பாரதியாரின் பிறந்தநாளுக்கு ஒரு மீள் பதிவு :
ஆசை முகம் மறந்து போச்சே இதை
யாரிடம் சொல்வேனடி தோழி...
பாரதியின்
இந்தப் பாடலை இணையத்தில் பகிர்ந்த போது நண்பர் ஒருவர் கேட்டார்.
அதென்னங்க ஆசை முகம் நினைவு முகம்? பாசம் இருக்குதாம் ஆனா முகம் மறந்து
போச்சாம். என்ன கதைங்க இதுன்னு.
ஒருவர் மேல் ஆசை வைப்பதற்கும்
நேசம் கொள்வதற்கும் உருவம் ஒரு தடையா என்ன ? மாபாரதமும் இராமாயாணமும்
இல்லை என்று தெளிவாகவே சொல்லுகிறது.
இதென்ன மாபாரதக் கதை என்றால்
வில்லி
புத்தூராரார் எழுதுகிறார். மஹா பாரதத்துல ஒரு சருக்கம் பழம் பொருந்து
சருக்கம். அதுல அமித்திர முனிவர்னு ஒருத்தர் தொடர்ந்து உலக நன்மைக்காக தவம்
செய்பவர். பன்னிரண்டு வருஷங்களுக்கு ஒருமுறை தன் தவத்தைக் கலைத்து பின்
அருகிருக்கும் மரத்தில் இருக்கும் நெல்லிக் கனி அதுவும் பன்னிரண்டு
வருடங்களுக்கு ஒரு முறை பழுக்கும் பழம், அதை உண்டு மீண்டும் தன் தவத்தை
தொடங்குவார். ( ஒரு ஃபுல் மீல்ஸ் கட்டிட்டு தவம் செய்யப்பிடாதா ? ).
அந்தப்
பக்கம் பாண்டவங்க வராங்க. அங்க அந்த பழம் பார்த்த உடனே திரவுபதி "
எனக்கு அந்தப் பழம் வேண்டும்"னு அருச்சுனன் கிட்ட கேக்கறாங்க. இந்த
பெண்களுக்கு இதே வேலையாப் போச்சுங்க. எதாவது ஏடா கூடமா ஆசைப் பட்டு அதை
கணவர்களிடம் கேட்டுவாங்கி அப்புறம் துன்பத்துக்கு உள்ளாகறது. வேண்டாம்னா
விடுவாங்களா ? இருக்கவே இருக்கு பலவித ஆயுதம். கடைசியா கண்ணீர்
பிரம்மாஸ்த்திரம்.
"இக் கனி எனக்கு நீ நல்கு!'என்று, வில் எடுத்துக்கொண்ட,
மைக் கனிக் களவு மானும் வடிவுடை, விசயனோடு
மெய்க் கனிவு உடைமை தோன்ற, விளம்பினாள்-வீசு தென்றல்
முக் கனி கமழும் சோலை முகில் தவழ் நாடன் பாவை.
எனக்கு அந்த பழம் வேணுங்கறாங்க. திரவுபதி கேட்க, அதை அர்ஜ்ஜுனன் மறுப்பதாவது. அதுவும் போயும் ஒரு நெல்லிக் கனி
இதைப்
பார்த்த அமித்திர முனிவர் பதறி இது பன்னிரண்டு வருட காத்திருப்பு,
அவரோட அடுத்த பன்னிரண்டு வருடத்திற்கான உணவு அப்படின்னு சொல்றார் . உண்மை
தெரிஞ்சதும் பாண்டவர்கள் பதறுகிறார்கள் . மறுபடி மரத்தில் பொருந்த
வேண்டும் இல்லையெனில் முனிவர் திங்க மாட்டார். அந்த பாவம் இவங்களைச்
சேரும். ஒருவேளை முனிவர் சாபம் குடுத்தாலும் குடுத்துடுவாரு. ஆக
மொத்தத்துல ரொம்ப ஆபத்துல இருக்காங்க.
பின்பு சகாதேவனின் ஆலோசனைப்
படி கண்ணனைக் கூப்டறாங்க. கேட்டவர் குரலுக்கு கண்ணன் வந்தான். இந்த பழம்
நல்லா இருக்கே ஏன் சாப்டாம கைல வச்சிருக்கீங்கன்னு கண்ணன் சொல்றான்.
"அது இல்லை கண்ணா அதில் ஒரு பிரச்சினை"
" என்ன எப்படி சமமாய் பங்கிடுவதென்றா? எடுத்துவாருங்கள் கத்தியை நான் பங்கீடு செய்கிறேன்."
" அய்யோ கண்ணா விளையாட நேரமில்லை. இது அமித்ர முனிவருக்கானது" அப்படின்னு சொல்லி முழுக் கதையும் சொல்றாங்க.
கண்ணன் மேலும் விளையாடுகிறான்.
" தருமா, இனி துரியோதனனுடன் சண்டை போட்டு தானா முடிவு தெரிய வேண்டும், அமித்திர முனிவர் சாபம் ஒன்று போதுமே பாண்டவர்கள் அழிவிற்கு "
" கண்ணா, நீயே துணை. நீ தான் வழி காட்ட வேண்டும்"
"
சரி சரி. இந்தப் பழம் பழைய நிலைக்கு வரவேண்டுமானால் உள்ளத்தில்
உறைந்திருக்கும் உண்மையை சொல்லுங்கள். உற்றது சொன்னால் அற்றது பொருந்தும் "
ஒவ்வொருத்தரும் சொல்லனும்.
தருமன்
சொல்றான் - " துரியோதனன் மேல எனக்கு கோபம் இல்லை கண்ணா. முக்கியமா
எனக்கு நான் ஜெயிக்கனுங்கற ஆசை இல்லை கண்ணா எனக்கு தர்மம் ஜெயிக்கனும்".
பழம் கொஞ்சம் மேல உசந்து போச்சுது.
அடுத்து பீமனின் சொல்லுவதைப் பாருங்க.
'பிறர் மனையவரைப் பெற்ற தாய் எனவும், பிறர்
பொருள் எட்டியே எனவும்,
பிறர் வசை உரைத்தல் பெருமை அன்று எனவும், பிறர்
துயர் என் துயர் எனவும்,
இறுதியே வரினும், என் மனக் கிடக்கை, எம்பிரான்! இவை'
என உரைத்தான்-
மறலியும் மடியுமாறு மல் இயற்கை வலிமை கூர்
வாயுவின் மைந்தன்.
பிறர்
பொருளுக்கு ஆசைப்பட்டதில்லை. பிறன்மனை நோக்கினேல்லன்னன் நான். பாருங்க.
இவ்வளவு பெரிய திடகாத்திரமான ஆளு பல ஆயிரம் ஆனை பலம் கொண்டவன். அவன்
சொல்றது பிறர் பொருள் வேண்டேன். பிறன் மனை வேண்டேன். பிறர் வசை வேண்டேன்.
ஆனா பிறர் துயரத்தை விரும்பி என் துயரென ஏற்றுக் கொள்வேன்.
அது
தாங்க பீமன். என்னைப் பொருத்த வரையில் மஹா பாரதத்தில் தருமனைவிட,
அர்சுனனை விட பீமன் உண்மையில் உத்தமன். ஒரு ஃபாஸ்ட் ஃபார்வார்ட் செஞ்சு
நேரடியா பாஞ்சாலி என்ன சொல்றாங்கன்னு பாப்போம்.
பழம் மரத்தில்
பொருந்துவதற்கு சற்றே தான் இடைவெளி. கடைசியாக பாஞ்சாலியிடம் கேட்கிறான்
கண்ணன் அவளின் உள்ளக் கிடக்கையைச் சொல்லச் சொல்லி.
எனக்கென்ன
தனியா கருத்திருக்கு, பாண்டவர் ஐவரின் நலனைத் தவிர வேற என்ன கேட்கப்
போறேன்னு சொல்றாங்க. பழம் ஒட்ட மாட்டேங்குது. கண்ணன் கொக்கிப் போடறான்.
பாரும்மா நீ இப்படி பொய் சொல்லிட்டு இருந்தா முனிவர் அப்புறம் சாபம்
குடுத்துடுவார். அப்புறம் என்னை நொந்து பிரயோசனம் இல்லைன்னு.
அதுக்கு
பாஞ்சாலி சொல்றாங்க. ஐந்து பொறிகள் போல, ஐந்து புலன்களைப் எனக்கு
கணவன்மார்கள் இருந்தாலும் ஆறாவதாய் வேறு ஒருவன் எனக்கு புருஷனா
இல்லையேன்னு என் மனம் உருகும் அப்படின்னாங்க. உடனே பழம் மேல
ஒட்டிக்கிச்சாம்.
"ஐம்புலன் களும்போல் ஐவரும் பதிக ளாகவும் இன்னம்வே றொருவன்
எம்பெருங் கொழுநன் ஆவதற்கு உருகும் இறைவனே எனது பேரிதயம்"
அம்புவி தனில் பெண் பிறந்தவர் எவர்க்கும் ஆடவர் இலாமையின் அல்லால்
நம்புதற்கு உளரோ என்றனள் வசிட்டன் நல்லற மனைவியே அனையாள்.
பூமியில்
பெண்கள் தான் விரும்பியது குணங்கள் கொண்ட கணவன் கிடைக்காமல் போனாலும்
தான் கொண்ட ஒரு கணவனுடனே வாழ்வர். ஆனால் ஐம்பொறிகளைப் போல, ஐம்புலன்களைப்
போல ஐந்து கணவன்கள் இருக்க வேறொரு கணவன் வேண்டுமா ? ஆம் வேண்டுகிறது என்
உள்ளம். இந்த ஐவரைத் தாண்டிய ஆறாவாதாய் ஒரு ஆடவனை மனம் நாடுகிறது.
சிலர்
தம் அரைகுறை அறிவாலும், இழிவு நோக்கிலும் அல்லது அறியாமையினாலுன் அல்லது
ஏதோ ஒரு காரணத்தினால் அந்த ஆறாவது புருஷன் "கர்ணன்" என்று கூறுவார்கள்.
கவனிக்க - மேல் சொன்னப் பாட்டில் எங்கேயுமே கர்ணன் என்ற பெயர் குறிப்பிடப்
படவில்லை. வேறொரு ஆடவனின் பெயரும் சொல்லப் படவில்லை. மேலும் வசிட்டனின்
மனைவியான அருந்ததிக்கு இணையானவள் என்று வில்லிப்புத்தூரார் சொல்லி
இருப்பதையும் கவனிக்க வேண்டும்.
ஆக அந்த ஆறாவது புருஷன் என்று பாஞ்சாலி சொன்னது யாரை ? அந்த ஆறாவது புருஷனுக்கும் பாரதி சொல்லும் ஆசை முகத்துக்கும் என்ன சம்பந்தம் ?
அந்த ஆறாவது புருஷன் கர்ணன் ஏன் இல்லைங்கறது பத்தி யோசிப்போம்.
கர்ணனை
ஒரே அடியாக இழிவுபடுத்தவில்லை இதிகாசம். அவனுக்குறிய சில நல்ல குணங்களை
எடுத்துக் கூறத் தவறவில்லை. அவன் ஈகை, கருணை என பலவும் சொல்கிறது கூடவே
வீரமும்.
ஆனாலும் கர்ணன் பொய் சொல்லி வில் வித்தை கற்றவன். அங்கே
ஒழுக்கம் தவறிப்போனது. கர்ணனின் பிறப்பைக் காட்டி துரோணர் அத்திர வித்தைகளை
கற்று தர மறுத்தார். அதன் காரணமாய் பரசுராமரிடம் பொய் சொன்னான்.
பரசுராமரின் சபதம் தெரிந்திருந்தும் அதை செய்தது தவறு. ஒழுக்கம் தவறிய
செயலே ஆகும். விராட பருவத்தில் அர்ஜுனன் ஒருவனாய் நின்று அனைவரையும்
துரத்தி அடித்தான். அதில் கர்ணனும் அடங்குவான். அந்த நேரத்தில் விராட
புத்திரன் அனைத்து மன்னர்களின் உடைகளை வெற்றிச்சின்னமாக எடுத்து
செல்லுவான்.
கர்ணன் பாதி யுத்தத்திலேயே களத்தை விட்டு
ஓடிப்போகிறான். ஆக விராடன் மகன் எடுத்துச் செல்லும் உடைகளில் கர்ணனின்
உடைகள் அடங்காது.யுத்தகளத்தில் அபிமன்யுவின் அத்திரங்களுக்குப் பயந்து
தலைதெறிக்க ஓடிய கூட்டத்தில் இவனும் ஒருவன்.
எல்லாவற்றிற்கும்
மேலாக சுயம்வரத்தின் போது கர்ணன் வில் வளைத்து நாணேற்ற உளுந்தளவு
இடைவெளி தான் மிச்சம். பார்க்கும் பாஞ்சாலி பதறுகிறாள். " சூதன் மகன்
வில்லில் நாணேற்றினாலும் இவனை நான் மணக்க மாட்டேன்" என்று சபையறிய
கூறுகிறாள். கர்ணனும் தோல்வியைத் தழுவி அவமானத்தில் வீழ்கிறான். அதன்
காரணமாகவே சூதுப் போரின் போது துகில் உரிக என்று துரியனுக்கு எடுத்துக்
கொடுத்து உற்சாகமூட்டி மேலும் செய் என்று துச்சாதனனிடம் ஊக்கமளித்தவன்.
உலகத்திலேயே கர்ணனை அதிகம் வெறுத்தவர்களில் முதலிடம் என்றால் அது
பாஞ்சாலிக்குத்தான் இருக்க வேண்டும். தன்னை இப்படி எல்லாம்
அவமானப்படுத்திய ஒருவனை ஒரு பெண் நினைத்தால் என்று சொன்னால் இந்த கதையை
எந்த வகையில் சேர்ப்பது?
அருச்சுனன் பற்றிய பிம்பம் அவளுக்குள்
உருவேற்றப் பட்டிருக்கிறது. அர்ச்சுனன் பற்றிய ஆசை முகம் அவளுக்குள்
அவளால் வரையப் பட்டது. அவள் மனதில் அர்ச்சுனன் பெரிய வில்லாளன். அவனை
எதிர்த்து நிற்க ஒருவனும் கிடையாது.
சரி விஷயத்துக்கு வருவோம்.
ஒவ்வொருவருக்கும்
தன் கணவன் குறித்த பிம்பம் மனதில் இருக்கும். வேலை எல்லாம் முடிச்சுட்டு
வந்து அசதியா சாப்ட உக்காருவான். அப்ப சாப்பாடு எடுத்து வச்சுட்டு
அம்மினி சொல்லுவாங்க.
" ஹ்ம்ம்.. அங்க அங்க பொண்டாட்டிக்கு எப்படி
எல்லாம் நகையும் நட்டுமா வாங்கி வந்து குடுக்குறாங்க... நீங்களும்
இருக்கீங்களே... சாப்டுங்க"
அவனா அசருவான்? மெல்ல பிசைஞ்சு ஒரு வாய் சோறு உள்ள போகும். அடுத்து
"
எங்க மாமாவுக்கு என்ன குடுக்கறதா சொன்னாங்க. இப்ப தெரியுமா, அவரு தம்
பொண்டாட்டிக்கு பட்டுப் பொடவ என்ன, நெக்லஸ் வாங்கிக் குடுக்கறதென்ன...
என்னையப் புடிச்சு இந்த பாழுங் கெணத்துல தள்ளிட்டாங்க ... சாப்டுங்க "
கொஞ்சம் லைட்டா கலக்கத்தோட அய்யா ரெண்டாவது வாய் சோறு கையில எடுப்பார்.
"
நான் என்ன கேட்டேன், காரு பங்களான்னா கேட்டேன். போத்தீஸ்ல ரெண்டு
பட்டுப் புடவ, ஒரு பத்து சவரன்ல அட்டிகை இது கூட வாங்கிக் குடுக்கத்
துப்பில்ல. எதிர் வீட்டுக் கோமளாவுக்கு அவங்க புருஷன் இருவது பவுன்ல நகைப்
போட்டாராம். நேத்து பீத்திக்கிட்டா... ஹ்ம்ம்... நீங்க சாப்டுங்க "
இனி சாப்பாடு இறங்கும் ?
அதாவது
ஒவ்வொரு பெண்ணுக்கும் தன் கணவன் இப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்ற
பிம்பம் இருக்கிறது. அந்த பிம்பத்தின் பிரதிகளை தன் கணவனிடம் எதிர்
பார்க்கிறாள்.
காட்டில்
தனித்திருக்கும் போது ஜெயத்ரதன் அவளை தேரில் கடத்திச் செல்ல
முற்படுகிறான். ஆனால் பாதி வழியிலேயே பாண்டவர்கள் மேல் அச்சம் கொண்டு நடு
காட்டில் விட்டுவிட்டு மேலே தொடர முயற்சிக்கும் போது விவரம் தெரிந்து அங்கு
வரும் காண்டீவனும், பீமனும் துரத்திச் சென்று அவனைப் பிடித்து
வருகிறார்கள். கொல்லவில்லை. காரணம் தருமன் அனுப்பும் போதே சொல்லி
அனுப்புகிறான். உயிரோட கொண்டுவான்னு. பாஞ்சாலிக்கு ஆச்சரியம்.
அருச்சுனன் அவனை கொல்லாமல் விட்டது கண்டு அவளுக்கு ஆச்சரியம். ஆனாலும்
பீமன் அவனைச் சும்மா விடாமல் ஐந்து குடுமிகளை பிறை அம்பு கொண்டு
ஏற்படுத்துகிறான். ஜெயத்ரதன் தருமனைப் பார்த்ததும் " நான் பாண்டவர்களின்
அடிமை என்று காலில் விழுந்து விடுகிறான் ". தருமனும் தன்னிடம் சரண் என்று
வந்தவனை கொல்லக் கூடாது என்று அர்ஜுனன் பீமன் காவலில் காட்டு எல்லை வரை
அனுப்பி வைக்கிறான்.
அதே போல சூதுப் போரின் போது துச்சாதனன் துகிலை
உரியும் போது கணவர்களைப் பார்த்து கதறுகிறாள். அப்போது ரோஷம் கொண்டு
எழுந்து போக முற்பட்ட பீமனையும் அர்ஜுனன் தடுத்து சொல்கிறான்.
“தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்;
தருமம் மறுபடி வெல்லும்” எனு மியற்கை
மருமத்தை நம்மாலே உலகங் கற்கும்
வழிதேடி விதிஇந்தச் செய்கை செய்தான்.
கருமத்தை மேன்மேலுங காண்போம்;இன்று
கட்டுண்டோம்,பொறுத்திருப்போம்; காலம் மாறும்
தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்.
தனுஉண்டு காண்டீவம் அதன் பேர்’என்றான்."
இதென்னங்க
நியதி ? தன் மனைவியை ஒருத்தன் மானபங்கப் படுத்துகிறான். அப்போதா பார்த்து
பார்த்து பேசுவீர்கள் தருமமும் நியாயமும்? பாஞ்சாலியின் எதிர்பார்ப்பு
அங்கே பொய்த்தது. தன்னைக் கணவர்கள் காப்பாற்றுவார்கள் முக்கியமாக
அர்ச்சுனன் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கைப் போய் பரந்தாமா என்று
கதறுகிறாள். அவளுக்கு அந்த நேரத்தில் வரவேண்டிய ஆசை முகம் எங்கே போனது ?
தன்னைக் காப்பார்கள் என்று பார்த்த அந்த ஆசைகணவர்கள் பற்றிய உருவகம் சுக்கு
நூறாய் சிதைந்து போனபின்னே மாதவா, கேசவா நாராயணா என்று அரற்றுகிறாள்.
கண்ணன் சேலை தந்து காக்கிறான்.
இப்போது பழம் பொருந்து சருக்கத்தில் அவள் கூறியவற்றை மீண்டும் நினைவுப் படுத்திப் பார்ப்போம்
ஐம்புலன் களும்போல் ஐவரும் பதிக ளாகவும் இன்னம்வே றொருவன்
எம்பெருங் கொழுநன் ஆவதற்கு உருகும் இறைவனே எனது பேரிதயம்
அம்புவி தனில் பெண் பிறந்தவர் எவர்க்கும் ஆடவர் இலாமையின் அல்லால்
நம்புதற்கு உளரோ என்றனள் வசிட்டன் நல்லற மனைவியே அனையாள்.
ஐந்து
பொறிகள் போல ஐவர் இருந்தென்னப் பயன் ? தேவையான நேரத்தில் என்னைக்
காக்கவென்று ஒருவரும் இல்லையே. வெகு முக்கியமாய் அர்ஜ்ஜுனன். அப்படி
வரவேண்டிய இவர்களின் பராக்கிரமம் எல்லாம் சேர்த்துக் கட்டி வைத்த என்
கனவு பிம்பமான புருஷன் இவர்களில் யாரும் அப்போது இல்லையே என்கிறாள். வீறு
கொண்டெழுந்து பகைவரை துவம்சம் செய்து தன்னைக் காக்க ஒருவருமே இல்லை. அவள்
கொண்ட அந்த எதிர் பார்ப்பு, ஆசையான அந்த ஆறாம் கணவன் பற்றிய அந்த ஆசை
முகம் எங்கே ? அது அர்ஜ்ஜுனனா? தருமனா ? பீமனா இல்லை நகுல சகாதேவர்களா ?
யாராகவோ இருந்திருக்கலாம். ஒருவரேனும் பகை வென்று திரவுபதியைக்
காத்திருந்தால் அத்தனை அன்பும் அவர்களிடம் போயிருக்கும். ஆனால் யாரும்
வரவில்லை. இவள் என்னியிருந்த புருஷர்களாக இவர்கள் இருந்திருக்கவில்லை. அந்த
எண்ணத்தின் படியான புருஷன் ஆறாவது புருஷனாகவாவது வந்திருந்து எதிரிகளை
கொன்றழித்து காத்திருக்கலாம். அந்த ஆறாவது புருஷன் அந்த நேரத்தில் இல்லையே ?
இதில்
கர்ணனுக்கு என்ன சம்பந்தம் இருக்கிறது ?. சிலர் கொழுநன் என்பதற்கு
கொழுந்தனார் என்று அர்த்தம் கொண்டு அந்த கொழுந்தனார் கர்ணன் தான் என்று
முடிவு செய்கிறார்கள். கொழுநன் என்றால் கணவன் என்று அர்த்தம்.
உதாரணத்திற்கு கீழ்கண்ட பாடலைப் பார்க்கவும்.
வருவார் கொழுநர் எனத் திறந்தும்
வாரார் கொழுநர் என அடைத்தும்
திருகும் குடுமி விடியளவும்
தேயும் கபாடம் திறமினோ
ஆனா
பாஞ்சாலிக்கு தான் நினைத்த அந்த வீர பிம்பம் யாருக்கும் பொருந்தவில்லை
யாருக்கும். குறிப்பாக அர்ச்சுனனுக்கு. ஏனென்றால் அவனுக்காகவேப் பிறந்தவள்
அல்லவா பாஞ்சாலி " துரோணரைக் கொல்லவும் அர்ஜ்ஜுனன் தோள் புல்லவும்" என்று
திரவுபதன் வேண்டிப் பெற்ற மகவு அல்லவா பாஞ்சாலி. இப்போது அர்ச்சுனன்
மீதான பிம்பம் கலைந்து போனது. பரந்தாமனே துணையானான். அதனால் தான் சூதுப்
போரில் சபதம் செய்யும் போது கூட " துரியன் துச்சாதனன் தொடை பிளந்து வரும்
இரத்தத்தை கூந்தலில் தோய்த்து பின் தலை சீவி முடிப்பேன் " என்று பீமன்
மேல் நம்பிக்கை வைத்துக் கூறுகிறாள்.
ஆசை முகம் மறந்துப் போச்சு.
ஆனாலும் அர்ச்சுனனின் மீதான நேசம் மறக்கவில்லை. ஆனால் அவள் கண்ணில்
தெரிகிறதொரு தோற்றம் அங்கே அவள் கொண்ட பிம்பத்தின் சாயலில் யாரும் இல்லை.
இப்போது சொல்லுங்கள் ஆசை கொள்வதற்கு ஒரு உருவம் தேவையா ?
அவள்
மனதில் கொண்ட ஆசை முகம் அது தன் கணவர்கள் இப்படி இப்படி இருக்க வேண்டும்
என்ற பிம்பம். அவள் மனதில் கொண்ட அந்த ஆசை முகம் மறைஞ்சு போனது. அது
ஒரு சோக நிகழ்வு.
நான் இங்க சொல்லவருவது ஆசை முகம் என்பது ஒருவரை
பார்த்து தான் வரவேண்டும் என்று இல்லை. மானசீகமாகவும் உருவாக்கிக் கொள்ள
முடியும். பாஞ்சாலி அப்படித்தான் கொண்டாள்.
ஆசை முகம் மறந்து போச்சே ? இதை யாரிடம் சொல்வேனடி தோழி ?
சொல்வதற்கு
கண்ணனை விட்டால் வேறு யார் துணை. எப்பொழுதுமே அவர்களைக் காத்தருளக்
கண்ணனைத் தவிர்த்து வேறு யார். மேலும் காட்டில் அலைந்து பகைவெறியேறி
கிடக்கும் பாண்டவர்களை மேலும் வெறியேற்ற இந்த வார்த்தைகள் போதாதா ?
மற்றும் ஒரு உதாரணம் பார்ப்போம்.
ஒரு
தாயின் பிள்ளை, அவனுடைய பத்தாவது வயதில் தொலைந்து போய்விட்டான். அப்போது
அவனுடைய முகம் அவள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. அவள் அவன் மீது
கொண்ட நேசம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை. கிட்டதட்ட
இருபது வருடங்கள் கடந்து போனது. அப்போது அவள் மனதில் அந்த மகனின் சிறுவயது
முகம் சற்ற்றேறக் குறைய மறந்தே போயிருக்கும். ஆனாலும் அவள் கொண்ட நேசம்
அதிகமாயிருக்கிறது சற்றும் குறையவில்லை.
அப்போது ஒருத்தர் அவரிடம்
கேட்கிறார். " ஏம்மா பத்து வயசில காணாம போன மகனையே நினைச்சுட்டு
இருக்கீங்களே அவன் முகம் இன்னும் நினைவில் இருக்கிறதா ?" என்று. அவரின்
பதில் என்னவாக இருக்கும் ? ஏதோ புகை படிஞ்சா மாதிரி நினைவிருக்கும்மா..
அவன் கல கலன்னு சிரிப்பாம் பாரு. நாளெல்லாம் பார்த்துட்டே இருக்கலாம்"
அப்படிம்பாங்க.
அந்த நேரத்தில் அவன் மகன் ஒரு நாள் பார்க்க
வருகிறான். எப்படி ? ஒரு சிறை மீண்ட குற்றவாளியாக. அவன் முகம் பார்க்கும்
போது அந்த அம்மா நினைப்பாங்க. இவனா என் மகன். இருக்கும்போல. அழகாத்தான்
இருக்கான். ஆனா அன்னைக்கு நான் பார்த்த அந்த சிரிப்பு அங்க காணோமே, ஏன்
இப்படி காலம் மாற்றி விட்டது ? இவன் மேல எவ்வளவு அன்பு
வச்சிருந்தேன்வருத்தப் படுவாள்.
வரிக்கு வரி இதை அப்படியே நாம் ஒப்பிட முடியாது ஆனாலும் ஒரு உதாரணத்துக்காக இப்படி எடுத்துக் கொள்ளலாம்.
இதைப்
போலவே உருவம் காணாமலே ஒருவர் மேல் அன்பு கொள்ள முடியும் என்று
நிரூபித்தவர்கள் இருவர். ஒருவர் சபரி , மற்றொருவர் அகலிகை. இருவரும்
இராமனைக் காணாமல் இராம நாமத்தை மட்டுமே மனதிற் கொண்டு அவன் மீது ஆசைக்
கொண்டவர்கள். அவர்களும் சொல்லி இருக்கக் கூடும்.
" ஆசை முகம் மறந்து போச்சே... இதை யாரிடம் சொல்வேனடி தோழி "
ஆசை
முகம்னா என்ன அது எப்படி மறந்து போகும்னு பாத்தோம். அதாவது தன் ஆசைகளைக்
கொண்டு வடிவமைக்கப் பட்ட பிம்பம். என் காதலன் இப்படி இப்ப்படி இருக்க
வேண்டும் என்ற ஒரு பிம்பம். சரி அதென்ன நினைவு முகம் ?
இந்த
ஆண்டாளம்மா இருக்காங்களே... கண்ணனைப் பற்றி நிறைய கனவு கண்டவர்கள். வாரணம்
ஆயிரம் சூழ வலம் செய்து நாரணன் நம்பி நடக்க கனவு கண்டவர்கள். அவர்களுக்கு
ஆசை முகமும் உண்டு நினைவு முகமும் கண்டவர்கள். அதென்னங்க மறுபடி மறுபடி
நினைவு முகம் ?
ஒரு நேரடி உதாரணம் பாப்போம். நான் இணையத்துல எழுத
வந்தப்போ, சும்மா இல்லாம சித்தர் பாடல்கள் ஜென் கவிதைகள் ஜென் கதைகள்னு
ஒரு கட்டிங் ஒரு ஒட்டிங் பண்ணி பாவ்லா பண்ணிட்டு இருப்பேன். அப்போ எனக்கு
இணையத்தில் வைரமணிகளென கிடைத்த அக்காங்க சக்தி பிரபா ஷைலஜா வை எல்லாம்
மீட் பண்ணல. முத முறையா ஷக்தி பிரபா அக்காவை மீட் பண்ணப்ப அவங்க முதல்ல
திகைச்சுப் போயி பாத்துட்டு அப்புறம்
" அடடே ... நான் ஐயப்பன்
அப்படிங்கற பேரும், நீ எழுதற விஷயங்களையும் வச்சு என்ன கற்பனை செஞ்சு
இருந்தேன் தெரியுமா" ன்னு கேட்டுட்டு சொன்னாங்க
"தோள்ல நீள ஜோல்னா
பை, முகத்துல ஒரு மாச தாடி, நெத்தி நிறைய பட்ட, கழுத்துல உருத்திராட்சக்
கொட்ட இப்படியா இருக்கிற ஒரு நாற்பது அல்லது அம்பது வயசு ஆளுன்னு
நினைச்சேன். சத்தியமா இப்படி இருப்பன்னு எதிர் பார்க்கவே இல்லை"
அதாவது,
ஒருத்தரின் குணாதிசயங்களைக் கேள்விப் பட்டு அவர்களைப் பார்க்குமுன் நாம்
நம்முள் ஏற்படுத்திக் கொள்கிறோமே ஒரு உருவம். அதை நினைவு முகம்
அப்படின்னு சொல்லலாம் இல்லையா ?
சரி பாட்டுக்கு வருவோம்.
ஆசை முகம் மறந்து போச்சே - இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி?
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகமறக்க லாமோ?
கண்ணில் தெரியு தொரு தோற்றம் - அதில்
கண்ண னழகு முழு தில்லை
நண்ணு முக வடிவு காணில் - அந்த
நல்ல மலர்ச் சிரிப்பைக் காணோம்
இது ஏன் தெரியுங்களா ?
ஓய்வு மொழிதலுமில் லாமல் -- அவன்
உறவை நினைத்திருக்கு முள்ளம்
வாயு முரைப்பதுண்டு கண்டாய் -- அந்த
மாயன் புகழினையெப் போதும்
நாயகி
, நாயகனைப் பற்றிய அவன் உறவவையும், அவன் புகழையும் மட்டுமே நினைத்துக்
கொண்டிருப்பதால், மற்ற எதுவும் நினைவுக்கு வரவில்லை. அவளின் ஆசை முகமும்
மறந்து போச்சு. நேச முகமும் மறந்து போச்சு. இராம இராம இராம என்று தினமும்
எல்லாவற்றிலும் இராமனின் பெயரை மட்டுமே உச்சரித்துக் கொண்டிருந்த
சபரியிடம் குகனைக் கொண்டு போய் நிறுத்தி, பாருங்க பாட்டி இவரு தான் இராமன்
அப்படின்னாலும் அதே அன்போட கனிகளைக் கொடுத்திருப்பாங்க. காரணம்
அவர்களுக்கு நேசம் மறக்கவில்லை நெஞ்சம். ஆசை முகமும் நினைவு முகம்
ஆரம்பத்தில இருந்திருக்கலாம். ஆனால் போக போக அவர்களுக்குத் தேவைப்பட்டது
இராமனின் நாமமும் அதன் மீதான ஆசையுமே நேசமுமே தவிர இராமன் என்ற ஆசை
முகமும் நினைவு முகமும் இல்லை. அதே நிலை தான் இந்த பாடலின் நாயகிக்கும்.
நாயகிக்கு
தன்னால் உருவாக்கப் பட்ட கண்ணனின் முகம் வேறு. அதில் எப்போதும் ஆனந்தமும்
மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும் முகம். கண்ணில் தெரியும் தோற்றத்தில்
அவள் நினைத்த கண்ணனின் அழகு முழுதும் இல்லை. இராமனின் தோள் கண்டார் தோளே
கண்டார் போல அவள் கொண்ட கண்ணனின் முழு அழகை எங்கே காண்பது ?. எந்த
முகத்தில் போய் சூரியச் சந்திரர்களையும் பழிக்கும் குளிர்ந்த மனம் மயக்கும்
சிரிப்பைக் காண முடியும்? அப்படியே மிச்சம் இருக்கிற வரிகளையும்
பாக்கலாமே.
கண்கள் புரிந்து விட்ட பாவம் -- உயிர்க்
கண்ண னுரு மறக்க லாச்சு.
பெண்க ளினத்தி லிதுபோலே -- ஒரு
பேதையை முன்பு கண்ட துண்டோ?
தேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த
வையம் முழுதுமில்லை தோழி.
ஆமாங்க.
மனசு எப்பவுமே கண்ணனின் நினைவில் இருக்கு. உருவம் என்பது மறக்கக்
கூடியது. ஆனால் அன்பு அப்படி இல்லை. உரு தேயும். கண்கள் எதிரே அந்த
உருவங்கள் இல்லாமல் போனால் நாளடைவில் அதன் காட்சி மங்கும். புகைப்
படிந்தால் எப்படி இருக்குமோ ஓவியம் அது போல மெல்ல மெல்ல மறைந்து போகும்.
ஆனால் தினமும் அவன் புகழையே பேசி பேசி பழகி அந்த நினைவிலேயே இருக்கும்
போது நேசம் மறக்கவில்லை. மனது புண்ணியம் செய்து அந்த நினைவை இழக்க வில்லை.
ஆனால் கண்கள் பாவம் செய்து அவனைப் பற்றி உருவாக்கிய அந்த உருவத்தை
மறந்து போனது. அது எழுதி வைத்த ஓவியமாகவும் இருக்கலாம். அந்த ஓவியம்
தாளினில் மட்டுமே இருக்க வேண்டும் என்று இல்லை.
அதெல்லாம் சரி
அதென்ன உயிர்க் கண்ணன்னு சொல்றாரே ? பெண்ணொருத்தி ஒருவனை காதலன் என்று
வரித்தபின், அவன் தன் உயிருக்கும் மேலானவன் ஆகிறான் அல்லவா ? நாயகியின்
காதலன் கண்ணன் என்ற போது அவன் உயிர்க் கண்ணன் தானே ? காதலனை மறக்கும் பேதை
உலகத்தில் உண்டோ என்ன என்னைப் போல் அப்படி என்று கேட்கும் அந்த நாயகிக்கு
என்ன பதில் ?
தேனை மறந்திருக்கும் வண்டுமில்லை, ஒளி மறந்த பூவும்
இல்லை. அதனால் தானே ஆண்டாள் கோவிந்தனின் நினைவு முகத்தையும் ஆசை
முகத்தையும் மறக்காமல் கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் காளைப்
புகுதக் கனாக் கண்டாள். ஆனா நாயகிக்கு அதெல்லாம் கூட மறந்து போனதன் காரணம்
என்னவாக இருக்கும் ? அடுத்த சில வரிகளையும் படித்து விட்டு யோசிப்போம்.
கண்ணன் முக மறந்து போனால் - இந்த
கண்க ளிருந்து பய னுண்டோ?
வண்ணப் படமுமில்லை கண்டாய் - இனி
வாழும் வழியென்னடி தோழி?
இது ஒரு சலிப்பு ஆனால் சலிப்பில்லை. தன் ஆனந்தத்தை அல்லது தன் காதலை தோழியிடம் சொல்லும் முறை இது.
இப்ப
தனக்கு தானே திட்டம் அறிமுகம் படுத்திய பல விருதுகள் கொண்ட விழா
நாயகர்கள் இருக்காங்க இல்லையா தமிழ் நாட்டில. அதுபோல சிலர் உண்டு.
தமிழ்
ஆர்வலர் ஒருத்தர் கிட்ட சொன்னாங்க. அய்யா நீங்க ஆற்றிய தமிழ்த் தொண்டு
மிகவும் அரிதானது. உங்களுக்கு செந்தமிழ் செவ்வேள் அப்படின்னு ஒரு பட்டம்
குடுக்கலாம்னு இருக்கோம். அப்படின்னு சொல்றாங்க. உடனே அவர் என்ன
சொல்லுவார்னு எதிர் பாக்கறீங்க
" அப்படியா.. ரொம்ப சந்தோஷம். இப்பவே
குடுக்கறீங்களா.. இன்னும் ஒன் ஹவர் கழிச்சு குடுக்கறீங்களா"ன்னா
கேப்பார். அப்படிக் கேட்க முடியாது அவரால். மெதுவா ஆரம்பிப்பார்
" ஹிஹி... எனக்கெதுக்குங்க பட்டம் பதவி எல்லாம்... ஆமா எங்க வச்சு குடுக்கப் போறீங்க "
" நாரத கான சபால வச்சு உங்களுக்கு பட்டம் வழங்கலாம்னு இருக்கோம்யா "
"
அடடே கொஞ்சம் காஸ்ட்லியான இடமாச்சேப்பா.. எதுக்கு இவ்வளவு செலவு
பண்றீங்க நான் என்னத்த அப்படி பண்ணிட்டேன். டிஃபன் காஃபிக்கு அறுசுவை
நடராஜன் தானெ சொல்லிருக்கீங்க "
" ஆமங்கய்யா "
" என்னமோ
போங்கப்பா.. எனக்கு இந்த பதவி பட்டம் விருது எல்லாம் பிடிக்காதுன்னு
உங்களுக்கே தெரியும்ல... அப்புறம் ஏன் இதெல்லாம். அப்புறம் அந்த செந்தமிழ்
செவ்வேள்னு சொல்றது பழசா இருக்கு. கொஞ்சம் மாத்தி முத்தமிழ் வேந்தன்
அப்படின்னு மாத்திடுங்க. அச்சடிக்கும் போது கலர் பிரிண்ட் தானே
போடுவீங்க. "
" ஆமாங்கய்யா... பேனருக்கு கூட சொல்லிட்டோம் "
"
எல்லாம் உங்களுக்காகத் தான். எனக்கு இந்த விருதுகளில் நாட்டமே இல்லை.
இனிமே நான் வேண்டாம்னாலும் நீங்க நிறுத்தவா போறீங்க... விழா அன்னைக்கு
காலைல ஏசி காரு அனுப்புங்க. கட்டாயம் வந்துடறேன் "
உண்மையிலே
இவருக்கு விருதில் நாட்டம் இல்லையா ? அவர் வார்த்தைகள் இல்லை என்கிறது.
ஆனால் உள்ளொளிந்திருக்கும் பொருள் வேறு குறிப்பு சொல்கிறது.
இது
போல தான் நாயகியும், கண்ணன் முக அழகு மறந்து போச்சுங்கற மாதிரி சிணுங்கறது.
அவன் உருவமே மறந்து போச்சுன்னு எதுல பார்த்தாலும் அவன் சிரிப்பு மாதிரி
இல்லைன்னு சொல்றது. அவளுக்கு கண்ணனைப் பார்க்கனும், நேரடியா சொல்லலாம்
தான். இருந்தாலும் தோழி கேலி பண்ண மாட்டாளா ? எங்க பார்த்தாலும் பழிச்சுக்
காட்டி சிரிப்பாளே? அதுக்கு என்ன செய்யறது ?
ஊர்ல
பாட்டிமார்கள் சொல்லுவாங்க. தன் பையன பாக்கனும்னா டேய் வாடா உன்னை
பாக்கனும் அப்படின்னா சொல்லுவாங்க. ஹ்ம்ஹூம். மருமவ என்ன சொல்லுவாளோ?
இந்தக் கெழத்துக்கு இன்னும் இவரைக் கொழந்தைன்னு நெனைச்சுக்கிட்டு பாடா
படுத்துதும்பாளோன்னு நினைச்சுக்கிட்டு
" டேய் பேரனப் பாத்து ரொம்ப
நாளாச்சுடா... எதப்பாத்தாலும் அவன மாதிரியே இருக்குடா கொண்டாந்து
காட்டிட்டு போடான்னு " சொல்லுவாங்க இல்லையா அது மாதிரி தன் தோழி கிட்ட இவ
சொல்றா. எனக்கு கண்ணன் முகம் மறந்து போச்சுடி, அவன் வண்ணப் படம் கூட
என் கிட்ட இல்லை. எப்படி வாழப் போறேன் நான்? அதனால நீ என்ன பண்ற தெரியுமா
என் தோழியே
" கண்ணன் மனநிலையை தங்கமே தங்கம்
கண்டு வர வேணுமடி தங்கமே தங்கம்
என்னம் உரைத்து விடில் தங்கமே தங்கம்
இனி ஏதேனும் செய்வோமடி தங்கமே தங்கம் "
*******
நன்றி : அதீதம்