கண்ணனின் தாசனே - தமிழ்க்
கவிதையின் நேசனே
காவிய வாசனே - நின்னை
கருத்தினில் கலந்தேனே
அன்னையின் அன்புக்கு
அகரமாய் கவி படைத்தோன்
அழமற்ற கவிதை ஆழியாய்
அகன்றோனே ...
உலகத்தின் உண்மை நிலை
உணர்த்திடும் கவிகள் தந்து
உள்ளத்தைப் பண்படுத்தி
உருவாக்கிய கவிகளாயிரம்
கோப்பையிலே குடியிருந்து
கோலமயில் மடியிருந்து
கோபுரக் கலசமாகிய
கோ ! நீ தமிழின் கோமகனே !
சங்கத்தமிழ் விளக்கினை
சரித்திரம் படைத்தனை
சமயத்தின் அர்த்தம் கூறினை
சாகாவரம் நீ பெற்றனை
போனால் போகட்டும் போடா
பொன்னான தத்துவம் சொல்லி
பொன்மகள் வந்தாள் எனவும்
பேராசையின் தரித்திரம்
கூறி
வனவாசத்தின் மூலம் உன்
வாழ்க்கையின் சரித்திரம்
தந்து
மனவாசத்தின் மூலம் இந்த
மண்ணுலக இன்னல்கள்
பகன்றனையே
கலங்காதிரு மனமே என
கருத்தான பாடலில் தொடங்கி
கண்ணே, கலைமானே என
கட்டான பாடலில் முடித்த
என்
கற்பனையின் வேந்தனே
கண்ணதாசா வணங்குகின்றேன்
நேற்றுவரை நீ யாரோ நான்
யாரோ
நேசத்தின் வாசத்தை
வார்த்தையில்
நயமாகத் தந்தவன் நீ
நினைவின் நிழலல்ல
நிகழ்வாகத் தொடர்பவன் நீ ....
உள்ளத்தில் நல்ல உள்ளம்
உறங்காதென்ற நல்
உண்மை சொல்லியெமை
உணர்ச்சிகளுக்குள்
புதைத்தவனே
உறவு வீடுவரையென்றும்
உதிர்ந்துவிடும்
அனைத்தும்
காடேகும் போது என்றும்
எத்துனை நயமாக வாழ்வின்
எதார்த்தத்தை அழகாக
ந்மக்குப் பாடலாகத்
தந்தவனே
சட்டென்று இதயத்தில்
சான்றோனின் எண்ணம்
படர்ந்து கொடிபோல ஒருகணம்
பரவியதன் காரணத்தால்
பொங்கிய எண்ணங்களை
பெருமனிதா உனக்கு நான்
போர்த்திடும் ஆவலினால்
புலர்ந்தது இக்கவிதை
வாழிய எந்தன் மனவாசா
வையகத்துள் ஒருவன்
கண்ணதாசா
வாழ்விருக்கும்
நாள்வரைக்கும்
வானுயரப் பாடிவைப்பேன்
நின்
வானளாவும் புகழ்தனையே
இதை திரு சக்தி சக்திதாசனுக்கு அனுப்புகிறேன்
நிச்சயம் சந்தோஷப்படுவார்.
அன்புடன்
என் சுரேஷ்