தேர்வை சந்திப்பது எப்படி?

8 views
Skip to first unread message

பயனுள்ள தகவல்கள்

unread,
Mar 2, 2015, 9:21:17 AM3/2/15
to payanull...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும்,,,


திட்டமிடாமல் கடைசி நேரத்தில் படிப்பது மற்றும் அவசரப்படுவது, டென்ஷனைத் தான் உருவாக்கும்.

* உங்கள் லட்சியங்களையும், ஒளிமயமான எதிர்காலத்தையும் எண்ணிப் பார்த்து, அதிக மதிப்பெண்கள் பெற உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். மதிப்பெண் பட்டியல் என்பது, உங்கள் எதிர்காலத்தின் பாஸ்போர்ட் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டால், படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுவிடும்.
* ஒருநாள் முழுவதும் செய்ய வேண்டிய, படிக்க வேண்டிய வேலையை பட்டியலிட்டு, உடனே படிக்க வேண்டியதை அவசரம் என்றும், உடனே படிக்க வேண்டாததை, முக்கியம் என்றும் குறியுங்கள். அவசரம் என்று இருப்பதை அதிகாலையிலும், முக்கியமானதை மாலையிலும் படிக்கலாம். எழுத்து வேலைகளை நிதானமாக செய்யலாம்.

* பயம் உங்கள் உடல் மற்றும் மனதை செயல் இழக்கச் செய்வதுடன், தூக்கமின்மை, தாழ்வு மனப்பான்மை, அவநம்பிக்கை மற்றும் எதிர்மறை எண்ணங்களை உருவாக்கி, உங்களை அழித்து விடும். அதனால், பயத்தை விட்டொழியுங்கள்!

* எவ்வளவு புத்திசாலித்தனமாக திட்டமிட்டாலும், நேரம் வீணாவது என்னவோ நடந்து கொண்டு தான் இருக்கும். அதனால், பாடங்களை பகிர்ந்தளித்து நேரத்தை மிச்சப்படுத்துங்கள். படிப்பதை ஒத்தி போடாமல், எதைப்படித்தாலும் விரைவாகவும், சுறுசுறுப்பாகவும் படியுங்கள்.

* படிப்பதற்கு அதிகாலை நேரமே ஏற்றது. அதிகாலைப் பொழுதில் மனமும், உடலும் மிகவும் ஒன்றிணைந்து இருக்கும்.

* பொதுவாக, இரவில் அதிகபட்சம், 11:00 மணி வரை படிக்கலாம்; பின், ஐந்து மணி நேரம் நிம்மதியான தூக்கம். அதன்பின், அதிகாலை 4:00 மணிக்கு எழுந்து படிக்கும் போது, மனதில் பாடங்கள் பசுமரத்தாணி போல பதியும்.

* நாள் முழுவதும் படித்தாலும், முக்கியமற்ற பாடங்களுக்காக நேரத்தை செலவிட்டால், அதில் எவ்வித பயனும் ஏற்படாது. எனவே, எந்தப் பாடங்கள் முக்கியம், எந்தப்பாடங்கள் உங்களுக்கு எளிமை, எந்தப்பாடங்களை படிக்க விரும்புகிறீர்கள், கடினமான மற்றும் புரியாத பாடங்கள் எவை என்று கண்டறிந்து, திட்டமிட்டு நேரத்தை செலவிடுங்கள்.

* ஒரு பாடத்தை படிக்கும் போது, மொத்தமாக படிக்காமல், அதை பல பிரிவுகளாக பிரித்து, சிறு சிறு தலைப்புகளைச் சூட்டி, அதை குறிப்புகளாக தயாரித்து படிக்கலாம். அக்குறிப்புகள் அப்பாடத்தின் கருத்தை எளிதில் ஞாபகத்திற்கு கொண்டு வருவதுடன், தேர்வு நேரத்தில் எளிதில் ஞாபகத்திற்கு வரும்.

* கண்டிப்பாக எந்த ஒரு செயலையும் தொடர்ந்து செய்யக் கூடாது. படிக்கும் போது ஒவ்வொரு மணி நேரத்துக்கும், ஐந்து நிமிடம் இடைவெளி கொடுக்கலாம். தொடர்ந்து படிப்பதால், மூளை எளிதில் சோர்வடைந்து விடும். திறந்த வெளி அல்லது ஜன்னலின் ஓரம் நின்று, நன்றாக மூச்சை இழுத்து, மூச்சுப் பயிற்சி செய்யுங்கள். காலாற நடந்த பின்போ, உங்களுக்கு பிடித்தமான இசையை கேட்ட பின்போ படிக்கலாம். ஆனால், மறுபடியும் படிப்பதை மறக்காமல் தொடர வேண்டும்.

* நீண்ட நேரம் தூங்காமல், தொடர்ந்து படிக்கும் போது, கண்கள் சோர்ந்து, களைத்து விடும். அதனால், தூங்க தயாராகும் போது, வெள்ளரித்துண்டை மூடிய இமையின் மேல் சிறிது நேரம் வைத்து படுத்தால், கண்கள் பிரகாசத்துடன், 'பளிச்'சென்று இருக்கும்.

* கீரைகள், பழங்கள், காய்கறிகள், கொண்டைக்கடலை, பேரீட்சை, பாதாம் பருப்பு, பசும் பால் மற்றும் தயிர் ஆகியவற்றை தேர்வு நேரத்தின் போது, கட்டாயம் உண்ண வேண்டும்.

* மாணவர்கள் படிக்கும் போது அமைதியான, நிசப்தமான சூழ்நிலை தேவை. அதனால், பொற்றோர், மாணவர்களின் கவனத்தை களையும் வகையிலான, தேவையற்ற சத்தத்தை வீட்டில் குறையுங்கள்.

* தேர்வு நாளில் எளிய உடற்பயிற்சிகள், நடைப்பயிற்சிகள் மற்றும் யோகா பயிற்சிகளை, 10 நிமிடங்கள் செய்யுங்கள். பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் மாதவிலக்கு வயிற்று வலியும், அதிக ரத்தப் போக்கும் தேர்வு பயத்தில் அதிகமாகலாம். இது, உடல் மற்றும் மனநிலையை பாதிக்கும் என்பதால், முதலிலேயே மருத்துவரை சந்தித்து, ஆலோசனை பெறுவது அவசியம்.


தேர்வு நாளை சந்திப்பது எப்படி என்று பார்ப்போம்...
தேர்வுக்கு தேவையான உபகரணங்களான பேனா 2 (மை நிரப்பி), பென்சில், ரப்பர், ஸ்கேல் மற்றும் ஷார்ப்னர் போன்றவற்றை முதல் நாளே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஹால் டிக்கெட், அடையாள அட்டை மற்றும் பஸ் பாஸ் இவை உங்கள் பையிலேயே இருக்கட்டும். குளுக்கோஸ் கலந்த நீர் கொண்டு செல்லவும். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். சரியான நேரத்தை காட்டும் கடிகாரத்தை கட்டிச் செல்லவும். தேர்வுக்கு வெற்றி மனோபாவத்துடனும், தன்னம்பிக்கையுடனும் செல்லுங்கள்.
* தேர்வு அறையில் உண்டாகும் மன பதற்றம், கை, கால் வியர்வை, நடுக்கம், பய உணர்வு போன்றவைகளை தவிர்க்க வேண்டும். ஒரு சில நிமிடங்கள் கண்களை மூடி, 'நான் அமைதியாக பயமில்லாமல், உற்சாகமாக இருக்கிறேன்; இத்தேர்வில் வெற்றி பெறுவேன்...' என்று நிதானமாக மனதிற்குள் கூறினால், படபடப்பு குறையும். கைகளை ஐந்து முறை இறுக்கமாக மூடி திறங்கள்; கழுத்து, தோள்பட்டையை தளர்த்துங்கள்; இப்போது, உங்களுக்குள் ஒரு உற்சாகம் பிறக்கும்.

* கேள்வித்தாளை பதற்றமில்லாமல், அமைதியாக வாசியுங்கள். சுருக்கமான பதில்களுக்கு நீண்ட பதில்களும், நீண்ட பதில்களுக்கு சுருக்கமான பதில்கள் எழுதுவதை தவிருங்கள். நன்றாக தெரிந்த பதில்களை முதலில் எழுதுங்கள். ஒவ்வொரு கேள்விப் பகுதிக்கும் எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்று திட்டமிடுங்கள். எக்கேள்வியையும் விட வேண்டாம். மதிப்பெண்களுக்கு தகுந்த மாதிரி நேரத்தை ஒதுக்குங்கள். எதிர்பாராத பகுதியிலிருந்தோ, படிக்காத பகுதியிலிருந்தோ கேள்விகள் வந்திருந்தால், மனம் பதற வேண்டாம்.

* விடைகள் எழுதும் போது பதற்றமில்லாமல், தகுந்த தலைப்புகளை பயன்படுத்தி, தெளிவான முறையில் எழுதுங்கள். கேள்விக்கு தகுந்த பதிலை சுற்றி வளைக்காமல் எழுதுங்கள். படித்ததையெல்லாம் எழுதிவிட வேண்டும் என்று எழுதாதீர்கள். இறுதியில் எழுதியவற்றை சரி பார்க்க, முதலிலேயே நேரம் ஒதுக்குங்கள். எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள், அடித்தல் இல்லாமல் எழுதுங்கள். மறக்காமல் பதிவு எண், பக்கம் எண், கேள்வி எண் எழுதுங்கள். இறுதியில், விடைத்தாள்களை சரிபார்த்து இறுக்கமாக கட்டுங்கள்.

* கையெழுத்து அழகாக இல்லாவிட்டாலும், தெளிவாக, புரியும்படி, வாசிக்கும்படி இருக்க வேண்டும். தேவையான இடங்களில், உதாரணங்களை மறக்காமல் எழுதுங்கள்.

நீங்கள் வெற்றி பெற திட்டமிட்டதற்கு பின், வேண்டாத சிந்தனைகளை தூக்கி எறியுங்கள். தோல்வி கண்டவர்களை பார்க்காதீர்கள்; வெற்றியாளராக மாறுங்கள். வாழ்த்துகள்.

Reply all
Reply to author
Forward
0 new messages