அன்பில்லையேல் இவ்வுலகில் எதுவுமேயில்லை
உள்ளிழுக்கும் காற்றில் அன்பு கலந்திருக்கையில் தான்
வெளியேறும் மூச்சில் கூட நிம்மதி பெருகி நிற்கிறது
அன்பிற்குத் தான் நெருப்பில் நின்று
நிலவை எண்ணி
நதியில் குளிக்கும் சுகத்தை அளிக்கமுடிகிறது
அன்பு ஆயிரம் கதவுகள் கொண்ட வாசல்
சூழலால் சன்னல்கள் மூடினாலும் அன்பினால்
கடவுளின் கதவுகள் கூட திறந்துகொண்டேயிருக்கிறது
அம்மா எனும் உயிர்ச்சொல்லிலிருந்து
அப்பாயெனும் மந்திரச் சொல்வரை; உள்ளுக்குள்
நமக்கான உலகத்தை
வாழ்க்கையை
மகிழ்ச்சியை
கொண்டாட்டங்களை
விதைக்குள்ளிருக்கும் ஆலமரங்களைப்போல
அடக்கிவைத்திருக்கிறது அன்பு
அன்பு வெண்மையைப் போன்றது
அன்பு மாசிலா காற்றினைப் போன்றது
கையிலடங்கா கடலானது அன்பு
அன்பை அடக்கத் தெரிந்தோர்க்கு
உலகை ஆளத் தெரிவதைக் காட்டிலும்
காக்கத் தெரிந்துவிடும்
ஆள்வதிலும் காப்பதிலுமிருக்கும் ஆளுமையின்
ஓரிழைப் புரிதல்தான் ஞானத்தின் விடை;
அறிவின் தெளிவு; வென்று வியாபித்திருப்பதன் சூழ்ச்சுமம்
உண்மையில், அன்பின் முடிச்சு இதயத்திலிருந்து அவிழ்க்கையில்
அதிகாரம் உடைகிறது
மேல்கீழ் அகல்கின்றது
விகிதாச்சாரங்கள் அர்த்தமற்று போகிறது
முடிவில்
முடிவில்
மரணத்தை வென்று
காலத்திற்கும்
காற்றோடும் வெளிச்சத்தோடும்
நதியோடும் கடலோடும்
வானுக்கும் மண்ணுக்குமிடையே
மலைகளென நமைச் சூழ்ந்திருப்பது அன்பு தான்;
நான் அன்பைத் தான் வணங்குகிறேன்
அன்பைத் தான் நேசிக்கிறேன்
அன்பிற்குள் சாதியில்லை மதமில்லை
ஆண் பெண் பேதமில்லை
நிர்வாணமோ ஆடை அலங்காரமோ அன்பிற்குமுன் அழகில்லை
அன்பிற்கு அன்பைத்தவிர எதுமே பெரிதில்லை,
யாதுமற்றது எல்லாமுமானது அன்பொன்றே!
அந்த யாதுமற்ற
எல்லாமுமான அன்பை
என் தாய்
எனை
வயிற்றில் சுமந்திருந்த பொழுதிலிருந்து தேடுகிறேன்
கண்மூடி இருக்கையில் தேடி
கண் திறந்து
மீண்டும் மூடுகையிலும்
மூடிய பிறகும் நமக்கு தேடலாய் தேவையாய்
உயிருள் நிலைத்திருப்பது
அன்பொன்றே; அன்பொன்றே;
அது ஆணா ?
பெண்ணா ?
மக்களா ?
உலகா ?
வானா?
மண்ணா?
கடலா ? காற்றா ? வெளிச்சச்சமா ? அனைத்துமா ????
எல்லாவற்றிற்கும் விடை தேடுகையில்,
உணர்ந்துப் பார்த்தால்; ஏதோ இல்லாதவராகவே வாழ்ந்து
இல்லாதவராகவே முடிகிறோம்
எனவே இருக்குமன்பை
தீயள்ளித் திண்பதுபோல
மனதினிக்க குடிப்போம்
மரம் செடி கொடி காய் பூ உயிர்களென
அத்தனையையும் நேசிப்போம்
நேசிப்பு நமக்கு திருப்பியளிக்குமத்தனை அன்பிலும்
நமக்கு விடையிருக்கும் அல்லது விடையும் தேவையிருக்காது
அன்பு நமை கேள்வியற்றவர்களாய் மாற்றிவிடும்
பிறகென்ன,
மௌனத்திலாழ்ந்து உணர்விற்குள்
உண்மையின் வெளிச்சம் போல நிறைந்திருப்போம்; நேசித்திருப்போம்;
அன்பு உள்ளிருந்து வெளிபுகுந்து வான் நிறைந்து
இப்பிரபஞ்சம் அதுவாகி
நமை எல்லாமுமாக மாற்றிவிடும்!!
எங்கும் நிறைந்தவண்ணம் நாம்
எல்லோரிடத்திலும் எப்போதும்
யாவற்றிற்கும் அன்பு செய்வோம்
காற்று புகும் இடத்திற்கெல்லாம் காதிருக்கின்றது
வெளிச்சம் சூழும் பொருளெங்கும் உணர்வு தொடுகிறது
நீர் நிறைந்த உடம்பெங்கும் உயிர்கலப்பு நிகழ்கிறது
வான் சூழ்ந்த பிரபஞ்சம் கூட அன்பிற்கே அன்பிற்கே காத்திருக்கிறது;
எனவே, அன்பொன்றே எல்லாம்; அன்பொன்றே யாதும்;
வாருங்கள், அன்பில் பிறந்து
அன்பில் முடியாமல்
எங்கும் நீக்கமற நிறைந்திருப்போம்!!
பேரன்புடன்
-------------------------------------------------------