விடியல் சிவா மரணம் - ஒரு நினைவுக் குறிப்பு

54 views
Skip to first unread message

தமிழ்ப் பயணி

unread,
Aug 1, 2012, 12:41:28 AM8/1/12
to பண்புடன்

விடியல் சிவா மரணம் - ஒரு நினைவுக் குறிப்பு

சென்ற திங்கட்கிழமை இந் நேரம் நாம் கோவை சிறீ ராமகிருஷ்ண மருத்துவமனையில் தோழர் சிவாவை பார்த்துக்கொண்டிருந்தோம். மறுநாள் மீண்டும் கொழும்பு செல்வதற்கான கடைசி விடைபெறலுக்காக நாம் அவரை தழுவியபோது கண்ணீர் விட்டு அழுதார். நாம் கணங்களை கண்ணீரால் கரைத்துக்கொண்டிருந்தோம். ஒருசில வார்த்தைகளை எம்முடன் பரிமாறுதற்காய்; அவர் தனது உடல்நிலையுடன் போராடிக்கொண்டிருந்தார். நானும் றஞ்சியும் பிள்ளைகளும் அவரை மாறிமாறி தழுவினோம். கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்த வருடத்தின் மார்ச் மாதத்தில் சுமார் பத்து நாட்கள் கோவையிலுள்ள அவரது வீட்டில் முடிந்தளவு அதிக நேரம் செலவிட்டிருந்தேன். விட்டுவிட்டு சில நிமிடங்கள் எப்போதும் அவரால் பேச முடிந்திருந்தது அப்போது. சற்று எழுந்து நடக்கவும் சில நிமிடங்கள் பேசவுமாக முடிந்திருந்த அந்தக் கணங்கள் வலிதருகின்றன. பிள்ளைகளை சதா விசாரித்தபடி இருக்கும் அவர் அவர்களைப் பார்க்க ஆசைப்படுகிறேன் ரவி எனக் கேட்டார். "நிச்சயமாக யூலைமாதம் மீண்டும் வருவேன்... அவர்களும் உங்களைப் பார்க்க வருவார்கள்" என்றேன். அதன்படி  இந்த யூலையில் 5 நாட்கள் அவருடன் தங்கியிருந்தோம். ஆனால் அவரை இம்முறை மருத்துவமனையிலேயே பேச முடியாத நிலையிலேயே பார்த்தோம். சென்றமுறை அவரிடம் இருந்த நம்பிக்கைகள் அவரைவிட்டுப் போயிருந்தது. என்னிடமும்கூட.

தான் இன்னமும் 5 அல்லது ஆறு வருடங்கள் உயிர்வாழ்வேன். அதற்குள் இன்னும் சில நல்ல நூல்களை கொண்டுவந்துவிடுவேன் என்றார். தனது சுவாசப்பையைத் தாக்கிய புற்றுநோயை ஒரு அசாதாரண துணிச்சலுடன் அவர் எதிர்கொள்ள எப்படி முடிந்தது என நான் வியந்ததுண்டு. அந்த மனோபலம் எல்லாம் இப்போ அவரிடம் ஒட்டமுடியாதவாறு சிதறிப்போய்க் கிடந்தது. காரணம் புற்றுநோய் அவரது குடற் பகுதியையும் தாக்கி அவரை புழுவாய்த் துடிக்க விட்டுக்கொண்டிருந்தது.

அந்த நோயின் அறிகுறிகள் ஏற்பட்டு ஒரு வருடம். ஈழத் தமிழ் மக்களுக்கான ஒரு மாபெரும் பேரணியை அப்போது அவர் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த காலம். மிக மோசமான இருமல் தொடர்ச்சியாக இருந்தபோதும் இப் பேரணியை நடத்தி முடிக்கும்வரை அவர் மருத்துவப் பரிசோதனையைத் தள்ளிப் போட்டிருந்தார். அதன்பின்னரான மருத்துவப் பரிசோதனை, மருத்துவ உறுதிப்படுத்தலுக்கான இழுபாடுகள் என இறுதியில் அவரது உடலை தாக்கியிருப்பது புற்றுநோய்தான் என உறுதிப்படுத்தப்பட்டபோது அது நிலை நான்கை (ஸ்ரேஜ்-4) எட்டிவிட்டிருந்தது.

எப்போதும் கனவுகளுடன் இயங்கும் மனிதர் அவர். அதற்காய் ஓய்வின்றி உழைப்பவர். எப்போதும் இயங்கியபடி இருப்பவர். பதிப்புலகத்தில் தனிமனிதனாய் விடியலை உயர்த்துவதில் அவரின் உழைப்பு அதிசயிக்கத்தக்கது. அவரின் பதிப்புலகக் கனவு ஒன்று நிறைவேறியதை அவர் கொண்டாட முடியாமல் போய்விட்டது. மாவோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளை ஒன்பது பெருந்தொகுதிகளாக கொண்டுவந்ததுதான் அது. அலைகள் பதிப்பகத்துடன் இணைந்து இந்தத் தொகுதி முடிக்கப்பட்டிருக்கிறது. இதன் வெளியீடு ஆகஸ்ட் மாதம் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. ஆகஸ்ட் 15. இப்போ அரது நினைவு அஞ்சலிக் கூட்டத்துடன் அத் தினம் இத் தொகுதியின் வெளியீட்டு நாளாகவும் மாற்றப்பட்டிருக்கிறது.

அவரது நண்பர்கள் அவருடன் எல்லாவகையிலும் ஒத்தாசையாய் இறுதிநேரத்தில் செயற்பட்டது அவரது நேர்மைக்கும், விடாமுயற்சிக்கும், சக மனிதர்களை அரவணைக்கும் போக்குக்கும் நல்ல சாட்சிகளாய் எனக்குத் தோன்றின. சிவாவைத் தாக்கியது புற்றுநோய்தான் என உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் இந்த ஒரு வருட காலப்பகுதியில் ஒருமுறை தன்னும் அவரை போய்ப் பார்க்காத (அ.மார்க்ஸ் போன்ற) அறியப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் தமிழகத்தில் இருக்கிறார்கள் என்பதுதான் வேடிக்கை. இதுபற்றி தோழர் சிவாவிடம் நான் கேட்டபோது அவர் புன்சிரிப்பையே பதிலாய்த் தந்தார்.

இதேபோலவே ஜெயமோகன் எஸ்விஆர் க்கு மேல் சுமத்திய குற்றச்சாட்டை -தோழர் சிவாவுக்குத் தெரியாமலே- அவரது பெயரில் பதில் எழுதினார் எஸ்விஆர். இரண்டாவது முறையும் எஸ்விஆர் எழுதிய பதில் கடிதத்தில் சிவாவின் மரணப்படுக்கையை சென்ரிமென்ற் பாணியில் பாவித்திருந்தார். இந்த முறைகேடு சிவாவின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டபோது சிவா வருத்தமடைந்தார்.

தன்மீதான இரக்கத்தை அவர் கோரியவரல்ல. தான் இவ்வாறு கடுமையான சுகவீனமுற்றிருந்த விடயத்தை அவர் தொடர்பூடகங்களில் வெளிக்கொண்டு வருவதை ஒருபோதும் விரும்பியவரல்ல. தலித் போராளியாக இருந்து இன்று அசல் அரசியல்வாதியாய் புரளும் ரவிக்குமார், சிவாவை தொலைபேசியில் அப்போலோ மருத்துவமனையில் வைத்து வைத்தியம் பார்க்க அழைத்தபோது, அவர் "உன்னுடைய பணத்தில் வைத்தியம் பார்ப்பதைவிட நான் செத்துப்போகத் தயாராக இருக்கிறேன்“ என்றார்.

தனது எஞ்சிய சிறு சொத்துகளை ஏற்கனவே மக்கள் சொத்தாக எழுதிக்கொடுத்திருக்கிறார். தனது உடலை மருத்துவக் கல்லூரிக்குத் தானமாய்க் கொடுத்திருக்கிறார். எந்தவித விளம்பரமுமன்றி பொதுத்தளத்தில் எப்போதும் இயங்கியபடி இருந்த அவரின் நடைமுறைப் போராட்ட வாழ்வு மசிர்புடுங்கும் விவாதங்களுக்குள் அலைக்கழியாதது. தனது சக்திகளை அவர் ஒருபோதும் இவ்வாறு வீணாக்கியது கிடையாது. ஒரு உண்மை மனிதனின் கதை அவரது. சொந்த வாழ்க்கையில் திருமணம் முடித்தால் தான் இந்தளவு வேலைகளை செய்து முடித்திருக்க முடியாது என்று ஒருமுறை என்னிடம் சொன்னார்.

ஈழத் தமிழ் மக்களின் அவலத்தில், போராட்டத்தில் எப்போதும் ஈடுபாடு கொண்டவரவாகவே இருந்தார்.தனது அரசியல் அனுபவங்களையும் தலித் போராட்டம் சம்பந்தமான அவரது அறிதல்களையும் அவர் உள்ளடக்கி எழுதிக்கொண்டிருந்த அவரது குறிப்புகள் முக்கால்வாசியை எட்டியிருந்தது. அதை எழுதிமுடிப்பதும் அவரது இன்னொரு கனவு என கூறியிருந்தார். இந்தக் கனவு அரைகுறையில் முடிந்திருக்கிறது. அதேபோல் கோவையில் ஒரு மிகப்பெரும் பொதுநூலகத்தை பன்மொழி நூலகமாக நிறுவும் கனவும் அவரிடம் இருந்தது. அதற்கு உறுதுணையாக புதுச்சேரி பிரெஞ்சு இன்ஸ்ரிரியூற்றின் விரிவுரையாளர் இருக்கிறார். இந்தக் கட்டடத்துக்கான நிலமும் வாங்கப்பட்டுவிட்டது. தனது நண்பர்களுடனான கூட்டுவேலையாக அதை வரித்துக்கொண்டார். அதன் கட்டட வேலைகள் ஆரம்பிப்பது பற்றிய பேச்சில் அவர்கள் ஈடுபட்டது என்னளவில் பிரமிப்பாகவே இருந்தது. தனது மரணத்தை எதிர்பார்த்த அவர் விடியல் பதிப்பகத்தை ஒரு ரஸ்ற் ஆகப் பதிவுசெய்துள்ளார். அவரது நண்பர்கள் அவரது பணியை எடுத்துச் செல்ல உறுதிபூண்டுள்னர்.

1996 இல் முதன்முதலில் நான் அவரை புதுச்சேரியில் சந்தித்து அறிமுகமாகியதிலிருந்து தொடர்ச்சியாக உறவில் இருந்தேன். நூல் வெளியீட்டில் எமக்கு எப்போதும் உறுதுணையாக மட்டுமல்ல ஒரு ஊக்கியாகவும் இருந்தார். இலாபநோக்கை குறியாகக் கொண்டு செயற்பட்டவரல்ல அவர். அவசியமான பல மொழிபெயர்ப்பு நூல்களை விடியல் தமிழுக்குக் கொண்டுவந்துள்ளதன் மூலம் பேசப்படும் முக்கிய பதிப்பகமாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. தொடர்ந்து ஒழுங்கமைக்கப்பட்ட செயன்முறையில் இந்நூல்கள் காலம் தாழ்த்தாமல் செய்துமுடிக்கப்படுவதில் அவரது செயற்திறனை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். மொழிபெயர்ப்புக்கான ஆட்கள் தெரிவு, அவர்களது மொழிபெயர்ப்பு வேலைநேரம், சொற்தேர்வு, தட்டச்சுக்கான ஆட்கள், நூல்களை பக்குவமாகவும் ஒரு முறைமையுடனும் சேகரித்து வைத்தல், தனது புறூப் பார்த்தலின்றி ஒருபோதும் வெளியிடாமை, நூல் அச்சாகும்போது அச்சகத்தில் அருகில் இருந்து லேஅவுட் உட்பட எல்லாவற்றிலும் கவனம் செலுத்ததல், தொலைபேசி மூலமான நூல் விற்பனை, அவற்றை காலதாமதமின்றிச் செய்துமுடித்தல்... என ஒரு முறைமை அவரிடம் இருந்தது. இந்த உழைப்புத்தான் விடியலை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது.

 1996 இல் ஒரு சிறு கொட்டிலுக்குள் இருந்த விடியல் பதிப்பகம் இன்று தமிழ்ப்பரப்பின் திறந்த வெளிக்குள் பரவிப்போய் கிடக்கிறது. 1996 இல் பதிப்பகத்துக்கு பண உதவி செய்ய நான் முன்வந்தபோது அவர் சொன்னார், "ரவி, நான் ஒரு சதம்கூட யாரிடமும் சும்மா வாங்க மாட்டேன். நீங்கள் எனது நூல்களை விற்பனை செய்து உதவமுடியுமா எனப் பாருங்கள். அதுவும்கூட விற்பனை என்ற நோக்கில் வேண்டாம். இந்திய விலைக்கே விற்றுத்தாருங்கள். முக்கியமாக வாசிப்பவர்களிடத்தில் போய்ச சேருவதை கவனத்தில் எடுங்கள்“ என்றார். அந்த அறிமுகம் என்னை இன்றுவரை அவருடன் பயணிக்க வைத்திருக்கிறது. ஐம்பதுகளின் நடுப்பகுதியை மட்டுமே எட்டிப் பிடித்த அவரது வயதை இந்தக் கொடிய நோய் சிதைத்துப் போட்டுவிட்ட கொடுமையை என்னவென்பது!  

-ரவி (30.7.12)



--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

குடி



ஸ் பெ

unread,
Aug 1, 2012, 3:05:14 AM8/1/12
to panb...@googlegroups.com
இவர் தன் விடியல் சிவா என தெரியாமல் இவரை கடந்து போன எத்தனையோ புத்தக கண்காட்சிகள் உண்டு.... தற்போது முற்போக்கு, இடதுசாரி சார்புடைய தமிழ் புத்தகங்கள் என்றாலே நினைவுக்கு வருவது 'விடியல்' தான்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம், இந்திய வரலாறு ஒரு அறிமுகம், எரியும் பனிக்காடு, புதியதோர் உலகம், சோளகர் தொட்டி என என் அலமாரியில் நிறைந்திருக்கும் புத்தகங்கள் நெடுங்காலத்துக்கு இவரை ஞாபகப்படுத்தும்...

தோழருக்கு எமது சிவப்பஞ்சலி!



2012/8/1 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>



--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

ஸ் பெ

unread,
Aug 1, 2012, 3:08:27 AM8/1/12
to panb...@googlegroups.com

#RIP விடியல் பதிப்பகம் தோழர் சிவா - ஒரு காமிரேட்டின் இறுதி அஞ்சலி

காமிரேட்ஸ், 

இன்று மதியம் உணவு உண்ண ஆரம்பிக்கும்போது ஒரு தொலைபேசி அழைப்பு. ஓரிரு முறை மட்டுமே பேசியுள்ள அந்த நண்பர் அழைக்கும்போதே ஏதோ முக்கியமான விஷயம் என்று தெரிந்து கொண்டேன். ஒரே வாக்கியத்தில் முடித்து விட்டார் "விடியல் பதிப்பக தோழர் சிவா இஸ் நோ மோர்" என்பதே அந்த தகவல். வார்த்தைகளால் விவரிக்க இயலவில்லை என்றாலும் கூட முயற்சிக்கிறேன்: வெய்யில் தகிக்கும் ஒரு மதிய நேரத்தில் நிழலில் இளைப்பாற வந்தவனின் தலையில் ஒரு பெரிய ஐஸ் கட்டியை எடுத்து வைத்தால் எவ்வளவு வலிக்குமோ, அவ்வளவு வலி (More of a pain in the Mind, than in the Body). இத்தனைக்கும் சிவா சாருக்கும் எனக்கும் அந்த அளவுக்கு பழக்கம் கூட கிடையாது. ஒரு எட்டு அல்லது பத்து முறை சந்தித்தது இருக்கிறேன், அவ்வளவுதான். ஆனால் ஒவ்வொரு சந்திப்புமே சிறு வயதில் பள்ளி விடுமுறை நாட்களில் சாப்பிட்ட நாவல்பழத்தின் சுவை எப்படி இன்றும் நாவில் தங்கி இருக்கிறதோ, அப்படி நினைவில் தங்கி இருக்கிறது, Such was his Presence.

விடியல் பதிப்பகம் - ஒரு அறிமுகம்: தீவிர வாசிப்பிற்கும் எனக்கும் கடந்த எட்டு ஆண்டுகளாகவே ஏழாம் பொருத்தம். ஆகையால் அந்த தளத்தில் என்ன நடக்கிறது என்பதை பிறர் சொல்லி தெரிந்து கொள்வேனே ஒழிய நேரிடை பழக்கம் கிடையாது. தமிழ்க் கடவுள் முருகன் அப்படி "என் நாடு, என் மக்கள், எனக்கென்று ஒரு உலகம்" என்று அமைத்துக் கொண்டாரோ அப்படியே நானும் 2008-ம் ஆண்டு தமிழ் காமிக்ஸ் உலகம் என்றொரு சிறிய இணையதளத்தை துவக்கினேன்.அங்கொன்றும், இங்கொன்றுமாக ஓரிரு பதிவுகளை இட்டுக்கொண்டு இருக்கும்போதுதான் பல காமிரேட்டுகள் அறிமுகம் ஆயினர். பலர் மறக்கவே முடியாத நண்பர்களாகவும், பலர் மறக்க வேண்டிய நபர்களாகவும் மாறி இருக்கும் இந்த சூழலில் ஒரு நாள் காமிரேட் கனவுகளின்காதலன் ஷங்கர் விஸ்வலிங்கம் அவர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும்போது அவர் ஒரு புத்தகத்தை குறிப்பிட்டு, அந்த புத்தகம் Any-Indian.com என்கிற தளத்தில் விற்பனைக்கு கிடைப்பதாகவும், அது ஒரு தமிழ் மொழிமாற்று ஃகிராபிக் நாவல் என்றும் அறிமுகப்படுத்தினார்.  அப்போது அந்த புத்தகத்தை உடனடியாக வாங்க இயலவில்லை. சுமார் ஆறு மாதங்கள் கழித்து கோவை நகருக்கு சென்றபோது அங்கேதான் அவர் குறிப்பிட்ட அந்த புத்தகங்களை வாங்க முடிந்தது. இவையே அந்த புத்தகங்கள்:

Vidiyal Pathippagam Marjane Satrapi PersiPolis Book 1 in Tamil Published By Siva Sir Vidiyal Pathippagam Marjane Satrapi PersiPolis Book 2 in Tamil Published By Siva SirVidiyal Pathippagam Marjane Satrapi PersiPolis Intro in the Back Wrapper in Tamil Published By Siva Sir
Vidiyal Pathippagam Marjane Satrapi PersiPolis Book 1 in Tamil Published By Siva Sir Vidiyal Pathippagam Marjane Satrapi PersiPolis Book 2 in Tamil Published By Siva Sir Vidiyal Pathippagam Marjane Satrapi PersiPolis Book Intro in the Back Wrapper in Tamil Published By Siva Sir

அதுவரை மர்ஜானே சத்ரபி பற்றி கேள்விப்பட்டு இருந்தும், அந்த படத்தின் டிவிடி இருந்தும், ஆங்கில புத்தகம் கைவசம் இருந்தும் (நன்றி இயக்குனர் மிஷ்கின்) ஏனோ படிக்கவே தோன்றவில்லை. ஆனால் தமிழில் வந்துள்ளது என்பதால் பரிட்சார்த்த முயற்சியாக சில பக்கங்களையாவது படிக்கலாம் என்று நினைத்து பயண களைப்பு ஆளை அசத்தும் ஒரு கோவை இரவில் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் அந்த கதையின் நேர்த்தி என்னை இரண்டு பாகங்களையும் அதே இரவில் படிக்க தூண்டியது (இந்த கதையின் தமிழாக்கம் குறித்து இப்போதும் எனக்கு மாற்றுக்கருத்தே உண்டு என்பதையும் இங்கே பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளேன்).

மறுநாள் காலையில் வேறு அலுவலக வேலைகள் இருந்தும், கோவையில் இருக்கும் என்னுடைய நண்பரும், வழிகாட்டியுமான யாழ் நூலக தோழர் துரை அவர்களை சந்தித்து இந்த விடியல் பதிப்பகம் பற்றியும், அதன் பதிப்பாளரைப்பற்றியும் விசாரித்தேன். அவரை சந்திக்க நான் ஆவலாக இருக்கிறேன் என்பதை தெரிந்து கொண்ட துறை அவர்கள் அன்று மாலையே அவரின் வெற்றிக்கு அழைத்து சென்றார். காமிரேட் கோவை பிரகாஷ் அவர்களின் வீட்டிற்கு அருகாமையில் இருந்த அவரின் வீட்டிற்கு சென்றது ஒரு அற்புதமான விஷயம்.

Vidiyal Pathippagam Siva Sir With Yazh Noolagam Durai Sir in Siva Sir's Home in Coimbatore
Vidiyal Pathippagam Siva Sir With Yazh Noolagam Durai Sir in Siva Sir's Home in Coimbatore

பெ. சிவஞானம் என்று மற்றவர்களாலும், தோழர் என்று உரிமையோடு சக காம்ரேட்டுகளாலும், சிவா என்று வெகு சிலாராலும் அழைக்கப்பட அந்த எளிமையான மனிதரைப்பற்றி அன்றுதான் முழுமையாக தெரிந்து கொண்டேன். காமிக்ஸ் மற்றும் சித்திரக் கதைகள் மேலுள்ள என் காதலால் கவரப்பட்டு அவரது கனவு ப்ராஜெக்ட் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.

விடியல் பதிப்பகம் சிவா சாரின் கனவு: ஜப்பானிய மாங்கா பற்றி நிறைய பேர் அறிந்து இருப்பீர்கள். நம்ம ஊரில் காமிக்ஸ் / சித்திரக் கதை என்று எப்படி நாம் பெயரிட்டு அழைப்பதைப்போல ஜப்பானில் சித்திரக் கதைகளை மாங்கா என்று அழைப்பார்கள். எழுத்தாளர் எஸ். ரா ஒருமுறை அவரது தளத்தில் ஒசாமு தெசுகா பற்றி குறிப்பிட்டு இருப்பார். அந்த அற்புதமான படைப்பாளியின் மாஸ்டர் பீஸ் என்று பலராலும் கருதப்படும் புத்தரின் கதையாகியபுத்தாவை தமிழில் வெளியிடுவதுதான் சிவா சாரின் கனவு. தன்னுடைய ஆசையை தெசுகாவின் எஸ்டேட்டிற்கு தெரிவித்து, முறையாக அதன் உரிமையையும் பெற்றார்.

ஒரு மழைக்கால மாலை நேரப் பொழுதில் சிவா சாரின் வீட்டில் இந்த மாங்காவை தமிழில் எப்படி கொண்டு வருவது என்று சிவா சார், துறை சார், பயங்கரவாதி டாக்டர் செவன் மற்றும் அடியேனும் விவாதித்தோம். ஏற்கனவே மர்ஜானே சத்ரபியின் புத்தகங்களை தமிழில் வெளியிட்டு பண அளவிலும், மன அளவிலும் நொந்து இருந்த சிவா சாரிடம் இந்த தொகுப்புகளை தமிழில் வெளியிட்டால் ஆகும் செலவையும்,அதற்க்கான சந்தையாக்கத்தையும் பற்றி பல மணி நேரங்கள் பேசினோம். பின்னர் புத்தரை தமிழில் பதிப்பிக்க இது உகந்த நேரமல்ல என்று முடிவெடுத்து,அதன் படி இந்த கனவு ப்ராஜெக்டை தற்காலமாக தள்ளி வைத்தோம் (INR 3500 is the Cost per set). அதன் பின்னர் வேறு சில தமிழ் காமிக்ஸ் குறித்த விஷயங்களையும் மற்ற பதிப்பக விஷயங்களையும் கலந்து பேச சிவா சார் எப்போதுமே தயங்கியதில்லை.

 

Vidiyal Pathippagam Siva Sir With His PersePolis Books in Tamil Language in His Home in Coimbatore
Vidiyal Pathippagam Siva Sir With His PersePolis Books in Tamil Language in His Home in Coimbatore

சென்ற ஆண்டு சென்னை புத்தக கண்காட்சியின்போது கிழக்கு பதிப்பகம் பத்ரியிடம் கூட இந்த ப்ராஜெக்டை பற்றி பேசிக்கொண்டு இருந்தோம். இந்த ஆண்டு உடல்நிலை சரியில்லை என்று சிவா சார் புத்தக கண்காட்சிக்கு ஓய்வு கொடுத்தார். சமீபத்தில் தெசுகாவின் அதி தீவிர வாசகர் இயக்குனர் மிஷ்கின் அவர்களிடம் இந்த ப்ராஜெக்டை கூறியவுடன், அவரும் முகமூடி படம் முடிந்தவுடன் இதைப்பற்றி பேசுவோம், குறைந்த பட்சம் ஒரு லிமிடெட் எடிஷன் அளவிற்காவது கொண்டு வருவது என்றெல்லாம் ஆலோசித்தோம். பின்னர் மார்ச் மாதம் கூட அவரிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருக்கும்போது இந்த விஷயத்தை கூறியவுடன் நுரையீரல் புற்று நோயால் தாக்கப்பட்டு, மரணத்துடன் போராடி வரும் நிலையிலும் உற்சாகத்துடனே பேசினார்.

ஒவ்வொரு முறை கோவை செல்லும்போதெல்லாம் அவரை சந்திப்பதையோ / அவருடன் பேசுவதையோ வழக்கமாக கொண்ட நான், கடந்த இரண்டு தடவையும் நேரமின்மை மற்றும் பணிச்சுமை காரணமாக சந்திக்க முடியாமல் திரும்பி விட்டேன். துரை சாரின் மகன் திருமண நேரத்தில்கூட சிவா சாரைப்பற்றி விசாரிக்கையில் நுரையீரல் புற்று நோய்க்கு கீமோதெரபி சிகிச்சை பெற்றுவருவதை தெரிந்துக்கொண்டேன். உடல்நலம் கவலைக்கிடமாக இருந்தவேளையில் ஒருமுறை அவரிடம் தொலைபேசியில் பேசும்போதுகூட தெளிவாகவும், அன்புடனுமே பேசினார். என்ன இருமல் தான் அவரை அதிகம் பேசவிடாமல் தடுத்தது. ஆனால் அந்த உரையாடல்தான் எங்களின் கடைசி உரையாடல் என்றோ அல்லது அவரை நான் அதற்க்கு பிறகு சந்திக்கவே முடியாது என்பதோ அப்போது எனக்கு தெரியாது.

நுரையீரல் புற்று நோயால் தாக்கப்பட்டு, கீமோதெரபி சிகிச்சை பெற்றுவந்த சிவா சார் கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக சற்றே கவலைக்கிடமான நிலையிலேயே இருந்தார். திரவ உணவையே உட்கொண்டு வந்த அவருக்கு, கடந்த ஒரு வாரமாக அந்த திரவ உணவே அவரது வயிற்றில் திடமாக மாறி பிரச்சினைக்கு ஆளானார். அப்போதுகூட இப்படி ஒரு முடிவு வருமென்று தோணவில்லை.

தனிப்பட்ட முறையிலோ, அவரது தீவிர இலக்கிய, வாசக முறையிலோ பழக்கப்படாத அவர் பல வகையில் என்னை கவர்ந்தவர். இதுவரையில் யாரின் மறைவுக்கும் இறுதி அஞ்சலி செலுத்த செல்லாத எனக்கு இவரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல ஆசைப்பட்டாலும், அலுவலக பணி நிமித்தம் காரணமாக மும்பை செல்லவிருப்பதால் அந்த எண்ணம் ஈடேறவில்லை.

ஆனால் வரும்  ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ் நூலகம் திரு  துரை அவர்களால் ஒரு இரங்கல் கூட்டம் ஒழுங்கு செய்யப்படுவதாக தகவல். கண்டிப்பாக அதற்காகவேனும் கோவை செல்ல முடிவெடுத்துள்ளேன். மேற்கொண்டு விவரங்களை இரங்கல் கூட்டம் ஊர்ஜிதம் ஆனவுடன் இங்கு பின்னூட்டத்தில் தெரிவிக்கிறேன்.

சிவா சார், கண்டிப்பாக ஒரு நாள் உங்களின் புத்தர் கனவு நிறைவேறும் நான் நிறைவேற்றுவேன். இது உறுதி. Till then, Rest in Peace.

Reply all
Reply to author
Forward
0 new messages