத்து
மிதந்து, தாமரை அல்லித் தண்டுகள் போன்ற தாவரங்களின் வேர்களிலிருந்து
வரும் தண்டுகள் போன்ற பலவிதமான இன்னல்களிள் மாட்டிக்கொண்டு,முயன்று
விடுவித்துக்கொண்டு, அந்த வாழ்க்கைத் தடாகத்திலே ஓரளவு நேர்மை என்னும்
குணத்தை கைக்கொண்டு, நீந்திக்கொண்டிருப்பவன்.
அதனால் நீர்க்குமிழிகள் போன்ற நினைவலைகள் எப்போதும் என்னைச் சுற்றி
ஊதியும், பெருத்தும் உடைந்தும், மீண்டும் துளிர்த்தும், அதன்
சுவாரஸ்யத்தில் நான் என்னை மறந்து அந்தக் கதிரவனின் ஒளிக்கதிர்களால்
ஏற்படும் வர்ணஜாலங்களை ரசித்துக்கொண்டே என் மனதைப் பறிகொடுத்து அந்த
நீர்க்குமிழிகளிலேயே உட்புகுந்து, வெளிவந்து வாழ்ந்துகொண்டிருக்கும் என்
உள் மனம்.
என்னதான் உடைந்து போனாலும், உருவானாலும் அந்த நீர்க்குமிழிகளின்
துகள்களிடையே நினைவுத்தடமாய் அணுவிலும் அணுவாய் இருந்தாலும் அவற்றிலும்
அப்படியே அழுந்தி ஆழமாய்ப் பதிந்து இரண்டறக் கலந்து என் ஆழ் மனதுக்குள்ளே
அப்படியே நினைவுத் தடமாய்ப் பதிந்து இருக்கும் உணர்வுகள், எண்ணங்கள்
அனைத்தையும் யாராலும் அழிக்க முடியாத அளவுக்கு ஊறிப்போய் அப்படியே
மீண்டும் நீர்க்குமிழியாய் வெளிவந்து ஊதும்போது அந்த நீர்க்குமிழிகளில்
நிறைந்து மறுபடி மறுபடி புதுப்பித்துக்கொண்டு கால ஓட்டத்தின்
நினைவுகளையும் கனவுகளையும் சுமந்துகொண்டு ஒளிர்ந்துகொண்டிருக்கிறேன்.
அதனால் எப்போது உடையும் என்றே தெரியாத நீர்க்குமிழி ஆனாலும் உள்ளே
பொதிந்திருக்கும் நினைவு தடங்களின் தாக்கம் குறையாமல் மீண்டும் மீண்டும்
புதியதாய்த் தோன்றிக்கொண்டே இருக்கிறேன், அதனால் என் சுழற்சிக்கு முடிவே
கிடையாது ,ஆம் அந்த முடிவில்லாத சுழற்சியும், அவை பதிக்கும் நினைவுத்
தடங்களும் எப்போதும் இளமை குன்றாதவை, ஆர்வமும், ஆச்சரியமும்,
அதிர்ச்சியும், ஆனந்தமும், ரகசியமும், இளமைத் துள்ளலும், எப்போதும் என்
கைவசமிருக்கும் அரிய சொத்துக்கள், அந்த நினைவு சுரங்கத்தை தோண்டிக்கொண்டே
இருப்பதால் அவ்வப்போது சிலபல நல்ல நிகழ்வுகளும், வாழ்க்கையின் ரகசியம்.
புரியவைத்த இடர்ப்பாடுகளும், இனிய நிகழ்ச்சிகளின் இனிய நினைவுகளும்,
அனுபவ பாடங்களாக இழையோடிக்கொண்டே இருப்பதால் அந்த நினைவுகளை உங்களோடு
பகிர வேண்டும் என்னும் விழைவால் பகிர்கிறேன்.
கூடவே வந்து அனுபவிக்கத் தயாராய் இருப்பவர்கள் வாருங்கள், அழைத்துச்
செல்கிறேன், முரண்பாடான மாற்று எண்ணம் கொண்டவர்களும் முரண் தீர்ந்தால்
மீண்டும் என்னோடு இணையுங்கள், ப்ரயாணத்தை தொடர்வோம். இப்ரயாணத்தில்
உங்களின் அனுபவமும் இணைவதால் என்னுடைய அனுபவம் நிச்சயம் வளரும்.
உங்களுக்கும் ஏதேனும் நல்ல அனுபவம் கிடைக்கலாம்.
ஒரு எழுத்தாளன் எந்த மொழியில் எழுதினாலும் அவன் அந்த மொழியில் உள்ள
சொற்களை எடுத்தாளாமல் ஒரு கவிதையோ, கட்டுரையோ, கதையோ அல்லது எந்தப்
படைப்புகளும் உருவாகாது, அதனால் எழுத்தாளர்களை எடுத்தாளர்கள் என்றும்
அழைக்கலாம் தவறில்லை என்று தோன்றுகிறது,எழுத்தாளனாக இருந்தாலும்,
எடுத்தாளனாக இருந்தாலும் ஒரு படைப்பாளி ஒரு படைப்பை படைக்க ஆரம்பிக்கும்
முன்னர், அவன் மூளையில் அவன் படைக்கவிருக்கும் படைப்பைப் பற்றிய சிந்தனை
ஊற்றாகப் பெருக்கெடுக்க வேண்டும், உள்ளுக்குள்ளே உணர்ந்து
உணர்ந்து ,உருப்போட்டு,உருப்போட்டதைஉள்வாங்கி உள்வாங்கியதை ஒரு
கர்ப்பிணியின் ப்ரசவ காலம் போல பல வலிகளைத் தாங்கி, அந்தப் படைப்பை அவன்
தன்னுடைய குழந்தையைப் போல ப்ரசவித்து, ப்ரசவித்த அந்தக் குழந்தையை, ஒரு
தாய் எப்படி சீராட்டி பாலூட்டி, கவனமாய் வளர்க்கிறாளோ அப்படி மீண்டும்
மீண்டும் அந்தப் படைப்பை, அவனுடைய கற்பனைக் குழந்தையை படித்துப் பார்த்து
அதன் குறைகளைக் களைந்து, ஒரு சிறந்த படைப்பாக, அந்தப் படைப்புக்
குழந்தையை மிளிரச் செய்வதுதான், ஒவ்வொரு படைப்பாளியின் முக்கியமான கடமை,
அது மட்டுமல்ல அவன் படைப்பை படிக்கும் வாசகன் அந்தப் படைப்பை படித்து
அதன் மூலமாக ஒரு புத்தி கொள்முதல் பெற்றால், அது அந்தப் படைப்பாளிக்கு
வெற்றி!
அந்தப் படைப்பு இறை அருள், உழைப்பு, கடினமான உழைப்பு, கற்றல், கற்றவற்றை
ஆராய்ந்து அறிதல், போன்றவைகளை அடிப்படையாகக் கொண்டு, இன்னும் மெருகேறி
உள்ளுக்குள்ளே இயல்பாக ஊறி, ஊற்றாகப் பெருக்கெடுத்து நதியாகப் புறப்பட்டு
அதே வேகத்துடன் தாமாய் இயல்பாக வந்து விழும் சொற்கள் கொண்ட படைப்புகள்
தரமான படைப்புகளாக மலர்கின்றன ,கருத்துக்கேற்ப சொற்கள் தாமாக வந்து
அமையுமானால் அந்தப் படைப்பு சிறந்த படைப்பாக வெளிவர வாய்ப்புகள் அதிகம்.
”அதாவது ஒரு கற்பனாவாதி எழுத்துக்களை ஆள்கிறான் என்பதை விட, எழுத்துக்கள்
ஒரு நல்ல கற்பனாவாதியைத் தேர்ந்தெடுத்து அந்தக் கற்பனாவாதியை ஆண்டு தரமான
படைப்புகளாக தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றன, எழுத்துக்கள் எழுத்தாளனை
ஆள்கிறது” என்றுதான் தோன்றுகிறது, நம் ரத்தத்தில் உள்ள நம் முன்னோர்களின்
ஜீவ அணுக்களால் விளைந்த இந்த தேகத்தில், அந்த முன்னோர்கள் கற்ற கலைகள்,
தாமாகவே உள்ளிருந்து ஒரு குறிப்பிட்ட தருணத்தில் வெளிப்படுவதும் உண்டு,
எழுத்தாளரான என் தாயார் ஆர் கமலம்மாள் அவர்களால் பேணி வளர்க்கப்பட்ட என்
அறிவு என்னையும் ஒரு எழுத்தாளனாக ஆக்கியுள்ளது. என் எழுத்துக்கள் என்னை
வளர்க்கின்றன, ஒவ்வொரு நாளும் என் மனதில் அறிவு விசாலத்தை
ஏற்படுத்துகின்றன, ஒரு செய்தியைப் பற்றி எழுதும்போதே அந்தச் செய்தியை
தவறில்லாமல் எழுதவேண்டுமே என்னும் பொறுப்பு கூடுகிறது, அதன் விளைவாக அந்த
செய்தியைப் பற்றி மேலும் படிக்க ஆர்வம் ஏற்படுகிறது. ஆகவே எழுத
ஆரம்பித்தாலே படிக்க ஆரம்பிப்போம், படிக்க ஆரம்பித்தாலே நிறைய எழுத
செய்திகள் கிடைக்கும், இது ஒரு அறிவுச் சக்கரம், இந்த அறிவுச்சக்கரத்தில்
நாம் சுழன்றால் மேன்மேலும் நம் ஞானத்தைப் பெருக்கிக்கொள்ளமுடியும்.
”ஆன்றோர் செரித்த அறு சுவையின்
வெளிப்பாடே இங்கே நமக்கு அகப்பாடு,
எங்கே அறிவு வெளிப்படினும்
அதுவே நமக்கு முதல் ஈடு”
இறைவன் அருளால் எனக்கு கற்பனை குதிரை அபரிமிதமாக துள்ளும் என் மனதில்,
அப்படிப்பட்ட நேரங்களில் பணியிலிருந்தாலும், அல்லது நல்ல தூக்கத்தில்
இருந்தாலும் வரும் கற்பனையை நினைவு வைத்துக்கொண்டு உடனே எழுதி வைப்பது
என் வழக்கம், அப்படி நான் எழுதிய கவிதைகள், கட்டுரைகள்,கதைகள் ஏராளம்,
அந்த மொத்தக் கற்பனைப் படைப்புகளையும் அப்படியே சேமித்து வைத்தேன்,
அவற்றையெல்லாம் இப்போது தட்டச்சுகூடத் தெரியாத நான் சுயமாகக் கணிணி
கற்றுக்கொண்டு அந்தக் கணிணியிலே என் படைப்புக்களை எழுத்து வடிவில்
கோப்புகளாக சேமித்து வைக்கின்றேன், அது மட்டுமல்ல இன்று இணையத்தில் பல
குழுக்களில் நான், தமிழ்த்தேனீ என்னும் புனைப் பெயர் கொண்டு
எழுதிக்கொண்டிருக்கிறேன், என்னுடைய ஒவ்வொருநாள் வாழ்க்கையிலும் பல
பாடங்களைக் கற்றுக்கொள்கிறேன்.
என்னுடைய எல்லாக் கலைகளுக்கும் காரணமான, மற்றும் எங்களுக்கு கிடைத்த
அனைத்து செல்வங்களுக்கும் ஆசிகளுக்கும் காரணமான ”நானும் என் எழுத்தும்”
எனும் ஒலி இது என் அன்னையின் ஒலியே, அவரின் ஆக்கமே அவரின் எழுத்தே,
அவரின் படைப்பே அதனால் இதை அவர்களுக்கே மன நெகிழ்ச்சியுடன்
சமர்ப்பிக்கிறேன், மீண்டும் தொடர்ந்து எழுத இறைவனின் கருணை எனக்கு உண்டு
என்னும் நம்பிக்கையோடு உங்களை மீண்டும் என் எழுத்தின் மூலமாக
சந்திக்கின்றேன்.
நான் பிறந்த இந்த பாரத தேசத்தின் நலனுக்காகவும், இங்கே இருக்கும் என்
மக்களின் நலனுக்காகவும் ஏதேனும் செய்யவேண்டும் என்று தீர்மானித்தேன்.
அதன் விளைவாக இன்று வரை ஒவ்வொரு நொடியும் நான் அனுபவித்த, அனுபவித்துக்
கொண்டிருக்கிற இன்பங்கள், துன்பங்கள், துயரங்கள், வினோதங்கள்,
யாத்திரைகள், ஆன்மீக உணர்வுகள், ஆகியவற்றின் மூலமாக எனக்குக் கிடைத்த
அனுபவங்களைப் பதிவு செய்து நான் வாழ்க்கையில் கற்ற பாடங்களை
மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் படைப்புகளாக மாற்றும் பணியில்
மும்முரமாக ஈடுபட்டேன்.
இந்த சமூகத்தில் இருக்கும் மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி
அவர்களை அவர்களின் கடமைகளை ஒழுங்காகச் செய்யவைத்து, அவர்களுக்கு நன்மை
செய்யவும், நாட்டிற்கு நன்மை செய்யவும் ஆளுவோருக்கு நல்ல அறிவுரைகளை
துணிச்சலோடு எடுத்துக் கூறுபவனாக தன்னை வரித்துக்கொண்டு எழுத்தாணியைப்
பிடிக்க வேண்டும் ஒரு எழுத்தாளன்.
முதலாளியின் பெருமைகளை உணர்ந்து, அவர் நடத்தும் தொழிலின் மேன்மையை
உணர்ந்து, அதை தொழிலாளர்களுக்கு எடுத்து சொல்லி உண்மையாக உழைக்கும்படி
தொழிலாளர்களை அறிவுறுத்தி மேன்மைப்படுத்தி, தொழிலாளர்களின் நலனுக்காகவும்
சிந்தித்து அவர்களுக்காகவும் பரிந்து பேசி தொழிலாளிக்கும் முதலாளிக்கும்
தொழிலுக்கும் நன்மை செய்வதையே தலையாய குறிக்கோளாகக் கொண்டவனாக, ஒரு
முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையே பாலமாக செயல்படும் சங்கத்தின் தலைவன்
போல எழுத்தாணியைப் பிடிக்க வேண்டும் ஒரு எழுத்தாளன்.
பெற்ற தாய் தன் குழந்தைகளுக்கு வேண்டுவனவற்றை இனிமையான வேளை பார்த்து
கணவனிடம் இதமாக பதமாக எடுத்துக்கூறி, தன் குடும்ப நிலவரங்களை சரியாகப்
புரிந்துகொண்டு கணவனுக்கும் பாரம் இல்லாத யோசனைகளைக் கூறி குழந்தைகளின்
வேண்டுகோளையும் நிறைவேற்றும் பாசமிக்க தாயைப் போல, நடு நிலை தவறாத
மனைவியைப் போல் நற் குறிக்கோளோடு எழுத்தாணியைப் பிடிக்க வேண்டும் ஒரு
எழுத்தாளன்.
இப்படிப்பட்ட குறிக்கோள்களை என் மனதில் விதைத்த என் தாயார் ஆர்.
கமலம்மாள் அவர்களின் அறிவுரைப்படி என்னை வடிவமைத்துக்கொண்டுதான் எழுதத்
தொடங்கினேன். அதே பாதையில்தான் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன். மனதில்
ஒரு திடமான எண்ணத்துடன் எழுத்தாளனாக மலர்ந்தவன் நான்.
ஆகவே என் எழுத்துக்களில் பாசம், பந்தம், குடும்ப நெளிவு சுளிவுகள்,
அனுசரித்துப் போகும் தன்மை. அறிவுறுத்தும் தன்மை, விழிப்புணர்வு
ஏற்படுத்தும் தன்மை இருக்க வேண்டும் என்னும் எண்ணத்துடன் எழுத்தாணி
ஏந்தியவன் நான்.
ஆகவே மனிதம் என்னுடைய அடித்தளம். உலகில் மனிதம் தான் சிறந்த மதம் என்பதை
வலியுறுத்தி என்னுடைய கதைகள்,கட்டுரைகள், கவிதைகள் இருக்கும். என்னுடைய
இந்த முதல் நூலான சிறு கதை தொகுப்பிலும் என்னுடைய குறிக்கோளை நான்
விதைத்திருப்பதைக் காண முடியும்.
அன்றாடம் நாம் சந்திக்கும் நிகழ்வுகளிலிருந்து நாம் பெற்ற அனுபவங்களைப்
பகிர்ந்துகொள்ளும் விதமாக, அதே நேரத்தில் தேவையான விழிப்புணர்வு பெறும்
வகையில் உங்கள் மனதுக்கும் இதமான கதைகளை வெளியிடுகிறேன். சிறுகதைத்
தொகுப்பு என்னும் வெளியீடு மூலமாக உங்களையெல்லாம் சந்திக்கப் போகிறேன்.
என் கதைகளில் வரும் பல நல்ல வித்யாசமான அனுபவங்கள் உங்களையும் என்னையும்
சுறுசுறுப்பாக, ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக வைக்கும் அளவுக்கு நம்
சிந்தனைகளைத் தூண்டப் போகின்றன.
எப்போதுமே அழகாக மின்னும் விளக்கில் சுடர் விட்டு எரியும் ஜோதியை இன்னும்
ப்ரகாசமாக ஜொலிக்கவிட வேண்டுமென்றால் அந்த விளக்கில் இருக்கும் திரியை
தூண்டிவிட வேண்டும்.
அதுபோல ஏற்கெனவே அறிவாளியான உங்களை மேலும் ப்ரகாசிக்க வைக்க
வேண்டுமென்றால், நம்முடைய நல்ல உணர்வுகளை, அதாவது நகைச்சுவை உணர்வுகள்
போன்ற நவரச உணர்வுகளைத் தூண்டிவிடவேண்டும். அப்படித் தூண்டினால்
நிச்சயமாக நாம் நம்மைப் புதுப்பித்துக்கொள்ள முடியும். அப்படி தினமும்
நாம் நம் நல்ல உணர்வுகளைத் தூண்டும் அளவுக்கு நம்முடைய மனங்கள்
இணையட்டும். ஒருவருக்கொருவர் உங்களிடமிருந்து நானும் என்னிடமிருந்து
நீங்களும் புத்துணர்வைப் பெறலாம்.
வல்லமை இணைய இதழில் என் கதைகளை வெளியிட்டு என்னை ஊக்கப்படுத்திய திரு
அண்ணா கண்ணன் அவர்களுக்கும், வல்லமையில் என் கதைகளைப் படித்து என்னை
மேலும் ஊக்குவித்த வாசக நண்பர்களுக்கும், பல உயர்ந்த கருத்துக்களை ஏந்திய
நூல்களை வெளியிட்டிருக்கும் பெருமை மிகு மணிவாசகர் நூலகத்தாருக்கு என்னை
அறிமுகம் செய்துவைத்து என் சிறுகதைகளைப் படித்து என்னை ஊக்குவித்து,
என்னுடைய “வெற்றிச் சக்கரம்” சிறுகதை புத்தகத்தை வெளியிட உதவிய மூத்த
பத்திரிகையாளர் திரு தீபம் திருமலை அவர்களுக்கும் என் அன்பு கலந்த
நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு புத்தகம் வெளிவரவேண்டுமானால், முதலில் மூலதனம் போட்டு பதிப்பகம்
ஏற்படுத்த வேண்டும். அப்படி நல்ல நூல்களை வெளியிட இந்த நிறுவனத்தை
தொடங்கி பல புதிய எழுத்தாளர்களை உருவாக்கி, அவர்களுக்கு ஒரு வெளிச்சத்தை
ஏற்படுத்தும் மணிவாசகம் நூலகத்தாருக்கும் நல் முயற்சிகளில் உறுதுணையாய்
நிற்கும் அவரது குடும்பத்தாருக்கும் என் நன்றி. அந்தப் பதிப்பகத்தில்
அச்சு முறையை ஏற்படுத்தி, அதைச் சரிபார்த்து, அந்தப் படைப்பை
அச்சேற்றுவதற்கு எத்தனையோ நிபுணர்கள் அங்கே பணி புரிகிறார்கள்.
அவர்களின் பெரு முயற்சியால், உழைப்பால்தானே ஒவ்வொரு படைப்பும் புத்தகமாக
மலர்கிறது. ஆகவே இந்தக் கதைத் தொகுப்பை வெளியிட ஆதரவாக இருந்து மனதாலும்
மூளையாலும், உடலாலும், அனுபவத்தாலும் உழைத்த அத்துணை பெருமக்களுக்கும்
என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பதிப்பகத்தார். இந்த
வெற்றிச் சக்கரம் என்னும் சிறுகதைத் தொகுப்பு நூலை 75 ரூபாய்கள் என்று
விலை நிர்ணயம் செய்திருக்கிறார்கள்.
எழுத்தாளன் என்கிற முறையில் இது என்னுடைய முதற்ப்ரசவம். இந்த “வெற்றிச்
சக்கரம் ” என்னும் என்னுடைய முதல் படைப்பை அன்புடன் ஆதரிப்பீர்கள் என்கிற
நம்பிக்கையுடன் இந்த முதல் குழந்தையை உங்கள் கைகளில் தவழவிடுகிறேன்…
அன்புடன்
தமிழ்த்தேனீ
தமிழ்த்தேனீ
எழுத்தாளர், நடிகர்
Tags: தமிழ்த்தேனீ
One Comment on
இன்னம்பூரான் wrote on 16 July, 2012, 8:05
நூல் நல்வரவு. எனக்கு மிக மகிழ்ச்சி. எல்லா கதைகளையும் படித்தால், சில
புதிய சிந்தனைகள் தோன்றும். இந்த முன்னுரை, ஒரு நாள் தாமதித்து
வந்திருக்கிறது. மன நிறைவுடன் அதை படித்தேன். வாழ்த்துக்கள், தமிழ்த்தேனி
இன்னம்பூரான்