கனவின் இசைக்குறிப்பு - வாழ்த்துரை

23 views
Skip to first unread message

இ.பு. ஞானப்பிரகாசன்

unread,
Jan 26, 2024, 10:33:17 PMJan 26
to பண்புடன்
kanavin isaikurippu-intro invitation.jpeg
அன்பின் சகா, கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்கள் எழுதி, கடந்த 06.01.2024 அன்று சென்னையில் வெளியிடப் பெற்ற அவரது முதல் நூலான கனவின் இசைக்குறிப்பு புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் என் சார்பாக மைத்துனர் ரசாக் வழங்கிய வாழ்த்துரையினைக் கவிஞர் வாழும் புதுகை மண்ணில் அந்நூல் அறிமுக விழாக் காணும் இந்நாளில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்வு அடைகிறேன்.

கைசால் தமிழ்ப் பெருமக்கள் நிறைந்த அவைக்குப் பணிவன்பான வணக்கம்!

நான் உங்கள் இ.பு.ஞானப்பிரகாசன். என் உடன்பிறப்பின் உதவியோடு உங்கள் பொன்னான நேரத்தில் சில மணித்துளிகளைக் களவாட இது ஒரு சிறு முயற்சி!

கனவின் இசைக்குறிப்பு - கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்களுடைய பல்லாண்டுக் காலக் கனவின் அச்சு வழி அரங்கேற்றம்!

நம் தோழர் கஸ்தூரிரங்கன் அவர்கள் பதிப்புரையில் சொல்லியிருந்தார், இந்த அரங்கேற்றத்தைச் சாத்தியப்படுத்தியவனே நான்தான் என்று. ஆனால் எனக்கும் முன்னதாக இதற்கு அடிக்கல் நாட்டியவர் அவர்கள் மூத்த மகள் நிறைமதிவதனா.

“வெறுமே தாளில் வெளியிடுவதில் என்ன இருக்கிறது? இணைய வழியில் இக்கவிதைகள் உலகெங்கும் போகின்றனவே, போதாதா?” என்று நாங்கள் நினைத்திருந்த நேரத்தில், நிறைமதி வலியுறுத்திய பிறகுதான் இனி மைதிலி அவர்களின் கவிதைகளைத் தொகுப்பாக்குவது காலத்தின் கட்டாயம் என்று உணர்ந்தோம். அந்த வகையில் இந்தக் கவிமலர்கள் செண்டானதில் நிறைமதியின் பங்கு இன்றியமையாதது.

அடுத்து, இந்தத் தொகுப்பு வெளியீடு தள்ளிப் போகக் காரணம் தான்தான் என்றும் தோழர் கஸ்தூரிரங்கன் பதிப்புரையில் சொல்கிறார். அப்படியே வைத்துக் கொண்டாலும் இது இன்று இவ்வளவு வேகமாகப் புத்தக வடிவம் பெறக் காரணமும் அவர்தான்.

யார் யாரிடம் எந்தெந்த வேலையை ஒப்படைத்தால் விரைந்து முடிவடையும் என்பதைத் துல்லியமாகக் கணித்து ஒரே வாரத்தில் அவ்வளவு நேர்த்தியாக, அழகாக இதை நூலாய்க் கோத்து வாங்கி விட்டார் அவர்.

இக்கட்டான இறுதி மணித்துளிகளில் அவர் எடுத்த உடனடி முடிவுகள்தாம் இவ்வளவு எழில்மிகு புத்தகமாக இதை உருவாக்கியிருக்கின்றன.

இதுவரை அவரை ஒரு நல்ல ஆசிரியராகவும் எழுத்தாளராகவும்தான் நாம் பார்த்திருக்கிறோம். இதோ இன்று தன் இணையருடன் கைகோத்துப் பதிப்பாசிரியராகவும் ஏற்றம் பெறும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு கண்டிப்பாக அவர் தொடர்ந்து நூல்களை வெளியிட வேண்டும்; மலர்த்தரு பதிப்பகத்தில் பூக்கும் புத்தக மலர்களின் மணம் தமிழுலகம் எங்கும் கமழ வேண்டும் என என் விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே நேரம் கவிஞர் யாழி கிரிதரன்எழுத்தாளர் லட்சுமி சிவகுமார் ஆகிய இருவர் மட்டும் இல்லாதிருந்தால் இவ்வளவு குறுகிய காலத்தில் இப்படி ஒரு வெளியீடு சாத்தியமாகியிருக்காது.

பத்தாண்டுக் காலமாக இந்தத் துறையில் இருப்பவன், ஓரிரு பெரிய பதிப்பகங்களுக்குப் பணியாற்றியவன் எனும் சிறு தகுதியில் சொல்கிறேன், லட்சுமி சிவகுமார் அவர்களின் பணித்திறத்தைப் போல் இதுவரை நான் வேறெங்கும் பார்த்ததில்லை. உண்மையிலேயே அவ்வளவு அற்புதமான வடிவமைப்பு! இந்தப் புத்தகத்தைப் பிழை திருத்தியவன் எனும் முறையில் இதை இங்கே பதிவு செய்வது என் கடமை.

அவருடைய இணையற்ற திறமையைத் தமிழுலகம் நன்கு பயன்படுத்திக் கொள்ளப் படைப்பாளிகள் நிறைந்த இந்த அவையில் பணிவன்புடன் பரிந்துரைக்கிறேன்.

இன்னும் கூடப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவிக்க வேண்டிய வியத்தகு பங்கேற்பாளர்கள் இந்த நூலாக்கத்தில் உண்டு. இருந்தாலும் அதை விழாநாயகி அவர்கள் செய்வதுதான் முறை என்பதால் இத்துடன் இதை நிறுத்திக் கொண்டு இனி கவிஞர் பற்றியும் நூல் பற்றியும் சில சொற்கள்.

வானில் மேகங்கள்
வரையும் கோலங்கள்
ஒரு சமயம்
பாயும் புலியாகும்
மறுநொடியே
வீழும் துளியாகும்
ஒருமுறை
அசைகிற தேராகும்
மறுமுறை
விசையுறும் பந்தாகும்

இந்தப் படைப்புகளையெல்லாம்
மேகம் யாருக்காகச் செய்கிறது?
யார் பார்க்கவும் அல்ல!
அது மேகத்தின் தன்னியல்பு.

அப்படித்தான் நம் கவிஞரும். கவிதை எழுதுவது என்பது அவருடைய இயல்புகளில் ஒன்றாகவே மாறிவிட்டது. மகிழ்ச்சியாக இருந்தாலும் கவிதை, சோகமாக இருந்தாலும் கவிதை, கல்வியைப் பற்றியும் கவிதை, தங்கையின் கம்மலைப் பற்றியும் கவிதை, பட்டாம்பூச்சிக்காகவும் கவிதை, பார்ப்பனியத்தை எதிர்த்தும் கவிதை என எதை வேண்டுமானாலும் கவிதை எனும் சிமிழுக்குள் அடைத்து விடுகிற அவருடைய மாயச்சாலம் ஒவ்வொரு தடவையும் வியக்க வைப்பது!

நானும் அவர்தம் பிற நண்பர்களும் அடிக்கடி கேட்போம். உங்களைப் போல் கவிதை எழுத எங்களுக்கும் கற்றுக் கொடுங்கள் என்று. அவர் எங்களுக்குக் குறியீடு, படிமம் போன்றவை பற்றி விளக்குவார். என்னைப் பொருத்த வரையில் அது அப்பொழுதுக்குப் புரியும். பின்னர் குழம்பி விடும்.

இப்பொழுது கவிஞரின் படைப்புகளையெல்லாம் தொகுத்து, மீண்டும் மொத்தமாகப் படிக்க வாய்ப்பு கிடைத்தபொழுதுதான் புரிந்தது. கவிதை என்பது வெறும் இலக்கிய வடிவம் இல்லை; அது ஒரு தனி மொழி! தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றோடு சேர்த்துக் கவிதை மொழியையும் அவர் கற்றிருக்கிறார். உண்மையில் அவர் கவிதையை எழுதவில்லை. தான் பார்க்கிற, சுவைக்கிற, தன்னைப் பாதிக்கிற அனைத்தையும் கவிதை எனும் மொழியில் மொழிபெயர்த்து வைக்கிறார், அவ்வளவுதான்.

இதை உணர்ந்த அந்த மணித்துளியில் ஓரிரு கவிதைகள் அவர் போலவே எழுத எனக்கும் கைவந்தது. சில நாட்கள் நானும் மீண்டும் கவிப்பித்துப் பிடித்துத் திரிந்தேன்.

ஆனால் இதுவே, மைதிலி அவர்களின் எளிய படைப்புகள் தொடர்பான என் அனுபவம் மட்டும்தான். மறுபுறம், சராசரி வாசகனுக்குப் புரியாத நுட்பமான கவிதைகளை எழுதுவதிலும் அவர் புலமை மிக்கவர் என்பது நாம் அறிந்ததே! பெரிய கவிஞர்கள் பலர் அவருடைய அந்தக் கவிதைகளைக் குறிக்கலைப்பு (Decode) செய்து அந்தக் கவித்தமிழில் திளைத்து மகிழ்வதையும் நாம் பேசுபுக்கில் பார்த்திருக்கிறோம்.

இப்படி வாசகர்களையே கவிஞர்களாகவும் கவிஞர்களையே வாசகர்களாகவும் மாற்றிவிடும் இந்த ரசவாதத்தில் மூழ்கி முத்தெடுக்கப் படிப்போம், பரப்புவோம் இந்தக் கனவின் இசைக்குறிப்பை!

அனைவருக்கும் நனி நன்றி! நேச வணக்கம்!

Kanavin Isaikkurippu wrapper-full.png
Reply all
Reply to author
Forward
0 new messages